இளையராஜாவின் பால்நிலாப்பாதை

இன்று எனக்கு காய்ச்சல், ஜலதோஷம். காய்ச்சலாகக் கிடக்கும் போதுதான் இப்போதெல்லாம் புத்தகம் வாசிக்க நேரம் கிடைக்கிறது. இளையராஜாயின் எண்ணக் குறிப்புகளான பால்நிலாப்பாதை எனக்கு நத்தார் பரிசாகக் கிடைத்தது. யார் கொடுத்திருப்பார்களென்று ஒரு சொடிக்கில் நீங்கள் அறியலாம்!

அவர் "புதிய பார்வை"யில் முன்பு எழுதிய குறிப்புகளையும் வாசித்து இரசித்திருக்கிறேன். ஒரு பக்கம் இவர் தனது அத்வைத ஆன்மீகப் புரிதல் பற்றி எழுதுவார். அடுத்த பக்கத்தில் பெரியாரின் வாழ்வு பற்றி வீரமணி எழுதிக்கொண்டிருப்பார். இந்த சுவைக்கத் தகுந்த முரண்பாடுதான் - தமிழ்நாடு!

முகப்பில் இசைஞானி இளையராஜா என்று போட்டிருக்கிறது. தான் சினிமாக்காரனில்லை என்று அழுத்தமாக இப்புத்தகத்தில் சொல்லும் ராஜா இந்த அர்த்தமற்ற பட்டத்தை ஏன் ஏற்றுக்கொண்டு அதை இந்தப்புத்தகத்தில் போட்டார் என்று தெரியவில்லை. தன் முகவுரையில் 'இறைவனடி' இளையராஜா என்று கைழுத்திடுகிறார். அது பொருத்தம் என்று தோன்றுகிறது. அவர் தனது ஆன்மீகத்தேடலில் ஒரு ஞானியின் நிலையை அடைந்திருக்கலாம். அது தனி மனிதத்தேடல். இசையில் அவர் மேதை. அது புரிகிறது. இசையில் ஞானி என்றால் புரியவே இல்லை! தியாகப்பிரம்மம் என்று சொல்லாமல் சொல்லுகிறார்கள் போல! ஆனால் தான் 'அது' இல்லை என்று உணர்ந்து சொல்கிறார் இளையராஜா. ஆனால் அவர் 'அது' தான் என்று நாத்திகர் கமல் சொல்கிறார். சினிமாக்காரர்கள் பேசுவது புரிவதே இல்லை!

இந்தப் புத்தகத்தில் காணக்கிடைக்காத சில அரிய படங்கள் கிடைக்கின்றன. அவர் சொல்லாவிட்டால் நமக்குத்தெரியவே தெரியாது என்று போகக்கூடிய பல விஷயங்கள் உள்ளன. பாரதி பாடுவான், 'இறைவனில் அருள் பாயும் பள்ளமாக நம் உள்ளம்' இருக்க வேண்டுமென்று. அது போல் கல்வியறிவில்லாத இளையராஜா தன் விடா முயற்சியினாலும், இறை அருளாலும் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்திருப்பதை இப்புத்தகம் நன்றாகவே உணர்த்துகிறது. இவரது வாழ்க்கை லா.ச.ரா பேசும் அவரது பாட்டியை ஞாபகப்படுத்துகிறது. அந்தப்பாட்டிக்கு திடீரென்று ஒரு நாள் அருள் கிடைத்துவிட உபனிடதங்களுக்கு விளக்கம் சொல்லும் அளவு சமிஸ்கிருத ஞானம் வந்து விடுகிறது. பண்டிதர்களெல்லாம் வந்து பாட்டியிடம் விளக்கம் கேட்டுப் போகிறார்கள். அப்படித்தான் இவர் வாழ்க்கையும் என்று தோன்றுகிறது.

இவர் திருப்பாணாழ்வார் போல் தலித்தாகப் பிறந்து செய்கையால் பிராமணராக உயர்ந்தவர். ஆனால் இவர் இப்படி சாமியார்த்தனமாகப் பேசி ஐயராக மாறிவிட்டது பெரிய குறையாக தலித் இயக்கத்திற்குப் படுகிறது. இங்குதான் பாரதி சொன்னது, எம்.எஸ் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது. குலம் ஒருவனது குணத்தை தீர்மானிப்பதில்லை. சத்திரியனான கௌசிகன் விசுவாமித்திர பிராமணனாக மாறுகிறான். பாரதி எல்லோருக்கும் பூணலைப் போட்டு பிராமணர்களாக மாற்ற வேண்டுமென்று சொன்னான். "எல்லோரும் சமம் என்ற பேச்சு" பின் தானாக வரும் என்பது அவன் கட்சி. ஆனால், தலித் இயக்கம் இதை ஒத்துக்கொள்வதில்லை. அவர்கள் கடைசிவரை தலித் என்ற அடையாளத்துடன் இருக்கவேண்டுமென்கிறார்கள். அதனால் இந்த மனுஷன் தன் பெயருக்கேற்றவாறு அந்தக் காலத்து ராஜாக்கள் செய்தது போல் ஸ்ரீரங்க கோபுரம் கட்டியது பிழையாகக் கூட இயக்கத்திற்குப் படலாம். ஆனால், இந்த காரியத்தைச் செய்ய உந்துதலாக இருந்தது அந்தப் பிறப்பென்னும் இந்திய வம்சாவழி விழுமியமே. எத்தனை பணக்காரர்கள் இருக்கிறார்கள். யாருக்குமே தோன்றவில்லையே? இளையராஜா ஏன் செய்தார்? கிருஷ்ணப்பறையர் என்று போட்டுக்கொள்வது பற்றி தலித் இயக்கம் என்ற சொல்கிறது என்று தெரியவில்லை. இளையராஜா இதையெல்லாம் கடந்து போய்விட்டார். அம்மாவை "மம்மி" என்று சொல்லும் கலாச்சாரதிற்குப் போய்விட்டார். இனிமேல் அவரை கீழே இழுக்கமுடியுமென்று தோன்றவில்லை. இசைஞானி என்ற பட்டம் ஒரு கவசம் போல் இச்சூழலுக்கு உதவுகிறது.

எல்.சுப்பிரமணியம் இசையமைக்க ஆரம்பித்து பின் ராஜா அமைத்த ஹே! ராம்! படம் பற்றிய பேச்சு வருகிறது. தமிழகம் இவர் லண்டன் பில்ஹார்மோனிக்காவிற்கு இசையமைத்ததை இதைச் செய்த ஒரே தமிழன் இவர்தான் என்று பறை சாற்றிவிட்டது. எல்.சுப்பிரமணியத்தை நான் ஜெர்மனியில் சந்தித்த போது இதுபற்றிக் கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே அது பிழை என்றார். எல்.சுப்பிரமணியம் இதை இளையராஜாவிற்கு முன்பே செய்திருக்கிறார். ஆனால், எல்.சுப்பிரமணியத்திற்கு இருப்பது போன்ற ஒரு தீக்ஷதர் பரம்பரை இளையராஜாவுக்கு கிடையாது என்பதென்னவோ உண்மை.

வலைப்பூவில் நவன் சொன்னார். நாமெல்லோரும் நம்மைப்பற்றி சொல்லிக்கொள்ள வேண்டுமென்று. உண்மைதான். இளையராஜா சொல்லவில்லையென்றால் பின் நமக்கு இந்த விஷயங்களெல்லாம் எப்படித் தெரியவரும்? இளையராஜாவிற்கு தனியாக வலையகம் இல்லை. அது தேவையில்லை என்றும் பிரசாத் கோபால் நடத்தும் வலையகமே போதுமென்று ராஜா சொல்கிறார். அவரை வைத்தே இளையராஜாவின் நினைவுகளை வலைப்பதிவாக்க வேண்டும். புத்தகம் வித்துதான் அவருக்கு இனிமேல் சம்பாத்தியமென்றில்லை. அவர் சிவாஜி பற்றி பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார். இனிமேல் ராஜாவின் வாழ்வும் மக்களின் மனதிலேயே. அப்படியெனில், நானும், நீங்களும் செய்வது போல் அவரும் வலைப்பதிவு செய்ய வேண்டும். இலவசமாக.

0 பின்னூட்டங்கள்: