சங்கீத நினைவுகள் 02

நான் கீல் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். சுதா ரகுநாதன் அடுத்த நாள் எங்களூரில் கச்சேரி செய்ய ஒத்துக் கொண்டிருந்தார்கள். இளமைத் துள்ளலுடன் சல்வார் கமீசில் வந்து இறங்கினார்கள் சுதா. இனிமையான புன்னகை. அவர்களை வழக்கமான புடவை சகீதம் படங்களில் மட்டும் பார்த்திருந்த எனக்கு இது மாறுதலான சின்ன அதிர்ச்சியாக இருந்தது. கல, கலவென்று பேசினார்கள். "சரி, வாருங்கள் வீட்டுக்குப்போய் சாப்பிட்டு விட்டுப் பேசலாம்" என அழைத்துச் சென்றேன்.

காலையில் எழுந்து பார்த்த போது சுதா எனது நூலகத்தை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். "திருவாய்மொழியென்றால் பிடிக்குமோ?" என்றார். "ஆமாம்! என்பதற்கும் மேல் பிடிக்கும்" என்றேன். சிரித்துக் கொண்டார்.மாலையில் கச்சேரி ஆரம்பமானது. வசந்தா ராகத்தில் பார்த்தசாரதி பெருமாள் மேல் ஒரு பாடலுடன் ஆரம்பித்தார். இரண்டு காரணங்களுக்காக கண் தளும்பி நின்றேன். பெரும்பாலும் கச்சேரிகள் ஹிந்தோளத்தில் கணபதி ஸ்துதியுடன் ஆரம்பிக்கும். ஆனால் திருவாய்மொழியைக் கண்ட பின் அவர்களால் கண்ணனை நிராகரிக்க முடியவில்லை. இரண்டாவது, எனக்கு மிகவும் பிடித்த ராகம் வசந்தா! நான் மெய்மறப்பதற்கு இந்த இரண்டு காரணங்கள் போதும்.

ஆனால் சுதா ஒரு தேர்ந்த இசைக்கலைஞர்! கல்கி எழுதி, மீரா படத்தில் எம்.எஸ் பாடி மிகப்பிரபலமான "காற்றினிலே வரும் கீதம்" கடைசியாகப் பாடியபோது கண்ணன் குழலோசைக்கு கன்றுகள் கட்டுப்பட்டுக் கிடந்தது போல் அந்த அரங்கே ஸ்தம்பித்து இருந்தது. இவ்வளவிற்கும் அங்கிருந்தே ஒரே தமிழ் தெரிந்த ஆசாமி நான்தான். இரண்டு பெங்காலிகள். மிச்சமெல்லாம் ஜெர்மானியர்! அன்றுதான் தமிழ் இசையின் மேன்மை கண்டேன். 'நினைவழிக்கும் கீதம்' என்று ஆழ்வார்களை வழி மொழிந்து கல்கி எழுதியது எவ்வளவு உண்மை. அன்றோடு நினைவழிந்து போயிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் (என்ன செய்ய? இல்லையென்பதால்தானே இப்படி சங்கீத நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டு இருக்கிறேன்:-).

கச்சேரியெல்லாம் முடிந்து எல்லோரும் போன பிறகு நானும் சுதாவும் தனியாக ஒரு அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்திருந்திருப்போம். ஹாலை காலி செய்து எனது ஜெர்மன் நண்பன் வந்த பிறகு நாங்கள் இரவு உணவருந்தப் போவதாக ஏற்பாடு. கீல் இசை நிகழ்ச்சிகளுக்குப் பேர் போன ஊர். அங்குள்ள பெரிய மியூசிக் ஹாலில் கச்சேரி நடந்தது. ஹால் வாசலில், வாசல் படியில் உட்கார்ந்து கொண்டு (அவர் மேலே, நான் கீழே) பேசிக்கொண்டிருந்தோம். சுதா எனக்கு அவர்களது சங்கீத ஆரம்பங்களைச் சொன்னார். எம்.எல்.வியுடன் கழித்த நாட்களை நினைவு கூர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள பல சிடி ஆல்பம் பற்றிச் சொன்னார். ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தேன். மிகத்தேர்ந்த கலைஞராக இருந்தாலும் மிகவும் எளிமையாகப் பழகிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அடுத்தமுறை சென்னை வரும் போது குடும்பத்துடன் வந்து காணுமாறு அழைப்பு விடுத்தார். அந்த நாள் இன்னும் வரவில்லை.

0 பின்னூட்டங்கள்: