சங்கீத நினைவுகள்!

என் அக்கா பெண்ணிற்கு காதுகுத்தல் என்றும், அதற்கு உப்பிலியப்பன் கோயில் போகவேண்டுமென்றும் அழைப்பு வந்திருந்தது (அந்தப்பெண்ணிற்கு அடுத்த மாதம் கல்யாணம் என்னும் போது கால ஓட்டத்தை நினைத்து பிரம்மிக்க வேண்டியுள்ளது!)

நான் பாண்டிநாட்டுக்காரன். சோழ மண்டலம் அதிகமாய் போனதில்லை. உப்பிலியப்பன் கோயில் அரிசிலாற்றுக்கரையில் இருந்தது. "ஒப்பில்லா அப்பன்' அவன். உப்புச்சப்பில்லாத ரசனையுடன் அவனை உப்பில்லா அப்பனாக்கி அவன் சோற்றில் உப்பையும் எடுத்துவிட்டார்கள் படுபாவிகள். அது போகட்டும்.

அன்று எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி கச்சேரி. ஊரெல்லாம் ஒரே கூட்டம். அத்தானுடன் ஒரு ஓரமாக நின்று கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தோம். இது காதுகுத்தல் முடிந்த மாலை நேரம். லேசாகத் தூறல். அன்றிரவு 10 மணியளவில் போட் மெயிலில் சென்னை பயணிக்க வேண்டும். கச்சேரி கொஞ்ச நேரம் கேட்டுவிட்டு (உட்கார இடமில்லை, வெளியே தூறல்) வேறு காரியத்தில் இறங்கி விட்டோ ம். இரயில் நிலையத்தில் எங்களுக்கு ஒரு அறை ஏற்பாடாகியிருந்தது, தங்கி ஓய்வெடுக்க. இரவு திரும்பி வந்தால் சதாசிவ அய்யர் நின்று கொண்டிருக்கிறார். அத்தானுக்கு ஆச்சர்யம்! அப்படியென்றால் எம்.எஸ் இங்கு இருக்கிறார்கள்!!

ஆனால் பாவம் அவருக்கு வேறொரு சங்கடம். அரியக்குடியின் ஒன்று விட்ட பேரன் அவர். இளமையில் தாத்தாவுடன் இருந்த பசுமையான நினைவுகள் இன்றுமுண்டு. ஆனால் தத்தா தன் சொத்து முழுவதையும் வீணை தனத்திடம் இழந்து விட்டார். அவரோடு அவர் புகழும், பரிசுகளும் எங்கெங்கோ போய் சேர்ந்தன. அப்படியிருக்க சங்கீதக்காரர்களைப் பார்க்கும் போது அரியக்குடி ராமானுஜ அய்யங்கார் பற்றிய பேச்சு வரும். என்ன செய்வது? என்ற சங்கடம்.

என்ன செய்வது? வந்தாச்சு. சதாசிவம் கேள்விக்குறியுடன் எங்களைப் பார்த்தார். 'அம்மாவை' த் தொந்தரவு செய்ய இந்த நேரத்த்஢லும் ஆட்களா? என்னும் கேள்வியுடன். நாங்கள் அந்த வகையில்லை, இங்கு எங்களுக்கும் தங்குமிடம் இருக்கிறது என்றவுடன் அவர் கொஞ்சம் சமாதானமானார். அப்புறம் பேச்சு, அங்கு இங்கு என்று சுற்றி அரியக்குடிக்கு வந்தது. அத்தானைப் பார்த்து, "நான் அரியக்குடிக்குப் போட்ட வைரச் செயின் வீட்டில் இருக்கிறதோ?" என்று அகஸ்த்துமாஸ்தாகக் கேட்டுவிட்டார். அத்தான் முகத்தில் ஈயாடவில்லை!

எப்படியோ சமாளித்து ரூமிற்கு வந்து ஒரே கச, கசா பேச்சு. பக்கத்து அறையில் எம்.எஸ். அவர் பெண் ராதா. ஒரே ஆசை. ஆனால் வெட்கம். குழந்தைகள் ஒரே கும்மாளம்.

கொஞ்ச நேரத்தில் ராதா அவர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். "அம்மா, உங்களையெல்லாம் பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள்! வருகிறீர்களா?" என்று அழைப்பு!

எங்கள் காதுகளை எங்களால் நம்பமுடியவில்லை. இந்தியாவின் இசைராணி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பெற்ற ஒப்பற்ற கலைஞர் எங்களைக் காண வேண்டுமென்று அழைப்பு விடுகிறார் என்றால் சும்மாவா!

அடுத்த நொடியில் வீட்டுக் கூட்டம் எம்.எஸ்ஸைச் சுற்றி. எம்.எஸ் எப்பவும் போல் லக்ஷணமாக, மூக்கும், முழியுமாக இருந்தார்கள். அக்காவிற்கு இசை வரும், கச்சேரி செய்திருக்கிறாள். எனவே எம்.எஸ்ஸிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள். குழந்தைகள் நமஸ்கரித்தன. குழந்தைகளை மடியில் வைத்துக் கொஞ்சினார். "குழந்தைகள் பக்கத்து அறையில் கும்மாளமடிக்கையில் தனியாக நாங்கள் மட்டும் இங்கு உட்கார்ந்து இருப்பானேன்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். வண்டி வரும் வரை பேசிக் கொண்டிருந்தோம்.

எம்.எஸ். இசை ராணியாக இருந்தாலும் எங்கள் மதுரைவாசிகள் போல் உள்ளத்தில் மிக எளிமையான நபராக இருந்தது இன்றும் மகிழ்வளிக்கிறது.

அம்மா மடியில் மொட்டைத்தலையுடன் தவழ்ந்த குழந்தை ஜனவரியில் கல்யாணம் செய்து கொள்கிறது. இந்த நினைவே அவளுக்கொரு கல்யாணப்பரிசு என்பதை கல்யாண அமர்க்களத்தில் நினைப்பாளோ எங்கள் அனு?

0 பின்னூட்டங்கள்: