வைகைக்கரை காற்றே!......023

"டேய் நந்தூ! எங்கேடா போய்ட்டே? நாலைஞ்சு நாளாக்காணோம்?" என்று நந்துவை மீண்டும் பார்த்த மகிழ்வில் கேட்டான் நாகன்.

"உனக்குத் தெரியாதா? பெரிய பள்ளிக்கூடத்திலே உல்லாசப்பயணம் போனோம்" என்றான் நந்து.

நந்து ஆரம்பப்பள்ளி முடித்து பெரிய பள்ளியில் சேர்ந்து விட்டான் இப்போது. நாகன் இன்னும் ஆரம்பப்பள்ளி தாண்டவில்லை. நந்துவின் ஒட்டப்பள்ளி வாழ்வு முடிந்து விட்டது. பன்றிகளின் தொடர்பும் அறுந்து விட்டது. பெரிய பள்ளியின் நாகரிகம் வந்து விட்டது. அது தட்டி போட்ட, தனித்தனி வகுப்புகள் கொண்ட பள்ளி. தரையில் யாரும் கட்டப்பலகாய் போட்டு உட்கார்வதில்லை. எல்லோருக்கும் அழகான டெஸ்க் இருந்தது. இரண்டு, இரண்டு பேர் அமரும் வண்ணம். நோட்டு புத்தகங்களை வைக்க தனியிடம் அதில் இருந்தது. இது அவனின் முதல் உல்லாசப்பயணமில்லை. ஆரம்பப்பள்ளியில் படிக்கும் காலத்திலேயே மதுரைக்கு அருகிலுள்ள அழகர்கோயிலுக்கு உல்லாசப்பயணம் போயிருக்கிறான்.

"டேய், சும்மா டூப் விடறாண்டா இவன்" என்றான் பாண்டி.

"ஏண்டா? அப்படிச்சொல்றே?"

"திருப்பதிபோனா மொட்டையடிச்சிருக்கணும். இதோ பாரு, குட்டமணி தலைய!" என்று குட்டமணியின் மொட்டைத் தலையைத் தடவினான் பாண்டி. குட்ட மணி தலையை விலக்கிக்கொண்டான் கூச்சத்துடனும், எரிச்சலுடனும்.

இதே காரணங்களுக்காகவே நந்து மொட்டையடிப்பதை வெறுத்தான். அங்கு பலருக்கு திருப்பதி வெங்கிடாசலபதி குலதெய்வமாக இருந்தது. காது குத்தி மொட்டையடிப்பது வழக்கமாக இருந்தது. நந்துவிற்கு காது குத்தியிருந்தது. மொட்டையடித்த ஞாபகமில்லை.

"அப்படில்லாம் ஒண்ணும் கிடையாதுடீ! பள்ளிக்கூட உல்லாசப்பயணம் போகும் போது யாரும் மொட்டையடிக்கமாட்டாங்க. இதுகூட இவனுக்குத்தெரியலே" என்று எதிர்க்கேலி செய்தான் நந்து.

"மொட்டையடிக்கிறது நல்லது" என்றான் குட்டமணி ஒரு தற்காப்புப் பேச்சாக.

"அப்படில்லாம் ஒண்ணுமில்லே" என்றான் நந்து.

"மொட்டையடிச்சா சாமி காப்பாத்தும்"

"மொட்டையடிக்காட்டிலும் காப்பாத்தும்"

"சரி, விடுங்கடா, அங்கே என்னே பாத்தே?" என்றான் நாகன்.

"பெரிய வரிசைடா! இவ்வளவு பெரிய வரிசையை நாங்க பாத்ததே இல்லை. மொதநா ராத்திரியே போய் வரிசைலே உக்காத்துட்டோ ம். அடுத்தநாதான் சாமி தரிசனம் கிடைச்சது"

"என்னது? அவ்வளவு பெரிய வரிசையா?" என்று வாயைப்பிளந்தான் நாகன்.

"ஆமாண்டீ! ராத்திரில்லாம் வரிசையேலேயே தூங்கணும். குளிரடிச்சுது. அதெல்லாம் பொறுத்துக்கணும். அப்போதான் சாமிக்கு நம்மைப் புடிக்கும்". மொட்டையடிக்காவிட்டாலும் பிற வழிகளில் சாமியை 'காக்கா' பிடிக்கமுடியுமென்று நந்து அவர்களுக்குக் காண்பித்தான்.

"கோயில்லே ஆளுக்கொரு லட்டு கொடுத்தாங்க. நம்ம உச்சிக்குடுமி ஐயர் லட்டு மாதிரி இல்லே. ரொம்பப்பெரிசு. கைக்கு அடங்காது" என்று ஒரு கால்பந்து அளவிற்கு கையைக் காட்டினான் நந்து. எல்லோரும் அசந்து போனார்கள்.

"ஆனா பாவம் ஜெபமணியோட லட்டு கரைஞ்சு போச்சு!" என்றான் நந்து.

"டேய், லட்டு எப்படிக்கரையும்டா?"

"கரையும்! இவன் என்ன பண்ணினான்னா லட்டையும், தண்ணி பாட்டிலையும் ஒண்ணாப்பைக்குள்ளெ போட்டுக் கொண்டு வந்தான். ராத்திரி டிரெயின் குலுக்கின குலுக்கல்ல பாட்டில் உடைஞ்சு போய் தண்ணி கொட்டி, காலையே பாத்தா, லட்டுக்கூழ் ஆகிவிட்டது" என்று நந்து சொல்ல எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

"ரொம்ப தூரம் ரயில்லே போனுமா?" என்றான் பாண்டி.

"ஆமா! இன்னிக்கி கிளம்பினா நாளைக்குத்தான் போகமுடியும். ராத்திரி வண்டியிலேயே தூங்கிக்கிலாம்"

"நம்ம டேசன் மாஸ்டர்தான் எல்லா ஏற்பாடையும் செஞ்சு கொடுத்தாரு" என்று நந்து ஸ்டேஷன் மாஸ்டருக்கு தனியா சிறப்புச் சொல்வதற்குக் காரணமிருந்தது.

ஸ்டேஷன் மாஸ்டருக்கு இரண்டு பெண்கள். பெரியவள் மாலா. இவள் சௌந்திரம் கிளாஸ்மேட். இரண்டாவது பெண் லதா. இவள் ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள். நந்துவை விட ஒரு கிளாஸ் கூட. நந்து வகுப்பில் உட்கார்ந்திருக்கும் போது அவள் தண்ணீர் குடிக்க அடிக்கடி அந்தப்பக்கம் வருவாள். வரும் போதெல்லாம் நந்துவைப்பார்த்துக் கொண்டேயிருப்பாள். இவனருகில் இருக்கும் பாலசுப்பிரமணியன்தான் இவனுக்குக் குத்திக்காட்டுவான். "டேய் அங்க பாரு! அந்தப்பொண்ணு உன்னயே பாத்துக்கிட்டு இருக்கு".

மாலா, லதா இரண்டு பேரில் லதா மிக அழகு. வைஜயந்திமாலாவின் அழகு அவளிடம் தெரிக்கும். அவள் சிரிப்பு மலர் கொட்டுவது போலிருக்கும். அவளது ஒவ்வொரு பார்வையும் நந்துவை அவன் இடத்திலிருந்து சுண்டியிழுக்கும். அவள் யார்? எங்கிருக்கிறாள் என்ற விவரம் கேட்குமளவிற்கு நந்துவிற்கு தைர்யம் கிடையாது. இந்தக் கட்டத்தில்தான் பாலு அவனுக்கு பெரிய உதவியாக இருந்தான். பாலு திருப்புவனம் ஸ்டேஷன் மாஸ்டர் பிள்ளை. லதாவின் அப்பா சப்-ஸ்டேஷன் மாஸ்டர். இவர்களுக்கு ஸ்டேஷனுக்கு அருகிலேயே தனி வீடுகளுண்டு. ஸ்டேஷன் ரொம்ப தூரத்தில் இருந்தது. பாலுதான் லதா பற்றிய மேல் விவரங்களை இவனுக்குத் தந்தான்.

மாலாவைப் பற்றிய பேச்சு வீட்டில் அடிக்கடி வரும். சௌந்திரம் சொல்லுவாள். ஒருமுறை லதாவிற்கும், நந்துவிற்குமிடையே ஏதோ நடப்பதை இவள் யூகித்து விட்டாள்! சும்மா இருப்பது அவள் வழக்கமில்லையே! அம்மாவின் காதில் போட்டு விட்டாள் பேச்சுவாக்கில்.

"ஏழாம் வகுப்புப் படிக்கிற லதாவிற்கு சின்ன கிளாஸ்லிலே படிக்கிற நந்து மேல என்ன அக்கறை?" என்று மூட்டிவிட்டாள்.

அம்மா வீட்டை விட்டு வெளியே போவதில்லை. ஆனால் உலக நடப்பு முழுவதும் வீட்டிற்கு வந்துவிடும். புதிதாக வந்திருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் ஸ்ரீநிவாசன் பற்றியும் சேதி வந்துவிட்டது. அவர்கள் ஐயங்கார் என்பது மட்டுமில்லை, அதில் எந்தப்பிரிவு என்பதும் அம்மாவ்விற்கு தெரிந்திருந்தது. நந்துவின் துரதிர்ஷ்ட்டம், அம்மாவிற்கு வடகலையென்றால் ஆகாது!

"டீ சௌந்திரம் நீ கொஞ்சம் இத நன்னா பாத்துக்கோ. அவா நெத்தியிலேயே கொக்கி உண்டு. என் பிள்ளையைக் கொத்திண்டு போயிடப்போறா" என்று ஒரு போடுபோட்டாள் கோகிலம்.

கோகிலத்திற்குப் பிடிக்காத எந்த விஷயமும் அந்த வீட்டில் நடந்ததில்லை.

0 பின்னூட்டங்கள்: