வைகைக்கரை காற்றே!......016

ஊமையன் சோர்ந்து போய் உட்கார்ந்திருப்பது ஒரு பக்கமென்றால் இன்னொரு புறம் ஏகப்பட்ட ஜனங்கள் தோளில் மண்வெட்டியுடன் ஆற்றில் வேலை செய்து கொண்டிருந்தனர். ஊமையன் மண்வெட்டி அரசமரத்தடியில் கிடப்பதும், மற்றவர் மண் வெட்டி மண்ணுடன் விளையாடுவதும் நந்து இதுவரை காணாத காட்சி. வெருக்கு, வெருக்கென்று வேலை நடந்து கொண்டு இருந்தது. கனல் பட்டுக் கருத்து தெறித்த உடல்கள். தொந்தி தொப்பை என்பதெல்லாம் அந்தக் கூட்டத்தில் இல்லாத ஒன்று. கைகள் வச்சிரம் போல் இருந்தன. தோள்கள் திரண்டு கிடந்தன. தலையில் ஒரு சின்னத்துண்டு முண்டாசு போல் கிடந்தது. இவர்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஆற்றின் வலக்கரையோரம் ஒரு நீண்ட பாம்பு போல் ஒரு கரை உருவாகியிருந்தது. கரையின் நீளம் எவ்வளவு இருக்க வேண்டுமென்பதில் அடுத்த ஊர்க்காரர்களுடன் பெரிதாக சண்டை நடந்து கொண்டிருந்தது. வெட்டு, குத்து நடக்குமோ என்றொரு பயம் சிறுவர்களுக்கு வர வீடு நோக்கி ஓடத்துவங்கினர்.

"டேய் நந்து! இங்க வாடா? ஆத்தங்கரைக்குப் போயிருந்தயா?" என்று கேட்டாள் சௌந்திரம்.

"ஆமா! அதுக்கென்னடி இப்ப?" என்றான் நந்து.

'உழக்கு அளவு கூட இல்லை, அதுக்குள்ள அக்காவை வாடி, போடின்னு பேச்சு!" என்று அங்காலாய்த்தாள் அவள்.

"இப்ப என்னடி உனக்கு?" என்றான் நந்து.

"இப்பலேர்ந்து ஆத்துப்பக்கம் போறத விட்டுடு" என்றாள் இவன் அக்கா.

"போடி! நான் அப்படித்தான் போவேன். என்ன செய்வே?" என்றான் நந்து.

"அம்மா! இங்க பாரு நந்து சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேங்கறான்"

"டேய்! இங்க வாடா! வெளியே போய்ட்டு வரயே முதல்ல கை, காலை அலம்பிண்டயோ?" என்றாள் அம்மா.

"இவ எங்க விடறா என்ன? வந்தவுடனேயே வாத்தியார் வேலைன்னா பாத்துண்டு இருக்கா?"

"சரி, அவள விடு, நாளைக்கு ஆத்துலே தண்ணி வருதாம். யாரும் ஆத்தாண்ட போகக்கூடாதாம். டமாரம் போட்டுட்டுப் போறான். அவன் கூப்பிட்டான், இவன் கூப்பிட்டன்னு ஆத்தாங்கரைப் பக்கம் போனே, முதுகு பிஞ்சுறும்" என்றாள் அம்மா.

இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அடுத்த நாள் வீட்டிற்கே ஆறு வந்த போதுதான் புரிந்தது. இப்படியொரு வெள்ளம் அந்த ஊரில் யாரும் பார்த்ததில்லை என்று பேசிக்கொண்டார்கள்.அரசமரத்துப் பிள்ளையாரைச் சுற்றி வெள்ளமாம். வீட்டுக் கிணறெல்லாம் நிரம்பி வழிந்தது. கிணத்திலே தண்ணியை மொண்டு எடுத்துக் குளித்தது அன்றுதான். நீர் வடிய சில நாட்கள் ஆனது. நந்து ஆத்துப் பக்கம் போன போது நொப்பும் நுரையுமாக தண்ணீர் ஒரு சிவப்பு நிறத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இறந்து போன மாடுகள் ஆற்றில் மிதந்து போயின. நாய்கள் போயின, சில உயிருடன், சில உயிரில்லாமல்! பன்றிகள் போயின. மனித உடல்களும் போனபோது ஊரே வாயடைத்துப் போனது!

ஆற்றுக்குக்கரை போட்ட சனங்களெல்லாம் அளவில்லாமல் வெள்ளம் வந்த போது அந்தத்தண்ணியை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழித்தனர். பிள்ளையார் திண்டு கண்ணில் பட்டது அடுத்த நாள். ஆற்றில் போன பொருள்களைக் கவர்வதற்கு ஆற்றில் குதித்த ஆடவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் எங்காவது கரையேறினார்களா என்று அடுத்த சில நாள் கழித்தே தெரிய வந்தது.வையைக் கரை குமுறும் என்று அன்றுதான் சனங்களுக்குப் புரிந்தது.

0 பின்னூட்டங்கள்: