வைகைக்கரை காற்றே!......021

நந்துவிற்கு பள்ளிக்கூடத்தில் நடப்பதைவிட வெளியே நடப்பதே சுவாரசியமாக இருந்தது. டீச்சர் பாட்டுக்கு ஏதோ சொல்லச் சொல்வார் வாய் சொல்லிக்கொண்டிருக்கும் கண்கள் வெளியே இருக்கும்.இந்தப் பன்றிகள் சுவாரசியமானவை. கருத்த முலைக்கூட்டுள்ள பன்றிகள். எப்போதும் அஞ்சாறு பன்றிகள் கூட்டமாகவே அலையும். மனிதர்களைக் கண்டு அவை பயம் கொள்வதில்லை. அவைகளைக் கண்டுதான் சனங்கள் பயப்பட்டனர். முக்கிய காரணம் பன்றிகளின் பழக்க வழக்கங்கள் அவ்வளவு நாகரீகமானவை அல்ல. காட்டில் இருந்தவரை கிழங்குகளை மட்டும் உண்டு வந்த ஒரு இனத்தை கிராமத்திற்குக் கொண்டு வந்து மனிதன் கெடுத்து விட்டான். அவை ஏதேதோ தின்ன ஆரம்பித்தன. குழந்தைகள் நிம்மதியாக வெளிக்குப் போகமுடியவில்லை. பின்னால் வந்து முட்டுவதுதான் தெரியும். குழந்தை மல்லாக்கக் கிடக்கும். பன்றி வேண்டியதை எடுத்துக் கொண்டிருக்கும். இதனால் குழந்தைகளை வெளியே கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, பன்றியை விரட்டத் தாயாராகக் கம்புடன் தாய்மார்கள் நிற்பது கூட உண்டு. சின்னப் பன்றி சின்னப்பன்றியின் மீது ஏறும். அது ஓடும். வாண்டு என்பவையிலிருந்து, பருவ மங்கை, முதிர்ந்த மாது என்று பன்றிகளில் பலவகையுண்டு. முகத்தைப் பார்த்தாலே தெரியும். மனிதர்கள் போலவேதான் அவையும், ஆண் பன்றிகள் பெண் பன்றிகளை கணக்குப் பண்ணிக்கொண்டே இருக்கும். சில நேரங்களில் பன்றிகளின் முகத்தில் கூட நாணம் தெரிக்கும்.

பள்ளிக்குப் பெரிய சுவர் என்று கிடையாது. கதவு கிடையாது. நீண்ட கட்டப்பலகை போட்டிருக்கும். அதில் உட்கார்ந்து கொண்டு சிலேட்டுப் பலகையில் குச்சி வச்சு எழுத வேண்டும். குச்சியை தரையில் தேய்த்து கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும். எனவே தரை முழுக்க குச்சித்தடம் பதிந்து இருக்கும். கடல் முள்ளம் பன்றியின் முட்களைக்கூட நந்து சிலேட்டுக் குச்சியாக பயன் படுத்தியிருக்கிறான். கொஞ்சம் எழுதிய பின் அது சிலெட்டில் கீறிவிடும். அதைப்பின் எடுக்கவே முடியாது. சண்டை வரும் போது பசங்கள் இந்தக் குச்சி கொண்டு சிலேட்டில் கண்ட மேனிக்கு கிறிக்கி வைத்து விடுவார்கள். அப்புறம் சிலேட்டில் எழுதுவது என்னவென்று புரியாததால் டீச்சர் அடிப்பார். டீச்சர் அடித்தால் பின் பள்ளிக்குச் செல்லப்பிடிக்காது. வயித்து வலின்னு சொல்லிட்டு டிமிக்கி கொடுக்கத்தோன்றும். கொல்லையில் உட்கார்ந்து கொண்டு ஓணான் என்ன செய்கிறது என்று பார்க்கலாம். ஆனால் இந்த ஓணான் சுவாரசியமே இல்லாத பிராணி. உக்காந்த மாதிரிக்கு கண்ணைக் கூடச் சிமிட்டாம ஒரு மணி நேரம் இருக்கும். அப்புறம் திடீருன்னு ஓடிப் போயிடும். பள்ளிக்குப் போனால் பன்றி பார்க்கலாம்.

நந்து நிறைய டிகிக்கி கொடுக்க ஆரம்பித்தான். டீச்சரே வந்து கூட்டிக்கொண்டு போன காலமுண்டு. 'நாளைக்கு நீதான் கடவுள் வாழ்த்துப் பாடணும்ன்னு சொல்லி 'பித்தாபிறை சூடிப் பெருமானே' என்று சொல்லிக்கொடுத்து பாடவைத்தாள். நந்து முதல் முறையாக பலருக்கு முன்னாலே பாடினான். கால்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. டிராயர் கொஞ்சம் நனைந்திருந்தது. பாதிப்பாட்டு வந்திருப்பான், யார் வீட்டிலோ சேட்டை செய்த பன்றியை ஆவேசத்துடன் ஒரு அம்மா துரத்த பயந்து போன பன்றி அசெம்பிளிக்குள் வந்து விட்டது. காம்பவுண்டெல்லாம் அந்தக் கொரப்பள்ளிக்கு கிடையாதே. ஆளுக்காளு துரத்த அங்குமிங்கும் ஓடிய பன்றி கடைசியாக நந்துவை விழுத்தாட்டிவிட்டு ஓடி விட்டது. நந்துவின் டிராயரெல்லாம் சேர். காலில் சிராய்ப்பு. ஓ வென்று அழ ஆரம்பித்தான். பிறை சூடிய பெருமான் இவன் பாட்டை முடிப்பான் என்று காத்துக்கொண்டிருக்கும் போது (பின்னால் கோயில், மறக்க வேண்டாம்) பார்த்தால் நந்து பாட்டை 'அம்போ' என்று விட்டு விட்டு அழுது கொண்டிருந்தான். டீச்சர் கிட்டக்க வர, வர நந்துவிற்கு இந்த பள்ளி வாழ்வை விட்டு ஓடிவிட வேண்டுமென்று தோன்றியது. ஒரே ஓட்டம். நின்ற போது வீடு எதிரில் இருந்தது.

பங்கஜம்தான் இருந்தாள். "என்னடா ஆச்சு? கீழே விழுந்துட்டியா?" என்றாள். பன்றி மோதி விட்டது என்று சொல்ல வெட்கம். ஒரே ஓட்டமாக கிணத்துப்பக்கம் ஓடிவிட்டான். அம்மா குளித்துக் கொண்டிருந்தாள். இவனும் கூடப் போய் ஒட்டிக் கொண்டான். "சீ! என்னடா? சாக்கடை நாத்தம்? எங்கே விழுந்தே?" என்று இன்னும் ரெண்டு வைத்துவிட்டு அம்மா குளிப்பாட்டிவிட்டாள். "அம்மா! இனிமே நா பள்ளிக்கூடம் போமாட்டேன்" என்று முடிவாகச் சொல்லிவிட்டான் நந்து.

குளித்து முடித்து முத்ததிற்கு வரும் போது டீச்சர் இவனோட பையைத்தூக்கிகிட்டு வீட்டிற்கு வந்திருந்தாள். 'அம்மா, நந்துவை ஸ்கூலுக்கு வரச்சொல்லுங்க!" என்றாள். இவன் மீண்டும் ஓ வென்று அழ ஆரம்பித்தான். ஒண்ணும் புரியாத அம்மா, போனாப் போறது நாளைக்கு அனுப்பி வைக்கிறேன் என்றாள்.

டீச்சர் நந்துவைப் பார்த்து 'இப்படித்தினம் பண்ணினே! கால்லே கட்டை போட்டுத்தான் ஸ்கூலுக்கு வரணும்' என்று சொன்னாள். அந்த ஊரு ரொம்ப மோசம். சண்டி மாட்டுக்கும் கட்டை கட்டிவிடறாங்க. ஸ்கூலுப் பையன்களுக்கும் கட்டை கட்டிவிடறாங்க.

இதையெல்லாம் நினைத்து நந்துவிற்கு ஜுரம் வந்துவிட்டது. இதைச் சாக்கா வச்சு இன்னும் ரெண்டு நாளுக்கு டிமிக்கி கொடுத்து விட்டான்!

அண்ணா வரைக்கும் விஷயம் போய் விட்டது. "பேசாம இவனைப் பன்னி மேய்க்கவே அனுப்பியிருக்கலாம்" என்று அலுத்துக் கொண்டார். "குரப்பயலுகளோட போய் இருக்கயாடா?" என்றார். நந்துவிற்கு அவமானமாக இருந்தது.

ஒரு டியூஷன் வாத்தியார் வைத்து இவனைத் தேற்றலாமென முடிவானது. வாத்தியார் சாயந்தரமாக வீட்டிற்கு வருவார். வந்தவுடன் முதலில் அம்மாவிடம் குசலம் விசாரிப்பார். அதற்கு அர்த்தம் ஒரு காபி கிடைக்குமா என்பது. வாத்தியார் காபிக்கு அடிப்போடும் போதே நந்து கொல்லைப்புறம் நழுவி விடுவான். அவர் மெதுவாக காபி குடித்துவிட்டு வீட்டுப்பாடத்தை எடுக்கும் போது நந்து எங்கே என்று யாருக்கும் தெரியாது. தேடு, தேடு என்று தேடுவார்கள். யாரும் எதிர்பார்க்காத கக்கூஸில் போய் இவன் ஒளிந்து கொண்டிருப்பான். இப்படியே இவன் டியூஷனுக்கும் டிமிக்கி கொடுக்க ஆரம்பித்தவுடன் வீட்டில் சூடு ஏற ஆரம்பித்தது.

அம்மாவிற்கு தன் குழந்தைகள் படித்து முன்னேறவேண்டுமென்பதில் ரொம்ப கவனம். முதல் ரெண்டு பொண்ணுகளையும் படிக்கவில்லையே என்று இப்போது வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறாள். இதில் ஆம்பிளப்பையனா இருந்துட்டு இவன் படிக்கலைனா என்ன அர்த்தம்? 'நீங்களே இவனைத்தட்டிக் கேளுங்கோ! இவன் அப்பா செல்லம்தானே!' என்று பொறுப்பை அப்பாவிடம் தள்ளிவிட்டாள் கோகிலம்.

அண்ணா அலுத்துபோய் வந்திருந்தார் ஒரு மதியம். போன காரியம் சுபமில்லை. கடுப்பிலிருந்தார். அந்த நேரம் பாத்து நந்து பிரச்சனை வீட்டில் வந்தது. நாராயணன் கோபப்பட்டு யாரும் பார்த்ததில்லை. அலுத்துக் கோள்வார். சோர்வாக இருப்பார். ஆனால் கோபப்படமாட்டார். அன்று கோபப்பட்டார். நந்துவிற்கு அடி விழுந்தது மட்டுமல்ல. பன்றி மேய்க்கப்போற பயல் இந்த வீட்டில் இருக்கத்தேவையில்லை என்று குட்டி நந்துவைத்தூக்கிக் கொண்டு, கிணத்துப் பக்கம் போக ஆரம்பித்தார். அம்மாவிற்கே தூக்கி வாரிப்போட்டது. இது என்ன, விளையாட்டு விபரீதமாப் போயிடும் போலருக்கே என்று யோசிக்கும் முன்பு, சித்தி அண்ணா பின்னாலே ஓடிக் கொண்டிருந்தாள். "அத்திம்பேர், அத்திம்பேர் என்ன காரியம் செய்யப்போறேள். கண்ணே கண்ணு ஒண்ணே ஒண்ணுன்னு இத்தனை வருஷத்துக்கு அப்புறம் பையன் பொறந்திருக்கான். அவனைப் போய் கிணத்தில போடப்போறளே?".
அண்ணா கிணத்து மேட்டு மட்டும் போய்விட்டார். நந்து அவர் கைகளில் இருந்தான். கிணற்று நீர் தளும்பிக் கொண்டிருந்தது. அம்மா இரு பக்கம், பக்கத்து வீட்டு ராக்கு ஒரு பக்கம். ஒரே அமர்க்களம். "டேய் வாண்டு! இனிமே ஸ்கூலுக்கு டிமிக்கி கொடுத்தே, நிஜமாவே தூக்கிப் போட்டுவேன். இவா சொல்லறாளேன்னு விடறேன்" என்று கூறி இறக்கிவிட்டார்.

நந்து ஒரே ஓட்டமாக வெளியே ஓடி விட்டான். அவனுக்கென்னமோ அண்ணா நிஜமாக கிணத்தில் போடுவார் என்று தோன்றவில்லை.

0 பின்னூட்டங்கள்: