வைகைக்கரை காற்றே!......024

அந்தக் கிராமத்தில் குழந்தைகள் சட்டையில்லாமல் அம்மணமாய் ஓடியாடுவது ஒன்றும் பெரிய சேதியில்லை. சூடானா நாட்டில் இப்படித் திரிவதே குழந்தைகளுக்கு இயல்பானது என்று தோன்றுகிறது. ஒரு வகையில் கிராமத்தில் எல்லாமே வெட்ட வெளிச்சமாக நடப்பது போலும் தோன்றுகிறது. பெரியவர்கள் கொஞ்சம் வெட்கம் கருதி ஆத்தோரத்திற்கு, வயக்காட்டிற்கு வெளியே போகிறார்கள். அங்கு சுருட்டுப் பிடித்துக் கொண்டும், பீடி பிடித்துக் கொண்டும் காட்சியளித்தவாரே காரியங்கள் செய்கின்றனர். அதைக் குழந்தைகள் பீடி குடிக்காமல், சுருட்டுப் புகைக்காமல் வீட்டின் முன்னால் செய்கின்றன. புரட்டாசி மாதம் பிறந்து விட்டால் இந்த நாய்கள் படுத்தும் பாடு, அதன் நாடகங்கள் தெரு வீதியிலே பெரியோர், சிறியோர், விடலைகள் காண நடக்கின்றன. பாலியல் இச்சை என்பது கிராமத்துப் பேச்சில் ஒளித்து வைக்க வேண்டிய ஒரு பொருளாக இருந்ததில்லை. அதற்கெல்லாம் பின்னால் வருவோம்.

நந்து அந்த நாகரிகத்தை சற்றும் விடாமல் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டிற்கு வந்த முதல் வேலையாக டவுசரக் கழட்டி எங்கேயாவது போட்டு விட்டு தெருவிற்கு வந்து விடுவான். ஆனால் அந்த விளையாட்டெல்லாம் ஆரம்பப்பள்ளியுடன் முடிந்து விட்டது. டவுசர் போடாமல் வெளியே போனால் கோகிலம் முதுகை உரித்து விடுவாள். எனவே நந்து டிராயர் போட்டுக் கொண்டே ஆத்தங்கரைக்கு விளையாடப் போவான். ஆனால் இவர்கள் விளையாடுகிற விளையாட்டில் இவன் டவுசர் எப்படியும் பின்பகுதியில் கிழிந்துவிடும். ஒவ்வொருமுறை துணி தோய்க்கும் போதும் பங்கஜம் சொல்லுவாள். "அது என்னடா அங்க மட்டும் கிழியறது?" என்று. அவள் இங்கிலாண்டில் ஸ்காட்லண்ட் யார்டில் இருக்க வேண்டிய ஆள். துப்பு துலக்குவதில் வல்லவள். "டேய் நந்து! இங்க வா! அக்கா இன்னிக்கு உனக்கு குளிச்சு விடறேன்" என்றாள். நந்துவை மயக்க வேண்டுமென்றால், 'குளிக்கலாம்' என்ற ஒரு சொல் போதும். "இப்பவேவா?" என்றான் நந்து. "ஆமாம், இப்பதானே ஆத்துலேந்து வந்தே? ஓடி வா!" என்றாள். நந்து எல்லாவற்றையும் கழட்டி விட்டு பங்கஜத்திடம் வந்தான்.

பங்கஜம் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தோரணையில் அவனைக் குளிப்பாட்டாமல் அங்கம், அங்கமாக ஆராய்ந்தாள்.

"என்ன பாக்கறே? பின்னாலே?"

"ஒண்ணுல்லே ஒரே மண்ணா இருக்கேன்னு பாத்தேன். ஆமா! அதென்ன அங்கெல்லாம் ஒரே காக்காப் பொண்ணு? எடுக்கவே வரலையே"

"நாகன் என்னையே மண்ணிலே போட்டு இழுத்தான். அதான்"

"சண்டையா?"

"இல்லையே! சும்மா, ஜாலியா விளையாடுவோம்"

"சரிதான் இப்பப் புரியறது. ஏன் உன் டிராயிரலே அங்க மட்டும் கிழியறதுன்னு. நந்துக்குட்டி அக்கா சொல்றதைக் கேளு!"

"சரி, முதல்ல நீ தண்ணியைத் தலையிலே ஊத்து" என்றான் ஆண் சிங்கம் நந்து.

"விடறேண்டா! அதுகுள்ள ஒண்ணு கேளு. ஓந் தொடையிலே என்ன இவ்வளவு பெரிய தழும்புன்னு தெரியுமோ?" என்றாள்.

நந்து தன் இடது தொடையைத் தடவினான். பெரிய அறுவை சிகிச்சை நடந்து முடிந்த தழும்பு இருந்தது. "தெரியாதே பங்கஜம்! ஏன்?" என்றான்.

"நீ கொழந்தையா இருக்கறச்சே உனக்கு தொடைவாழை வந்தது. ஆஸ்பத்திரியிலே ஆபரேசன் செஞ்சு அதை எடுக்க வேண்டியதாப் போச்சு. நீ இப்படி மண்ணுலே விளையாடினா, போகாத இடத்திலே மண்ணு போய் உக்காந்தா அப்புறம் 'அங்கே' கிழிச்சு தையல் போடணும்" என்று ஒரு அணுகுண்டைப் போட்டாள்.

நந்து பயந்து விட்டான். "நிஜமாவா? அப்படின்னா இனிமே நான் தரையிலே இழுத்து விளையாடறதை நிறுத்துடிறேன்"

"சமத்துக்குட்டி, என் சக்கரைக்கட்டி!" என்று கொஞ்சியவாறு கிணற்றிலிருந்து நீர் இறைத்து இவன் மேல் கொட்டினாள்.

"என்னடிது, இத்தரவாயிலே இவனுக்குக் குளியல். ஜலதோஷம் பிடிக்கப்போறது" என்று வந்தாள் கோகிலம்.

"நீ சும்ம இரும்மா. இப்பதான் இவனை வழிக்குக் கொண்டு வந்திருக்கேன். இவனுக்கு புதுசு, புதுசாய் டவுசர் எடுத்து மாளல. அண்ணா எங்கே போவா பணத்துக்கு?" என்றால் பங்கஜம் பொறுப்புடன். அம்மா சிரித்துக்கொண்டே கொல்லைக்குள் புகுந்தாள்.

ஆனால் பங்கஜம் வெற்றி கொஞ்ச நாளுக்குத்தான் இருந்தது. ஆறாம் வகுப்பு போன பிறகு, நந்துவின் டிராயர் பாக்கெட் பிளேடு கொண்டு சரியாக வெட்டப்பட்டு இருந்தது. இடது பாக்கெட் ஒழுங்கா இருக்க வலது பாக்கெட் மட்டும் கிழிந்திருந்தது. பங்கஜம் ஒவ்வொரு முறையும் கிழிசலை தைத்து அனுப்புவாள். ஆனால் அடுத்தமுறை தோய்க்கும் போது வலது பாக்கெட் மட்டும் கிழிந்திருக்கும். பங்கஜத்திற்கு இதுவொரு புது சவாலாகப் போய்விட்டது. முன்பு போல் நந்துவிடமிருந்து இதற்கான எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. அவன் ஒன்றுமறியாப் பாலகன் போல் முகத்தை வைத்துக் கொண்டு 'ஊமக்கொட்டானாக' இருந்து விட்டான்.

பாலுவின் தோழமை நந்துவைக் கொஞ்சம் மாற்றியிருந்தது. லதா விஷயத்தில் பாலு ஒரு குரு போலிருந்து இவனுக்கு பல விஷயங்களைச் சொல்லித்தந்தான். பலமுறை இவனை ரயில்வே ஸ்டேஷன் வரை அழைத்துச்சென்று லதா வீட்டுத்தோட்டத்தில் இருவரையும் இணைத்திருக்கிறான். இந்தப் பரிட்சயம் சில புதிய சோதனைகளுக்கு அவர்களை இட்டுச் சென்றது. அதன் விளைவுதான் இந்த பாக்கெட் கிழிதல். அது பாலுவுக்கும், நந்துவிற்கும் மட்டும் தெரிந்த இரகசியம்!

0 பின்னூட்டங்கள்: