வைகைக்கரை காற்றே!......019

சித்தியின் ஆத்துக்காரரை இவர்கள் 'சித்தியா' என்று அழைத்தனர். சித்தியா வித்தியாசமான பேர்வழி. இவர் தெய்வமாக பிறந்திருக்க வேண்டியவர். ஏனோ மதுரைப்பக்கம் வந்து மனுசராகப் பிறந்து விட்டார். தெய்வங்கள் நினைத்தவுடன் கிளம்பிப்புறப்பட வாகனங்கள் உண்டு. மண்டூகங்களுக்கு புத்தி கொடுப்போம் என்று சரஸ்வதி நினைத்தவுடன் அன்னம் வந்து நிற்கும். அது தாமதமான வேளையில் பிறந்த பலர் திருப்புவனத்திலுண்டு என்பது வேறு விஷயம்! விஷ்ணுவிற்கு பக்த வத்சலன் என்று பெயர் வரக் கருடன் காரணம். அவர் எள்ளென்றால் பெரிய திருவடி (அதான் கருடன்) எண்ணெய் என்று நிற்கும். சிவன் முரட்டுத்தனமான கொடையுள்ளம் கொண்டவர். ஐயோ பாவம்! பக்தன் என்று நினைத்து விட்டாலே காளை மாடு உசுப்பிக் கொண்டு கிளம்பிவிடும். இப்படி சித்தியா நினைத்தவுடன் கிளம்ப திருப்புவனத்திலோ, மதுரையிலோ வாகனங்கள் இல்லை. மதுரையில் நிற்கும் போது திருப்புவனம் போக வேண்டுமென்று நினைப்பார். அப்போது சிவகெங்கை போற வண்டிதான் நிக்கும். இவர் திருப்புவனத்திலிருந்து மதுரை போக வேண்டுமென நினைக்கும் போது எதிர் பக்கத்து வண்டிதான் வந்து நிக்கும். ஆனால் இதற்கெல்லாம் சித்தியா கவலைப்பட மாட்டார். பிறப்பு எடுத்தாச்சு. பஸ்ஸும் லாரியும்தான் ரோட்டுலே ஓடுது. அவர் நினைக்கும் போது எந்த வாகனம் வருகிறதோ அதில் ஏறிக் கொள்வார். அது எதிர் திசையில் போனாலும் பரவாயில்லை. ஏனெனில் இவர் கொலம்பஸ் போல் உலகம் உருண்டை, அதனால் கிழக்கே போக வேண்டுமெனில் மேற்கு வழியாகவும் வரலாமென்பது இவருக்குத்தெரியும். என்ன கொஞ்சம் நேரமாகும். 12 மைல் தூரத்திலிருக்கிற திருப்புவனம் வர இவர் பிரான்மலை வழியாக வந்தால் காலையில் கிளம்பி மாலையில் வருவதுண்டு. அதனாலென்ன? பயணத்தின் இனிமை இலக்கில் இல்லை ஆனால் பயணத்தில் அல்லவோ உள்ளது? இது அறிந்தவர் சித்தியா!

ஊரெல்லாம் சித்தியா வந்து விட்டார் என்று பேச்சு. இது கோகிலம் காதிற்கும் வந்து சேர்ந்தது. அண்ணாவின் காதிற்கு எட்ட இரவு வெகு நேரமாகும். ஆனால் அதற்குள் சித்தி, சித்தியாவுடன் 'பத்ம நிலையம்' வந்து விட்டாள்.

"வா! கிருஷ்ணா. என்ன இப்படி எங்களையெல்லாம் தவிக்க விட்டுட்டு எங்கேயோ ஓடிட்டே?" என்றாள் அம்மா.

"நான் எங்கே ஓடினேன். பைத்தியக்காரி இவ, ஊரு பூறா நான் எங்கேயோ இவளை விட்டுட்டு ஓடிட்டேன்னு கதை விட்டுண்டு இருக்கா. நான் எங்கே ஓடிப் போனேன். அதான் திரும்ப வந்துட்டேனே!"

"சரிதாம்பா! இப்ப வந்துட்டே, ஆனா ரெண்டு வருஷமா குஞ்சரம் பட்ட பாடு எங்களுக்கின்னா தெரியும்"

"அதான் இருக்கேனே. கோகிலம் கொஞ்சம் குளிர்ச்சியா தீர்த்தம் கொண்டா. வெட்டிவேர் போட்டு வைச்சிருப்பியே. மானாமதுரையிலே இருந்தவளாச்சே!"

"அதுக்கென்ன? பானை நிறைய ஜலம் இருக்கு எடுத்துக்கோ. அது சரி, நீ இப்படி ரெண்டு வருஷமா எங்கேதான் போனே? ஓடிப்போனேன்னு இனிமே சொல்லலே!" என்று சிரித்தாள் அம்மா.

மதுரை ரயில்வே ஸ்டேஷன்னிலே நின்னுண்டு இருந்தேன். இராமேஸ்வரம் போயிட்டு வர ஒரு கோஷ்டி காசி போயிண்டு இருந்தது. வரேளான்னு கேட்டுது. சரின்னு கிளம்பிட்டேன்!"

"விடிஞ்சது போ! பொண்டாட்டி, குழந்தை ஞாபகம் அப்போ வரலையோ?"

"அவன்தானே என்னைக் கூப்பிடறான். அவன் இவாளைப் பாத்துக்க மாட்டானோ?"

"நன்னா சொன்னே போ! இப்படி எங்க வயித்தைக் கலக்கிட்டியே! குழந்தைகளுக்கு உன் முகமே மறந்து போச்சு"

பாலகிருஷ்ணன் என்ற சித்தியா சிரித்துக்கொண்டார். அவர் உட்கார்ந்து பொம்மணாட்டிகள்ட்ட பேச மாட்டார். கோகிலத்திடம் அவருக்கு ஒரு மரியாதை உண்டு. ஊரில் இப்படி பல பெரியவர்கள் வீடு தேடி வந்து கோகிலத்திடம் பேசி விட்டுப் போவார்கள். இதனால் படி தாண்டாப் பத்தினியான கோகிலத்திற்கு உலக விஷயம் முழுவதும் தெரியும். இரவில் அண்ணா வீட்டிற்கு வரும்போது அவருக்குச் சரியாக அம்மா விஷயம் அறிந்து வைத்திருப்பதைப் பார்த்து அண்ணா ஆச்சர்யப்படுவார். "ஏண்டி, உனக்கு ஏதாவது இட்சிணி வேலை தெரியுமோ? இத்தனை விஷயம் நோக்கு எப்படித் தெரியறது?" என்பார்!"தீர்த்ததை எடுத்துக்கோ. ஆமா! உனக்கு ஹிந்தி தெரியும்ன்னு எங்களுக்குத் தெரியாதே. வடநாட்டிலே அந்த பாஷைதானே பேசுவா?" என்றாள் கோகிலம்.

"எனக்கெங்கே தெரியும்?"

"பின்ன?"

"வேங்கடசலமய்யங்கார் சமிஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தது நல்லதா போச்சு. அத வச்சு சமாளிச்சுட்டேன்"

"சாப்பாட்டுக்கு என்ன பண்ணினே?"

"கைலேதான் தொழில் இருக்கே!"

"ஜோஸ்யத்தைச் சொல்றயா?"

"வேற எனக்கென்ன தொழில் தெரியும். நான் என்ன வலையனா? மீன் பிடிச்சு விக்க?" என்றார் சித்தியா கொல்லையில் வேலை செய்து கொண்டிருந்த கட்டாரியைப் பார்த்தவாறே!

"உன்னய யாரு இப்ப மீன் பிடிக்க சொல்றா? சமிஸ்கிருதத்திலே ஜோஸ்யம் சொல்ல நீ எப்ப கத்துண்டே?"

"துருவித்துருவி கேள்வி கேட்காதே! நான் தமிழ்லேதான் ஜோஸ்யம் சொன்னேன். அவனுக்குப் புரியலேன்னா எனக்குத்தெரிந்த சமிஸ்கிருதத்தை வச்சு சமாளிச்சுண்டேன்"

"அடேங்கப்பா! உங்க தாத்தா தோத்துப்போயிட்டார் போ! நீ ஜோஸ்யத்திலே சூரப்புலிதான்" என்றாள் கோகிலம் சிரித்துக்கொண்டே. "சரி, எங்கேல்லாம் போன சொல்லு?"

"விஜயவாடா, சிம்மாச்சலம்ன்னு தெலுங்கு தேசம் வழியா காசிக்குப் போனேன். தெலுங்குதான் நம்மாத்துலே புழக்கதுலே உண்டே. குஞ்சரம் கூட பேசுவாளே. அப்புறம் காசி, பிருந்தாவனம், கயான்னு எங்கெங்கோ போனேன்"

"அப்புறம் ஏன் திரும்பி வந்துட்டே?"

"காசிலேர்ந்து இராமேஸ்வரம் போறேன்னு ஒரு கோஷ்டி கிளம்பினது. இராமேஸ்வரம் போற வழிலதானே திருப்புவனம் இருக்குன்னு அவாளோட வந்துட்டேன்"

"நல்ல வேளை இராமேஸ்வரம் போற வழிலே திருப்புவனம் இருந்தது! இல்லாட்டி நீ பாட்டுக்கு திரும்ப எங்கேயாவது போயிருப்ப. அது சரி, இனிமேயாவது இவள வச்சு காப்பாத்துவியோ? இல்ல எங்கேயாவது திரும்ப க்ஷேத்ராடனம் போயிடுவியா?"

என்று அம்மா கேட்ட கேள்விக்கு வந்த பதில் பத்ம நிலையத்தின் விதியை மாற்றிவிட்டது.

0 பின்னூட்டங்கள்: