போத்திக்கிட்டும் படுத்துக்கலாம், படுத்துக்கிட்டும் போத்திக்கலாம்!

தென்கொரியத் தலைநகரான 'சோல்' (Seoul) பல அதிசயங்களை உள்ளிருத்தி வைத்துள்ளது.

ஐரோப்பாவில் வாழ்ந்துவிட்டு தூரக்கிழக்கு நாடுகளுக்கு வந்தவுடன் முதலில் மகிழ்ச்சியளிப்பது சாப்பிடப்போனால் குடிக்கத்தண்ணீர் கொடுப்பது! என்னடா அல்பமான விஷயம் என்று சொல்கிறீர்களா? நீங்கள் ஐரோப்பிய சாப்பாட்டுக்கடைகளுக்குப் போனதில்லை என்று பொருள். தண்ணிக்குக் காசு கொடுத்தே போண்டியான ஆட்களெல்லாம் அங்குண்டு. அங்கு இக்கடைகள் காசு பண்ணுவதே இப்படித் தண்ணிக்கு காசுவாங்கியே என்றால் ஆச்சர்யப்படாதீர்கள்! சொட்டுச்சொட்டாய் தண்ணீர் குடித்து சாப்பாட்டை முடிக்கும் ஆயிரம் ஜெர்மானியரை என்னால் காட்டமுடியும். பாவம், அவர்கள் சாப்பாடு அவ்வளவு உரப்பாய் இருக்காது. இந்தியச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு அவர்கள் வேர்த்துத் தவிப்பது வேடிக்கை (அண்ணே! நாம சாப்பிட்டாலும் இதே கதிதான். வீட்டுத்தண்ணியை உள்ளே விட மாட்டார்கள் :-)

சோல் நகரில் 'கிம்சி' சாப்பிட்டு தவிக்கும் ஆசாமிகளுக்கு ஆறுதல் இந்தப்பச்சைத் தண்ணீர்தான்! அதுவுமில்லையென்றால் பொறையேறியே செத்துப்போவான்! எங்கே போனாலும், எதைச்சாப்பிட்டாலும் கிம்சி இல்லாத சாப்பாடுகிடையாது. கொல்டிகளெல்லாம் இவன்கிட்ட பிச்சை வாங்கணும். அப்பாடி! என்ன உரப்பு!

சோல் நகரில் அடுத்து இலவசமாகக்கிடைப்பது 'இண்டர்நெட்' என்றால் நம்புவீர்களா? நம்புங்கள். Coex Complex என்னும் பெரிய மால் (இது திருமால் இல்லை :-) அங்கே சுத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசி, இண்டர்னெட் இரண்டும் கலந்த ஒரு ஒட்டுப்பொறி இருந்தது. சும்மா போய் நம்ம நந்து அதிலே வரானான்னு பாத்தேன்! வந்துட்டான்! உலகின் ஏதோ மூலையில், ஏதோவொரு கொரியப்பொறியில் தமிழ் தெரிவது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது!இந்தக்கொரியர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் விளையாட்டெல்லாம் வெறும் விளையாட்டில்லை! அட, ஆமாங்க! இரண்டு பயலுக கணினி முன்னால பிளே ஸ்டேஷன் விளையாடறத ஒரு கூட்டமே ஒக்காந்து பாத்துக்கிட்டு இருக்கு. அது மட்டுமில்ல, இந்த மாலில் எங்கு பாத்தாலும் இந்த விளையாட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது! இந்த மனோநிலை எனது ஆய்வகத்திலும் பிரதிபலிப்பது அதிசயமில்லைதானே! மத்தியானம் நாலு பேர் சேர்ந்து கொண்டு இப்படி கணினி விளையாட்டு ஒரு மணி நேரமாவது விளையாடுகிறார்கள். எந்த நேரத்தில் எது கேட்டாலும் அவர்கள் காதில் விழாது :-)எதிர்காலத்தை கோடிகாட்டிக் கொண்டு அங்கு பல விஷயங்கள் நடக்கின்றன. ஒரு மூலையில் எந்தவிதமான விசிடியும் வாங்கிக் கொண்டு படம் பார்த்துக்கொண்டிருக்கலாம். மேலே மெகா சினி காம்ப்ளக்ஸ். "மோதிரமாமா" படம் வந்தாச்சு. மூணாவது எபிசோடு. அதாங்க Return of the King - Lord of the Rings! ஒரு மூலையில் ஒரு இளம் ஜோடி கையடக்க கணினியில் தனியாக படம் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இன்னொரு மூலையில் அடைபட்ட அறைக்குள் ஒரு பெண் டிரம்ஸை போடு போடென்று போட்டுக்கொண்டிருக்கிறது. கணினியில் படத்துடன் பாடம் நடந்து கொண்டிருக்கிறது!நான் கேனடாவிலுள்ள எட்மண்டன் போன போது உலகின் மிகப்பெரிய குகை நகரம் அங்குதான் இருக்கிறது என்றார்கள். சூரிய வெளிச்சமே பட வேண்டாமாம்! எல்லாமே பூமிக்கடியில் கிடைக்கிறது. இந்த மாலிலும் எல்லாம் கிடைக்கிறது. நகர கலாச்சாரம் நிஜத்தைவிட நகல்நிஜத்தை நோக்கி மெல்ல, மெல்ல நடந்து கொண்டிருக்கிறது. நீங்களெல்லாம் எனக்கு நகல் நிஜம்தாங்க :-)நான் இத்தனை காலம் வாழ்ந்த கீல் நகரில் (ஜெர்மனி) ஐஸ்கிரீம் வாங்க கியூ வரிசையிலே (இரட்டைக்கிளவி:-) நிற்பது கண்டு ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். (அதுக்கு மேல ஒசத்தியா நீங்க ஐஸ்கிரீம் காமிச்சுட்டா, மீசையை எடுத்துக்கிறேன்!) இங்க என்னடான்னா ஜெர்மன் ஹாம்பர்க் கடைக்கு முன்னால மணிக்கணக்கா காத்துக்கிடக்குற பசங்களை இப்பதான் பாத்தேன்!

உலகம் ரொம்ப மாறிக்கிட்டே வருதுங்க! அந்தக்காலத்துலே மதுரை வீதிகளில் "என்னாங்க இருக்கு?" அப்படின்னு ஒரு கேள்வி போட்டு, அதுக்குக் கீழே "இட்லிங்க" அப்படின்னு அறிவிப்பு இருக்கும். இரண்டு இட்லிக்குக்கூட பத்துவகை சட்னி உண்டு. அங்கே கூட இப்படிக் குயூ வரிசை கிடையாதுங்க!

0 பின்னூட்டங்கள்: