வைகைக்கரை காற்றே!......022


பத்ம நிலையத்திற்கு பாட்டு வாத்தியார் வந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தருவதற்குள் நந்து செய்த சேட்டையால் டியூஷன் வாத்தியார் வந்ததில் கோகிலத்திற்கு ரொம்ப வருத்தம். அவள் கவலையெல்லாம் இவன் மூதாதையர் போல் இவனும் தர்பப்புல்லைத்தூக்கிக்கொண்டு மற்றவர்க்கு கர்மம் பண்ணப் போய்விடுவானோ என்பதுதான். இவனது பெரியப்பா ஜோஸ்யர், இவன் சித்தப்பா ஜோஸ்யர். உறவெல்லாம் ஒண்ணு சங்கீதக்காராள இருப்பா இல்லாட்டி ஜோஸ்யரா இருப்பா. போறும், போறும் என்று ஆகியிருந்தது கோகிலத்திற்கு. அவள் பாரதியின் வாக்கிற்கு கட்டுப்பட்டிருந்தாள். ஆயிரம் புண்ணியம் செய்வதை விட தன் குழந்தைகளுக்கு நல்ல கல்வியைத் தந்துவிட வேண்டுமென்பதில் அவள் கவனமாக இருந்தாள். தனது தாத்தா மதுரையில் மிகப்பெரிய வக்கீல். அது மாதிரி இவன் வர வேண்டாமோ? இவன் பன்னிக்குட்டியின் அழகைப் பார்பதிலும், கன்னுக்குட்டியின் கழுத்தைத் தடவிக்கொண்டு இருப்பதிலும் காலத்தைக் கழித்து விடுவான் போலருக்கிறதே என்பதே கோகிலத்தின் கவலை. அவள் கவலைப் படுவதற்குக் காரணமிருந்தது.

பத்மாவை பள்ளிக்கு அனுப்பினாள். அது கொஞ்சம் பயந்த ஸ்வாபம். ஐந்தாவது தாண்டுவதற்குள் ஏதோ காவலிப்பய கையைப் புடிச்சு இழுத்தானுட்டு பள்ளிக்கூடம் போக மாட்டேன் என்று விட்டது. பங்கஜத்தை படிக்க வைக்க முடியாமல் போய் விட்டது. இந்தக் கமலாவிற்கு எவ்வளவு சொல்லியாகிவிட்டது? இன்னும் எஸ்.எஸ்.எல்.சி தேறமாட்டேன் என்கிறாளே! எவ்வளவு செலவு, ஒவ்வொருமுறையும் பரிட்சைக்கு பணம் கட்ட வேண்டியது. சாதத்தைக் கட்டி மானாமதுரைக்கு பரிட்சை எழுத அனுப்ப வேண்டியது. பரிட்சை முடிவு வந்தா இவ பேரு மட்டும் இருக்காது. இவளுக்கு போட்டி போட்டுண்டு அம்மாஞ்சி பிள்ளை கிச்சாம்பி வேறு!

அந்த ஊர் கல்விக்குப் பேர் பெற்ற ஊர் என்றெல்லாம் பொய் சொல்லக்கூடாது. ஆகா, ஓகோ என்றால் வீச்சருவாளை எடுக்கிற ஊரு. தேவமாரு நிரம்பிய ஊரு. திருப்பாச்சேத்தி அருவான்னா வட்டாரமே அலறும். வாரத்திற்கு ஒரு குத்து, வெட்டு நிகழும். முரட்டுப் பசங்க ஊரு. இந்த ஊரில் இருந்து கொண்டு குழந்தைகளை படிக்க வைப்பது கடினம். பிராமணனா பிறந்து வெட்டி, குத்துன்னு தேவராப் போன பசங்கள் அந்த அக்கிரஹாரத்தில் உண்டு. அந்தப் பசங்க சங்காத்தமெல்லாம் புதூரில்தான் இருக்கும். நல்லவேளை அக்கிரஹாரத்திற்கு அவர்கள் அதிகமாக வருவதில்லை. பெரிய கவியரசர்கள் அந்த மண்ணில் பிறந்ததில்லை. கம்பன் கூட ஊரெல்லாம் பட்டி, தொட்டி என்று பாடிவிட்டுப் போயிருப்பதாக தமிழ் வாத்தியார்கள் சொல்லுவார்கள். அந்த ஊரில் எஸ்.எஸ்.எல்.சி தாண்டுவது இமயமலையில் ஏறுவதற்குச் சமம்!

நந்து எஸ்.எஸ்.எல்.சி வரை தேறுவானோ?

அண்ணா கிணத்தில் போடப்போன பிறகு நந்து "கஷ்டபட்டு" படித்தான். நாலாவது வரை பாசாகிவிட்டான். ஐந்தாவது! அந்த ஊரில் அதுவரை பெரிய பள்ளி கிடையாது. பெரிய பரிட்சை (எஸ்.எஸ்.எல்.சி) எழுத மானாமதுரைக்குப் போக வேண்டும். ஆனால் நந்துவின் துரதிர்ஷ்டம் இவன் ஐந்தாவது வரும் போது அந்த ஊருக்கு ஒரு பெரிய பள்ளி வந்து விட்டது. ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்புவரை உள்ளூரிலேயே படிக்கலாம். ஆனால், ஆறாம் வகுப்பு போகு முன் ஆங்கிலப்பாடம் உண்டு. எனவே அதற்கு தயார் பண்ணும் வகையில் ஐந்தாவது படிக்கும் பசங்களுக்கு இலவச ஆங்கில வகுப்புகளை ஆரம்பித்தனர்.

ஒரு மாதமாகியும் ஒரு பய பெயரைப்பதிவு செய்யவில்லை. இந்தத்திட்டம் தோல்வியுறும் என்று தோன்றியதுபோது நிர்வாகம் ஒரு புதிய யுக்தியைக் கையாண்டது! அதுதான் படிக்க வரும் பசங்களுக்கு பாடத்தோட ஒரு லட்டும், காராப்பூந்தியும் தரப்படும் என்னும் திட்டம். இது மாணவர்களிடம் கொஞ்சம் அசைவைக் காண்பித்தது. நந்துவிற்கு ஆங்கிலப் பாடத்தை விட உச்சிக்குடுமி ஐயர் கடை லட்டும், காராப்பூந்தியும் அதிகம் கவர்ந்தது. நந்து வாழ்வில் முதல் முறையாக ஆங்கிலம் கற்றுக் கொள்ளத்தொடங்கினான்!

0 பின்னூட்டங்கள்: