வைகைக்கரை காற்றே!......018

ஆற்றில் வெள்ளம் வந்தது அக்கரையிலிருக்கும் சனங்களுக்கு பெரிய கஷ்டமாகப் போய்விட்டது. அந்த சமயத்தில் பஞ்சாயத்து போர்டு சேர்மனாக அக்கரையிலிருக்கும் பூவந்தியைச் சேர்ந்த சீமைச்சாமி இருந்தார். அவரால் திருப்புவனம் வரமுடியாமல் போய்விட்டது! காதைச் சுற்றி மூக்கைத்தொடுவது போல் அவர் மதுரைக்குப் போய் அங்கிருந்து திருப்புவனம் வர வேண்டியதாய்ப் போச்சு. இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. வைகையின் குறுக்கே பாலம் ஒன்று போட வேண்டுமென்று ஒரு மனுப்போட்டார். அதற்கு உள்ளூரிலிருந்து பலத்த வரவேற்பு கிடைத்தது. அது வடிவெடுக்க பல வருடங்களானாலும் வெள்ளத்தால் விளைந்த சேதத்தில் அந்த ஊருக்குக் கிடைத்த ஒரே நன்மை ஒரு பாலம்.

அண்ணாவின் அண்ணாவிற்கு சதாபிஷேகமென்று அழைப்பு வந்திருந்தது. அவர் இரணியூர் என்னும் ஊரில் வாழ்ந்தார். அண்ணாவிற்கு நான்கு சகோதரர்கள். மூத்தவர் சேஷன். அடுத்தவர் திருப்பதி. அடுத்து நாராயணன் (அண்ணா). கடைசியாக கிருஷ்ணன். இவருக்கு அதிரசமென்றால் மிகவும் பிடிக்குமாம். அதனால் அவருக்கு 'அதிரசக் கிருஷ்ணன்' என்ற பட்டப்பெயர் வந்து விட்டது. ஆனால், பாவம் அவர் குறைந்த வயதிலேயே இறந்து விட்டார். சேஷன் பெரியப்பா பெரிய குடுமியுடன் வாட்ட சாட்டமாக இருப்பார். அவரது சாயலிலேயே கமலா இருப்பதாகச் சொல்வார்கள். கமலாவை அவருக்கு அதனால் கூடுதலாகப் பிடிக்கும். "டேய், கமலாபாய்! இங்க வாடா!" என்றுதான் கூப்பிடுவாராம். கமலா பெருமையாகச் சொல்லுவாள். அக்காமார்களில் பெண்மை அழகு கொண்ட கமலாவை அவர் பையன் போல் பாவித்தது ஒரு செல்லத்திற்கு என்றே கொள்ள வேண்டும்! திருப்புவனத்திலிருந்து இரணியூர் ரொம்ப தூரம். நேரடியாக பஸ் கிடையாது. அக்கரை போய், அங்கிருந்து சிவகெங்கை, காரைக்குடி வழியாக இரணியூர் போக வேண்டும். குடும்பத்துடன் வரும்படி பெரியப்பா எழுதியிருந்தாலும் அண்ணாவால் எல்லோரையும் அழைத்துக் கொண்டு போக முடியவில்லை. செலவுதான்! வேறென்ன காரணம்?

அம்மாவிற்கு வீட்டை விட்டு எங்கு போகப் பிடிக்காது என்றாலும், அம்மாவை விட முடியாது. போகாவிடில் பேச்சு வரும். "அம்பி வந்திருக்கானே! அவளுக்கென்ன வரதுக்கு? இந்த மதுரைக்காராளுக்கே கொஞ்சம் ராங்கி ஜாஸ்தி!" என்று ஓர்ப்படி சொல்லுவாள்.ஒரே ஒரு வாண்டு கூடப்போகலாமென தீர்மானமானது. நீ, நான் என்று ஒரே போட்டி. பங்கஜத்தைத் தவிர எல்லோரும் போட்டியில் கலந்து கொண்டனர். முடிவெடுப்பதற்கு முன்னமே சௌந்திரம் பாவடையை பெட்டியில் அடுக்கிவிட்டாள். கடைசியில் நந்துவை அழைத்துப் போகலாமெனத் தீர்மானமானது. இதில் சௌந்திரத்திற்குத்தான் ரொம்ப வருத்தம். ஜாலியாக வெளியூர் போகமுடியவில்லையே என்று. இவன் ஆம்பிளைப் பையன் என்பதால் இவனுக்கு மட்டும் செல்லமென்று திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவள் பொருளாதரத்தில் பின்னால் பட்டமெடுக்கவிருந்தாலும் நந்துவின் தேர்விற்கு பொருளாதாரமே காரணம் என்பது அவளுக்குத் தெரியாமல் போய் விட்டது. இவன் ஒரு அரை டிக்கெட்டு. ஆள் குள்ளமென்பதால் இன்னும் அஞ்சு வயசாகவில்லையென்று ஓசியிலேயே கூட்டிக் கொண்டு போய்விடலாம்!

அப்பா, அம்மாவுடன் டிரங்கு பெட்டி சகீதம் ஆத்தைக்கடந்து அக்கரைக்குப் போனார்கள். அங்கு ஒரு விநோதமான பஸ் நின்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸுக்கு மூக்கு இருந்தது. இரயில் வண்டி மாதிரி புகை போக்கியும் இருந்தது. வண்டி கிளம்பும் முன் ஒரு ஆள் முன்னால் கடிகாரத்திற்கு சாவி கொடுப்பதுபோல் ஒரு கொக்கியை வைத்துக் கொண்டு குடைந்து கொண்டிருந்தான். அது எளிதில் கிளம்புவதாக இல்லை. பல முயற்சிக்குப் பிறகு பட, படவென புகை கிளப்பிக் கொண்டு ஆட ஆரம்பித்தது! கொஞ்ச நேரத்தில் பூவந்தி நோக்கிப் போக ஆரம்பித்தது. நந்து இந்த இடங்களையெல்லாம் அவன் வாழ்நாளில் பார்த்தது இல்லை!

0 பின்னூட்டங்கள்: