வைகைக்கரை காற்றே!......025

சித்தியா பத்ம நிலையம் வந்த பிறகு செய்த முதல் வேலை, விளக்கு வைக்கக்கூட ஆளில்லாமல் ஒரு குடிசையில் கிடந்த ரெங்கநாதப்பெருமாளுக்கு கோயில் கட்ட முனந்ததுதான். இது சாதாரண காரியமில்லை என்று அவருக்குத்தெரியும். ஆனாலும் அவருக்கு கட்டளை எங்கிருந்து வந்தது என்று அவருக்கு மட்டுமே தெரியும். கோயிலில் பூஜை செய்ய ஒரு பட்டாச்சாரியர் கூட இல்லை. ஒரு நல்ல ஆளைப் பிடித்து வர வைணவர்கள் அதிகமிருக்கும் ஊர்களுக்குப் படையெடுத்தார். நந்து வாழ்ந்த ஊர் சிவ ஸ்தலம். அங்கு பெரிய கோயில் என்றால் அது சிவன் கோயில்தான். நந்து குடும்பப் பேச்சிலும் நிறைய சைவச் சொற்கள் கலந்து விட்டன. "ஸ்வாமி புறப்பாடு" "ஸ்வாமி உள்" "ஸ்வாமி தரிசனம்" இப்படி. ஏன் கோகிலம் பெரிய மீனாட்சி பக்தையாகிவிட்டாள். பத்மா முத்துராமலிங்கத்தேவர் போல் முருக பக்தை ஆகிவிட்டாள். ஆனால் சித்தி பொழைக்கத்தெரிந்த ஆசாமி! ஆத்துக்காரர் பெருமாள் கோயில் கட்டுகிறார் என்றவுடன் வைணவப் பழக்க வழங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். சிவன் கோயில் அருகிலிருந்தாலும் போவதில்லை. "மறந்தும் புறம் தொழா மாந்தர்" என்ற சொற்படி அவள் தன்னை ஆக்கிக்கொண்டாள். சித்தியாவிற்கு அது பிடிக்கும் என்று கணக்குப் போட்டாள்.

ஆனால் கோயில் கட்ட வேண்டுமெனில் அய்யங்கார்களிடம் மட்டும் காசு கேட்க முடியாதே! அதுவும் பஞ்சாங்கய்யங்காரிடம் கால் காசு பேறாதே. அவரோடு மார்கழி பஜனை வீட்டுக்குள்ளயே நடக்கும். கிருஷ்ணப்பிரசாதம் கிடைப்பதற்குள் போதும், போதுமென்றாகிவிடும். அவரை சமாளிக்கக்கூடியவன் சேது பிரண்டு கிருஷ்ணமூர்த்திதான். அந்தக் கதைக்கு பின்னொரு சமயம் வருவோம். சித்தியா பெருமாள் கைங்கர்யத்தில் ஓடி அலுத்து விட்டு சிவன் கோயில் வாசலில் இருக்கும் நடராஜ பட்டராத்துத் திண்ணையிலே படுத்துக் கொண்டு விடுவார். அவரோட சகவாசமெல்லாம் பட்டர்களோடதான். நடராஜ பட்டர் மாமி செதுக்கி வைத்த சிலை போல கட்டை குட்டையாய் பார்க்க லக்ஷ்ணமாய் இருப்பாள்.

இப்படி சித்தியா வைஷ்ணவ தலங்களுக்குப் போய் வரும் போது ஏதாவது வாங்கி வருவார். ராத்திரி குழந்தைகள் தூங்கிய பிறகு வந்தால் தூங்குற குழந்தைகளை எழுப்பி அல்வா தருவார். இவர் இப்படி வேளாத வேளையிலே இனிப்புக் கொடுத்தே நந்துவின் பல்லைக் கெடுத்து விட்டார்.

கோகிலம், குஞ்சரத்திற்கு ஸ்ரீ ஆண்டாள் ஸ்னானப்பவுடர் வாங்கி வந்திருந்தார். சனிக்கிழமை எண்ணைக் குளியல் போது வீடே கம, கமவென்று இருந்தது. கோகிலத்திற்கு பெரிய முடியென்று இல்லை. ஒவ்வொரு பிரவத்திலும் கொட்டி, கொட்டி கொஞ்சமாய் போய் விட்டது. குஞ்சரம்தான் அக்காவிற்கு எண்ணெய் வைத்து சீகக்காய் தேய்த்து குளித்து விடுவாள்.

"டீ குஞ்சரம்! அப்பா வரேங்கராரே என்ன செய்யட்டும்?"

"என்னக்கா, என்னையப் போய் கேட்டுண்டு எனக்கென்ன தெரியும். உனக்குதான் ஆத்து நிலவரம் புரியும். நீதானே பெரியவ"

"ஆமடி, உனக்கு அண்ணனில்ல அதுக்காக என்னைய அண்ணாவாக்கிட்டே. எனக்கு ஒரு அண்ணன் வேணுமே! நான் யாரைப் போய் பாப்பேன்?"

இந்தப் பேச்சு போன வருடம் நடந்தது. மஞ்சள் தத்தா பத்ம நிலையம் வந்து செட்டிலாகிட்டார். அவருக்கு ஏற்கெனவே பிரிட்டிஷ்காரன்னு நினைப்பு, பத்ம நிலையம் வந்தவுடன் தனக்குத் தனியாக ஒரு அறை வேண்டுமென்று கேட்டு வாங்கிக் கொண்டுமிட்டார். எல்லோரும் தரையில் படுத்துக் கொண்டு புரளும் போது, அவருக்கு மட்டும் கட்டில் இருந்தது. மிக, மிக அழகான ஒரு ஈசி சேரும் அவரிடம் இருந்தது. சேதுபதியிடம் பேஷ்காரராக வேலை பார்த்த போது கிடைத்தவை.

தாத்தா ரூமில் பார்த்து அதிசயிக்க இப்படி எத்தனையோ உண்டு. தாத்தா வாக்கிங் போவதற்கென ஒரு வாக்கிங்ஸ்டிக் வைத்திருப்பார். வெளியே பாக்க வாக்கிங் ஸ்டிக். உள்ளே கூர்மையான வாள் இருக்கும். தாத்தாவிற்கு கத்திச்சண்டை தெரியுமாவென்று தெரியாது. ஆனால் இவர்கள் வாழ்ந்தது முழுவதும் கள்ளர், மறவர் வாழ்ந்த பூமி. ஒரு தற்காப்பிற்கு இது அவசியமாக இருந்தது. அதைவிட மிக அழகான ஒரு சுருள் கத்தி வைத்திருப்பார். வைத்து இழுத்தால் குடம் அப்படியே சரிந்துவிடும் என்பார். இளமையிலே பெரிய சண்டியராய்தான் மஞ்சள் தாத்தா இருந்திருக்க வேண்டும். ஆனால் வயதான பின்பும் அதே கார்வார்தான். கோகிலத்திற்கு எரிச்சலாக வரும். ரெண்டு பேருக்கும் எப்போது வாக்குவாதம்தான்.

அவருக்கென்ன, வீட்டில் எல்லோருக்குமே அரிசிச் சாதம் வேண்டும். சாம்பார், காய்கறி என்று நன்றாகச் சாப்பிட வேண்டும். தாத்தாவோட பந்தாவைச் சொல்ல வேண்டாம். சாப்பாடு அவர் ரூமிற்குப் போக வேண்டும். அம்மா என்னிக்காவது கேப்பை ரொட்டி பண்ணுவா. நெய் விட்டு, விட்டுப் பண்ணினாலும் தூக்கி மண்ணுலே போட்டுடுவார்.

இப்படிப்பட்ட வாழ்க்கையிலே ஒரு பெரிய பஞ்சம் இந்தியாவில் வந்தது. அரிசி கிடைப்பது ததிகிணத்தோமாகிவிட்டது. ரேஷனில் புளுத்த கோதுமை கிடைத்தது. அதை நன்றாகக் காயப்போட்டு, சலித்து பின் அரிசி போல் உடைத்து அம்மா கோதுமைச் சாதம் பண்ணினாள். அரிசிச் சாதமென்றால் போட்டி போட்டுண்டு சாப்பிடற குடும்பம், கோதுமைச் சாதம் என்றவுடன் ஒரு வாய் வைக்கவில்லை. அம்மாவிற்கு பெரிய பாடாகிவிட்டது. எப்படியெல்லாமோ செய்து பார்த்தாள். ஒருவருக்கும் கோதுமையே இறங்கல. சப்பாத்தி, பூரி என்பதெல்லாம் அவர்கள் கேள்விப்பட்டிராத பெயர்கள். கிருஷ்ணய்யர் ஹோட்டலில் பூரி சக்கைப் போடு போட்டது. ஆனாலும் அவர்களுக்கு சப்பாத்தி பண்ணும் கலை கடைசிவரையில் வரவே இல்லை.

அம்மா, புதிதாக கோதுமை உப்புமா பண்ணினாள். அது கொஞ்சம் சாப்பிடும்படி இருந்தது. காரா, சாரமாக அதைப்பண்ணி கோதுமையின் சுவை தெரியாத வண்ணம் கோகிலம் செய்து விட்டாள். குழந்தைகள் ஜீனி வைத்துக்கொண்டு சாப்பிட வேண்டிய சூழல்.

இந்தக் காலக்கட்டத்தில் இந்த மஞ்சள் தாத்தாவை சரிக்கட்டுவதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது, கோகிலத்திற்கு.

0 பின்னூட்டங்கள்: