வைகைக்கரை காற்றே!......026

மார்கழி பிறந்து விட்டது என்பதை நந்துவிற்கு அறிவிப்பது கோயில் லவுட் ஸ்பீக்கர்தான். அதற்காக நந்துவிற்கு தமிழ் மாதக்கணக்குத் தெரியாது என்றில்லை. அவனுக்கு 12 மாதமும் மனப்பாடம்! தலைகீழாகச் சொல்லத் தெரியும். ஆனாலும் மார்கழி பிறக்கும் சிற்றஞ்சிறுகாலையை அறிவிப்பது சிவன் கோயில் லவுட் ஸ்பீக்கர்தான். "மார்கழித்திங்கள், மதி நிறைந்த நன்னாள்" என்று எம்.எல்.வி மதியிருந்தாலும், மதியில்லாவிட்டாலும் ஆண்டாளுக்குப் பாதகமில்லாமல் கோயில் கோபுரத்தின் உச்சியில் குளிர், பனி பாராமல் பாடுவார்கள். அடுத்து திருவெம்பாவை முதல் பாடல் வரும். அது சிவன் கோயிலாக இருந்தாலும், மாணிக்கவாசகப் பெருமானுக்கு பின் (இளைய என்ற பொருளில்) பிறந்த பெண் பிள்ளையாக இருந்தாலும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறுமியின் நோன்பு முன் நிற்கும் அவ்வூரில் எப்போதும். அது பெண்ணின் மாண்பை உரக்கப் பறைசாற்றுவது போலிருக்கும். ஆண்டாளுக்கு ஒன்று, அவ்வூருக்கு 10 மைலுக்கு அப்பால் பிறந்த மாணிக்க வாசகருக்கு ஒன்று என்று பாடிய பின்பும் சிற்றஞ்சிறுகாலை மலர்ந்தும் மலராமல் இருக்கும்.

இந்த இடைப்பட்ட நேரத்தை நிருவகிக்க நாராயணயங்கார் வீட்டிற்கு அழைப்பு வரும். அவரின் சீமந்த புத்ரிகளில் இருவருக்கு ஆண்டாள், மாணிக்கவாசகர் என்றில்லை பாரதி பாடத்தெரியும், அருணகிரி பாடத்தெரியும், வள்ளலார் பாடத்தெரியும். கோகிலத்தின் குரலினிமை அப்படி ஒட்டிக் கொண்டு விட்டது என்று வீட்டிற்குள் மட்டும் பாடும் சித்தி அடிக்கடி சொல்லுவாள். இந்தப் பெண்கள் எங்கும் சென்றும் சங்கீதம் படிக்கவில்லை. "குலத்தொழில் கல்லாமற்பாகம்படும்" என்ற வழக்கின்படி அவர்களுக்கு இயல்பாகவே பாட வந்தது. அவர்கள் மூதாதையர் பாடிய கீர்த்தனங்கள் சொல்லித்தராமல் உரிமையுடன் ஒட்டிக்கொண்டன. ஒருமுறை கேட்டால் போதும் அடுத்தமுறை பாடியவர் ஆச்சர்யப்பட வேண்டும்! அப்படியிருக்கும் பாடல்கள். எனவே செல்லம்மாவும், சௌந்திரமும் மார்கழி வந்து விட்டால் தினமும் காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருந்து குளித்து, சீருடுத்தி கோயிலுக்குப் போய்விடுவர். நாராயணங்காரின் புகழ் பெற்ற குழந்தைகள் மூலம் இன்னும் அதிகமாகப் பரவியது.

அதற்காக மற்ற அக்கிரஹாரத்துக் குழந்தைகளுக்குப் பாட வராது என்றில்லை. கோபால மாமாத்து முத்து பாடுவா. ரொம்ப நேரம் பாட முடியாது ஆனால் பாடுவாள். பட்டராத்துக் குழந்தைகள் சில சமயம் பாடும். அது என்னமோ அந்த ஊர் பட்டர்களுக்குப் பிறந்தது பெரும்பாலும் பையன்களாகவே இருந்தது. அந்த அக்கிரஹாரத்தில் இரண்டு பேர்களுக்கு மட்டும் ஒன்று விட்டு ஒன்று பெண் பிள்ளைதான். இதில் நாராயணங்கார் சீனியர். கிருஷ்ணய்யர் ஜூனியர். அய்யங்காருக்கு அருமையாய் ஒரு பிள்ளை பொறந்த போது அது நந்தகுமாரானது. கிருஷ்ணய்யர் பிள்ளைக்கு கோகுலக்கண்ணன் என்று பெயர். பலராமய்யர் பெண் சகுந்தலா கூடப்பாடுவாள்தான். ஆனால் அவள் அம்மா படுத்தற படுத்தலில் குழந்தைக்கு வருகின்ற பாட்டும் அழுகையில் போய் விடும்.

மார்கழிக் காலையில் பஜனை கோஷ்டி பெருமாள் கோயிலில் ஆரம்பித்து - அதாவது கோயில் மதிற்சுவரிலிருந்து ஆரம்பித்து...பெருமாளை எழுப்பத்தான் கிச்சய்யர் (அதாவது சித்தியா) பெரும்பாடு பட்டுக் கொண்டிருக்கிறாரே! - ஆத்தங்கரைப் பிள்ளையார் சந்நிதியில் முடியும். அக்கிரஹாரத்து ஆண் வர்க்கத்து பாடகர்களின் திறமையெல்லாம் யாரும் விழித்திராத மார்கழி பனிக்காலையில் வெளிப்படும். ஆத்துக்காரிகள் பார்க்க மாட்டார்கள் என்ற தைர்யத்தில் மாமாக்கள் தைர்யமாகவே பாடுவார்கள். பிராமண கோஷ்டி பாடி முன்னால் போன கொஞ்ச நேரத்தில் பழையூரிலிருந்து ஆர்மோனியப்பொட்டி சகிதம் பிற சமூகத்தவர் கொண்ட ஒரு கோஷ்டி பாடிக்கொண்டு வரும்.

இத்தனை அமர்களம் வெளியே நடக்கும் போது நந்து போர்வைக்குள் சுருண்டு கனாக்கண்டு கொண்டிருப்பான். தினமும் சித்தி பெண் பட்டம்மாள் எழுப்பிப்பார்ப்பாள். "டேய் நந்து! எந்திரிடா! கோயிலுக்குப் போகலாம்" என்று! அந்தப் புண்ணியமெல்லாம் அக்காமார்களுக்கே போகட்டும் என்று நந்து பெருந்தன்மையுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பான். ஆனால், சித்தியா வந்து சில நேரம் எழுப்பி கிளப்பிக் கொண்டு போய் விடுவார். நந்துவை யாரும் அடிப்பதில்லை. ஆனால் அவனுக்கு விழ வேண்டிய அறை சேது முதுகில் விழும் போது சத்தம் காட்டாமல் நந்து எழுந்து கோயிலுக்குப் போவான்.

திருப்பள்ளியெழுச்சி என்பது அதுதான் என்று அவனுக்கு பல காலம் தெரியாமல் இருந்தது!

0 பின்னூட்டங்கள்: