ஜென் அநுபவம்!நகல் நிஜம் (விர்ச்சுவல்) என்பதும் நிஜத்தின் ஒரு தோற்றமே. நிஜமென்றால் என்னவென்று புத்த பிட்சுக்கள்மாதிரி அடுத்த கேள்வி கேட்காதீர்கள் :-) ஜென் மதம் வளர்ந்தது இந்த பூமியில்! முதன்முறையாக ஒரு புத்த பிக்குணி கோயிலில் பேசுவதைக் கேட்டேன். சித்தார்த்தனின் தேடுதல் தீ போல் பற்றிக்கொள்ளக்கூடியது என்பது இந்தியாவை விட்டு ஆயிரம் மைல்கள் கடந்து வந்தும் கண்டுகொள்வதாய் இருந்தது. அது மனதிற்கு மகிழ்ச்சியைத்தந்தது.

பனிக்காலத்தில் மலையேறுவது ஒரு புதிய அனுபவம். குழந்தையிலிருந்து திருமாலிருஞ்சோலை மலையில் ஏறிக்கொண்டிருக்கிறேன். அது வேறு அனுபவம்! குளிர்காற்றில் சலசலக்கும் அருவி கூட அமைதியாகிவிடுகிறது! இல்லை பனி அதன் வாயை அடைத்துவிடுகிறது! அருவிகூட குளிரில் விரைத்து விடுவது பார்க்க வித்தியாசமாக இருக்கிறது! சோல் நகருக்கு மிக அருகில் புல்குக்சான் என்றொரு மலைத்தொடர் உள்ளது. நகர வாழ்வின் நகல் சலிக்கும் போது இயற்கையில் அமைதி தேட பலர் இங்கு வருகின்றனர். தென்கொரியாவின் 75% நிலப்பரப்பு மலைகளால் சூழ்ந்திருப்பதும் ஒரு வசதி!

ஆற்றின் ஊற்று. இதை மணற்கேணி என்கிறான் வள்ளுவன். இதன் சுவை தனி. பின் ஏரி, ஊரணித்தண்ணீர். அதன் சுவை வேறு. மலையில் உருவாகும் நதியின் நீர். குற்றாலத்தண்ணீர் பல மூலிகைகளின் சாறு கொண்டு வருவதால் அதற்கொரு சிறப்புண்டு. பாட்டிலில் ஊற்றிக்கொண்டு வந்த அனுபவம் உண்டு. அழகர்கோயில் போனால் நூபுரகங்கை போய் அந்த தீர்த்தத்தொட்டி நீரை பருகி வாருங்கள். அதன் சுவை தனி. அருவி நீரில் ஆக்சிஜன் அதிகம். எனவே அது சோடா வாட்டர் போல் சுவையாக இருக்கும். இப்படி காற்றை அள்ளிக்கொண்டுவரும் அருவி உறையும் போது அற்புதமான ஒரு சிற்ப வேலைப்பாட்டுடன் உறைந்து விடுகிறது!

பனியில் பல வகைகளுண்டு. இதை விவரித்து ஒரு சிறுகதை 'புதிய பார்வையில்' எழுதியிருக்கிறேன், முன்பு (அது 'உதிர் இலை காலம்' தொகுதியில் வந்துள்ளது). பஞ்சு பறப்பது போல் பனி உண்டு. மூஞ்சியில் பட்டு அப்படியே பஞ்சாய் உருகிவிடும். பிறகு, சின்னச் சின்ன கிரிஸ்டல் போன்ற ஸ்படிகப்பனியுண்டு. கல்லுளிமங்கன் பனிதான் ரொம்ப ஆபத்தானது. அது உருகி இறுகிவிடும் போது. தரை அப்படியே பனிக்கம்பளமாகிவிடும். அப்புறமென்ன கனபாடிகள் வழுக்கி விழுந்து காலை உடைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

நீர் படி நிலைகளில் உறையும் போது சுயமாக சில ஓவியங்களை வரைகிறது. இயற்கையின் முன் போட்டி போடுவது மிகவும் கடினம். அதே நேரத்தில் இயற்கையின் சில டிசைன்கள் ஒன்றுபோலவே இருக்கும். கடலும் கடல் சார்ந்த நெய்தல் கோலம் வானத்தில் பறக்கும் போது மேகங்களிலும் இருப்பது ஆச்சர்யமாக இருக்கும்! இதோ பாருங்கள்! ஏதோ சாடிலைட் படம் போல் தோன்றும் இக்காட்சி தரையில் நீர் உறையும் போது வருகிறது. இதுதான் எங்கள் வளைகுடா. ஸ்பேஸ் சட்டிலில் எடுத்தது என்றால் நீங்கள் நம்பத்தான் போகிறீர்கள்!அதே போல் கியோத்தோ (ஜப்பான்) போனால் அங்கொரு மிக அழகான ஜப்பானிஸ் கார்டன் இருக்கிறது. அங்குள்ள ஒரு மாளிகையில் மணல் கொண்டு கடல் வரைந்திருப்பார்கள். சின்னச் சின்ன மலைகள் கூட அங்குண்டு. அது போன்ற ஒரு காட்சி என் கேமிராவிற்குக் கிடைத்தது. இதைப்பார்ப்பது, இதைப்படமெடுப்பது இரண்டுமே ஜென் அனுபவங்கள். நீங்களும் அனுபவியுங்கள்!

0 பின்னூட்டங்கள்: