வைகைக்கரை காற்றே!......017

ஆற்று வெள்ளம் வடிய பல வாரங்கள் ஆயின. ஆற்றின் முகமே மாறிப்போயிருந்தது. ஆழமாயிருந்த இடங்களெல்லாம் மேடு தட்டிப் போயிருந்தன. மேட்டில் ஓடி விளையாடிய இடங்களெல்லாம் காணவே காணோம்! கரையெல்லாம் ஒரே குப்பை, கூளம். சட்டைத் துணியிலிருந்து, ஜமுக்காளம் வரை எல்லாம் அழுக்கும், பிசுக்குமாக கரையிலும், அதற்கு மேலும் பரந்து கிடந்தன! ஜமுக்காளத்தை சுருட்ட நினைத்த பஞ்சப்பரதேசிகளுக்கு உள்ளே அழுகிய நாயும் கூடவே கிடைத்தது! ஆற்று வெள்ளத்தில் வீர சாகசம் செய்யப்போன இளவட்டங்களில் சிலர் காணாமலே போய் விட்டனர். கமலக்கிணத்து நீச்சு ஆத்து வெள்ளத்துக்கு ஆகாதுன்னு அப்போதான் ஊருக்குப் புரிஞ்சது.

அப்போதெல்லாம் அக்கரைக்குப் பாலம் கிடையாது. அக்கரைக்கு அப்பாலிருந்த சனங்களுக்கான சந்தை திருப்புவனத்தில்தான் உண்டு. எனவே ஆற்று வெள்ளம் வற்றாமல் ஓடிய போது பலர் சுரைக்குடுக்கையை இடுப்பில் கட்டிக்கொண்டு இக்கரைக்கு நீந்தி வந்ததுமுண்டு. என்ன? அரசமரத்துக்குக் குறி வைத்தால், திருப்புவனம் புதூரில் போய் இறங்குவார்கள்! புதூர் இன்னும் கிழக்கே இரண்டு மூணு மைல் போகணும். அப்புறம் திருப்பாச்சேத்தி வந்துவிடும். திருப்பாச்சேத்தி என்றாலே அந்த ஊரு அருவாள் தான் எல்லோருக்கும் ஞாபகம் வரும். திருப்புவனம் பழையூர் என்றொரு பகுதியுமுண்டு. அந்தப்பக்கம்தான் மயானம் இருந்தது. அந்தத்திசையே பார்க்கக்கூடாத ஒரு திசையாக அந்த ஊரில் இருந்தது. மதுரைக்குப் போகும் போது திருப்புவனம் எல்லை தாண்டியவுடன் மயானம்தான் வரும்."டேய் அந்தப்பக்கம் பாக்காதே!" என்று அக்காமார்கள் சொல்லிச் சொல்லி, திருப்புவனம் பெயர் பலகையைப் பார்த்தவுடனேயே நந்து வேறு பக்கம் திரும்பிக்கொள்வான். எம பயம் என்பது எல்லோர் உள்ளத்திலும் குடிகொண்டு இருந்தது. இதையறிந்துதான் மந்திரவாதிகளும், குடு குடுப்பாண்டியும் மண்டையோட்டுடன் அலைவார்கள். இவர்களைக் கண்டாலே உள்ளூர பயம் பலருக்கு. அதனாலே மேல் கேள்வி கேட்காம கேட்டதைக் கொடுத்து விடுவார்கள். அக்கிரஹாரத்து சனங்கள் கோயிலுக்கு பக்கத்திலேயே இருந்ததால் மயானம் என்பது தெரியாத ஒன்றாகவும், தெரிந்து கொள்ளக்கூடாத ஒன்றாகவும் இருந்தது.

சுரைக்குடுக்கையைக் கட்டுக் கொண்டு கட்டாரி ஆத்தைக் கடந்து வந்து விட்டான். நந்துவிற்கு ஒரே பெருமை. நம்ம வீட்டு கட்டாரி ஆத்து வெள்ளைத்தைக் கடந்து விட்டான் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் அவனுக்கும் சொரைக்குடுக்கை எப்படியிருக்கும் என்பதும் புரிந்தது! 'சொரைக்குடுக்கை பிச்சுக்கிட்டா என்ன செய்வே? கட்டாரி!' என்பது நந்துவின் கேள்வி. 'ஆத்தோட போக வேண்டியதுதான்' என்பது கட்டாரியின் பதில். ஆனால் கட்டாரி இதைச் சிரித்துக் கொண்டே சொல்வான்!ஆற்று வெள்ளம் வடிந்த பின்னும் பல மாதங்களுக்கு வீட்டுக்கிணறு நிரம்பியே இருந்தது. ராட்டினத்தில் போட்டு இறைக்காமல் குணிந்து எடுத்துக் குளிக்க முடிந்தது. ஆற்றில் வெள்ளத்தின் மீதி அங்கங்கே தங்கிப் போயிருந்தது. அது வாண்டுகள் குளுப்பதற்குத்தோதாக இருந்தது. ஆனாலும் சில இடங்களில் மூழ்கடிக்கக்கூடிய ஆழம் இருந்தது. நீச்சுத் தெரியாத நந்து ஆழம் தெரியாமல் காலை விட்டு ஆத்துத்தண்ணியை மடக்கு மடக்குன்னு குடித்ததுண்டு. கமலாவிற்கு மட்டும் இயற்கையாக நீந்த வந்தது. ஆனால் அவள் ஆத்துக்குள்ளெ குதித்தால் புஸ்ஸென்று பாவாடை ஒரு குடுவை போல் மிதக்கும். அதுதான் அவளை மூழ்கடிக்காமல் காப்பாற்றுகிறது என்பதெல்லாம் பௌதீகம் படிக்காத நந்துவிற்குத் தெரியாது. கமலா பெரிய நீச்சல் வீராங்கணை என்றே வீட்டில் பேச்சு. ஆனாலும் வீட்டிற்கு வந்தவுடன் தவறாமல் அம்மாவிடம் அடி கிடைக்கும். 'கேடு கெட்ட கழுதை! பெரியவளாயிட்ட பின்னால என்னடி ஆத்துலே போய் குளிக்கிறது? ஊருலே நாலு பேரு என்ன சொல்லுவா?' என்பதே அடிவிழுவதற்கான காரணமாக சொல்லப்படும். அந்த நாலு பேரு யாரு என்பது கடைசிவரை நந்துவிற்குத் தெரிந்ததே இல்லை. பாவம் ஆத்தில் கும்மாளமிட்ட குஷியெல்லாம் அம்மாவைக்கண்டவுடன் ஓடி விடும்! 'நந்து மட்டும் குளிக்கலாமா?' என்று கமலா வெகுளித்தனமாகக் கேட்டு வைத்து இன்னும் இரண்டு அடி வாங்கிக்கொள்வாள். 'அவன் ஆம்பிளைப் பையன். நீ பொம்மணாட்டி. மறந்துடாதே!' என்பதே அதற்கான பதிலாகக் கிடைக்கும். 'கட்டால போற கருவாக்கட்டை பாத்துண்டு இருந்தானோ?' என்று ஒரு கேள்வி வரும்.

கருவாக்கட்டையைப் பற்றி சொல்லும் முன்பு கோயில் காளை பற்றிச் சொல்ல வேண்டும்! கோயிலுக்கென்று சில காளை மாடுகளை நேந்து விட்டிருப்பார்கள். அந்த மாடுகளை யாரும் அடிக்கக்கூடக் கூடாது. அது பாட்டுக்கு திண்ணு கொழுத்துப் போயிருக்கும். பசு மாட்டைத்தொட்டுக் கும்பிட்டுப் பழகிய சில மாமிகள் தெரியாத்தனமா காளை மாட்டைத் தொடப்போய் (அதுவும் பிருஷ்ட்ட பாகத்தில்!) அது கூச்சமும், கோபமும் கொண்டு அதன் கூர்மையான கொம்பைத் திருப்ப விழுந்து அடித்துக் கொண்டு ஓடிய மாமிகளை நந்து கண்டிருக்கிறான் (மடிசார் தடுக்கும், இருந்தாலும் உயிர் இனிக்கும்). கோயில் காளைகளிடம் விளையாட்டுக் கூடாது!

கருவாக்கட்டையும் கோயில் காளை போல் கொழு கொழுவென்றுதான் இருப்பான். கன்னங்கரேலென்று இருப்பதால் அவனுக்கு கருவாக்கட்டை என்று பெயர். அவன் என்ன சாதி என்று தெரியாது. ஆனால் மைனர் செயினுடன் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். ஆத்துக்குப் போக வேற வழிகள் இருந்தாலும் அவன் அக்கிரஹாரம் வழியாகத்தான் போவான். அவனுக்கு சிவத்த குட்டிகள் தன்னைப் பார்த்து பொரும வேண்டும் என்று ஆசை. அவனை எதிர்த்துப் பேச மீசை முளைச்ச ஐயர்களுக்குக்கூட தைர்யம் கிடையாது. கிட்டு ஒருமுறை கேட்டு அறை வாங்கிக்கொண்ட பின் யாரும் கேட்பதில்லை. ஆனால் அக்கிரஹாரத்தின் எதிர்ப்பாக அவன் வருகிறான் என்றால் கோபமாக கதவைச் சாத்திக் கொள்வர் சிலர். சில வாண்டுகள் 'கருவாக்கட்டை! கருவாக்கட்டை!' என்று முரசு அறிவித்து விட்டு ஓடும். இது கதவை மூடுவதற்கான அறிவிப்பு என்றாலும் சில வீட்டு ஜன்னல்கள் இதைக்கேட்டுத் திறப்பதுமுண்டு!

0 பின்னூட்டங்கள்: