சொல்லாக்கிளவி

என்னையறியாமல்
என்னுள் இத்தனை
காலம் எங்கு
நுழைந்தது?
என் சொல் கேளா
என்னுடல் இச்சைகள்
என் சொல் கேளா
இத்தனை குழவிகள்
என் சொல் கேளா
இத்தனை நரை மயிர்
என்னிடம் சொல்லாமல்
கழிந்த என் இளமை
இத்தனை நடப்பிலும்
யார் சொல்லும் கேளா
மனதெனும் குரங்கு
எப்படியிருப்பினும்
என் சொல் கேட்டு
நடக்கவேணும்
என் மனைவி.

கல் தோன்றி மண் தோன்றாக்காலத்தின் மூத்த குடியெது?

பெரும்பாலும் எல்லாச் சமூகங்களிலும் தாங்கள்தான் உலகின் மூத்த குடிகள் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. உதாரணமாக ஜப்பானியர்கள் தங்களை சந்திர, சூரிய வம்சத்தினர் என்று நம்புகின்றனர். கல் தோன்றாக் காலத்திற்கு முன் தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி என்பது நமக்குத்தெரியும்! சைனா என்ற பெயர் 'சாய்' என்ற தேனீர் கொண்ட நாடு என்ற பொருளிலிருந்து வருகிறது. பீகிங் என்பதும், பெய்ஜிங் என்பதும் பிறருக்காகக் கொண்ட பெயரே. சீனர்கள் பெய்ஜிங் நகரை 'சுங்வா' என்றழைக்கின்றனர். அதற்குப் பொருள் தேசத்தின் மையம் (பிரபஞ்ச மையமென்று சுற்றுலாத் துணைவன் சொன்னான்!) என்று பொருள். உலகம் நம்மைச் சுற்றி இயங்குவதாக எண்ணுவதே மானுட இயல்பு. அதனால்தான், பூமியைச் சுற்றி சூரியன் சுற்றி வருவதாக பல காலம் மனிதர்கள் நம்பி வந்தனர்.

இவ்வளவு கதையும் எதற்கென்றால்! உலகின் கலாச்சாரம் இந்தியாவிலிருந்து போனது என்ற ஆழமான நம்பிக்கை நமக்கெல்லாம் இருக்கிறது. அப்படித்தான் நமக்குப் பாடம். மேலோட்டமாகப் பார்க்கும் போது இந்தியக் கலாச்சார எச்சங்கள் ஆசியா முழுவதும் காணக்கிடைத்தாலும் தமிழ்க் குடியின் தோற்றம் இந்தியாவில்தான் இருந்திருக்க வேண்டும் என்றில்லை. உதாரணமாக, தமிழ் மக்கள் போலவே தோற்றமுடையவர்கள் எதியோப்பிய மக்கள். ஆனால் அவர்கள் இருப்பது ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவிலிருந்து கால் நடையாக கடற்கரை வழியாக பல நூற்றாண்டுகள் குடிபெயர்ந்து ஆப்பிரிக்க மக்கள் இந்தியப் பிரதேசத்திற்கு வந்திருக்கக் கூடும். ஆனால் ஆச்சர்யமாக, இந்தியப் பழங்குடிகள் போலவே தோற்றமுடையவர்கள் ஆஸ்திரேலியாக் கண்டத்தில் வாழ்கின்றனர். அவர்கள் இந்திய வம்சா வழியினர் என்று நம்பவும் இடமுள்ளது. ஜன ஓட்டம் ஆப்பிரிக்காவை விட்டுத்தான் போயிருக்க வேண்டுமென்றில்லை!

ஆசிய பசிபிக் நாடுகளின் பட்டறை கொரியாவில் அடிக்கடி நடக்கிறது. சென்ற முறை நடந்த பட்டறையில் பிஜ்ஜி, பப்புவா நியூகினி நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்திருந்தனர். அட்டக்கரி. ஒட்டிக்கொள்ளும் கரி உடம்பு. ஆனால் அவர்கள் வாழ்வது ஆசிய நிலப்பரப்பில். இவர்கள் ஆசியர்கள் இல்லையா? இவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்துதான் வந்திருக்க வேண்டுமா? மலேசியா, பிலிபைன்ஸ் போன்ற தேசங்களில் பல முகங்கள் 'உராங்குடான்' எனும் மனிதக்குரங்கை ஒத்திருப்பது வெறும் தற்செயலா? உராங்குடான் என்ற பெயரே சிவப்பு மனிதன் என்ற பொருளில்தான் வழங்கப்படுகிறது. ஆக, மனிதத்தோற்றம் ஏன் ஆசியாவில் போர்னியோக் காடுகளில் தோற்றம் கொண்டிருக்கக்கூடாது? அங்கு கரு நிற, மாநிற, வெள்ளை நிற மனிதக் குரங்குகள் மனித இனமாக வளர்ச்சியுற்றிருக்கலாமே? பல விஞ்ஞானிகள் இப்போது மனிதத்தோற்றம் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா இரண்டு இடங்களிலும் தோன்றியிருக்கலாமென நம்புகின்றனர்.

ஆசியாவில் உலாவ, உலாவ எவ்வளவு தூரம் நாம் தமிழ்ப் பண்பாடு, தமிழ் பழக்க வழங்கள் என்று நம்பிக்கொண்டிருப்பது ஆசியா முழுவதும் விரவிக்கிடக்கிறது என்று தெரிய வருகிறது. சில உதாரணங்களைப் பார்ப்போம். முதலில் உட்காரும் விதங்களைப் பார்ப்போம். நாற்காலியின் உதவி ஏதுமின்றி நம் கிராமப்புறங்களில் தம் கால்களில் அப்படியே குந்தி உட்கார்ந்து விடுவார்கள். நகரவாசிகளுக்கு இது முடியாத செயலாக இருந்தாலும் கிராமங்களில் இப்படி மணிக்கணக்காக உட்கார்ந்து கதையளப்பார்கள்! இப்படி உட்கார்வது இன்றளவும் கொரியா, வியட்நாம் போன்ற நாடுகளில் காணக்கிடைக்கிறது. உட்கார்வதற்கு என்று தனியாக இடம் தேடாமல் கிடைத்த இடத்தில் 'தன் காலே தனக்குதவி' என்று சொல்லும் வண்ணம் உட்கார்ந்துவிடுகிறார்கள். அடுத்து சப்பளாம் போட்டு தரையில் உட்கார்வது. தரையில் உட்கார்ந்தபடியே சாப்பிடுவது. இது ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இந்தோனிசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கொரியா வரும் வெள்ளையருக்கு சவாலாக இருக்கக்கூடியது இப்படித்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது! அவர்களுக்கு கால் மடியாது!

அப்புறம் சாப்பிடும் போதுள்ள பழக்கங்கள். ஏப்பம் விடுவது மேலைக்கலாச்சாரப்படி கேலிக்குறியது. ஆனால் தமிழகக்கிராமங்களில் ஏப்பம் விட்டால் உணவை நன்கு ரசித்து சாப்பிட்டதாக எண்ணிக்கொள்வர். இதற்கு ஒப்பு நோக்கும் வண்ணம் ஜப்பானில் சத்தம் வரும் வண்ணம் சாப்பிடுவது இன்றளவும் பழக்கத்தில் உள்ளது. இவர்கள் காப்பி குடித்தாலும் சத்தமாக உறிஞ்சியே குடிக்கின்றனர். என்னம்மா காரணம்? என்று ஒரு ஜப்பானிய மூதாட்டியிடம் கேட்டேன். அவள் சொன்ன பதில் சுவாரசியமாக இருந்தது. ஆண்கள் உட்கார்ந்து சாப்பிடும் இடத்தில் பெண் நின்று கொண்டிருக்கமுடியாது (நாணம்). அவள் பரிமாறிவிட்டு அடுத்த அறைக்குப்போய் விடுவாள். அங்கிருக்கும் அவளுக்கு இவன் ரசித்து, சுவைத்துச் சாப்பிடுகிறான் என்பதை எப்படிச் சொல்வது? சத்தமாக சாப்பிட்டால் ஒழிய அவளுக்கு இவன் சாப்பிடுவது கேட்காது. எனவேதான் ஏப்பம் விடுதல், உறிஞ்சி, உறிஞ்சி கஞ்சி குடித்தல் (இந்தக் கஞ்சி என்ற வார்த்தை அப்படியே இங்கும் கையாளப்படுவது ஆச்சர்யம்!) இவை பழக்கத்திற்கு வந்திருக்கின்றன. சாப்பிட்ட உடனே பல் குத்தும் வழக்கம் மேலைக் கலாச்சாரத்தில் கிடையாது. அது டேபிள் மேனர்ஸ் இல்லை. ஆனால் கிராமத்தில் இந்த பழக்கம் கேலிக்குறியதாக பார்க்கப்படுவதில்லை. அதேதான் கொரியாவிலும், ஜப்பானிலும்! அதைவிட இன்னொரு முக்கியமான தொடர்பு இந்த அரிசிச் சாப்பாடு! என்னதான் புலால் உணவு கடந்த சில தசாம்சங்களில் ஆசியாவில் பரவலாகி வந்தாலும் ஒரு வேளையாவது அரிச்சோறு சாப்பிடாவிடில் இவர்களுக்கு சாப்பிட்டது போலவே இருக்காதாம். நூடில் எனும் கொடியரிசி உணவு உண்டாலும் கடைசியில் கொஞ்சமாவது அரிசிச்சோறு இவர்களுக்கு சாப்பிட வேண்டும்! வடநாடு செல்லும் ஒரு தமிழன் எப்படி அரிச்சோற்றிற்கு ஏங்குவான் என்பதை இங்கு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும். அரிசியில் உருவாகும் அத்தனைத் தமிழக சாப்பட்டு வகையும் இங்குண்டு. பொங்கல், புலால்சோறு (பிரியாணி), இடியாப்பம் (நூடில்), கஞ்சி, பொறி போன்றவை. இனிப்புச் சேவு, காராச்சேவு இவையுமுண்டு. பாயசம் போன்ற அரிசிப்பாயசம் இங்குமுண்டு!

தமிழ்க்குடியின் மானம் என்ற பண்பு இங்கிருந்துதான் வந்திருக்க வேண்டும். மானம் போனால் உயிர்வாழக்கூடாது என்பதை இன்றளவும் ஜப்பானில் காணலாம். பெரிய, பெரிய கம்பெனி இயக்குநர்கள் எல்லாம் அவர்கள் மானம் போய்விட்டால் தற்கொலை செய்து கொள்கிறார்கள் (நம் அரசியல்வாதிகள் எல்லாம் உண்மையான தமிழர்களா என்ற கேள்வி இங்கு எழுகிறது!) வயிறைக்கிழித்துக்கொண்டு சாகும் ஹரக்கிரி ஒரு தமிழ் வழக்கம்தானே? (தலையை அறுத்துக்கொண்டு பலி கொடுத்தல் தமிழ் மண்ணில் உண்டு).

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு இவை தமிழ்ப்பண்பாடு என்போம். இங்கு வந்து கொரியப்பெண்கள் நாணுவதைக் காண வேண்டும்! எதாவதொரு காரியமென்றால் ஒரு பெண் தனியாகப் போக மாட்டாள், கூடவே இன்னொரு பெண் துணை (நம்ம ஊரை ஞாபகப்படுத்தவில்லை?). இன்னும் வேடிக்கை என்னவெனில், இளம் காதலிகள் தங்கள் காதலனை 'சகோதரா!' என்று விளித்தல் (ஒப்பா!). தமிழ்ச் சமூகங்களில் கணவன் பெயரைச் சொல்லாமல் 'அண்ணா' என்றழைக்கும் பழக்கமுண்டு (வாங்கோண்ணா! போங்கோண்ணா!).

இந்தியா மனித குலத்தின் பல நீரோட்டங்களைச் சந்திருப்பது போல் தோன்றுகிறது. ஒன்று சமிஸ்கிருதம் பேசும் வட மேற்கு இனக்குழு. இன்னொன்று திராவிட மொழி பேசும் தென் கிழக்கு ஆசிய இனக்குழு. இரண்டும் இந்தியாவில் சங்கமித்து இருப்பதாகத் தோன்றுகிறது. இரண்டின் வளமும் சேர்ந்து இந்தியாவை உலகின் கலாச்சார மையமாக முன்பு மாற்றியிருக்கின்றன. அதனால்தானோ என்னவோ இந்தியத்தத்துவங்கள் அனைத்தும் 'உலகம், உலகம்' என்றே பொதுமையில் பேசுகின்றன.

சென்றவாரம் ஒரு ஆந்திர-அமெரிக்க விஞ்ஞானியைப் பார்த்தேன். தனது மனைவி மலேசியச்சீனப்பெண் என்றார். இவர்களிடம்தான் இன்று திராவிடப் பண்பைக்காணக்கூடியாத உள்ளது! என்று அவர் சொன்னதை என்னால் நம்ப முடிந்தது. யோஷி என்றொரு ஜப்பானிய நண்பர். அவரை இந்தியா போய் யோகம் கற்றுக்கொள்ள அனுப்பினேன். போய் வந்துவிட்டு அவர் சொன்னார் இந்தியா மேற்குலகம் போல் உள்ளது என்றார். உண்மைதான். ஆசியாவின் ஆதிப்பண்புகள். நாம் திராவிடப்பண்புகள் என்று சொல்வது இன்று இங்குதான் காணக்கிடைக்கின்றன.

முதற்பதிவு சமாச்சார் தமிழ் இ-தழ்.

சீன இந்திய நட்புறவு

இத்தனை நாள் நான் சீனாவைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொண்டதில்லை. காரணம் பசுமரத்து ஆணி போல் சில தீய நினைவுகள். இந்தியக் குடியரசு தோன்றி இரண்டு ஆண்டுகள் கழித்து சீன மக்கள் குடியரசு கம்யூனிசப்பாதையில் தோன்றுவிக்கப்படுகிறது. ஜப்பானிடம் காயடிபட்டு சீனரணம் மாறாத போழுதுகள். இந்தியா சீனாவுடன் நட்புறவு வேண்டியது. 'ஆசியஜோதி' ஜவகர்லால் நேரு சீனா சென்று பஞ்சசீலக் கொள்கையில் கையெழுத்திட்டு திரும்புகிறார். கும்பிடும் கையில் கொடுவாள் கொண்டது போல் சீனா இந்தியாவைத் தாக்குகிறது. லடாக் பகுதி சீனாவிற்குப் போய்விடுகிறது. சூயென்லாய் என்ற சீனப்பிரதமர் இதை முன்னெடுத்து நகர்த்துகிறார். சூயென்லாயே சீன நாயே! என்று ஊர் பூரா கரிக்கோடிட்ட சேதிகள் சுவரெங்கும். சீனாக்காரர்கள் யார் என்று தெரியாத பருவத்திலேயே ஒரு வெறுப்பு விதைக்கப்பட்டுவிட்டது. அது மாற இத்தனை நாள் பிடித்திருக்கிறது. அந்த வெறுப்பு காரணமில்லாத வெறுப்பன்று என்பதை காலம் காட்டுகிறது. சீனா ஒன்றுமறியா திபத்தை கைப்பற்றுகிறது. ரஷ்யாவுடன் சண்டைக்குப் போகிறது. தைவான் நாட்டின் சுதந்திரத்தை இன்றளவும் நெருக்குப்பிடியில் வைத்திருக்கிறது.

ஆனாலும் காலம் மாறுகிறது. மக்கள் முதிர்ச்சியடைகின்றனர். நான் ஜெர்மனியில் இருந்தபோது கிளவுஸ் கிரம்ளின் என்ற சக விஞ்ஞானி அடிக்கடி சொல்லுவார். ஒவ்வொரு ஐம்பது வருடங்களுக்குள்ளும் பிரான்சும், ஜெர்மனியும் போரில் இறங்குவது வழமை என்று. ஆனால் இரண்டாவது உலக யுத்தத்தின் பேரழிவிற்குப்பிறகு இன்று பிரான்சும், ஜெர்மனியும் முன்னின்று ஐரோப்பிய ஒருங்கிணைப்பை சாத்தியமாக்கியிருக்கின்றன. உலகெங்கும் வியாபார இணக்கம் பெருகி வருகிறது. சந்தைப் பொருளாதாரம், சண்டைப் பொருளாதாரத்தை விட ஒரு படி மேல் என்ற மன மாற்றம் உலகெங்கும் நிகழ்ந்து வருகிறது. இதற்கு கம்யூனிசச் சீனாவும் விதி விலக்கல்ல. ராணுவக் குவிப்பைவிட யுக்தியான வியாபாரமே ஒரு நாட்டின் வளத்திற்கு உத்திரவாதம் என்பதைக் கம்யூனிசத் தலைவர்கள் இன்று உணர்ந்துள்ளனர். இந்த மாற்றத்தை பற்றிய ஒரு சீன உயர் அரசியல்வாதியின் கூற்று பின்வருமாறு அமைகிறது: கருப்பு பூனை சிறந்ததா? வெள்ளைப்பூனை சிறந்ததா? எனக் கேட்டால்? எந்தப்பூனை எலியைப் பிடிக்கிறதோ அந்தப் பூனையே சிறந்தது! இதைச் சீனா சென்று வரும் எவரும் உணர முடியும். இந்த அணுகுமுறையின் பிரதிபலிப்பாக உலகின் மாபெரும் இராணுவத்தை கைவசம் வைத்திருக்கும் சைனா சரிபாதியாக ராணுவக் குறைப்பு செய்துள்ளது. இராணுவம் என்பது காப்புறுதி சேமிப்பு மாதிரி. என்றாவது நிகழப்போகும் சாவிற்கு இன்றிலிருந்து காசு கொடுப்பது போல். ஆக்கமற்ற சேமிப்பு அது. அது ஒரு நாட்டின் பெரும் பளு. இதைச் சீனா உணர்ந்துள்ளது. கடந்த 55 வருடங்களில் சீனா மட, மடவென வளர்ந்துள்ளது.

இன்று சீனாவின் தலைநகரான பெய்ஜிங் (பீகிங்) போவோர் பிரம்மித்துப் போவோர்! 70 களில் ஒரு சீனனின் கனவு ஒரு நல்ல சைக்கிள் வைத்திருப்பது. 80களில் அவன் கனவு ஒரு நல்ல குளிர் சாதனப்பெட்டி வைத்திருப்பது. 90களில் அவன் கனவு ஒரு நல்ல கார், நல்ல வீடு, பிற வசதிகள். பெய்ஜிங் நகரில் இருக்கும் நூற்றுக்கணக்கான மேம்பாலங்களில் ஒரு நான்கை டெல்லி பெறுவதற்கு இன்னும் தசாம்சங்கள் ஆகும். ஒரு ஒசாகா (ஜப்பான்), ஒரு சோல் (கொரியா), ஒரு சிங்கப்பூர், ஒரு கோலாலம்பூர் (மலேசியா) போல் இன்று பெய்ஜிங் விளங்குகிறது. பெய்ஜிங் போய் பார்த்தால் சீனா ஏழை நாடு என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனாலும், உலகிற்கு ஒரு ஏழை முகத்தைக்காட்ட சீனா பெய்ஜிங்கின் ஒரு பகுதியை பழையபடியே வைத்துள்ளது. அங்கு அங்கஹீனமுற்ற பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். சைக்கிள் ரிக்ஷா இருக்கிறது. ஆனாலும் அது இந்தியாவில் காணும் ஏழ்மைக்கு முன் கொசுறு. பெய்ஜிங் அடுத்த ஒலிம்பிக் விளையாட்டை அங்கு நடத்த தன்னைத் தயார் படுத்திக் கொண்டிருக்கிறது. பெய்ஜிங் மிக சுத்தமாக இருக்கிறது. சாலை விதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. உண்மையில் கொரியாவைவிட அங்கு சாலைப் போக்குவரத்து மிக ஒழுங்காக இருக்கிறது. சைக்கிள் போவதற்கு என்று நம்மவூர் சாலை அளவில் பெரிய பகுதி ஓரத்தில் விடப்பட்டுள்ளது (அப்படியெனில் காரோடும் சாலை எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்!).

மக்கள் தேனீ போல் சுறு, சுறுப்பாக இயங்குகின்றனர். சோம்பிப்போய் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை. சீனாவின் நாடியைப் பிடித்துப்பார்க்க நல்ல இடம் 'சொர்க்கத்தின் கோயில்'எனும் இடமாகும். அங்கு பெய்ஜிங்கின் கிழடு கட்டையெல்லாம் கூடியிருக்கின்றன. இப்படி எழுதியவுடன் கூன் விழுந்து, கையில் கோல் ஊன்றிய மூத்த மக்களை நினைப்பீர்கள் என்று தெரியும். ஆனால் நான் பார்த்தது அதற்கு நேர்மாறு! நிச்சயமாக 70த் தாண்டிய பெரிசுகள். பூங்காவின் ஒரு புறம் ஆணும், பெண்ணும் கைகோர்த்தபடி நடனமாடிக்கொண்டிருக்கின்றனர். இன்னொருபுறம் பலர் பூப்பந்து போன்ற ஒன்றை ஒரு நடனம் போலவே விளையாடிக் கொண்டிருக்கின்றனர். இது தாய்ச்சி என்ற யோகமுறையில் அமைந்த விளையாட்டு. பந்தின் வேகத்தை எதிர்க்காமல் அதன் வீச்சுடன் இயைந்து போய் திரும்பத்தரும் விளையாட்டு. இதற்கு நளினமும், யோகப்பயிற்சியும் வேண்டும். இன்னொரு புறம் ஒரு கிழவி சுருதி பிசகாமல் பாடிக்கொண்டிருக்கிறாள், அதற்கு ஒரு கிழம் வயலின் வாசித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எங்கு பார்த்தாலும் முதியோர் சளைத்து உட்காராமல் ஏதாவதொரு தொழிலை ஈடுபட்டு செய்வது ஏதோ சொர்க்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வை கொடுத்தது. நம்ம ஊர் கிழங்கள் என்ன செய்யும்? 60க்கு மேல் அவர்களெல்லாம் குடும்ப பாரம்! கட்டிலில் ஒரு புடலங்காய் போல் முடங்கிக் கிடக்கிறார்கள். கொஞ்சம் சிலர் வேகு, வேகு என்று பீச்சில் நடக்கிறார்கள். பேச்சுத்துணைக்கு என்று ஒரு கோஷ்டியே! இந்தப் பேச்சு பெரும்பாலும் அரசியல், பிறர் வீட்டு வம்பு தும்பு என்றுதான் இருக்கும். சீனா இன்று வயதானவர்களை அதிகம் கொண்ட நாடாக இருக்கிறது. ஆனாலும் அவர்கள் தன்னை ஒரு பாரமாக கருதுவதில்லை. மேலும் வாழ ஆசையுடன் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிக காலம் உயிர்வாழும் ஒரு மக்கள் தொகையாக சீனா உள்ளது. அதற்கு அளவான சாப்பாடு, போதிய உடற்பயிற்சி, தெம்பான உள்ளம், நாட்டு வைத்தியம் போன்றவையே முக்கிய காரணமாக காட்டுப்படுகின்றன. இந்தியாவில் நாட்டு வைத்தியம் மறைந்து விட்டது. முதியோர் நாட்டின் பாரமாக சாவுக்குக்காத்திருக்கிறார்கள். இது எவ்வளவு பரிதாபமானது!

சீனா தன் பழமைக்கலைகளை மறந்துவிடாமல் அதற்கு நவீன உரு கொடுப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஷாவொலின் புத்த துறவிகள் குங்பூ கலையில் பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு மறத்துறவிகள் (warrior monks) என்றே பெயர். சக்தியின் பூரணத்துவத்தை அறிந்து, பின் சாத்வீகமாகுவது இக்கலையின் சூட்சுமம். பெய்ஜிங்கில் நான் போன போது 'குங்பூவின் கதை' என்ற நிகழ்வின் முதல் ஆட்டம் (world premiere). இதில் உண்மையான மறத்துறவிகளும், நடனக் கலைஞர்களும் பங்கு கொண்டனர். முன்பு சினிமாவில் இப்படங்களைப் பார்த்ததற்கும் நேரில் பார்பதற்கும் அதிக வித்தியாசமுள்ளது. சினிமாவில் ஏதாவது கிராஃபிக் எபெக்ட் கொடுத்து சமாளித்து விடலாம். ஆனால், மேடையில் முடியாது. ஷாவொலின் மறத்துறவி உண்மையிலேயே தன் தவ வலிமையால் ஒரு சூலாயுதம் தன் வயிறில் குத்திக்கிழிக்கா வண்ணம் தவழ்ந்து காட்டுகிறார். மூன்று இரும்புத் தகடுகளை தன் மண்டையில் போட்டு உடைக்கிறார். காட்சி முடிந்து வரும் போது உடைந்த பாளங்கள் ஒரு கூடையில் போட்டு வைத்து காண்பிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி உண்மையிலேயே ஒரு ஆன்மீக நிகழ்ச்சி. எப்படி ஒரு சிறுவன் குங்பூ கலையில் ஆர்வம் கொண்டு தளைகளைக் கடந்து மறத்திறவியாகிறான் என்பதே கதை. அதில் புலனடக்கம், பயிற்சி, மனதின் மாயை, சதோரி எல்லாம் காட்டப்படுகின்றன. மேலை, இந்திய நாடக நிகழ்வில் கலைஞர்களை ரசிகன் கைதட்டி ஊக்குவிக்க வேண்டும். கலைஞனைப் பார்ப்பதென்றால் அதற்கு ஆள், சிபாரிசு, அந்தஸ்து வேண்டும். ஆனால், உலகப்புகழ் பெற்ற குங்பூ கலைஞர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் வாசல் வரை வந்து ரசிகனை வழியனுப்பி வைப்பது எங்கும் காணாத நிகழ்வு. அது உண்மையிலேயே அவர்களது பண்பாட்டைக் காட்டுவதுடன், கீழைத்தைய நாகரீகம் தன் விழிமியங்களை மறந்துவிடவில்லை என்பதையும் சொல்லாமல் சொல்கிறது.

சீனா இன்னும் சில ஆண்டுகளில் விண்வெளியில், நிலாவில் மனிதனை இறக்கப்போகிறது. சீனாவை இனிமேலும் நாம் எதிரியாய் பார்ப்பது நன்றல்ல. பெய்ஜிங்கில், ஏன் பொதுவாகவே சீனாவில் இந்திய சினிமாவிற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. நான் போன போதுகூட ஒரு ஹிந்திப்படம் ஓடிக்கொண்டிருந்தது. இசை, சினிமா போன்றவைதான் நிகழ்கால அம்பாசிடர்கள். அவைகள் கலாச்சாரப் பாலங்கள். அதன் மூலம் நட்பை வளர்க்கலாம். விமான நிலையத்திலேயே ஆச்சர்யம் காத்திருந்தது. பெட்டியை உள்ளே கொண்டுவரும் கண்வேயர் பெல்ட்டில் காணும் சித்திரங்களில் 'மீனாக்ஷி திருக்கல்யாணம்' இருந்தது. என்றோ ஒரு பாண்டியன் நல் முத்து கொடுத்து சீனப்பட்டு வாங்கியிருக்கிறான். அது பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய சீனத்தலைநகரில் காணக்கிடைப்பது மிக்க மகிழ்வைக் கொடுத்தது. பெரிய, பெரிய ஹோட்டல்களில் நிறைய இந்தியத் தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களைக் காணக்கூடியதாய் உள்ளது. 'தடை நகரில்' (forbidden city) தமிழ்க் குடும்பத்தைக் கண்டு கதைக்கக்கூடியதாய் இருந்தது!

தென் கிழக்கு, தூரக்கிழக்கு ஆசியா முழுவதும் இந்தியாவின் ஆன்மீக ஆளுமை இன்றளவும் காணக்கூடியதாய் உள்ளது. கலை, ஆன்மீகம், மொழி என்று இந்தியா அங்கெல்லாம் வாரி, வாரி வழங்கியிருக்கிறது. ஒரு பெருமிதத்துடன் தொலைந்து போன ஒரு நட்பை இந்தியா சீனாவுடன் மீட்டுரு செய்ய வேண்டும். அது இரண்டு நாடுகளுக்குமே நல்லது. ஒன்றின் சந்தை மற்றொன்றின் வளம். இந்திய மனம் மாறுமா?

முதற்பதிவு சமாச்சார் தமிழ்.

இரத்தபந்தம் - Are Koreans our blood relatives?

இந்தியாவும் கொரியாவும் ஒரு நீண்ட வணிகத் தொடர்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவ்வேளையில் இந்தியக் கொரியத் தொடர்பைப்பற்றிப் பேசுவது பொருந்தும்.

கொரியா வந்திறங்கும் தமிழனுக்கு இங்கு பல ஆச்சர்யங்கள் காத்திருக்கின்றன. தெருவில் போய் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு குழந்தை 'அப்பா' என்று அழைக்கும். தன்னிச்சையாக நாம் திரும்பிவிடுவோம், தமிழகத்தில் இருப்பதாக எண்ணிக்கொண்டு. கொஞ்ச தூரம் போனால் 'அம்மா' என்று துல்லியமாக ஒலிக்கும் இன்னொரு குழந்தையின் குரல். மீண்டும் சந்தேகம் வந்து திரும்பினால் நாமிருப்பது இந்தியாவல்ல என்பது புரியும். அப்பாவை சில நேரம் 'அபாஜி' என்றும் அழைக்கிறார்கள். நாம் சொல்லும் 'அண்ணி' இங்கு 'ஒண்ணி' என்று மாறியிருக்கிறது. அண்ணன் மனைவிக்காக அல்ல 'அக்கா' என்ற பொருளில். உறவுச் சொற்கள் என்பவை இருமொழிகளுக்குள் உள்ள ஆதித் தொடர்பைக் காட்டக் கூடியவை. அவ்வகையில் கொரியாவிற்கும் இந்தியாவிற்கும் ஒரு தொடர்பு என்றோ இருந்திருக்கிறது. பல வேளைகளில் கொரிய முகங்கள் இந்திய முகங்களை ஒத்திருக்கும். ஏதோ நமது மனப்பிரமை என்று ஒதுக்கிவிட்டாலும் சான்றுகள் வந்தவண்ணமுள்ளன.

குவான்ஜு என்பது ஒரு கலாச்சார நகரம். ஷில்லா எனும் பண்டைய அரசின் தலை நகரம். அங்கு உலகின் மிக அழகான புத்த ஆலயங்களுள் ஒன்று இருக்கிறது. அந்த நகரின் அருங்காட்சியகம் போனால் நமது தொடர்பு இன்னும் தெளிவாக புலப்படத் தொடங்கும். பௌத்தம் நம்மை அடிப்படையில் இணைக்கிறது. அமெரிக்கர்கள் இங்கு வந்து காலடி வைக்கும்வரை இதுவொரு பௌத்த நாடாகவே இருந்திருக்கிறது. இப்போது பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள். ஆயினும் பௌத்தம் தேசியச் சின்னமாகவே கருதப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தில் அஜந்தா, எல்லோரா, சித்தன்னவாசல் போன்ற இடங்களில் நாம் காணும் சிற்ப, ஓவியயங்களை நினைவுறுத்தும் காட்சிப்பொருட்கள் நிறைய உண்டு. சித்தன்ன வாசல் ஓவியங்களில் காணக்கூடிய நீண்ட, அரைமூடிய கண்கள் கொரியப் பெண்களின் கண்களை நினைவுறுத்துவது தற்செயலா? என்பதைத் தமிழக ஓவியர்கள் இங்கு வந்து சொல்ல வேண்டும். அனுமனின் சிலை, கருடனின் சிலை இப்படிப் பல அங்கு காட்சியிலுண்டு. நிச்சியமாக இந்தியக் கலை வல்லுநர்கள் இங்கு வந்து இவைகளை நிர்மாணித்திருக்க வேண்டும். இல்லையேல் கொரியர்கள் இந்தியா வந்து நம் கலையைக் கற்றிருக்க வேண்டும். இப்போது போல் இல்லை, ஒரு பத்து மணி அவகாசத்தில் இந்தியா, கொரியா மீண்டு விட. பல மாதங்கள் பயணப்பட வேண்டும். அப்படி பயணப்பட்டு வந்து உடனே திரும்ப முடியாது. பல மாதங்கள், ஏன் வருடங்கள் இருக்கவேண்டியிருக்கும். அப்போது மண உறவு இயற்கையாக நடந்திருக்கும். இப்படி எண்ணிக்கொண்டு அருங்காட்சியகத்தில் இருக்கும் போது ஒரு கொரியப் பெண்மணி எங்களுக்கொரு கதை சொன்னாள்.

அதாவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு கொரிய அரசனுக்கும் ஒரு இந்திய அரசிக்குமிடையே கல்யாணம் நடந்ததாம். அவர்களது குழந்தைகள் தாய் தந்தையரை அம்மா, அப்பா என்று அழைத்ததாம். தாய் இறக்கும் தருவாயில் என் குழந்தைகள் எப்படி என்னை அழைக்கின்றனவோ அவ்வாறே கொரியக்குழந்தைகள் தங்கள் பெற்றோரை அழைக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தாளாம், அதன்படியே இன்றளவும் கொரியக் குழந்தைகள் 'அம்மா, அப்பா' என்று அழைத்து வருவதாக அக்கதை சொன்ன பெண்மணி கூறினாள். ஆச்சர்யமாக இருந்தது. தொன்மங்கள் என்பவை உண்மையின் ஒரு கூறே. எனவே எங்கோ ஒரு உண்மை இருக்கிறது என்று தோன்றியது. கொஞ்சம் ஆராய்ந்த போது சில ஆதாரங்கள் கிடைத்தன. மூன்று அரசுகளின் சரிதம் (சம்-குக்குயுசா) எனும் கொரியப் புத்தகம் இப்படியான ஒரு இந்திய உறவைப்பற்றிப் பேசுகிறது. இது நடந்தது இன்று, நேற்றல்ல கிருஸ்து பிறந்து ஒரு நூற்றாண்டு முடிந்த போது நடந்திருக்கிறது. இப்புத்தகம், இந்திய இளவரசி அயோத்தியா நாட்டைச் சேர்ந்தவள் என்கிறது. அப்போது அங்கும் தமிழ் இருந்ததோ என்னவோ! கி.பி. நான்காம் நூற்றாண்டில் மாறானந்தா எனும் இந்திய பௌத்தத்துறவி கொரியா வந்ததாகவும் ஒரு சேதி உள்ளது. போதிதர்மா எனும் காஞ்சி மன்னன், துறவியாகி தூர கிழக்கில் இன்று பிரபலமாகியிருக்கும் ஜென் பௌத்தத்தை நிறுவினான் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. எனவே இந்த மாரானந்தா என்பவரும் தமிழராக இருந்திருக்க வாய்ப்புண்டு. கி.பி.574-ல் ஆஹோங் எனும் கொரியத்துறவியின் துணையுடன் மூன்று இந்தியத்துறவிகள் பல பௌத்த மடங்களை இங்கு நிறுவியதாகச் சரித்திரம் சொல்கிறது. கிபி ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் பல கொரியத்துறவிகள் இந்தியா வருவதும், இந்தியத்துறவிகள் கொரியா போவதும் வழக்கமாகியிருக்கிறது. கியோமிக் எனும் துறவி இந்தியா வந்து சமிஸ்கிருதம் கற்று மத்திய இந்தியாவிலிருக்கும் சம்கானாக் கோயிலிலுள்ள மஹிசாசகவிநய எனும் நூலை மொழிபெயர்த்திருக்கிறார். தேவதத்தா எனும் துறவி கொரியா போய் பெய்தாதுயோ எனும் பெயர் பெற்று பெக்ஜே அரசின் ஆதரவில் 72 பௌத்த நூல்களை கொரிய மொழியில் எழுதியிருக்கிறார்.

ஆக இன்று ஒரு தமிழன் இந்தியச் சாலையில் ஹுயுந்தே (ஹுண்டாய் - Hyundai என்று தவறாக உச்சரிக்கிறோம்) வாகனத்தை பெருமையாக ஓட்டிச் செல்கிறான் என்றால் அது தற்செயலாக நடந்த ஒன்றல்ல. பல நூற்றாண்டுக் கலாச்சாரப்பாலத்தின் வழியாகவே இது நடைபெறுகிறது. இந்தியக் கொரிய இரத்த சம்மந்தத்தை சமீபத்திய டி.என்.ஏ சான்றுகள் மாற்றுக்கருத்திற்கு இடமின்றி நிருவுகின்றன. எனவே, எனது கொரிய இருப்பை உளவியல் பூர்வமாக நிருவிக்கொள்ள புதிய கதைகளை உருவாக்க வேண்டிய அவசியமின்றி என் முந்தைய இந்தியச் சகோதரர்கள் இங்கு வாழ்ந்து வளம் பெற்றிருக்கிறார்கள் என்ற உரிமையில் இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஒரு வகையில் கொரியர்கள் மாமா-மச்சான் என்று ஆகிவிடுகிறார்கள். விட்டுப்போன சொந்தத்தை மீண்டும் புத்துலக்க வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமை.

முதற்பதிவு சமாச்சார் தமிழ்

கூழாங்கல் [Pebble]

பெற்றதாயினுமாயின செய்யும்
என்றான் கலியன்.
அம்மாவென்றால்
பார்த்துப் பார்த்து செய்வாள்.
உன்னையே பார்க்கமுடியவில்லை
நீ எப்படி பார்த்துப் பார்த்து
செய்யமுடியும்?
எதிர்பார்ப்புகள்
குறையவேண்டும்.
குறைகளும் குறைந்துவிடும்.
நான் என்ன கொண்டுவந்தேன்?
என்ன கொடுத்தேன்?
எதிர்பார்க்க?
உன்னில் ஜெனித்தேன்
உன் உயிரில் வளர்ந்தேன்
உன்னை சுகித்தேன்
உன்னில் கலப்பேன்
இதில் குறைக்கு
ஏதேனும் இடமுண்டோ ?
மலையிலிருந்து ஆற்றில் விழுந்த
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன.
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடியபோது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணேய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒருநாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுக்கையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்.

From: Raju Rajendran
Date: Thu Oct 7, 2004 2:38 am
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

"மலையிலிருந்து ஆற்றில் விழுந்த
கற்கள் நாங்கள்.
சில நீரை எதிர்த்து
பாறாங்கல்லாய் இன்னும்
நிற்கின்றன.
எதிர்ப்பின்றி நீரின் ஓட்டத்தில்
ஓடியபோது கூர்முனை
மழுங்கி சுருக்கம் போய்
கல்லென்றே தெரியாவண்ணம்
வெண்ணேய் போல் உருண்டு திரண்டு
உன் கை ஒருநாள் தீண்டும் சுகத்தில்
வெட்டவெளியில்
ஆற்றுப்படுக்கையில்
அலைகடற்கரையில்
அன்னாந்து பார்த்தபடி
நான்."

அன்புள்ள முனைவர். கண்ணன்,

இந்த வரிகள் மிக அருமையாகவுள்ளன.

ஆனால் கவிதையின் முற்பகுதி புரிந்து கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது.

(கோனார் நோட்ஸ்??)

ராஜு ராஜேந்திரன்

From: "Dr.Narayanan Kannan"
Date: Thu Oct 7, 2004 3:55 am
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

அன்புள்ள ராஜேந்திரன்:

கவிதையின் சில கூறுகள் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. கோனார் நோட்ஸ் போடும் அளவிற்கு என் கவிதை வந்துவிட்டது :-)!

வாழ்வைக்குறித்த என் தேடல்கள் பல நேரங்களில் கவிதையாய் உருவெடுக்கின்றன.

கவிதையை ஆரம்பித்து வைக்கிறார் திருமங்கை ஆழ்வார் (கலியன்). பெற்ற தாயைவிட இறைவன் செய்வான் என்பது அவரது துணிபு. உண்மையா? என்று கேள்வி வருகிறது. பௌதீகமாக இல்லை என்ற விடை கிடைத்தவுடன், ஏன் குறை நமக்கு வருகிறது என்று கேள்வி போகிறது. அப்போது ஒரு புதிய புரிதல் வருகிறது. ஏதாவது நாம் முதல் போட்டிருந்தால் லாபம் வரவில்லை என்று அங்காலாய்க்கலாம். எந்த முதலும் இல்லாமல் வாழ்வு ஒரு மாபெரும் பரிசாக நமக்குக் கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு நிமிடமும் லாபம்தான். நட்டம் என்பதே இல்லாத ஒரு சமாச்சாரம் வாழ்வு. எல்லாமே- நமது துக்கம், சுகம், இனிமை எல்லாம் வரவுதான். அவைதான் வாழ்வை ஓட்டுகின்றன. இப்படிப்பார்க்கும் போது வாழ்வைக் குறித்து சலிப்புறும் மனது சமனப்படுகிறது. கணியன் பூங்குன்றன் சொன்ன உவமை உடனே நினைவிற்கு வருகிறது. புனல் வருகிறது. பூங்குன்றன் வாழ்வைப் புனலில் மிதக்கும் இலையென்றான். எனக்கென்னமோ 'நாம்' கல் போன்றவர்கள் என்று தோன்றுகிறது. எதையும் வருகின்ற வழியில் ஏற்றுக்கொள்ளாததால், எதிர்வினை கொடுப்பதால் 'கல்' பொருந்தும் என்று தோன்றுகிறது. வெறும் பாறாங்கல்லாய் சிலர். கூழாங்கல்லாய் சிலர். கூழாங்கல்லில் ஒரு சேதி இருக்கிறது.

இதுதான் என் கவிதை.

சங்கப்பலகையில் இட்டாகிவிட்டது! மிதக்குமா? மூழ்குமா என்று சங்கப்புலவர்கள் சொல்லட்டும்.

அன்புடன்
கண்ணன்


From: Raju Rajendran
Date: Thu Oct 7, 2004 2:03 pm
Subject: Re: [min-suvadi] Pebble on the beach

அன்புள்ள கண்ணன்,

கலியன் என்றால் திருமங்கை ஆழ்வார் என்று நானறிந்திருக்கவில்லை. இப்பொழ்து விளங்குகிறது. இனி, கவிதைகளில் இரண்டு பொலிவுகளை நான் எதிர்பார்க்கிறேன். கருத்துப் பொலிவு. சொல் பொலிவு. புதுக்கவிதைகளில் முன்னது மட்டுமே பெரும்பாலும் காண இயலுகிறது. சொல் அழகும் அதனால் உருவாகும் நடை அழகும் குறைவு. ஏன் இரண்டு சுவைகளையும் கலந்து தர இயலாதா?

கல்லாதவரும் நல்ல கருத்தைச் சொல்கிறார்கள் அவர்கள் பாங்கில். யாரும் புலவன் ஆவது அதனோடு சொல் அழகையும் சேர்க்கும் போது தான். வள்ளுவனின் தனிச்சிறப்பு குறளடியில் செறித்தது தானே!

ராஜு ராஜேந்திரன்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
அன்புள்ள ராஜேந்திரன்:

நல்ல கருத்தைச் சொன்னீர்கள்.

தமிழ் கவிதை ஒரு நீண்ட வட்டத்தை முடித்து ஆரம்ப நிலைக்கு வந்திருக்கிறது. சங்க காலத்தில் எல்லோரும் கவிதை யாத்தனர். கணக்கு வாத்தியார், ஜோஸ்யர், வணிகன், அரசன், மீனவன் என்று பாரபட்சமில்லாமல். அப்போது கருத்திற்கு முக்கியத்துவம் இருந்தது (நாராய்..நாராய் :-) பின்னால் தமிழ் மிகவும் பொலிவு பெற்று நடையழகு பெறுகிறது. வள்ளுவன், கம்பன், ஆழ்வார்கள் என்று பலர் புதிய பா வகைகளைச் சேர்கின்றனர். ஒரு காலத்தில் வெறும் நடையழகு மட்டுமே கவிதைக்கு வேண்டும் என்ற நிலை வருகிறது. பாமரன் இந்த ஓட்டத்திலிருந்து விலக்கப்படுகிறான். பாரதி வந்து அதை மீண்டும் உடைக்கிறான். பின்னர் புதுக்கவிதை புனல் வேகத்தில் புறப்படுகிறது.

கவிதையில் நடையழகு வேண்டுமெனில் மரபுப்பரிட்சயம் அவசியம். புதுக்கவிதை அதை இத்தனை நாள் புறக்கணித்திருக்கிறது. மெதுவாக அது மீண்டு வரும். ஆயினும் பழைய இறுகிய நிலைக்குப் போய் விடாமல் நவீன கவிதை தன் இருப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்ணன்

We are the world!

நாம்தான் உலகம்

இம்முறை சென்னை வந்து திரும்பும் சமயத்தில் அமுதசுரபி ஆசிரியர் அண்ணா கண்ணன் சந்தித்தார். கிளம்புவதற்கு ஒரு மணி அளவில்தான் அவகாசமிருந்தது ஆயினும் அவர் இந்தியாவின் நதிகள் இணைப்பு பற்றிய எனது கருத்தை அறிய ஆவலாயிருந்தார். சுற்றி சுற்றத்தார், விடை கொடுக்க வந்திருந்த நண்பர்கள் என வீடு அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது, அதனிடையில் நாங்கள் இந்திய நதிகள் இணைப்பு பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரிடம் ஒரு தீவிரம் இருந்தது. சூழலியல் என் துறை என்பதால் நான் என்ன சொல்வேன் என்பதைக் கேட்பதில் ஆவலாயிருந்தார். அப்போது அவருக்கு விரிவாய் பதில் சொல்ல நேரமில்லை. மேலும் இந்திய நதிகள் இணைப்பு பற்றி இந்திய சூழலியல் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும் என்ன சொல்லி வருகிறார்கள் என்பதை நான் தொடர்ந்து அறிந்திருக்கவில்லை. எனவே பொத்தாம் பொதுவாக ஒரு அபிபிராயம் சொல்ல மனது இடம் கொடுக்கவில்லை. இத்தலைப்பில் ஆழமாக வாசித்துவிட்டு அமுதசுரபிக்கு கட்டுரை எழுதித்தருகிறேன் என்று சொன்னேன்.

கொரியா மீண்ட பிறகு எனது ஆய்வகத்தில் பணிபுரியும் லீ எனும் சீன விஞ்ஞானியிடம் இது பற்றிப்பேசிக்கொண்டிருந்தேன். அவர் பெய்ஜிங் தலை நகரின் நீர் பற்றாக்குறை பற்றி அழாத குறையாகச் சொன்னார். பெய்ஜிங் நகருக்கு இது நாள் வரை நீர் வழங்கிக்கொண்டிருந்த மஞ்சளாறு வற்றிப்போய்விட்டதாம். அதனால் வேறு எங்கோ ஓடும் யாங்கிசிடியாங் நதியின் ஒரு கிளையை மஞ்சளாற்றுடன் இணைத்து தலைநகருக்கு நீர் கொண்டு வருவதாகச் சொன்னார். இந்த இணைப்பு இன்றல்ல, பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்ததாகவும் அதை மராமத்து பண்ணி இப்போது நீர் கொண்டு வருவதாகவும் சொன்னார். நதிகள் வற்றிப்போய்விடுவது ஆச்சர்யமில்லை. பிரம்மாண்டமான நதிகளெல்லாம் வற்றிப்போயுள்ளன. சரஸ்வதி நதி நல்ல உதாரணம். இன்று பாலைவனமாக இருக்கும் சகாராவிற்கு கீழே பெரிய நீர்ப்படுக்கை இருப்பதை செய்கோள் படங்கள் காட்டுகின்றன. ஆறுகள் மலைகளிலிருந்து உருவாகின்றன. மலைகளில் சரியான மழை இல்லையெனில் ஆறு வற்றிப் போய் விடுகிறது. இம்மாதிரி சமயங்களில் முன்பு போலென்றால் மக்கள் பாரிய அளவில் குடிப்பெயர்வு செய்வார்கள். ஆனால் மக்கட்தொகை பெருகிவிட்ட நாடுகளான இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இனிமேலும் இடப்பெயர்விற்கு சாத்தியவில்லை. எனவே நதி வற்றி விட்டால் வற்றாத நதிகளை இணைப்பதே மக்கள் வாழ்வதற்கான வழி.

இதற்கு முன்னோடிகள் ஏதேனும் உண்டா? எனில் 'உண்டு' என்பதே பதில். ஒரு பாலைவனத்தில் அமைந்திருக்கும் இஸ்ரேல் தனது புத்தி சாதுர்யத்தால், தொழில் திறனால் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறது (இதை முஸ்லிம் நாடுகள் இப்படிப் பார்ப்பதில்லை என்பது இக்கட்டுரைக்கு அப்பாற்பட்ட விஷயம்). விவசாயத்திற்கு நீர் இல்லையா? எங்கிருந்து கொண்டு வருவது? என யோசித்து இஸ்ரேலின் வட பகுதியிலிருந்து பெரிய கால்வாய் போட்டு தலைநகருக்கு நீர் கொண்டு வந்து விட்டனர். அந்நீரும் மிகச்சிக்கனமான முறையில் பயன்படும் வகையில் சொட்டுப்பாசானம் எனும் முறையைக் கையாண்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு விவசாய உற்பத்தியைப் பெருக்கி விட்டனர். தேவைதான் கண்டுபிடிப்பின் மூலாதாரம் என்பதைப் பலமுறை நிரூபித்தவர்கள் இஸ்ரேலியர். இந்தியாவை நோக்குங்கால் இஸ்ரேல் இத்துணூண்டு நாடு. எனவே அதை ஒப்பு நோக்கக்கூடாது என்று சிலர் சொல்லலாம் (அந்த அளவில் கூட நம்மால் செயல்படமுடியவில்லை என்பதை எளிதாக இவர்கள் மறைத்துவிடுவர். வீராணம் திட்டம் என்னவாயிற்று. கிருஷ்ணா நதித்திட்டம் என்னவாயிற்று?). கலிபோர்னியா மாநிலம் ஏறக்குறைய ஜப்பான் அளவு பெரியது. உலகின் மிக வளமுள்ள பகுதிகளும் அதுவுமொன்று. ஆனாலும் தென் கலிபோர்னியா மிக வரண்ட பகுதி. பாதிப்பாலை என்றே சொல்லலாம். ஆனால், அங்கு ஒவ்வொரு வீட்டில் நீச்சல் குளம் இருக்கும். எப்படி? வட கலிபோர்னியாவில் நிறைய நீர் உண்டு. மழையுண்டு. எனவே அங்கிருந்து மிக நீளமான கால்வாய் வெட்டி தென்கலிபோர்னியாவிற்கு, குறிப்பாக அதன் தலைநகர் லாஸ் ஏஞ்சலுக்கு நீர் கொண்டு வந்து விட்டனர். இந்த மாபெரும் திட்டம் முடிவுற்ற போது நடந்த விழாவிற்கு தலைமை ஏற்றுகுமாறு அதன் தலைப்பொறியாளரக் கேட்டுக்கொண்டார்களாம் (இங்கே இந்த மாதிரி வாய்ப்பை நமது மந்திரிகள் விட்டுவிடுவார்களா என்ன?). அவர் செயல்வீரர். வீண் வார்த்தை பேசுபவரல்ல. எனவே மேடையில் ஏறிச் சொன்ன சின்னச் சொற்பொழிவு. 'நல்லது! இதோ நமது நீரோடை!' என்று வாய்க்காலைக்காட்டிவிட்டு உட்கார்ந்து விட்டாராம் (நம்ம ஆட்கள் விடுவார்களா? இம்மாதிரி சந்தர்ப்பங்களை? மற்றவர் செய்ததையும் தான் சாதித்ததாகவல்லவோ பேசுவது இவர்கள் வழக்கம்!). அவர் சொல்ல வந்தது, அச்செயலின் கனம், அவர்கள் அதற்கு ஏற்றுக்கொண்ட உழைப்பு இவையெல்லாவற்றிற்கும் பரிசாக, வாழ்த்தாக அங்கு அந்த நீர் ஓடிக்கொண்டிருந்தது. அதுதான் அவர்களின் வெற்றிப் பெருமிதம். எனவே அதைச்சுட்டுவதே ஆயிரம் கதைகள் பேசுவதற்குச் சமானம் என்பது பொறியாளரின் எண்ணம்.

இந்தியாவில் இது சாத்தியப்படாதா? அதற்கான நீர் வளம் இல்லையா? அல்லது உழைக்கும் மனித வளம் இல்லையா? அல்லது திட்டமிடும் தொழில்திறன் இல்லையா? எல்லாம் அங்குண்டு. இத்திட்டம் பற்றி எல்லோருக்கும் முன்னால் ஒரு ஏழைக்கவிஞன் பாடியிருக்கிறான். சர் விஸ்வேஸ்வர அய்யா திட்டமிட்டிருக்கிறார். ஆனால் செயல்படுத்துவதில் சொணக்கம் இருக்கிறது. ஒரு காரியம் செய்வதற்கு முன் பத்து நாள் அது பற்றிப் பேசித்தீர்ப்பது நமது வழக்கமாகிவிட்டது.

பாரிய அளவில் நீர் வளங்களை மாற்றி அமைப்பது சூழல் பாதுகாப்பிற்கு கெடுதல் விளைவிக்குமா? இது முக்கியமான கேள்விதான். வாய்க்கால் போடும் போது பல இடங்களில் குடிப்பெயர்வு நிர்பந்திக்கப்படும். இது தவிற்கவியலாதது. அணை கட்டும் போது கிராமங்கள் மூழ்குவது போல்தான் இதுவும். இது தவிர உலகளவில் இது சூழலியல் மாற்றங்களை தருவிக்குமாவென்று சூழல் மாடலியரிடம்தான் கேட்க வேண்டும்.

இந்த உலகமே அங்கு வாழும் உயிரினங்களால் உருவானதே என்பது ஆச்சர்யமான உண்மை. வேறு எந்தக் கிரகங்களிலும் இல்லாத மாதிரி பூமியின் வாயு மண்டலம் அமைந்திருப்பது உயிர்கள் தாமாக ஏற்படுத்திக்கொண்ட சூழலே! உலகம் தோன்றியபோது இங்கு உயிர்வளி (ஆக்சிஜன்) கிடையாது. அது உயிர்கள் உருவாக்கியது. இவ்வளவு பெரிய உணவுக்கிட்டங்கி கிடையாது அவை உயிர்கள் உருவாக்கியது. ஒன்றை உண்டு ஒன்று வாழ்ந்து இருப்பதற்குள் இயங்கும் ஒரு மாபெரும் உணவுச் சுழற்சியை உயிர்கள் இப்பூமியில் உருவாக்கியுள்ளன. செவ்வாயில் பெரிய நதிகள் இருந்திருக்கின்றன. ஏரிகள் இருந்திருக்கின்றன. ஆயின் உயிர் தோற்றம் அங்கு நிகழாததால், வாயு மண்டலம் மாற்றப்படாததால் வளிகள் அண்டத்தில் சிதறிப்போய் கோளமே வரண்டு போய் விட்டது. பூமிக்குப் பாதுகாப்பு இந்த வளி மண்டலம்தான். அது உயிர்கள் தாமாக உருவாக்கியவை. எனவே தமக்கு சாதகமான வகையில் பூமியை மாற்றிக் கொள்வது யுக, யுகமாக நடந்துவரும் ஒரு செயல்பாடு.

ஆயினும், மிகக்கவனமாகத்திட்டமிடுதல் அவசியம். மனிதச் செயல்கள் மிகச்சிறியனவாகினும் அவை பூகோள அளவில் மாற்றங்களைக் கொண்டு வரும் சாத்தியம் இருப்பதாக இப்போது விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். நல்ல உதாரணம், தொழில் புரட்சியின் பயனாக இந்தியா, சீனா போன்ற ஆசிய நாடுகளின் அபரித போக்குவரத்து வளர்ச்சி. ஏரோசால் என்று சொல்லக்கூடிய வாகனப்புகை மேகக்கூட்டம் போல் இந்தியா, சீனாவின் மேல் படர்ந்திருப்பதை செய்கோள் படங்கள் காட்டுகின்றன. இந்த மாசுப்போர்வை சூரிய ஒளியை பிரதிபலித்து வளிமண்டலத்திற்கு அனுப்பிவிடுவதால் பூகோள அளவில் சூடு அதிகரிப்பதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். உலகைச் சூடேற்றும் அதே வேளையில், சூரிய ஒளியைத்தவிர்பதின் மூலம் இந்நாடுகளை இவை குளிர்விக்கும் செயலையும் செய்கிறது. வெளியே உஷ்ணம், கீழே குளிர்ச்சி! பலன், வழக்கமாக இந்நாடுகளுக்கு மழை கொண்டு வரும் பருவக்காற்று குழம்பிபோய் எங்கோ மழை பெய்துவிட்டுப் போய் விடுகிறது. சைனா சமீப காலங்களில் மாபெரும் வரட்சியைக் கண்டுள்ளது. அங்கு பாலை பெருகிவருகிறது. சீனாவிலிருந்து கிளம்பும் தூசுக்காற்று (மணல்காற்று) பசிபிக் சமுத்திரத்ததாண்டி காலிபோர்னியாவரை போவதைக் கண்டுள்ளனர். சகாராவிலிருந்து வீசும் மணற்காற்று அட்லாண்டிக் கடலில் சங்கமிப்பதை ஜெர்மனியில் எங்கள் ஆய்வகம் கண்டு சொல்லியுள்ளது.

எனவே மனிதச் செயல்பாடுகள் அனைத்திற்கும் இரண்டு தன்மைகளுண்டு. ஒன்று நல்லது. இரண்டு கெட்டது. நுகர் கலாச்சாரத்தால் வரும் சூழல்மாசு எப்படியாயினும் கட்டுப்படுத்த வேண்டியதே. அதில் இரண்டு கருத்திற்கு இடமே இல்லை. பருவ காலங்களை முற்றும் முழுவதுமாக மாற்றிவிட்டால் பின் நதி இணைப்பு பற்றிப் பேசிப் பயணில்லை. நதிகள் இருந்தால் அல்லவோ அதன் இணைப்பு பற்றிப்பேச முடியும்! நீர் என்பது புனிதப்பொருள். நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவ வாக்கு. பூமி ஒரு நீர்க்கோளம். பூமியின் செயற்பாடு நீர் சார்ந்தது. வாழ்வு நீர் சார்ந்தது. எனவே நீரை வீணடிக்காமல். பொன்னை எப்படிக் கையாளுவோமோ அப்படிக் கையாண்டு பயன்பெற வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் நீரின் அருமை இப்போதுதான் தெரிந்திருக்கிறது. கூவம் என்ற நல்ல நீர் ஆற்றைச் சென்னை கழிவுக் கிட்டங்கியாக்கிவிட்டது. கிருதுமால் என்ற நதியை இன்னொரு கூவமாக மதுரை ஆக்கிவிட்டது. திருப்பூர் அடிமண்டி நீர் கூட வண்ண வண்ணமாக வருகிறது. இளநீர் கலராக இருக்கிறது. இது நீர் துஷ்பிரயோகம்.

நீரின்றி அமையாது உலகு.

முதற்பதிவு: சமாச்சார் தமிழ்

சந்த வசந்த கவியரங்கக் கவிதை

எனது சந்த வசந்த கவியரங்கக் கவிதை, முனைவர் சுவாமிநாதனின் முன்னுரை, பின்னுரை மற்றும் அக்கவிதைக்கு வந்த பின்னூட்டங்கள் இவை எனது Poems in focus வலைப்பூவில் காணக்கிடைக்கின்றன.

கடவுளாய் நானிருந்தால்!

முனைவர் எல்லே.சுவாமிநாதன் தலைமையேற்று நடத்தும் 14 வது சந்தவசந்த கவி விழாவி
ல் "கடவுளாய் நானிருந்தால்" என்னும் தலைப்பில் என் கவிதை அரங்கேறிவிட்டது. வாசி
க்க ஆர்வமுள்ளவர்களுக்கு சுட்டி கீழே:


http://groups.yahoo.com/group/santhavasantham/message/9466

கீத கோவிந்தம்

அன்புள்ள நண்பர்களே:

கீத கோவிந்தம் என்றொரு நவீன பக்தி இலக்கியக் கவிதையை சந்த வசந்த மடலாடற்குழுவில் இட்டேன். அதன் முதற்படிவம் கீழே.

இக்கவிதையின் கருக்கலையாமல் உருவேற்றி மெட்டமைத்து பாடியிருக்கிறார் கானடா ஆர்.எஸ்.மணி அவர்கள். அப்பாடல் வரிகளும் பாடலுக்கான சுட்டியும் கீழே.

கலை, புகழ் கண்ணன் தாள். வாழ்க.


கீத கோவிந்தம்

காத்திருப்பது
வழக்கமாகிவிட்டது.
உன்
தூரத்து மணியோசை
தினம் தினம் ஒலிக்காதா
என்று - காத்திருப்பது...

செம்பவள நடுவே கோர்த்து
வைத்த கருமுத்துப்போல்
செம்மாலைச்சுடரில்
தனித்து நிற்கும் நின் கருமை

கழுத்து மணியோசைக்குக்
காத்திருக்கும் கொட்டில் கன்று
கண்ணன் வரும் ஓசையென
காத்திருப்பேன் நினை
நினைந்து - காத்திருப்பது...


http://www.rsmani.com/gita_govindam


கீத கோவிந்தம்

காத்திருப்பேன் உனக்காக - கண்ணா
காத்திருப்பேன் உனக்காக

தூரத்து மணியோசை
ஒலித்திடும் போதெல்லாம்
நீ வருவாய் என்று
நான் அறிவேன் அதனால்
தினம் தினம் மணியோசை
கேட்டிட மனம் நாடி
வீற்றிருப்பேன் வாயில் முன்னே - கண்ணா
(காத்திருப்பேன்)

செம்பவள மாலையிலே
வைத்த கருமுத்தினைப் போல்
செம்மை நிற மாலை நேரம்
உன்னுருவம் தோன்றும் வரை
தாயினது கழுத்தினிலே
ஆடும் மணியோசை கேட்க
கொட்டிலிலே துடிக்கும்
சின்னஞ் சிறு கன்றினைப் போல்
(காத்திருப்பேன்)

கனாக் காணுதல்

இந்த பாருப்பா!
நீ யாருன்னு எனக்குத் தெரியாது
இந்த வீட்டிலேதான் நீயும் இருக்கேன்னு சொல்லறாங்க
ஆனா, நான் உன்னப்பாத்ததில்லே
நீ வரதும் போறதும் ஒருத்தருக்கும் புரியரதில்லே
நீ பாட்டுக்கு நாங்க தூங்கறப்ப வர
முழிக்கறதுக்குல்ல போயிடற...
நீ இப்படிதான் இருப்பேன்னு
நினைச்சுக்கிட்டு அண்ணே ஒரு படம்
வரைஞ்சான், அத அம்மா பிரேம் போட்டு
பூஜிக்கிறாங்க
இதுதான் நீயான்னு கேட்டா
அதுவும் நீதானன்னு பல படத்தைக் காட்டறாங்க.
கண்ண மூடிக்கிடா தெரிவான்னு
கடைசி வீட்டுச் சாமி சொல்லிச்சு
மூடிக்கிட்டா இருட்டிலே பூச்சி, பூச்சியா பறக்குது
கண்ணத்திறந்து பாருடா!
இருக்கிறதெல்லாம் அவதான்னு
ஒரு முண்டாசுக் கோணங்கி சொல்லிட்டுப் போச்சு.
இருக்கிறது எல்லாமுனா?
இந்த பாருப்பா!
ஒண்ணும் புரியலே.
தூங்கறப்பதான் வருவேன்னா
இன்னிக்கி ராத்திரி
கனவிலே வந்து
இனம்
காட்டிட்டுப் போ!

கொசுவின் கதை

நேற்றிரவு ஒரு ஒற்றைக் கொசுவுடன் போராடியதால் தூக்கம் போச்சு. நாம்தான் புத்திசாலிகள் என்று நினைக்கிறோம். ஆனால் இந்த அற்பக்கொசு நமக்கு டேகா கொடுத்துவிட்டு, விளக்குப் போட்டால் ஒளிந்து கொண்டு, விளக்கு அணைந்தவுடன் மெதுவாய் வந்து கடிப்பதுமாய் இருக்கிறது. இந்தியக்கொசுகளுக்கு வீரியம் அதிகம். அது வரும்போதே ஏரோப்பிளேன் வர மாதிரி ரீங்காரிக்கும். ஆனால் கொரியக் கொசு, இந்த ஊர் ஜனங்கள் மாதிரியே சத்தம் போடாமல் மெதுவாக வந்து தன் காரியத்தைப் பார்க்கிறது. நம்ம ஊர் கொசு நல்ல சதையுள்ள இடத்தில் குத்தி இரத்தம் குடிக்கும். அவ்வளவாக வலிக்காது. ஆனால் இந்த ஊர் மடக்கொசு தலையில் முடியில்லாத பாகங்கள், முட்டி, விரல் நடுவு என்று கடிக்கக்கூடாத இடத்தில் கடித்து வைக்கிறது. அது எரிச்சல் தருவது மட்டுமல்ல, வீங்கவும் வைக்கிறது.

உயிரினங்களிலே மிகவும் வெற்றி கொண்ட உயிரினங்கள் பூச்சிகள். அவை இல்லாத இடமே கிடையாது. துருவப்பிரதேசத்தில் கொசு இருக்காது என்று நினைக்கிறோம். அதுதான் இல்லை. ஆளை கடிச்சுக்கொல்லும் அளவிற்கு கொசுப்பட்டாளமே அங்கு உண்டு.

ஆனாலும் ஊருக்கு ஊர் கொசு சரித்திரம் வேறுபடுகிறது. ஜெர்மனியில் நான் கொசு பார்த்தது இல்லை. அங்கு எறும்பு கூடக் கிடையாது. தேனீ மட்டும் அவ்வப்போது வந்து இனிப்பான பண்டங்களில் மொய்க்கும். இந்தியாவில் மதுரை பல்கலைக்கழக குடியிருப்புப் பகுதியில் வாழ்ந்த போது தினம் ஒன்றிரண்டு சாரைப்பாம்பு வீட்டிற்குள் வந்து விடும். வெறும் பேட்டா செறுப்பை வைத்து அடித்துக் கொல்வதுண்டு. நாகமலைப்பக்கம் போனால் சர்ரென்று ஆறடிப் பாம்பு பாய்ந்து செல்லும் காட்சியெல்லாம் சகஜம். ஆனால் வளர்ந்து விட்ட நாடுகளின் அறிகுறி உயிரினங்களை அரிதாகப்பார்ப்பதே. ஐரோப்பாவில் ஓநாய்கள் மீண்டும் வந்து விட்டன என்பது ஒரு சமயம் தலைப்புச் செய்தியாக வந்தது. மனிதன் வாழும் இடங்களில் வனவிலங்களுக்கு இடமேது? அவைகளைச் சரணாலயம் வைத்துப் பாதுக்காக்கும் நிலமைக்கு வந்தாகிவிட்டது. அங்கும் மனித ஆக்கிரமிப்பு உண்டு. விளைவு, சதா வனவிலங்குகளுக்கும் மனிதனுக்கும் போராட்டம்தான். உயிர்களின் பரிணாமத்திலேயே முதன்முறையாக ஒரு ஜீவன் 'இயற்கைத்தேர்வு முகவர்' (natural selection agent) என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறது என்றால் அது மனிதனுக்கு மட்டுமே. எலிகள் பெருகினால் பாம்பு பெருகும், பாம்பு பெருகினால் மயில்கள் பெருகும் என்பது சாதாரண விதி. ஆனால், இயற்கையின் மாபெரும் சக்தி தவிர ஆயிரக்கணக்கான இனங்களை பூண்டோ டு அழிக்கின்ற ஆற்றலை மனிதன் பெற்றுள்ளான். துப்பாக்கி என்ற கொல்லி கண்டுபிடிக்கப்பட்டவுடன் சும்மா விளையாட்டிற்கு அமெரிக்க எருமைகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிய வருகிறோம். மனிதக்கூட்டம் பெருகப்பெருக பூமண்டலத்தில் பிற ஜீவராசிகளுக்கு இடமில்லையென்று ஆகிவிட்டது.

இது ரொம்ப பாவமான சமாச்சாரம். நம்மைப் போலவே அவைகளுக்கும் வாழும் உரிமையுண்டு. நம்மைப் போலவே அவைகளும் பிள்ளை பெற்றுக் கொள்கின்றன, அவைகளைக் காப்பதற்கு அரும் பாடு படுகின்றன. இல்லாளுக்காக வீடு கட்டுவது என்பது மனித இனத்திற்கு மட்டும் பொது அல்ல. பல விலங்குகள் அரும்பாடுபட்டு மனைவியை சந்தோஷப்படுத்த வீடு கட்டுகின்றன! [பிடிக்கவில்லையெனில் சில பறைவைகள் கடுப்படிக்கும் விதத்தில் கட்டிய கூட்டைப் பிரித்துப்போட்டுவிடுவதுண்டு. நல்லவேளை மனித மனைவிகள் அப்படியெல்லாம் செய்வதில்லை]. தாம்பத்ய பிரச்சனைகள் என்பதும் விலங்குகளில் உண்டு. பச்சை வெட்டுக்கிளி போல் Praying mantis என்றொரு பூச்சியுண்டு. அது எப்போதும் தொழுவது போல் கைகளை வைத்திருப்பதால் அப்படியொரு பெயர். இதில் ஆசிய மக்கள் போல் ஆண் பூச்சி ரொம்ப வெட்கப்படுகின்ற ஜந்து. கலவி என்று வரும் போது கூச்சப்பட்டுக்கொண்டே இருக்குமாம். பெண் பூச்சி பார்த்துக்கொண்டே இருக்கும். இதற்கு வெட்கம் தெளியவே தெளியாது. அதைச் சரி செய்ய அது எடுக்கும் முயற்சி கமலஹாசன் படங்களில் வரும் வன்முறையைவிட கொடுமையானது. சட்டெனத்திரும்பி ஆண் பூச்சியின் தலையைக் கொய்துவிடும். நாம் நினைப்போம், உடனே பூச்சி செத்துப் போகுமென்று. ஆனால் அதுதான் இல்லை. செத்துப்போகும்தான்! ஆனால், செய்ய வந்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்து விட்டே மரிக்கும்! இது என்ன அதிசயமென்றால்? ஆண் பூச்சியின் தலையில் கூச்ச சுபாபமுள்ள நரம்புவலையை நறுக்குவதன் மூலம், அப்பூச்சி கூச்சமில்லாமல் கலவியில் ஈடுபட்டு பெண் பூச்சியை கருத்தரிக்க வைக்க முடியும் என்பதுதான். நல்லவேளை இப்படியெல்லாம் நம் வாழ்வில் நடப்பதில்லை! சில தேள் இனங்களில் கலவி முடிந்த கையோடு பெண் தேள் ஆண் தேள் மீது பாய்ந்து அதைக்கடித்து தின்றுவிடுமாம். இதுதான் அன்பின் உச்சம் போலும்! இப்படிப்பல அதிசயங்கள் கொண்ட விலங்கினங்களுக்கும் நம்மைப் போல் வாழ உரிமை உண்டுதானே? ஆனால் மனிதன் பொறுப்போடு இதையெல்லாம் உணர்வதில்லை.

இதையெல்லாம் அவனுக்கு உணர்த்துவதற்குத்தான் இப்போது பசுமை விழிப்புணர்வு வந்திருக்கிறது. கனடாவிலுள்ள ராக்கி மலைத்தொடரில் பயணித்துக் கொண்டிருக்கும் போது ஒருமுறை பாதை தவறி புல்வெளிக்குள் போய் விட்டேன். எங்கிருந்தோ ஒலி பெருக்கியிலிருந்து எச்சரிக்கை. பாதை விலக வேண்டாம். தாறுமாறாக நடந்தால் கால் மிதி பட்டு பல காட்டுச் செடியினங்கள் அழிந்துவிடும்! என்பதே அந்த எச்சரிக்கை! அவ்வளவு கவனமாக இயற்கை அங்கு பாதுகாக்கப் படுகிறது. இந்தியாவின் நுகர்பொருள் கலாச்சாரம், பெருகும் மக்கள் தொகையுடன் சேர்ந்து கொண்டு இயற்கையை படாத பாடு படுத்துகிறது. சென்னையில் முகமூடிக்கொள்ளைக்காரர்கள் போல் பயணிக்கும் இந்த டூவீலர், ஆட்டோ செய்யும் சூழல்மாசு வானிற்குச் சென்று இந்தியாவிற்கு மிகவும் அத்தியாவசமான பருவக்காற்றின் போக்கையே திரும்பப்பெறமுடியாத அளவில் மாற்றிவிட்டது என்பது சமீபத்திய சேதி. இதனால்தான் மழைநீரைச் சேமியுங்கள் என்று தண்ணிலாரியில் எழுதி வைக்க வேண்டியுள்ளது. இயற்கையின் செயற்பாடு என்பது ஒரு சிறந்த நீதிவாணன் செயற்பாடு போல் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பயனளிக்கும் வண்ணம் இதுநாள் வரை வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதன் உருவாகியபின் இவையெல்லாம் தலைகீழாக மாறி வருகின்றன. வந்தனா சிவா போன்ற சமூகப் பொறுப்புள்ள தலைவர்கள் இந்தியாவிலுள்ள செடி, கொடிகளின் ஜீன்களை பாதுக்காக்க வேண்டும் என்று சொல்வது அவசரகால நடவடிக்கை என்றே கொள்ள வேண்டியுள்ளது. நேற்று சிட்டி அவர்கள் பதிப்பித்துள்ள 'வசனசம்பிரதாயக் கதை' வாசித்துக்கொண்டிருந்தேன். இது 1775-ல் முதலில் வெளியானது. அதில் பரம்பரையாக 56 தேசங்கள் என்று சொல்லப்படும் நாடுகளிலுள்ள தாவரங்கள், விலங்குகள் இவைகளின் பெயர்கள் இடம் பெறுகின்றன. இவற்றில் எத்தனை ஜீவராசிகளை நாம் இன்றும் காணமுடியும் என்று யாராவது கணக்கிட்டுச் சொன்னால் நாம் சுழல்பாதுகாப்பில் எவ்வளவு கவனமாக இருக்கிறோம் என்பது புலப்பட்டுவிடும்!

மக்கள் பெருக்கம், மனித வெறித்தன நுகர்வு கலாச்சாரம், இவர்களாக உருவாக்கிக்கொண்ட நாகரீகம் இவை இயற்கையின் மீது உலகம் கண்டிராத ஆளுமை செலுத்துகின்றன. இதன் பிடியிலிருந்து உலகை மீட்க தமிழ் இலக்கியம் கை கொடுக்க வேண்டும். பசுமை எழுத்துகள் பரவலாக்கப்பட வேண்டும். தமிழகத்திற்குச் சொந்தமெனப்படும் தாவர, விலங்குகளை பாதுக்காக்க இவ்வெழுத்துக்கள் துணை போக வேண்டும். இல்லையெனில் ஒற்றைக்கொசு கூட இல்லாத காண்கிரீட் வனத்தில் மனிதன் மட்டும் வாழவேண்டியிருக்கும். அப்போது வரும் தனிமையில் மூட்டைப்பூச்சியின் கடிப்பும், கொசுவின் குத்தலும் கூட அரிதான பொருளாகப் பார்க்கப்படும்!

போனஸ்! கொசு கடிக்கும் வலி தெரியும். ஆனால் கொசு கடிக்கும் போது ரசித்து யாரும் பார்ப்பதில்லை. இதோ இங்கு கொசு துளை போடும் காட்சி!

Environmental Hygiene in India

சார்/மேடம் ஒரு நிமிஷம்....

நான் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் வீட்டிற்கு நாளும் கிழமையுமாக மஞ்சள் தடவிய ஒரு காலணாக் கடுதாசி வரும். அதில் ஏழுமலையானின் பெருமைகளையெல்லாம் சொல்லி, கலியக வரதனான அவர் நடத்திய அற்புதங்களை சொல்லி இதை வாசித்தபின் அவரின் அருள் கிட்ட வேண்டுமெனில் 12 பேருக்கு இது போல் கடுதாசி போட வேண்டுமென்றும், தவறினால் குடும்பத்தில் ஏதாவது துக்கம் சம்பவிக்குமென்றும் எழுதியிருக்கும். சாதாரணமாகவே நடுக்கம் வரும், ஏழுமலையானைக் குடும்ப தெய்வமாகக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டிற்குச் சொல்லவா வேண்டும்? அடியேன்தான் போய் தபாலாபீஸில் காத்திருந்து கார்டு வாங்கிவர வேண்டும். 12 கடிதம் எழுத வேண்டுமே! அக்கா முதலில் குண்டு, குண்டாக நாலு கடுதாசி எழுதித்தருவாள். அதை நாங்களெல்லோரும் நகலெடுக்க வேண்டும். தரையில் குனிந்து கொண்டுதான் எழுதுவோம். பெண்டு கழண்டு விடும். ஈதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு என்று புரிந்து கொண்டு விட்ட இந்தக்காலத்திலும் மின்னஞ்சல் மூலமாக இம்மாதிரிக்கடிதங்கள் வருகின்றன. நண்பர்கள் தினத்தைக் கொண்டாடும் விதத்தில் ஒரு கடிதம் வந்தது, நட்பின் சிறப்பை சிலாகித்து. கடைசியில் ஒரு கொக்கி! நீ நட்பை மதிப்பவனாக இருந்தால் இக்கடிதத்தை ஒரு பத்துப்பேருக்காவது அனுப்பு என்று. எப்படியெல்லாமோ நம்ம செண்டிமெண்டைக் கிளறிவிடறாங்க சார்!

இந்த வெங்கடாஜலபதிக் கடிதம்தான் நானறிந்த முதல் 'எரிஞ்சல்' அதாவது spam. (எரிச்சல் தருகிற அஞ்சல்). இப்போ தினம் ஐம்பது வருது. அதிலே பாதி நான் குலுக்கலில் கலந்து கொள்ளாமலே கோடீஸ்வரனென அறிவிக்கும் கடிதங்கள்! பாதி இது வைரஸ் அல்ல என்று அறிவிக்கும் இணைப்பான்கள். அவ்வப்போது ஆண்குறியை பெரிதாக்குவது எப்படி என்று அட்வைஸ் அஞ்சல்களுமுண்டு. இதற்கிடையில் ஒரு நாள், நான் மிகவும் மதித்துப்போற்றும் பேராசிரியர், விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாமிடமிருந்து 'என்று சொல்லி' வந்திருந்தது ஒரு மின்னஞ்சல். அதுவொரு பவர் பாயிண்ட் கோப்பு. முதல் அட்டையில் சிரித்தமுகத்துடன் கலாம். தான் ஐதராபாத்தில் பேசிய கூட்டத்தில் ஒரு சிறுமி ஆட்டோ கிராஃப் வாங்க வந்தாளென்றும், அவளிடம் உன் வாழ்வின் கனவென்ன என்று கேட்டதற்கு நான் 'வளர்ச்சியடைந்த' இந்தியாவில் வாழவேண்டுமென்று சொன்னதாக எழுதுகிறார். இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால் ஒவ்வொரு இந்தியனும் என்ன செய்ய வேண்டுமென்று பேச ஆரம்பிக்கிறார். வெங்கிடாஜலபதி கடுதாசி போலவே போகப்போக குண்டுகளை வீசியவாறே போகிறது கோப்பு.

நாம் சொல்லுகிற வசனங்களோடு ஆரம்பிக்கிறது. இந்த அரசாங்கம் ஒரு குப்பை. ஊழல் பிடிச்ச அரசு. நம் நாட்டுச் சட்டமோ ஒரு பெரிய ஜோக்கு. குப்பைத்தொட்டியத்தவிர தேசம் பூரா குப்பை கொட்டிக்கிடக்கிறது. நமது இரயில்வேஸ் பற்றிப் பேசவே வேண்டாம்..இப்படி. அது சரி! இதற்கு "நீ" என்ன செய்யப் போகிறாய்? என்று ஆரம்பிக்கிறது சாட்டையடி!

சிங்கப்பூர் விமானநிலையத்தில் வந்து இறங்குகிறாய். பிடித்த சிகரெட் துண்டை அப்படியே தெருவில் கடாசக் கூசுகிறாய். மாலை 5 மணியான பிறகு ஆர்சார்டு சாலை வழியே போவதற்கு 5 டாலர் கட்ட ஆயிரம் கேள்வி கேட்பதில்லை. துபாயில் இருந்தால் ராமதான் போது பொது இடத்தில் எச்சில் படுத்தி உணவு உண்பதில்லை. ஜெட்டாவில் தலையை மூடாமல் நடக்கக்கூசுகிறாய். வாஷிங்டன் சாலையில் 55 மைல் வேகத்திற்கு மேல் போகக் கூச்சப்படுகிறாய். காவலாளி பிடித்தால், "நான் யாரோட பிள்ளைன்னு உனக்குத்தெரியுமா?" என்று வம்பு, வீண் ஜம்பம் பேசுவதில்லை.

ஆனால் நீ பிறந்த மண் என்று வரும்போது குப்பையை எங்கு வேண்டானும் வீசுகிறாய், போலீஸ்காரனுக்கு லஞ்சம் கொடுத்து கெடுக்கிறாய், எங்கு வேண்டுமானாலும் எச்சில் துப்புகிறாய். அடுத்த நாட்டில் கடைப்பிடிக்கும் நாகரீகத்தில் ஒரு கடுகளவேணும் இந்தியாவில் கடைபிடித்தால் இந்தியா ஏன் சுத்தமாக, வளர்ந்த நாடுபோல் இருக்காது என்று கேட்கிறார்.

வெங்கிடாஜலபதி பேர் சொன்னவுடன் என்ன பயம் வருமோ அதே பயம்தான் ராஷ்டிரபதி பேர் சொன்னவுடன் வருகிறது. "சாமி கண்ணைக்குத்தும்" பயம்தான்! ஆனால், இதை டாக்டர் கலாம் அனுப்பியிருப்பார் என்று நம்புவதற்கில்லை. அவர் இப்படி பட்டவர்த்தனமாகப் பேசக்கூடியவர் என்று தெரிந்து கொண்ட ஒரு "ஜோரோ" (Zoro) ஒரு "ராபின்ஹூடு" (Robinhood) இதைச் செய்திருக்கிறது!

ராமஜெயம் எழுதுவது போல் "ஜெய, ஜெய, பாரத!" என வாழ்த்தினால் ஒன்றும் குறைந்துவிடாது என்ற நல்லெண்ணம்தான். இதில் சொல்லியிருப்பதென்னவோ நூற்றுக்கு நூறு உண்மை. சூழல் விழிப்புணர்விற்கு என்று நானும், அன்னை தெரசா பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்.ஆனந்தவல்லி மகாதேவனும் இம்மாதிரி நிறைய 'அறிவுரை' தாங்கிய நிகழ்ச்சிகளை திருச்சி வானொலியில் அளித்துள்ளோம். 90களில் சுபமங்களாவில் இது குறித்தும் கட்டுரை எழுதியுள்ளேன்.

கலாம் சொல்லும் மற்ற நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் நிறைய வித்தியாசமுண்டு. வளைகுடா நாட்டில் சேட்டை செய்தால் மாறு கால், மாறு கை வாங்கிவிடுவார்கள். சிங்கப்பூரில் பிருஷ்டத்தில் சவுக்கடி கிடைக்கும். கிளிண்டனே சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஆனால், இந்தியா ஒரு சுதந்திர நாடு. என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம்!

அது சரிதான், ஆனால் அடிப்படை ஸ்திரமில்லாமலே இந்தியா ஒரு மிக உயர்ந்த ஜனநாயகக் குடியரசுக் கொள்கையை ஏற்றுக்கொண்டுவிட்டது. மிகவும் வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகள் கூட மெல்ல, மெல்லதான் ஒருங்கிணைப்பிற்கு வருகிறார்கள். பொது விழுமியம் பற்றிப் பேசுகிறார்கள். பல் இன, பல் தேசிய இந்தியாவை ஒரு இரவுப் பிரகடணத்தில் ஒரு நாடாக்கிவிட்டார்கள். அப்படி, இப்படி இழுத்துக்கொண்டு போய் இப்போதுதான் 'இந்தியன்' என்ற உணர்வே வரத்தலைப்பட்டுள்ளது. அதற்குள், பிற சூழல் விழுமியங்கள் பற்றிய பிரக்ஞை எப்படி வரும்?

அதை முறையாக வளர்த்தெடுக்க வேண்டும். ஜெர்மனியில் கிண்டர்கார்டன் குழந்தைகளுக்கு சாலை விதிகள் கற்பிக்கப்படுகின்றன. இரவு 12 மணிக்கு சிவப்பு விளக்கில் சாலையைக் கடக்க உத்தேசிக்கும் போது யாரோ காலரைப் பிடித்து நிறுத்துகிறார்கள். அம்மாதிரி "ஒழுங்குதான் எல்லாமும்" (Es ist alles in Ordnung) என்ற தேசிய விழுமியம் சட்டென வந்துவிடாது! மக்கள் மனதில் அது ஆழப்பதிய வேண்டும். இது நமது தேசம். இங்கு நாம் வாழ்கிறோம். இதை துப்புரவாக வைத்துக்கொள்ள வேண்டும். இது போன்ற உணர்வு! இந்தியாவில் எல்லாமே மற்றவர் செய்ய வேண்டுமென்ற மனோபாவம்.

மேலை நாட்டிற்கும், இந்தியாவிற்கும் ஒரு பெரிய வேற்றுமை உள்ளது. இந்தியன் தனி மனித அளவில் ஒழுக்கம் நிறைந்தவன். பல்லாயிரமாண்டு இராமாயண. மகாபாரதக் கதை கேட்டு, கேட்டு நீதி, நியாயம் என்பது உள்ளே பதிந்துள்ளது. வீட்டிற்குள் ஆசாரமாக, மடியாக இருப்பார்கள். ஆனால் சாப்பிட்டபின் இலை தெருவிற்கு வந்துவிடும்!

ஆனால் ஒரு அமெரிக்கனையோ, ஒரு ஜெர்மானியனையோ எடுத்துக்கொண்டால், தனி மனித விழுமியம், குடும்ப விழுமியம் என்று சொல்லிக் கொள்ளுமளவு இருக்காது. வீட்டில் எப்படியிருந்தாலும் பொது இடம் என்று வரும் போது ஒரு கண்ணியம் இருக்கும். ஒரு நாகரீகம் இருக்கும். நாம் பத்து தேய்த்து, பாத்திரங்களை துலக்கி வைத்திருப்போம். ஆனால் தெரு குப்பையாக இருக்கும். அங்கு பாத்திரம் கழுவாமல், சாப்பிட்ட பிட்ஸா ஒரு வாரத்திற்கு அப்படியே கிடக்கும். ஆனால் தெருவில் படுத்துக் கொள்ளலாம். அப்படி சுத்தமாக இருக்கும்.

இந்தியா வளர்ந்த நாடாக மாறுவது ஒன்றும் பெரிய காரியமில்லை. பாதிக்கிணறு தாண்டியாகிவிட்டது. "உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலை! எல்லாம் இறைவன்" என்றுதானே நம் முன்னோர் கண்டுள்ளனர். கொஞ்சம் இதை அண்டை வீட்டுத்திண்ணைக்கும், தெருவிற்கும், தேசத்திற்கும் பொது என்று கொள்வோமானால் இந்திய உபகண்டமே இறைவன் வாழும் பகுதியாகும்.

அப்போது இந்தியா உலகிலேயே மிக வளர்ச்சியுற்ற நாடாக பொலிவு பெறும்.

முதற்பதிவு, சமாச்சார் தமிழ்
டாக்டர் கலாமிடமிருந்து வந்ததாகச் சொல்லப்படும் பவர் பாயிண்ட் ஸ்லைடு ஷோ இங்கு

Where to buy Na.Kannan's books?

நண்பர், சுவடியர் திரு.சிபிச்செல்வன் அவர்கள் சமீபத்தில் வெளியான எனது இரண்டு நூல்களையும் அவர் இணையாசிரியராக இருக்கும் உலகத்தமிழில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அக்குறிப்பில் புத்தகம் வாங்கும் வழியும் சுட்டப்பட்டுள்ளது.

Schönste Frau der Welt

உலகின் தலை சிறந்த அழகி - ஐசு!அண்ணே! நம்பினா நம்புங்க, நம்பாட்ட போங்க - எங்கே போக?

டக்கர் படமெல்லாம் இருக்கு!

An appeal to non-resident Tamils

சமீபத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் ஒன்றியம் ஒரு விழா எடுத்தது. அதில் வெளி நாட்டில் வாழும் தமிழர்களுக்கு ஒரு விண்ணப்பம் விடுத்துள்ளேன்.

http://www.tamil-heritage.org/promote/promote.html

வாசித்து ஆவண செய்க.

Transexuals in Thailand

மாற்றுப்பெண்

இந்திய மண்ணின் பூர்வ புத்திரர்கள் வாழ்வை, உறவைத் திறந்த மனதுடன் பார்த்திருக்கின்றனர் என்பது நமது புராண, இதிகாசங்களிலிருந்து தெரிகிறது. ஆதிசங்கரர் என்ற படத்தில் பாரதத்தின் மூத்த புதல்வனுக்கு தந்தை யார் என்று தெரியாது என்றும், தாயின் பெயரை தன் பெயருடன் இணைத்துக் கொண்டு குருகுலம் சென்றான் என்றும் பார்த்திருக்கிறேன். தந்தை யார் என்று தெரியாததால் அவனுக்கு கல்வி மறுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மகாபாரத்தின் மாபெரும் வீரன், கதாநாயகன் அர்ச்சுனன் காட்டில் வாழும் போது அலியாக, பேடியாக வாழ்ந்ததாக இதிகாசம் சொல்கிறது. ராணிகளின் அந்தப்புரத்தில் ஆண் வாடையே கூடாது என்பதற்காக ஒரு அலிக்கூட்டமே இருந்ததாக சரித்திரம் சொல்கிறது. பெண்மையின் அங்கம் ஆணுக்கு உண்டென்று சொல்லும் விதமாக மூத்த தெய்வமான சிவன் பாதி பெண்ணுருவில் இருக்கிறார் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்து வருகிறது. ஆணான விஷ்ணு மோகினி என்ற பெண்ணுருவில் வந்ததாகவும், அது சமயம் சிவன் அவள் மேல் மோகித்துப் பிறந்த குழந்தையே ஐயப்பன் என்று சொல்லும் அளவிற்கு இந்தியா திறந்த மனதுடன் உறவுகளைப் பார்த்திருக்கிறது.

ஆனால், அன்று பார்த்த அந்தப்பார்வை இன்று இந்தியாவில் இல்லை. கிராமப்புரங்களில் அலிகள் மிகக் கேவலமாகவே நடத்தப்படுகின்றனர். ஆண்களின் வக்கிரமான பாலியல் இச்சைகளுக்கு வடிகால்களாக அவர்கள் பாவிக்கப்படுகிறார்கள். ஆயினும் பெண்ணாக மாற வேண்டுமென்ற இச்சை ஆணுக்கு இருந்து கொண்டேதான் இருக்கிறது. மும்பாயில் அலிகள் சங்கம் உண்டென்று கேள்விப்பட்டிருக்கிறேன். அவர்களுக்கென்று குல தெய்வம் உண்டென்றும், அவர்களுக்கென்று ஒரு சரித்திரமும், புராணம் உண்டென்றும் படித்திருக்கிறேன். சினிமாவின் ஆரம்ப கட்ட நடிகள் எல்லாம் நாடகங்களில் ஸ்திரி பார்ட் போட்டவர்கள்தான். பெண்ணின் பாவங்களை முகத்தில் காட்டும் போது நடிப்பின் சூட்சுமங்கள் புலப்படுகின்றன என்பதை முன்னாள் 'ஸ்திரி பார்ட்' சிவாஜியின் நடிப்பிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

பிறப்பின் ஆரம்பங்கள் சுவாரசமாயுள்ளன. கருத்தரிக்கும் முட்டையில் ஒரு பாதி எப்போதும் பெண் குணங்களைத்தாங்கியே உள்ளது. இதை X-குரோமசோம் (மரபுத்திரி) என்பார்கள். இரண்டு X சேர்ந்தால் பெண். ஒரு X-ம் ஒரு Y-யும் சேந்தால் ஆண். ஆக, பெண் என்பது முழுப்பால் என்பது போலவும், ஆண் என்பது அர்த்தநாரி என்றும் உயிரியல் சொல்கிறது. ஆணுக்கு மட்டும்தான் பெண் குணம் உண்டா? பெண்ணிற்கு ஆண் குணம் இல்லையா என்றால்? அதற்கும் கரு வளர்ச்சி பதில் வைத்திருக்கிறது. பெண் என்பது XX சேர்கையால் முழுப்பால் போல் தோற்றம் தந்தாலும் கரு வளரும் போது பெண் குழந்தைக்குக்கூட ஆண் குறியே முதலில் வளர்கிறது என்பது ஆச்சர்யம்! பின் அதுவே சுருங்கி 'கிளைடோ ரிஸ்' என்ற பாகமாக மாறுவதாக மானுடக் கருவியல் காட்டுகிறது. ஆக ஆணுக்குள் பெண், பெண்ணுக்குள் ஆண் என்பது ஒண்ணு மண்ணாக கிடக்கிறது.

ஆன்மீகத்தில் பழுத்துவிட்ட மூத்த துறவிகள் பெண் போலவே மென்மையாக இருப்பதை நாம் இராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி பரமாச்சாரியர், ரமண மகரிஷி, வள்ளலார் போன்றவர்களின் தோற்றத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஆண் பெண் என்ற பாலியல் வேறுபாடு ஹார்மோன்களின் (நாளமில்லா சுரப்பு) வேலை என்பது மருத்துவம் சொல்லும் உண்மை. பெண் ஹார்மோன்களை தொடர்ந்து கொடுத்து வந்தால் மார்பகம் பெரிதாக வளர்ந்துவிட வாய்ப்புண்டு. சில மீன் வகைகளில் நீரின் உஷ்ணம் கூட ஆண், பெண் வித்தியாத்தில் பெரும் பங்கு வகிப்பதாக விஞ்ஞானம் சொல்கிறது. ஆனாலும், பௌதீக காரணங்கள் மட்டும்தானா ஒரு ஆணைத் தானொரு பெண் என்று கருத வைக்கிறது? உள்ளுக்குள் ஏதோ ஒரு வதை. தான் ஆண் இல்லையென்று. இந்தக்குரல் பௌதீகம் சார்ந்ததல்ல. பெண்மையின் ஆதிக்குணமான பராமரித்தலை ஆண் ஆன்மீகத்தின் மூலம் புரிந்து கொள்ளும் போது இயல்பாக பெண் உருவம் வந்துவிடுவதையும் காண்கிறோம். மன்னுயிர்க்கு தாய் கடவுள் என்பதுதானே இந்தியப்புரிதல்.

இவ்வளவு கதை எதற்குச் சொல்கிறேன் என்றால், கோடை விடுமுறைக்கு இந்தியா சென்ற போது தாய்லாந்து வழியாக செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சுற்றுலா என்பதை முக்கிய மூலதனமாகக் கொண்டுள்ள நாடு தாய்லாந்து. விடுமுறை நாடு என்றால் எல்லா வகையான கேளிக்கைகளும் இருக்கும்தானே! புராபா பல்கலைக் கழகத்தில் உரையாற்றிவிட்டு ஜெர்மனி சென்றுவிடுவதுதான் முதல் பிளான். ஆனால், அங்குள்ள ஆசிரியர்களுள் ஒருவர், பட்டையா கடற்கரை மிக அருகாமையில் இருப்பதாகவும் அதைப் பார்க்காமல் போவது காசிக்குப்போய் கங்கையில் குளிக்காமல் போவதற்கு ஒப்பு என்பது போல் என்னை நிர்பந்தப்படுத்தினார். அவர்கள் உதவியுடனே, விமான தேதியை மாற்றினேன். அதிர்ஷ்டம், அடுத்த நாள் விமானத்தில் இடமிருந்தது!

பட்டையா கடற்கரை மிக அழகானது. அழகை எப்படிப்பாதுகாக்க வேண்டுமோ அப்படியே பாதுகாக்கிறார்கள். அங்குள்ள இதமான வெய்யிலுக்கும், கடல் ஸ்நானத்திற்கும் வரும் ஐரோப்பியப் பயணிகள் அத்துடன் திருப்திப்படுவதில்லை. அந்த ஊரை ஒரு கேளிக்கை ஊராக மாற்றி விட்டனர். எனவே மாலையில் கடைத்தெருப்பக்கம் போனால் சாமான்களை விடப் பெண்களே மலிவான விலைக்குக் கிடைக்கிறார்கள். கையைப்பிடித்து இழுக்காத குறைதான். சில நேரம் இந்த இளம் பெண்களைப் பார்த்தால் பாவமாக உள்ளது. நண்பர் சொன்னார், அத்தனை மதுபானக் கடைகளும் ஜெர்மன், ஒல்லந்துகாரர்கள் நடத்துவது என்று. இது சுற்றுலா வியாபாரத்தின் ஒரு பகுதி! ஆனால், என் தாய் நண்பர் என்னை அழைத்துச் சென்றது வேறொரு அதிசயத்தைக் காண்பிக்க!

'அல்கஜார் காபரே' என்ற நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றார். இந்தியாவில் காபரே என்றால் ஒரு காலத்தில் ஒரு கிளு, கிளுப்பு இருந்தது. சினிமா நடிகைகள் காபரே என்றால் ஒரே பேச்சுதான். ஆனால் தமிழ் சினிமாவின் அபரித முன்னேற்றத்தில் கதாநாயகிகளே காபரே நாயகிகளாக மாறிப்போனபின் காபரே என்ற கேளிக்கைக்கு இடமே இல்லாமல் போய்விட்டது! காபரே நடிகைகள் நிகழ்ச்சிக்கு முன் வெளியே வந்து படமெடுக்க நின்று கொண்டிருந்தனர். ஒரே கூட்டம். ஒரே கிளு, கிளுப்பு. அவர்களது பிக்னி உடை, பாதித்திறந்த மார்பகம் என்று கிளர்ச்சி நிறைந்து இருந்தது. மிக அழகான பெண்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நிகழ்ச்சி ஏறக்குறைய ஒரு மணி நேரம் நடந்தது. பிரம்மாண்டமான செட்டிங், காட்சி ஜோடனைகள், லைட்டிங் எபெக்ட், கிளர்ச்சி, சில நேரங்களில் கொஞ்சம் கூடுதல் கவர்ச்சி என்று நிகழ்ச்சி அமர்களப்பட்டது. நிறைய இந்தியச் சுற்றுலாப் பயணிகள் கண்ணில் பட்டனர். அது குடும்பத்துடன் காண வேண்டியது என்று விளம்பரம் சொன்னதால் இந்தியர்களில் பலர் குழந்தைகளுடன் வந்திருந்தனர். இந்தியச் சினிமா பார்த்த குழந்தைகளுக்கு இதுவொன்றும் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்திவிடப்போவதில்லை என்ற தைர்யமாகவும் இருக்கலாம். இந்தியாவில் போர்னோகிராபியை குடும்பத்துடன்தானே தினமும் பார்க்கிறோம் ;-)

நிகழ்ச்சி முடிந்தவுடன், எப்படி இருந்தது? என்றார். 'நன்றாக இருந்தது' என்றேன். 'பெண்கள் வடிவாக இருந்தார்களா?' என்றார். 'ஆம்! அழகாக இருந்தார்கள்' என்றேன். கிளர்ச்சியூட்டும் வகையில் உடை, பாவனை இருந்ததா?' என்றார். 'இருந்தது' என்றேன்.நீங்கள் பார்த்த ஒருவர் கூட உண்மையான பெண்ணில்லை. அத்தனையும் மாற்றுப்பெண்கள் (transexual) என்றார். தூக்கிவாரிப்போட்டது. பெண்ணின் அழகு ஒரு மாயை என்று சொல்வார்கள். அது இதுதான் போலும்! அத்தனை பெண்களும் அழகான ஆண்கள்! அடடா! ஆனால், வேஷமில்லை. சத்திரசிகிச்சை மூலம் முழுவதுமாக பெண்ணாக மாறியவர்கள். மார்பில் சிலருக்கு 'சிலிகோன்' இருக்கலாம். ஆனால் உண்மையில் வளர்த்துவிடப்பட்ட மார்பகம். ஆண் உறுப்புகள் முறையாக சிகிச்சை மூலம் அறுக்கப்படாமல், உள்ளே தள்ளப்பட்ட பெண்கள். இவர்களில் சிலர் முறையாகத்திருமணம் செய்து கொண்டு வாழ்வதாகச் சொன்னார் நண்பர்! என்ன! குழந்தை பிறக்காது, அவ்வளவுதான். மற்றபடி தாம்பத்ய சுகம் இருக்கும் என்றார் நண்பர். நிகழ்ச்சிக்குப் பிறகு இரவில் ரோட்டு ஓரத்து டீக்கடைகளில்தான் இப்பெண்கள் உணவு உண்டனர். அப்போது, சிலரிடம் சென்று எனது பாராட்டுக்களைத் தெரிவித்தேன். 'நன்றி' என்ற பதிலில்தான் உள்ளே ஒளிந்து கொண்டிருப்பது 'ஆண்' என்று தெரிந்து கொண்டேன். தாய்லாந்து மக்கள் இவர்களை கௌரவமாகவே நடத்துவதைக் கண்டேன். பெண்கள் கூட இவர்களைச் சக தோழிகளாகப் பாவிப்பதை அறிந்து கொண்டேன். பாலியல் என்பது இலை மறை, காய் மறையாக இதன் பின் இருந்தாலும் இந்தியாவிலுள்ள அளவிற்கு வக்கிரப்படுத்தப்படவில்லை. உண்மையில், அங்கு காணும் உண்மையான பெண்களைவிட இம்மாற்றுப் பெண்களின் வாழ்வு டீசண்டாகவே இருப்பதாகப் படுகிறது.தாய்லாந்திலாவது அலிகள் சுகமாக வாழ்கிறார்கள் என்பது கொஞ்சம் இதமான சேதியாக அமைந்தது!

முதல் பதிவு: சமாச்சார் தமிழ் - படங்கள் வெளியிடப்படாமல்....

Hymns for the drowning! - a poem

ஆழ்வார்

ஆழ்த்துபவை
அநேகம்.

அயர்ந்த உடம்பினை
ஆழ்தூக்கம் ஆழ்த்தும்.

பண்ணிசைத்துப்பாடும் பட்டுப்போன்ற
பெண்ணின் குரல் பாடப்பாட
ஆழ்த்தும்.

நெஞ்சமெல்லாம் பாசம் வைத்து
நேசமுடன் பிரியும் துயர்
நினைக்காதே ஆழ்த்தும்.

நேசமுடன் இருந்தாலும் நெஞ்சு விம்மல்
நின்ற சோகம் நினைக்க, நினைக்க
ஆழ்த்தும்.

பஞ்சுக் கை கொஞ்சு முத்தம்
தந்து தந்து நின்ற மகள்
கல்யாணப் பெண்ணாகி
கடல்தாண்டிப் போகும்போது
நெஞ்சழுத்தம் ஆழ்த்தும்.

கால் நழுவி கிணற்றில் விழுந்தால்
கன உடம்பு ஆழ்த்தும்.

கவிதை என்று வந்துவிட்டால்
கனித் தமிழ் ஆழ்த்தும்
கருப்பொருள் ஆழ்த்தும்

ஆழ் முத்து தினம் தேடும்
அமைதிக் குளம் தானடுவே
தாமரைப்பூமகள் தண்மலரடி
ஆழ்த்தும்.

ஆழ்த்துபவை அநேகமிருந்தும்
ஆழ்ந்து மூழ்கிச் சாகாமல்
ஆசை மட்டும் வாழ வைக்கும்
அடுத்த கவிதைக்கேங்கி

கரும்பாறைக்கற்களுடன்
கனரகக் கப்பலொன்று
கருநீலக்கடல் வானில்
மூழ்காமல் மிதப்பது போல்
கடந்து செல்லும் என் வாழ்வு
கவிதை மிதப்பு கொண்டு.

நா.கண்ணன்

Hymns for the drowning!

நற்சிந்தனை

வெய்யில் காலமென்றால் எல்லோருக்கும் வெளியே காத்தாட நடக்க ஆசையாக இருக்கிறது. ரொம்பச் சூடு என்றால் கடல் மேல் மிதந்து கொண்டு, நீந்திக்கொண்டு சூட்டைக் குறைக்க முடியும். எனது அறையிலிருந்து 600 அடியில் கடல். நீந்த வேண்டுமென்று ஆசை. நான் ஒண்ணும் மிகிர்சென் அல்ல. சாதாரண கமலைக்கிணத்தில் நீந்தக் கற்றுக் கொண்டவன். கடலுள் இறங்கியாகிவிட்டது. கூப்பிடு தூரத்தில் ஆய்வக மிதப்புத்தளமிருந்தது. போய்விடலாமென்று எண்ணி நீந்தத்தொடங்கினால் 75% போனபின் மூச்சு வாங்கிவிட்டது. நீந்தி ஒரு இரண்டு வருடமாவது ஆகியிருக்கும். உடல் பயிற்சியினால் செயல்படுவது. சும்மா, சும்மா உட்கார்ந்து வலைப்பதிவு செய்து கொண்டிருந்தால் உடல் சோம்பல் பட்டுப் போகிறது. மிதப்பு கண்ணில் படும் தூரத்தில் இருந்தும் மேலே போகமுடியவில்லை. ஆழம் நிச்சயம் 10 மீட்டராவது இருக்கும். மூழ்கமாட்டேன் என்று உள்ளுள் ஏதோ சொன்னது. இருந்தாலும் முடியவில்லை. அருகில் வந்து கொண்டிருந்த கொரிய நண்பனின் உதவி கேட்டேன். அவன் பதறிப்போய் கழுத்தைப் பின்புறம் வாங்கி தூக்க ஆரம்பித்தான். அடே! மடையா! சும்மா, தொட்டுக்கொள்ள வந்தால் போதும் போய்விடுவேன் என்று சொல்ல ஆசை. அவன்தான் கழுத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டானே! எப்படிப்பேச! கொஞ்ச நேரம் ஒரு பதட்டம். பின் ஒருவழியாக அவன் நீந்த அவன் தோளை மெதுவாகப் பிடித்துக்கொண்டு மிதப்பு தளத்திற்குப் போய் ஓய்வெடுத்தேன். அன்று அவன் அருகில் இல்லையெனில், இன்று யாராவது இரங்கற்செய்தி வாசித்துக் கொண்டிருப்பர். உறங்குவது போலும் சாக்காடு என்பது தூங்கும் போது உயிர் போனால் சரியாகப் பொருந்தும். நீரில் மூழ்கிச் சாவது கொடூரம்!

அன்று, துணி துவைக்க ஊறப்போட்டிருந்தேன். துணியை அலசும் போது, ஒரு சின்னப் பூரான் தொப்பென்று விழுந்தது. பூரான் எப்படி நீரில், சோப்புடன் ஊறும் சட்டைக்குள் புகுந்தது என்று தெரியவில்லை. உடனே 'கொல்! கொல்!' என்று மிருககுணம் சொன்னது. கொஞ்ச நேரம் யோசித்தேன். என்னைப்போல் அதற்கும் வாழவேண்டுமென்று ஆசையிருக்கும். எனக்குள்ள அதே வாழும் உரிமை அதற்குமுண்டு. எனக்கு அடுத்தவேளைக்கு உத்திரவாதமிருக்கிறது. அதற்கில்லை. ஒரு சின்ன கம்பில் ஏற்றி வெளியே விட்டு விட்டேன். பாம்பு கொத்தும். தேள் கொட்டும். பூரான் கடிக்கும். அது அதன் இயல்பு. பகைவனுக்கு அருளும் நெஞ்சு மனிதனுக்கு மட்டுமே உள்ளது.

வாழ்க மாக்கள்! வாழ்க மக்கள்!

Chu-chu by Barathi

பாரதியாரின் சீன மொழியாக்கத்தை வாசித்து விட்டீர்களா? [- Book No.22]

சரி,

பாரதி ஏன் இக்கதையை சீனத்திலிருந்து மொழியாக்க உத்தேசித்தான்?

1. சீனம் ஒரு பண்டைய நாகரிகம். அவர்கள் கதைகள் நம் கதைகள் போல் இருப்பதால் ஜனங்களுக்கு எளிதாகப் புரியும் என்ற காரணமாக இருக்கலாம்.
2. அந்தக்காலத்தில் குழந்தை பிறக்கவில்லை என்ற காரணத்தால் இந்தியாவில் பல மனைவிகள் கட்டிக்கொள்ளும் பழக்கம் இருந்தது. அது பாரதிக்கு பிடித்திருக்காது. எனவே அதைக் குத்திக்காட்ட இந்தச் சீனக்கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம்.
3. ஆணாதிக்கமுள்ள சமூகத்தில் ஆணின் குறை எப்போதும் மறைக்கப்பட்டு பெண்களே குறை உள்ளவர்களாகக் காட்டப்படுவர். அதற்கு சரியான தண்டனை போல் இக்கதை அமைந்ததும் பாரதிக்குப் பிடித்திருக்கலாம். தனக்குப் பிறக்காத குழந்தையை தன் குழந்தை என்று ஏமாற்றுத்தனத்தால் ஏற்றுக்கொள்ள வைப்பது சரியான பழிவாங்கல் :-)
4. வாழ்வு மிகவும் சுயநலமிக்கது. 'தான்' என்பதே பிரதானம். சுயத்தைத்தக்க வைத்துக்கொள்வதே வாழ்வின் பிரதான நோக்கம். இதை 'சுயநல மரபு' (selfish gene) என்னும் கோட்பாட்டால் விளக்குவர். இதய மாற்று அறுவை சிகிச்சையில் வேறொரு இதயத்தை நோயாளியின் உடல் ஏற்றுக் கொள்ளாது. 'நீ செத்தாலும் பரவாயில்லை! இதை நான் அனுமதிக்க மாட்டேன்'! என்றுதான் உடல் சொல்லும். இது இக்கதை நாயகனின் போக்கிலிருந்து சரியாக வெளிப்படுகிறது. அவன் குழந்தையைக் கொல்ல முயல்கிறான். இது இயல்பு.

ஆனால் இதற்கொரு மாற்றுண்டு. அது ஆன்மீக வளர்ச்சியுற்ற மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடியது. நீ உண்மையிலேயே உன் மனைவியை நேசிப்பாயெனில் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிறக்கும் அவள் குழந்தையை தன் குழந்தையாக ஏற்றுக் கொள்வது. இந்த மாற்றுக் கருத்தை தி.ஜா தனது மரப்பசுவில் முன் வைக்கிறார். அன்பு என்றால் என்னவென்று புரிந்தவர்களுக்குத் தெரியும், நீ அன்பு செய்யம் நபருக்கு எது பிடிக்கிறதோ, எது நெருக்கமாக இருக்கிறதோ அது தனக்கும் நெருக்கப்படுவதை! திருமணமான புதிதில் கணவன், மனைவியின் ருசி வித்தியாசமாக இருக்கும். போகப்போக ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்கு பிடிக்க ஆரம்பிக்கும். இது சகஜம். இதன் உச்சகட்ட நீட்சிதான் மனைவியின் குழந்தையை ஏற்றுக்கொள்வது. ஆனால், இது சாதாரணமாக நடப்பதில்லை. முதல் மனைவி இறந்து அவளது தங்கையை மணந்தால், அக்குழந்தையை மறுதாரம் ஏற்றுக்கொள்வாள். அதுவும் தனது ஜீன் என்பதால். ஆனால் மாற்று ஜீன் என்றால் ஏற்றுக் கொள்ளமாட்டாள். ஆனால் இராமாயண காதையில் எல்லோருமே கௌசல்யையின் புத்திரனை தனது குழந்தை போல் பாவிக்கின்றனர். அதுவொரு பொற்காலமாக இருந்திருக்க வேண்டும். சாதாரண மனிதர்களால் தனது மனைவிக்கு 'முன் பிறந்த' குழந்தையையோ அல்லது தனது கணவனுக்கு முதல் தாரத்தின் வழி பிறந்த குழந்தையையோ ஏற்றுக்கொள்ள முடியவே முடியாது.

அம்மாதிரி மூட ஜனங்களுக்கு புத்தி புகட்டும் வண்ணம், in a crude spiritual act, வேறொருவனுக்குப் பிறந்த குழந்தையை கதை கட்டி 'தனது குழந்தை' என்று ஏற்க வைத்துவிடுகின்றனர். 'மாந்தர்தம் உள்ளத்தனையது உயர்வு' என்று வள்ளுவன் சும்மாச் சொல்லவில்லை.

பாரதி இது பற்றியும் யோசித்து இருக்க வாய்ப்புள்ளது. அவன்தான் ஒரு தீர்க்கதரிசியாச்சே! சமீபத்தில் ஒரு டிவி சீரியலில் மலட்டுத்தன்மையுடைய ஒரு கணவன் தன் குறையை மனைவி மீது கட்ட. அவள் இவனை கர்ப்பமாக உள்ள தனது சினேகதியை மணம் புரிய வைத்து பழி தீர்ப்பதாக கதை அமையும். இப்படியெல்லாம் படம் வர வேண்டுமென்று எண்ணியோ என்னவோ பாரதி 1919-லேயே இப்படியானதொரு கதையை முன்வைத்துள்ளான்.

இதை முதலில் வெளியிட சேகரம் செய்து தந்த ஆண்டோ பீட்டருக்கு நன்றி. இவர் இலக்கப்பதிவாக்கித்தந்த பாரதி பற்றிய இன்னொரு முழுப்புத்தகம் வெளிவரக்காத்திருக்கிறது.

இதன் சிறப்பறிந்து உடனே மின்னாக்கம் செய்த வலைக்குரு சுபாவிற்கு என் நன்றிகள், வாழ்த்துக்கள்.

வாழ்க பாரதி புரட்சி.

Beauty saloon

சவரம் பழகு

ஆணாக இருப்பதில் எத்தனையோ அசௌகர்யங்கள் இருந்தாலும் இந்த சவரம் செய்து கொள்ளும் அநுபவம் ஆண்களுக்கென்று பிரத்தியேகமானது என்று தோன்றுகிறது. இதையும் நிச்சயமாகச் சொல்லமுடியா வண்ணம் நாகரீகம் மாறி வந்தாலும், ஒரு பேச்சுக்கு இப்படி வைத்துக் கொள்வதில் தவறில்லையென்று தோன்றுகிறது.

பிறந்தவுடன் முடி காணிக்கை தர கோயிலுக்குக் கொண்டு போய் அங்கு குழந்தைகளின் அலறல் கண்டு மிரண்டு போய் மொட்டையடிக்க உட்காரும் குழந்தை அழ, சவரக்கத்தியின் கூர் மழுங்கிப்போய் மண்டையையைக் கீற ஒரே ரத்தவிளாரகப்போய்...இது என்ன காணிக்கைச் சடங்கு என்று கேட்க வைக்கும் தமிழகம்! எனது சக விஞ்ஞானியின் குழந்தைக்கு இன்னும் ஒரு வயது ஆகவில்லை. மொட்டை போட்டிருந்தார்கள். என்ன வேண்டுதலோ என்று கேட்டு வைத்தேன் :-) இல்லை, கோடை வந்து விட்டது, தலையில் அக்கி வந்து விடாமல் காக்க மொட்டையடித்திருக்கிறோம் என்றார்கள். நம்ம ஊர் வழக்கமும் இப்படித்தான் ஆரம்பித்திருக்கும். ஆனால் போகப்போக அது ஒரு லாபகரமான தொழிலாக வளர்தெடுக்கப்பட்டு, அதில் செண்டிமென்ட் சேர்த்து, 'மொட்டையடிக்காவிடில் சாமி கண்ணைக்குத்தும்' என்று எண்ணுமளவிற்குப் போய் விட்டது. பெரும்பாலும், சிறுவர்களுக்கு முடி திருத்த அழைத்துப்போவது அப்பாவின் கடமையாக இருக்கும். சவரக்கடையில் பீடி நாற்றமும், முரட்டு மீசைப் பெரியர்வர்களும், சாணை பிடிக்கும் கத்தியை சரக், சரக்கென்று தீட்டும் பயங்கரமும் குழந்தைகளை மிரள வைப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் அப்பாமார்களுக்கு ஈதெல்லாம் புரியாது. மற்றவர்களுக்கு முன்னால், வீட்டிலிருப்பதையும் விடக் கடுமையாக நடந்து கொள்வர். சீட்டில் உட்கார முடியாததால், அதன் மீது ஒரு கட்டப்பலகை போட்டு, கால்கள் எதிலும் பாவாமல் அந்தரத்தில் தொங்க, ஒரு அழுக்குப்பிடித்த துணியை உடலெல்லாம் சுற்றும் போது வரும் நாற்றத்தில் குழந்தை அழவில்லையெனில் ஆச்சர்யம்தான். ஆனால், இந்த மிரட்டல்கள், பயமுறுத்தல்கள் இல்லாத மிக சௌகர்யமான கொரியன் சலூனிலும் அன்று ஒரு குழந்தை குய்யோ, முறையோ என்று அழுது கொண்டிருந்தது. அம்மா அருகிலிருந்து ஆறுதல் செய்து கொண்டிருந்தாள். முடிதிருத்தி முடிவதற்குள், முகமெல்லாம் சிவந்து ஏதோ இரும்பு உலையிலிருந்து எடுத்த பாளம் போல் ஆகிவிட்டது குழந்தை. பாவமாக இருந்தது. சவரம் செய்து கொள்வது நிச்சயம் குழந்தைகளுக்கான செயற்பாடல்ல என்று இதனால் முடிவு செய்யலாம்.

அது பெரிய ஆண் வர்கத்திற்குரிய ஒரு செயல். தமிழகத்தில் அன்று திராவிடக்கழக ஆட்சி அமைய இந்த முடிதிருத்தும் நிலையங்கள் காரணமென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். சலூன் என்பது ஒரு சின்ன அரசியல் பட்டறை. காரசாரமாக அரசியல் பேசி, விவாதிக்கப்படும். நிறையப்படங்கள் மாட்டப்பட்டிருக்கும். லெனின், இங்கர்சால், கார்ல்மார்க்ஸ் போன்றவர்களின் தரிசனம் என்னைப்போன்றவர்களுக்க்கு முதன்முதலில் சவரக்கடையில்தான் கிட்டின! பிறகு ஈ.வேரா, அண்ணா...என்று போகும். சவரக்கடையின் ஈர்ப்புகளிலொன்று தினத்தந்தி. நமது தருணத்திற்குக் காத்திருக்கும் போதுகளில் தினத்தந்தி வாசிக்க ஆரம்பித்து சிந்துபாத், லைலா, மூசாக்கிழவன் அறிமுகமாயினர்.

ஆனால், வெளிநாடுகளில் முடிதிருத்திக்கொள்வது முற்றிலும் வேறான அனுபவம். அதை முழுக்க ரசிக்க வேண்டுமெனில் கொரியா வந்துவிட வேண்டுமென்று சொல்வேன். பள, பளவென்று சுத்தமாக, மிக நூதனமாக, மிக நவீனமாக இருக்கின்றன கொரிய சலூன்கள். தொழில்நுட்பம் வளர்ந்து விட்டதால் முடிவெட்டும் திருத்துவான் சத்தம் போடுவதே இல்லை. நம்ம ஊர் திருத்துவான் சத்தத்தில் காதைப் பழுதாக்கிவிடும் (சில நேரம் கவனக்குறைவால் காதில் விழுப்புண் விழும் அபாயமுண்டு என்பது வேறு விஷயம்). இங்கும் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் காத்திருக்கும் போதுகளில் டிவி பாக்கலாம், இரண்டு கணணிகள் இணைய வசதிகளுடன் நம் கவனத்திற்கு காத்திருக்கின்றன. இதெற்கெல்லாம் மேலாக, காத்திருக்கும் நேரத்தில் என்ன சாப்பிடுகிறீர்கள் என்று விமான சேவை போல் ஒரு பட்டியல் கார்டு தருகிறார்கள். ஐஸ்கிரீம், ஐஸ்காபி, டீ, ரெகுலர் காபி, டோ ஸ்ட் என்று நீள்கிறது பட்டியல். சவரக்கடையில் உட்கார்ந்து டோ ஸ்ட் சாப்பிட்ட அனுபவம் கொரியாவில்தான். உலகில் வேறெங்கும் இப்படிக் கவனித்துக் கொள்கிறார்களாவென்று தெரியவில்லை. வரும் குழந்தைகளுக்கு 'போரடித்து' விடக்கூடாது என்று ஒரு பெண் பலூன் ஊதிக்கொண்டிருந்தாள். பெரும்பாலும் இங்கு சலூன்கள் பெண்களாலேயே நடத்தப்படுகின்றன. ஆண்களைக் கவர்வதற்கு இது என்று ஆண் புத்தி சொன்னாலும் அங்கு வரும் 90% வாடிக்கையாளர்கள் பெண்கள்தான். நகம் வெட்டிக்கொள்ள, நகப்பாலிஷ் போட்டுக் கொள்ள, முகவடிவாக்க இப்படிக் கொசுறு வேலைகளுக்கென்று நிறையப்பேர் வருகிறார்கள். ஆனால் பெரும்பாலோர் தங்களது முடியை வண்ண, வண்ணமாக்கிக்கொள்வதற்கே வருகின்றனர். கிளிப்பச்சை, மஞ்சள் என்று முடிநிறத்தைப்பார்க்கும் போது 'பறைவைகள் பலவிதம்' என்று கண்ணதாசனை எது பாட வைத்திருக்கும் என்று யூகிக்க முடிகிறது!

முடிவெட்டுமுன் சுகமாக ஒரு சின்ன ஷாம்பு பாத். தலைக்கு மட்டும்தான் :-) பிறகு முடிவெட்டல். வெட்டியபின் மீண்டும் ஒரு ஷாம்பு. அப்போது கொஞ்சம் மஜாஜ் வேலையுண்டு. இது மிக சுகமானது. இப்படியெல்லாம் வேறெங்கும் செய்வதில்லை. ஜெர்மனியிலும் பெண்கள்தான் முடிவெட்டுகின்றனர். ஆனால் வந்தோமா, போனமாவென்று ஐந்து நிமிடத்தில் முடித்து அனுப்பிவிடுகின்றனர். சேவையென்று அனுபவிக்க வேண்டுமெனில் கொரியா, ஜப்பான் என்று வந்துவிட வேண்டும். நாம் வெறும் வாடிக்கையாளர் மட்டுமல்ல. ஏதோ கலைப்பொருள் போல். ஒரு சிலை போல் நம்மை வைத்து அவர்கள் கவனித்துக் கொள்ளும் அழகு, நம்மை பற்றிய மதிப்பை ஒரு புதிய கோணத்தில் உயர்த்துகிறது.

இத்தனை சௌகர்யமும் பெரியவர்களுக்குத்தான். ஆனால் குழந்தைகள் இதையெல்லாம் கண்டு மிரண்டு விடுகின்றன.

சவரம் என்பது இப்படியான ஒரு நூதனமான தொழிலாக வளந்துவிட்ட காலத்திலும் இந்தியாவில் அது கீழான தொழிலாக மதிக்கப்படுவது ஏன்? தொழிலை வைத்து மக்களைப்பிரிக்கும் வழக்கம் அங்கு ஏன் வந்தது? தொழில் சாதீயத்திற்கு வித்தாக ஏன் மாறிப்போனது? என் தாத்தா காலத்தில் சவரத்தொழிலாளி வீட்டிற்கு வந்து சவரம் செய்வார். எல்லா இடங்களிலும் கூச்சமில்லாமல் சவரம் செய்யச்சொல்வார்கள். அப்பா காலத்தில் முடிதிருத்தும் நிலையங்கள் மெல்ல வர ஆரம்பித்தன். என் காலத்தில் சலூன் ஒரு அரசியல் பட்டறையாகிப்போனது. இப்போது, சென்னை போன்ற நகரங்களில் அது நூதனத்தொழிலாக மாறிவருகிறது. பாரதிக்கு தொழில் பேதம் தெரியாது. எனவே ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் இன்றிருந்தால் 'சவரம் பழகு' என்று சொல்லியிருப்பான். அதுவொரு அதிநவீனத்தொழில் இன்று!

முதல் வெளியீடு: சமாச்சார்-தமிழ்

enRumuLa thamiz - the eternal language

'என்றுமுள தமிழ்' எனும் தலைப்பில் சிவகாசி 'பாரதி இலக்கிய சங்கத்தில்' நான் பேசிய உரை பற்றிய விமர்சனம் மிகச்சரியாக உலகத்தமிழ் இலக்கிய இ-தழில் திரு புதுக்கோட்டை நடராஜன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. வாசித்துப்பயன் பெறுங்கள் :-)

ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பார்கள். எனவே சுடச்சுட இல்லாவிடினும் கொஞ்சம் ஆறிய நிலையிலாவது, அப்போது எடுத்த படங்களைத்தொகுத்துள்ளேன். பார்த்துப் பரவசமடையுங்கள் :-))

இந்தப் பாழாப்போன கொரியர்கள் Blogspot-ஐ முற்றிலும் தடுத்துவிட்டார்கள். உங்கள் கடிதங்கள் பார்வைக்கு வந்தாலும் பதில் எழுதமுடியவில்லை. என்ன சுதந்திரம்? இணையம் தந்த சுதந்திரம்! அடச்சீ! (வெறுப்போ வெறுப்பு)

Tamil Heritage Foundation joins Digital Library of India

கடல் சேரும் நதி

இந்தியக் குடியரசுத்தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் கனவுத்திட்டமாக "இந்திய இலக்க நூலகம்" (Digital Library of India) உருவாகியுள்ளது. இதன் முகவரி http://www.dli.ernet.in/ என்பது.

இதை இந்தியாவின் பிரதான அறிவியல் நிறுவனமான இந்திய அறிவியல் நிறுவனம் (Indian Institute of Science) தனது Super Computer Facility-யின் மூலமாக கவனித்து வருகிறது.

இங்கு, அதாவது அவர்களின் சேவியில் (server) தமிழ் மரபு அறக்கடளைக்கு இடம் கிடைத்துள்ளது. இனிமேல் நாம் இடம் (server space) குறித்து கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. முதற்படியாக 15 கிகாபைட் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நமது சேர்ப்பிற்கு ஏற்றவாறு இந்த இட ஒதுக்கீடு விரியும்!

நதிகள் இறுதியில் கடல் சேர வேண்டும். கன்று பசுவிடம் வந்து சேர வேண்டும். தாயிடம் வந்த சேயின் உணர்வு வருகிறது. இப்போது.

இனிமேல் நமது பெரிய சேகரங்கள் கீழ்க்காணும் முகவரியில் காணக்கிடைக்கும்

http://bharani.dli.ernet.in/thf/index.html

பல அரிய சுவடிகள் இடநெருக்கடியால் பொதுமக்கள் பார்வைக்கு இதுவரை வைக்கப்படாமல் இருந்தன. அவை இனி வெளிப்படும்.

இன்று காலையில் ஜெர்மனியிலிருந்துகொண்டு இப்பக்கத்தை சோதித்த போது 98% சதவிகிதம் சரியாக வந்தது. சில இணைப்புகள் வேலை செய்யவில்லை. அவை சரிசெய்யப்படும்.

இத்தளத்தை யுனிகொட் தமிழில் அமைத்துள்ளேன். வார்ப்பு இறக்கமின்றி தெரியவேண்டும். முரசு அஞ்சல் பின்னால் ஓடினாலும் நன்றாக வரும். விண்டோ ஸ் எக்ஸ்பியில் சரியாக வரும். பிற கணினித்தளங்களில் எப்படி வருகிறது என்று சொல்லுங்கள்.

சான்றோர் வாழ்த்துங்கள். இது தமிழ் மரபுக் கட்டளைக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய மரியாதை.

something to munch...

பேட்டி காண்க...

நீங்கள் வைகைறையில் எழுபவரா? ஜெயா டிவி பார்ப்பவரா? அப்படியெனில் வருகின்ற திங்கள் (ஆகஸ்டு 02) காலையில் காலைமலர் பாருங்கள்! பார்த்து எழுதுங்கள். நான் பார்க்கமுடியாது!

வருகின்ற வாரம் குமுதம் வாசியுங்கள். நான் வரலாம்!

இந்த வாரக்கடைசி தினமணிக்கதிர் 'நோட்டம்' வாசியுங்கள். சுகதேவ் பேட்டி எடுத்திருக்கிறார்.

India visit

இந்தியச் சூறாவளிச் சுற்றுப்பயணம் ஒருவழியாக முடிந்தது. தாய்லாந்து பட்டையாவில்தான் மூச்சுவிட்டேன்! அவ்வளவு வேலை

சிவகாசி பாரதி இலக்கிய மன்றத்தில் பேச்சு. கவிஞர் திலகபாமா அழைப்பு.

தமிழ்மரபு அறக்கட்டளை திறப்பு விழா. திசைகள் இயக்கம் அமைத்திருந்தது.

எனது இரண்டு புத்தகங்கள் வெளியீடு. நானும், மதி நிலையமும் என் குடும்பத்தின் உதவியுடன் ஏற்பாடு செய்திருந்தோம்.

பார்த்து மகிழ்ந்த நட்புகள்: பத்ரி, பா.ராகவன், மாலன், திலகபாமா, வைகைச் செல்வி, மதுமிதா (3 கவிஞர்கள்), ஸ்ரீரங்கம் மோகனரங்கன், சா.கந்தசாமி, வைதீஸ்வரன், இ.பா., வெங்கடேஷ், நரசய்யா, கொடுமுடியார், ஏ.கே.ஸ்ரீநிவாசன், காலச்சுவடு கண்ணன், ஐகராஸ் பிரகாஷ், வெளி ரங்கராஜன், ரவி சுப்பிரமணியன், சிபிச் செல்வன், செந்தில்நாதன்.

95 வயதில் முதுகெலும்பு சிகிச்சை செய்துகொண்டு, கல,கலப்பாக பேசி புத்தக வெளியீடு குறித்து அக்கரையுடன் விசாரித்த சிட்டி ஒரு அதிசயம்!

வைகை நதியில் (நீரில்லாத) மீண்டும் கால் வைத்தேன். அழகியமீனாளை (சௌந்தர்யநாயகி)க் கண்டு தரிசித்தேன் (திருப்புவனம்). திருவாதவூர், திருமோகூர், கூடல் அழகர், மீனாட்சியும் உண்டு.

தினமணி, குமுதம் பேட்டி. ஜெயா டிவி பேட்டி.

வைகைக்கரைக் காற்றே தொடருக்கான சில போட்டோ க்கள் கிடைத்தன. மஞ்சள் தாத்தா உட்பட!

Book release

புத்தக வெளியீட்டு விழா!

ஜெர்மனி நா.கண்ணனின் இரண்டு நூற்கள்

நிழல்வெளி மாந்தர் (சிறுகதைத் தொகுப்பு)

விலை போகும் நினைவுகள் (குறுநாவல் தொகுப்பு)

இடம்: பாரதீய வித்யா பவன் (மேல் மாடி, ஏசி ஹால்)
நாள்: 26.07.2004, திங்கள்
நேரம்: மாலை 5:30 - 8-30 வரை

கலந்து கொண்டு சிறப்பிப்போர்:

பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி
கடலோடி நரசய்யா
கவிஞர் வைதீஸ்வரன்
திசைகள் மாலன்
நேசமுடன் வெங்கடேஷ்
தமிழ் மரபு அறக்கட்டளை ஆண்டோ  பீட்டர்
மெய்யப்பன், மதி நிலையம்

மற்றும்

நா.ஸ்ரீதர், ராஜ் டிவி (நிகழ்ச்சி தொகுப்பு)
திருப்புவனம் சகோதரிகள்: நா.செல்லம்மாள், நா.சௌந்திரம் (தமிழ் வாழ்த்துப்பாடல்)

பதிப்பாளர்: மதி நிலையம், தி.நகர், சென்னை

உங்களை அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்வு கொள்ளும்
நா.கண்ணன்

Information, what?

உங்களுக்கு ஒரு தகவல் சொல்லவேணும்......

பல வருடங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் ஒரு பாட்டியிருந்தாள். அவளைக் 'கரிப்பாட்டி' என்று சிறுவர்கள் அழைத்து வந்தனர். அட்டக்கரியாக இருந்ததால் அப்படியொரு பேர் என்று எண்ணவேண்டாம். பெரும்பாலும் சிறுவர்களுக்கும் பாட்டிகளுக்கும் ஒத்துக்கொள்ளாது. வயது ஆக, ஆக பெரியவர்களுக்குக் குழந்தைத்தனம் வருவது கண்கூடு. அவர்கள் சிறுவர்/சிறுமிகளைத் தனக்குப் போட்டியாகக் கருதி கரிச்சுக்கொட்டுவதுண்டு. அப்படிக் கரிச்சுக்கொட்டியதால் இந்தக் கிழவிக்கு கரிப்பாட்டி என்ற பெயர் வந்தது என்றும் எண்ணவேண்டாம். இந்தப்பெயர்க் காரணத்திற்கான தகவலைச் சொன்னால் சிரிப்பீர்கள். அடடா! அதுவும் தகவல் பற்றியதுதான்!

அந்தக்காலத்தில் மின்சாரசக்தி இப்போது போல் பரவலாக்கப்படவில்லை. வெறும் லாந்தர் விளக்கை வைத்து காலமோட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு மின்சாரம் பெரிய செலவாகப்பட்டது. எனவே செலவைக்குறைக்க பெரும்பாலான வீடுகளில் ஜீரோ வாட் பல்பையே உபயோகித்து வந்தனர். பல நேரங்களில் மின்சாரம் 'லோ வோல்டேஜ்' காரணமாக மிகக்குறைவாக வரும். அப்போது இந்த ஜீரோ வாட் பல்பு சப்-ஜீரோ லெவலுக்குப் போய்விடும்! லாந்தர் விளக்கு வெளிச்சமாகப்படும் அப்போது என்றால் பாருங்களேன். இப்போது போல் மீதேன் வாயு (எரிவாயு) கிடையாது. பெரும்பாலான வீடுகளில் விறகடுப்புதான். பச்சை விறகாகக் கடைக்காரன் கொடுத்துவிட்டால், வீட்டுக்காரியின் கண்கள் பழுது! அவ்வளவு புகை வரும். இப்புகையில் புற்றுநோய் வேதிமங்கள் உருவாவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. அந்தக்காலத்தில் இளமையிலேயே பல பெண்கள் இறந்துவிடுவதற்கு இது போன்ற சொல்லப்படாத காரணங்கள் பலவுண்டு.

பச்சை விறகை பதமாக எரித்தெடுத்தால் அடுப்புக்கரி கிடைக்கும். அதை வைத்து சமையல் செய்யும் குடும்பங்களுமுண்டு. சமையல் முடிந்தபின் சிக்கனமாக அடுப்புக்கரியை தண்ணீர்விட்டு அணைத்துவிட்டு. மீண்டும் வெயிலில் அவற்றை உலர்த்தி (காயப்போட்டு) அடுத்த வேளை சமையலுக்குப் பயன்படுத்துவதுண்டு. இப்படித்தான் நம்ம 'கரிப்பாட்டி' அடுப்புக்கரியை உலர்த்திக் கொண்டிருந்தாள். வேடிக்கை குணமுள்ள ஒரு சிறுவன் பாட்டியிடம் போய், "பாட்டி! பாட்டி! இந்தக்கரியை எங்கே வாங்குகிறீர்கள்? கல்லு, கல்லாய் அழகாய் இருக்கிறதே? பலமுறை பயன்படுத்தலாம் போலுள்ளதே!" என்று ஒரு பிட்டைப் போட்டு வைத்தான். பாட்டிகளுக்குக் குழந்தைக்குணமுண்டு என்று முன்பே சொல்லிவிட்டேன். பாட்டி உடனே சுதாரித்துக்கொண்டாள். 'அடடா! இந்தத்தகவல் ரொம்ப முக்கியமானதாகப்படுகிறதே! இதை ஏன் இவர்களுக்குச் சொல்ல வேண்டும்?" என்று யோசிக்க ஆரம்பித்தாள். சிறுவர்களுக்குப் பொறுமை கிடையாது. விரைவான பதிலை எதிர்பார்த்தனர். பாட்டி ஒருவழியாக இந்த முக்கியமான தகவலை சொல்வதில்லை என முடிவெடுத்து, "ஓ! அதுவா! இந்தக்கரி ரொம்ப உசத்தியான கரியாக்கும். பத்துப்பதினோரு முறை கூட உபயோகிக்கலாம்" என்றாள். பசங்களில் ஒருவன், "அதுதான் தெரியுதே பாட்டி! எங்கே வாங்கினீங்க?" என்றான் பொறுமையில்லாமல். "அதெல்லாம் குழந்தைகளிடம் சொல்வதற்கில்லை. ஒரு ஆள் மூலமாக வாங்கியது" என்று அந்த சம்பாஷணையை முடித்துவிட்டாள் பாட்டி. 'தகவல்' என்பது ரொம்பப் பெரிய விஷயமாக இன்றளவும் கிராமங்களில் பாவிக்கப்படுகிறது. இந்த 'ஊழல்' என்ற சமாச்சாரத்திற்கு ஆதி-வித்து இந்தத்தகவல் பரிவர்த்தணைதான். "ஐயா! கலெக்டர் எப்ப வருவாரு?" இது கிராமத்தான் கேள்வி. கலெக்டர் உள்ளேதான் இருப்பார். ஆனால் பதில், "அவர் வர ஒரு வாரமாகும். என்ன எதாவது காரியமாகணுமா? வேணுமினாச் சொல்லு, ஹெட்கிளார்க்கிட்ட சொல்லறேன். என்ன கொஞ்சம் செலவாகும்" இப்படிப்போகும் தகவல் பரிவர்த்தணை! இப்படியான உலகில் ஒரு அல்பக்கரி பற்றிய சேதி கூட முக்கியமாகப்படுவது ஆச்சர்யமில்லை!

தகவல் முக்கியமானதுதான். இல்லையென்று சொல்வதற்கில்லை. போபால் விபத்தின் போது மருத்துவர்களுக்கு விஷவாயு பற்றிய சரியான தகவல் கிடைக்கவில்லை. அதனால் வந்து குமியும் நோயாளிகளை எப்படி குணப்படுத்துவது என்று தெரியவில்லை. காரணம் அவ்வளவு பெரிய தொழிற்சாலையில் உருவாக்கப்படும் வேதிமம் பற்றிய முக்கியமான விஷத்தன்மைத் தகவல் அமெரிக்க தொழிலதிபர்களால் கொடுக்கப்படவில்லை. பின்னால் தெரியவந்தது, ஈரத்துணியை முகத்தில் போட்டுக்கொண்டால் போதும் அந்த விஷவாயு முறிந்துவிடுமென்று! இந்த முக்கியமான வேதிமத்தகவல் தெரியாததால் எந்தனை உயிர்கள் அன்று பலியாகின. சரித்திரத்தில் இது போல் பல சம்பவங்கள் உண்டு.

கடந்த தசாம்சத்தில் இந்த மனப்பான்மை வெகுவாக உடைபட்டிருக்கிறது. இணையம் அதை சாதித்து இருக்கிறது. எந்தத்தகவல் வேண்டுமெனினும் அதைக் கூகிளிடம் கேட்டால் தேடி எடுத்துத்தந்துவிடுகிறது. எவ்வளவு கோடிக்கணக்கான தரவுகள் இணையத்தில் இந்தக்குறைந்த காலக்கட்டத்தில் ஆவணமாக்கப்பட்டுள்ளன என்று நினைத்தால் ஆச்சர்யமாகமுள்ளது. மருத்துவருக்கே தெரியாத தகவல்களை கொஞ்சம் மெனக்கெட்டுத்தேடினால் எடுத்துவிடலாம். இவ்வளவிற்கும் இந்தத் தேடு இயந்திரத்தொழில் நுட்பமென்பது இன்னும் முழுமையுறவில்லை. கிட்டங்கியில் கிடப்பதில் 30%தான் எடுக்கமுடிகிறதாம். அப்படியெனில் பாருங்களேன்! தகவல் என்னும் போது அலுப்புத் தட்டுமளவு தரவுகள் உள்ளே வந்து விடுகின்றன. இதனால் ஒன்றைத் தேடப் போய் வேறு ஒரு தகவல் நம் கவனத்தை இழுத்துவிட தேட வந்ததை விட்டு வேறு வழியில் போய்விடும் அபாயமுண்டு. ஒருவகையில் இதுவொரு 'மாயமான் வேட்டை' போல் ஆகிவிடுவதுண்டு. காரணம், சிந்தனை என்பது வாழ்வின் அத்தனை இயக்கங்களிலும் மிகக்குறைவாக சக்தி எடுத்துக்கொள்ளும் செயற்பாடாகும். எனவே, சிந்திப்பதையெல்லாம் பதிவு செய்யும் போது கிட்டங்கி நிரம்பி விடுகிறது! இதனால் மானுடத்திற்கு என்ன பிரயோசனம்? என்ற கேள்வி வருகிறது! வண்ணநிலவன் தனக்கேயுரிய எள்ளலுடன் இப்போது வால்மீகி இராமாயணம் எழுதாவிட்டால் என்ன குறைந்துவிடப்போகிறது என்று எழுதியிருந்தார். வாழ்வு என்ற செயற்பாடு நடக்க இந்தத்தகவல் என்ற பொதிமூட்டைத் தேவைப்படுகிறது. வாழ்வில் அர்த்தமுள்ள பொழுதுகள் மிகச்சில கணங்களே! மற்ற நேரமெல்லாம் பொழுதைப் 'போக்க' வேண்டிய தருணங்களே. தொழில்நுட்பம் வளர, வளர, இப்படிப்பொழுதைக் 'கழிக்கும்' நேரங்கள் அதிகமாகப்போவதாக ஒரு கணிப்பு சொல்கிறது. அப்போது வெறும் வெட்டிப்பேச்சு அதிகமாகும். கேளிக்கைகள் அதிகமாகும். வம்பு தும்பு அதிகமாகும்.

நோபல் பரிசு பெற்ற ஒரு கோட்பாடு, பிரபஞ்சமே தகவல் என்கிறது. இயக்கம் என்பது தகவல் பரிமாற்றமே. உயிர்களின் தோற்றத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் முதலில் தோன்றியது தகவலடங்கிய உயிர்த்திரிகளே என்கிறார்கள். இத்திரிகளுளடங்கிய தகவலை வெளிக்கொணரும் போது வாழ்வு மிளிர்கிறது என்கிறார்கள். வாழ்வு என்ற இயக்கமே சேதிப்பரிமாற்றம்தான். இச்சேதிகள் வேதிமமூலக்கூறுகள் வழியாக உடலெங்கும் பாய்ந்த வண்ணமுள்ளன. ஐப்பொறிகள் தரும் தகவல்களை மூளை பதிவு செய்து, வடிகட்டி, பொருளுணர்ந்து, கட்டளை பிறப்பித்து, காரியத்தை நடத்துகிறது. மாபல்லிகளான டைனோசார்களின் உடல் ஒரு கட்டத்தில் மிக நீண்டு போய்விட, உடலின் பின்பகுதியிலிருந்து வரும் தகவல்களை பராமரிக்க பிருஷ்டத்தின் அருகில் இன்னொரு மூளை உருவானதாம். இரண்டு மூளையை வைத்துக்கொண்டும் பிழைக்கத்தெரியாமல் இவ்வுயிரினங்கள் அழிந்து போயின என்பது வேறுவிஷயம்! நமது வாழ்வில் மூன்றில் இரண்டு பங்கு நேரத்தை நாம் உறக்கத்தில் கழிக்கிறோம். ஏன் என்று யாராவது கேட்டிருக்கிறார்களா? மூளையினால் ஐம்பொறிகள் தரும் தகவல்களை முழுக்க பகல் நேரத்தில் கவனிக்க முடியாததால் தூக்கத்தை உருவாக்கி 'தபால்காரன்' போல் வேண்டிய தகவல், வேண்டாத தகவல் என்று இரவில்தான் பிரித்துப்போடுகிறதாம் மூளை! இப்படிப்போடும்போது விழும் துக்கடாக்களெல்லாம் சேர்ந்து கனவு என்ற ஒரு இயக்கத்தை நடத்துவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பரந்தாமனின் நாபிக்கமலத்தில் பிரமன் உருவானவுடன் உலகை எப்படிப்படைப்பது? என்று கேட்டானாம். கிடக்கும் சேதியை கிரகித்து செயல்படு என்றாராம் பரந்தாமன். சேதி எங்கும் பரந்து கிடக்கிறது. அதிலிருந்து ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். கடைசியில் எல்லாம் வெறும் சேதிப்பரிமாற்றம்தான். வண்ணநிலவன் ஒத்துக்கொள்வார் என்று எண்ணுகிறேன் :-)

http://www.samachar.com/tamil/features/050704-naakannan.html

E-interview in Nilacharal

அன்புள்ள நண்பர்களே:

சமீபத்திய நிலாச்சாரல் இ-தழில் எனது இ-பேட்டி வந்திருக்கிறது. முடிந்தால் ஒரு நடை போய்விட்டு வாருங்கள். நிலாச்சாரல் இலண்டனிலிருந்து வெளிவரும் தமிழ் இதழ்.

http://www.nilacharal.com

Euro 2004

சில பல..

பல வாரங்களாக எழுத முடியவில்லை. ஆசிய-பசிபிக் நாடுகளின் கூட்டுப்பட்டறையில் நேரம் போய்விட்டது. அது ஒரு வித்தியாசமான அனுபவம். அதையெல்லாம் சொல்ல வேண்டும். அடுத்து, இந்த ப்ளாக்ஸ்பாட் கொரியாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதனால் நான் என்ன எழுதுகிறேன் என்பதை உடனே போய் பார்க்க முடியவில்லை. எனது வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டம் தந்தால் அதற்குப் பதில் தரமுடியவில்லை. பிராக்சி சேவியில் போனால் பார்க்கமுடிகிறது (இதுவும் மெக்கிண்டாஷில்தான் முடிகிறது) ஆனால் பதிலளிக்க முடியவில்லை. நல்லவேளையாக ரெட்டிஃப் தடை செய்யப்படவில்லை. எனது பழைய குடிலை அழிக்காமல் வைத்திருப்பதற்கு இப்படியொரு புதிய காரணம் கிடைக்குமென்று நினைக்கவில்லை.

அடுத்த நான்கு வாரங்கள் 'வீடு நோக்கி' பயணம். சகோதரிகளை, நண்பர்களை, தெய்வங்களைப் பார்த்து வர ஆசை. கடைசி 8 நாட்கள் ஜெர்மனியில் இருப்பேன்.

எனவே இன்னும் கொஞ்ச காலத்திற்கு வந்து பார்த்துவிட்டு வெறுத்துப்போகும் நண்பர்கள் அதை இன்னும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுகோள் :-)

கால்பந்தாட்டம் முடிந்துவிட்டது. கிரீஸ் கிண்ணத்தை தட்டிச் செல்லுமென்று யாரும் எதிர்பார்க்கவில்லை. போர்ச்சுக்கல் எப்படியும் விசிறிகளின் ஆதரவில் வெற்றிபெற்றுவிடும் என்ற கணிப்பும் தோற்றுப்போனது. கடைசி வரை வந்த செக், நெதர்லாந்து அணிகள்தான் உண்மையில் அபாரமாக ஆடின. லத்துவியா ஜெர்மனியை அடித்துப்போட்டது, யானைக்கும் அடி சருக்கும் என்பதைக்காட்டுகிறது! தாங்கள் வெல்லவில்லை என்று தெரிந்தவுடன் தோடுடைய செவியனான ரொனால்டோ அழுதது பரிதாபமாக இருந்தது. போர்த்துக்கீசிய அமைச்சர் வானத்தை, வானத்தைப் பார்த்துக்கொண்டு (பரலோகத்திலிருக்கும் பிதாவே!) குலுங்கிக்குலுங்கி அழுதது, கால்பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல என்பதைக்காட்டியது. சிஃபி டாட் காம் இந்தப் பூமிப்பந்தில் நடக்கும் மிக முக்கிய நிகழ்வு என்று இந்தப்போட்டியை வர்ணித்தது மிகச்சரியே! பெண்களின் இடை, தொடை, முதுகு, முகம் போன்றவையும் விளப்பரப்பலகையே என்பதை இந்நிகழ்வு காட்டியது.

Moments of Creation

சீர்மையில் இல்லை ஆக்க சக்தி!

படைப்பின் தருணங்களை நெருங்கிப்பார்த்து உரத்துச் சொல்ல முடியுமாவென்று தெரியவில்லை.

நெருங்கிப்பார்க்கும் போதே அதே வேறொன்றாக மாறி இருக்கிறது. ஒரே ஆற்றில் இருமுறை கால் வைக்க முடியாது என்பது போல்! இந்தப் பிரபஞ்சம் ஒரு ஒழுங்கில் இருப்பது போல் மேலோட்டமாகப் பார்த்தாலும் அதன் ஒழுங்கீனமே ஆக்கத்திற்கு வித்து என்பது தெரியவரும். தினமும்தான் கிழக்கே உதிக்கிறது. தினமும்தான் தூங்கி விழிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு விடியலும் வித்தியாசமாகவே இருக்கிறது. காலம் தோன்றிய கணத்திலிருந்து இன்று வரை ஒரு பொழுது போல் ஒரு பொழுது இருந்ததில்லை. அதனால்தான் இத்தனை வசீகரம். அண்டத்தில் பூமி ஒரு மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் சீராக சுற்றிவருவது போல் தோன்றுகிறது. ஆனால், உண்மையில் சீராக சுற்றுவது இல்லை. கொஞ்சம் நொண்டி அடிக்கிறது. அதுவே பருவ காலங்கள் தோன்றக்காரணமாக அமைந்து விடுகிறது. மாறும் குணாதிசயம் கொண்ட மனிதர்களை ஏப்ரல் மாதத்து பருவ நிலைக்கு ஒப்புமையாக ஜெர்மனியில் சொல்வார்கள். காரணம்? காலையில் பொழுது பொல, பொலவென்று புலரும், ஏதோ கோடை வந்து விட்டது போல. குளித்து பசியாறிவிட்டு வேலைக்குப் போகக் கிளம்பும் போது முகத்திலடிக்கும் பனி, குளிர்காலம் மீண்டும் வந்து விட்டது போல். மதியச் சாப்பாட்டிற்கு வரும் போது மழை பெய்து கொண்டிருக்கும். ஒரே நாளில், நான்கு பருவமும் மாறி, மாறி வரும் விநோதம் ஏப்ரலில் நடக்கும்.

தமிழ்ப் படைப்பாளிகளில் பலர் இந்த மாதிரிதான் என்று தோன்றுகிறது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனை பேச அழைத்திருந்தோம். தமிழ்த்துறை சார்ந்த மாணவர்கள் பெரிதாக 'சிறுகதை மன்னன் ஜெயகாந்தன்! வாழ்க!' என்று முகப்பில் எழுதி தொங்கவிட்டிருந்தனர். முரட்டு மீசை ஜெயகாந்தன் வந்தார். பேசுவதற்கு முன் மேடைக்குப்பின்புறமாக கொஞ்ச நேரம் போய் வந்தார். கோடையிடி போல் பேச ஆரம்பித்தார். 'எவன் என்னை சிறுகதை மன்னன் என்று இங்கு சொல்வது?' என்பதுவே அவரது முதல் கேள்வி. எல்லோரும் ஆடிப்போய் விட்டோ ம்! 'நான் என்னை சிறுகதைச் சக்கிரவர்த்தி என்று எண்ணிக்கொண்டிருக்கும் போது இப்படிக் குறுநில மன்னனாக்கி கேவலப்படுத்திவிட்டீர்களே' என்று நெத்தியடியாக அடித்துவிட்டார். இது சகஜமென ஜெயகாந்தனுடன் நெருங்கியவர்கள் சொல்லலாம். அவரிடம் எப்போதும் ஒரு கொதிநிலை இருக்கும். அதுவே அவரது ஆக்கத்திற்குக் காரணம். சீராக இருக்கும் மனோநிலையை மாற்ற மருந்து போடுவோர் உண்டு. ஹிப்பி கலாச்சாரம் உச்சத்தில் இருந்த போது அவர்களை 'மலர் மழலைகள்' (flower children) என்று சொல்வர். மரிஜுவானா ஒரு பூ என்று உணர்க. ஜெயகாந்தனுக்கும் இந்தப்பழக்கமுண்டு. அதுதான் பேசுமுன் மேடைக்குப்பின்னே நடந்தது. பாரதி பக்தரான அவரைக் கேட்டால் 'பாரதி செய்தான் அதனால் நான் செய்கிறேன்' என்று சொல்லிவிடுவார்.

பாரதி ஒரு கொதி நிலை படைப்பாளி என்பது உலகமறிந்தது. அது ஏழ்மையினால் வந்ததா? ஜெயகாந்தன் மதுரையில் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய படைப்பிலக்கியம் பின்னால் சென்னை வந்து வசதியாக வாழ்ந்த காலத்தில் சமனப்பட்டு போய்விட்டதாக ஒரு தொன்மம் இங்கு உண்டு. வறுமைக்கும் புலமைக்கும் உள்ள தொடர்பு ஆக்கம் சம்மந்தப்பட்டதோ? புலவர்களுக்கு நன்றாக சாப்பாடு போட்டு அரசவையில் உட்கார்த்தி வைத்தால் 'நாராய், நாராய் செங்கால் நாராய்' என்று பாடாமல் கொக்கோக சாஸ்திரம் பாடிக்கொண்டிருப்பார்கள் போலும். எட்டயபுர அரசவையில் புலவர்கள் இப்படி இருப்பது கண்டுதானே பாரதி வெறுத்துப்போய் வெளியேறினான்! புத்திலக்கியம் தோன்ற 'சீர்மை' அவசியமில்லை 'சீர்கேடுதான்' முக்கியம் என்பது அபத்தமாகப் பட்டாலும் உண்மை. பிரபஞ்சத்தில் பூமிப்பந்து எப்போதும் ஒரு அதிர்வில் இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். இந்த அதிர்வு சூரியனிடமிருந்து வரலாம், சந்திரனிடமிருந்து வரலாம், பிற கோள்களிடமிருந்து வரலாம். ஏன் பூமியில் நாம் செய்யும் பாரிய மாற்றங்களினால் கூட வரலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது எவ்வளவு அழகாக படைப்பிலக்கியத்திற்கு பொருந்தி வருகிறது!

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் சமயவாழ்வு என்பது இந்த கச்சாத்திலிருந்து விடுபட்டு ஒரு நிலையான மனப்போக்கில் வாழும் வாழ்வென்று. ஆனால் அது உண்மையல்ல. நாயக-நாயகி பாவம் என்னும் இலக்கியப்பாதை ஒரு கொதிநிலையில் உருவாவதே! "நாணியினியோர் கருமமில்லை, நாலயலாரும் அறிந்தொழிந்தார்" என்று சொல்லி "தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத் தனிவழி போயினாள்" என்ற பழி வருமுன் "நீரென்னைக் காக்கவேண்டில் ஆய்பாடிக்கேயென்னை உய்த்திடுமின்" என்று பாடுகிறாள் ஆண்டாள். அவளது கோபம், தாபம் எல்லாம் இலக்கியமாக வந்து விழுந்திருக்கின்றன. "கொங்கைத் தலமிவை நோக்கிக்காணீர்? செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்துச் சிறுமானிடரைக் காணின் நாணும்!" என்று வீரபாண்டியக்கட்டபொம்மன் சிவாஜி போல் "வெட்கம்! வெட்கம்" என்று கர்ஜிக்கிறாள். இப்பாடல்களை நாம் சாற்றுமுறையாக கோயில்களில் சேவித்துக் கொண்டிருக்கிறோம். நம்மாழ்வார் இதைவிடக் கொதிநிலையில் இருந்திருக்கிறார். ஒரு பிரவச்சனத்தில் கேட்டேன். 'பரம வைஷ்ணவரான நம்மாழ்வார் ஏன் அவ்வப்போது சிவனை ஸ்மரணை செய்கிறார் என்று கேட்டால் அதற்குக்காரணமுண்டு. சிவன் சம்ஸ்காரம் செய்பவன். அவனை வழிபட்டால் சீக்கிரம் உயிர் போய்விடும். திருமாலின் வரவிற்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு பொழுதும் நரகம் போலுள்ளது. அதற்கு மரணம் என்பது எவ்வளவோ தேவலை! என்று நம்மாழ்வாருக்கு தோன்றியிருக்க வேண்டும். அதனாலேயே அவர் சிவனை வழிபட்டிருக்கிறார்" என்று போனது வியாக்கியானம். உண்மைதான்! இந்த தியாகராஜருக்கு என்ன வந்தது? அந்தக்காலத்தில் கட்டுக்கடங்கிய மனைவி, செட்டான குடும்பம், பிராமணராகப் பிறந்துவிட்டதால் சமூக அந்தஸ்து. இப்படி சீராக வாழ்வதற்கான எல்லாம் அமையப்பெற்ற பின்னும் அவர் தவிக்கும் தவிப்பைப் பார்த்தால் நமக்குக் கண்ணீர் வருகிறது? எது அவரை அந்தப்பாடு படுத்தியது? அந்தப்பாடு இல்லாவிடில் இத்தனை பாட்டுக்களும் வந்திருக்காதோ? இத்தனை பாவம்! இத்தனை உருக்கம்! காலத்தை வெல்லும் மெட்டு! மொழித்தடைகளைக் களையும் பக்தி. இத்தனைக்கும் காரணம் உள்ளத்தின் குறைதானோ?

தியாகராஜரைவிட உசத்தியான வாழ்வு குலசேகர மன்னனுக்கு. ஆனால் அவருக்கே தெரிந்திருக்கிறது தனது கிறுக்குத்தனம். அதனால் சொல்கிறார், "பேயரேயெனக்கியாவரும், யானுமோர் பேயனேயெவர்க்கும் இது பேசியென்?" என்று. பேய் பிடித்தது போலிருக்கும் ஒரு கொதிநிலை. அதுவே தமிழ் ஆன்மீகம் சுட்டும் ஆக்கநிலை.

கல்யாணமான அடுத்தநாள் பிச்சமூர்த்தி ரமணமகரிஷி ஆஸ்மரத்திற்குப் போய் 'சந்நியாசம்' கேட்டாராம். வாசித்து இருக்கிறேன். தஞ்சைப்பிரகாஷை நேரே பார்த்த போது இதுதான் கேட்டேன், 'ஏன் இத்தனை வன்முறை உங்கள் எழுத்தில்?'. வன்முறையான சமூகத்தைக் கண்டு கொதிக்கும் போது இலக்கியம் பிறக்கிறது. அதுவே படைப்பாளனின் நெஞ்சுக்கு நீதி போலும்!

தூரத்துப்பச்சைகள் கண்ணுக்குக் குளிர்ச்சிதான். ஆனால் கிட்ட வந்து பார்க்கும் போதுதான் வண்டு குடையும் குடைச்சல் கேட்கும். அந்தக்குடைச்சலை வைத்து மெட்டுப்போடுவதுதான் புத்திலக்கியம் என்று தோன்றுகிறது.

Number enslaves letter

±ñ¸ÙìÌ «Ê¨Á¡Ìõ ±ØòÐ

¾Á¢ú þÄ츢Âò¾¢ý Á¢¸ Ó츢 ÜÚ ÁÉ¢¾ þú¨É¨Â ÅÇ÷ôÀÐ. º¸ ÁÉ¢¾ý Á£Ð, À¢È ƒ£Åý¸û Á£Ð ÀÃ¢× ¦¸¡ûÇî ¦ºöÅÐ. Å¡úÅ¢ø À¢¼À¼¡Áø ¿Ø×õ ÜÚ¸¨Ç ¯ýÉ¢ôÀ¡ö ¸ÅÉ¢ôÀÐ. þôÀÊô ÀÄ ÅÆ¢¸Ç¢ø ¾Á¢Æ¨É §ÁõÀÎòÐõ ´Õ ¦ºÂ¨Ä ¾Á¢ú þÄ츢Âõ ¦ºöÐ ÅÕ¸¢ÈÐ. þø¨Ä¦ÂÉ¢ø ÀÄ áüÈ¡ñθÙìÌ ÓýÀ¢Õó§¾ þÄ츢Âò¨¾ò ¦¾¡¨¸ôÀÎòÐõ ´Õ ¦ºÂøÀ¡Î þõÁñ½¢ø ¿¼ó¾¢Õ측Ð. Á¢¸ô ¦À¡Õû ¿¢¨Èóо¡ý "¬üÚôÀ¨¼¸û" ¾Á¢ú þÄ츢Âò¾¢ø ¯ÕÅ¡¸¢ÔûÇÉ. ¸¼×û À¡¾¢, Á¢Õ¸õ À¡¾¢ì ¸ÄóÐûÇ ÁÉ¢¾¨É ¬üÚôÀÎò¾ þÄ츢Âõ ¯¾Å¢ ¦ºö¸¢ÈÐ. ú¢¸Á½¢ Ê.§¸.º¢Ô¼ý ¦ºÄŢ𼠦À¡Øи¨Ç ¸¢.þჿ¡Ã¡Â½ý ±ØÐõ §À¡Ð ¿ÁìÌõ ÌüÈ¡Äî º¡ÈÄ¢ø «Å÷¸Ù¼ý ¯ð¸¡÷óÐ ¦¸¡ñÎ ¸õÀúõ «Õó¾ §ÅñΦÁýÈ ¬¨º ÅÕõ. ÀÄâý ú¨É¨Â ¯Â÷ò¾¢Â¾¡ø¾¡ý «ÅÕìÌ Ãº¢¸Á½¢¦ÂýÚ ¦ÀÂ÷. À¡Õí¸§Çý þó¾ ú¨É Àñϸ¢È À¡ð¨¼. ¨ºÅ þÄ츢Âí¸¨Çì ¸ñÏÕõ §À¡Ð ´Õ ¿¡Ä¡Â¢Ãõ À¡¼ø¸û ÁðÎõ ¦¸¡ñ¼ À¢ÃÀó¾í¸û ¦¸¡ÍÚ. ¾¢ÕãÄ÷ ÁðΧÁ 3000 ±Ø¾¢Â¢Õ츢ȡ÷. ¬É¡ø, þó¾ ¿¡Ä¡Â¢Ãò¨¾ ÁðÎõ ¨ÅòÐì ¦¸¡ñÎ Á¢¸, Á¢¸ þú¨ÉÔ¼ý ´ù¦Å¡Õ Åâ¨ÂÔõ ú¢òÐ, ÅâìÌ, Åâ Ţ¡츢¡Éõ, ÀÃõÀ¨Ã¡¸ ¦ºö¾ §À¡Ð ¾Á¢ØìÌ ´Õ Ò¾¢Â Шȧ ¸¢¨¼ì¸¢ÈÐ. ¨Å½Å ¯¨ÃÅÇõ ±ýÀÐ ¾Á¢ú ú¨É¢ý ¯îº ¦ÅÇ¢ôÀ¡Î. þôÀÊ ÅÇ÷ò¦¾ÎìÌõ §À¡Ð ÁÉ¢¾ ÁÉõ ±ùÅÇ× ÀñÀθ¢ÈÐ ±ýÀ¾üÌ §ÀẢâÂ÷ ².§¸.áÁ¡Ûƒý ´Õ ¯¾¡Ã½õ ¾ÕÅ¡÷. ÁШâø ´Õ ¨Å½ÅÕ¼ý «Å÷ ¯¨Ã¡Ê즸¡ñÊÕìÌõ §À¡Ð ¦º¡ýɡáõ, "¦ÀÕÁ¡¨Çî ÍõÁ¡î ÍõÁ¡ Å¢ØóÐ, Å¢ØóÐ §ºÅ¢ì¸ìܼ¡Ð, Àì¾É¢ý Á£Ð «Ç׸¼ó¾ À¢Ã¢Âõ ¦¸¡ñ¼ «Åý ÁÉÐ þÅý ¿Á측¸ þùÅÇ× ¸‰¼ôÀθ¢È¡§É ±ýÚ ÅÕóÐõ". ±É§Å º¢õÀ¡Ä¢ì¸¡ ´Õ Ó¨È §ºÅ¢ò¾¡§Ä §À¡Ðõ ±ýȡáõ. þÐ ÀÄ áüÈ¡ñΠŢ¡츢¡Éí¸û ÀñÀÎò¾¢Â¾ý Å¢¨Ç×. þôÀÊôÀð¼Åý Å¡Ê À¢¨Ãì ¸ñ¼×¼ý ¿¢îºÂõ Å¡ÎÅ¡ý. þÐ ÅÇ÷.

¬É¡ø «È¢Å¢Âø ¬üÚôÀÎò¾¡Ð. «Ð «Íà §Å¸ò¾¢ø Ò¾¢Ð, Ò¾¢¾¡ö ¸ñÎ À¢ÊòÐì ¦¸¡ñÎ §À¡Ìõ. «¾üÌ ¦¿ö °ðÎõ ¦ºÂ¨Ä ¦¾¡Æ¢øШȸû ¦ºöÐ ¦¸¡ñÊÕìÌõ. ¿¢ÄÅ¢ø ¸¡ø ¨ÅìÌõ «ÇÅ¢üÌ, Ýâ Áñ¼Äò¨¾ àà þÕóÐ ¿¢ÆüÀ¼õ ±ÎìÌõ «ÇÅ¢üÌ ÁÉ¢¾ò¦¾¡Æ¢ø ¾¢Èý ÅÇ÷óÐûÇÐ. ¬É¡ø, ÁÉ¢¾Ûû Ò¨¾ÔñÎ §À¡É Á¢Õ¸ò¨¾ ¦ÅǢ즸¡½÷óÐ «Å¨É §ÁõÀÎòÐõ Á¡Û¼Å¢Âø «ó¾ «ÇÅ¢üÌ þýÛõ ÅÇ÷ÔÈÅ¢ø¨Ä. þó¾î ºÁýÀ¡¼üÈ ÝÆ§Ä þý¨È áüÈ¡ñÊø ¿¡õ ¸¡Ïõ ÀÄ º¢ì¸ø¸ÙìÌì ¸¡Ã½õ.

þôÀ¢ýÒÄò¾¢ø¾¡ý þýÚ ¦¾¡Æ¢øШÈÔõ þÄ츢ÂÓõ þ¨½Âò¾¢ø ¨¸§¸¡÷òÐ ¿¼ì¸ ¬ÃõÀ¢òÐûÇÉ. þÐ ±íÌ ¦¸¡ñÎ ¦ºøÖõ? þÄ츢Âõ þ¨½Âô §À÷ÅÆ¢¸¨ÇÔõ ¬üÚôÀÎòÐÁ¡? þø¨Ä þÄ츢§Á þ¨½Âò ¦¾¡Æ¢ø¾¢ÈÛìÌ þÄ측¸¢Å¢ÎÁ¡? þÐ þýÚ ¿õÓý§É ¿¢üÌõ §¸ûÅ¢¸û.

Á¼Ä¡¼üÌØì¸û (email groups/forums) Åó¾§À¡Ð ÀÄ «¾¢ºÂí¸¨Çî ¦ºö¾É. ¯Ä¸¢ý ´Õ Өɢø þÕóÐ ¦¸¡ñÎ Áü¦È¡Õ Өɢø þÕìÌõ ´ÕÅâý §¸ûÅ¢ìÌ À¾¢ø «Ç¢ì¸ ÓÊó¾Ð. ¸¡ÄÓõ, àÃÓõ ºð¼Éì ¸¡½¡Áø §À¡Â¢É. ÌüÈ¡Äõ, «¾ý º¡Ãø, «íÌ ¿¼ìÌõ þÄ츢 ú¨É Á¢ýÉÏì¸û ¯ÕÅ¡ìÌõ ÒÄò¾¢üÌ þ¼õ ¦ÀÂ÷ó¾É. þ¨¾ Å¡úò¾¢ ÅçÅüÈ ÀÄâø ¿¡Ûõ ´ÕÅý. ¬É¡ø ¦¸¡ïº ¸¡Äò¾¢ø Á¢ý¾¢¨Ã ¯û¦Ç¡Ç¢¨Âì ¸¡ðΞüÌô À¾¢ø ÁÉ¢¾ ÁÉ츺θ¨Ç À¢Ã¾¢ÀÄ¢ì¸ ¬ÃõÀ¢ò¾Ð. «É¡Áò¾¡¸ þÕóÐ ¦¸¡ñÎ §º¨Ã «ûǢ¢¨ÃìÌõ °¼¸Á¡¸ «Ð Á¡È¢ô§À¡ÉÐ. ¬üÚôÀÎò¾ÄüÈ §À¡ìÌ «Æ¢Å¢üÌ þðÎî ¦ºøÖõ ±Ûõ ¿¢¨Ä¢ø 'ÁðÎÚò¾ø' ¾Á¢ú Á¼Ä¡¼üÌØì¸Ç¢ø «ò¾¢Â¡Åº¢ÂÁ¡¸¢ô§À¡ÉÐ. ¾ýÌØÅ¢ø ÁðÎÚò¾ø ¦ºöÐ ¦¸¡ñ§¼ «Îò¾ ÌØì¸Ç¢ø Áñ¨½Å¡Ã¢Â¢¨ÃìÌõ ÁÉ¢¾÷¸û «¾¢¸Á¡¸¢ô§À¡Â¢É÷. ±É§Å ´ýÚìÌ þÃñÎ ±ýÚ ÁðÎÚò¾÷¸û ¨ÅòÐ ¸¡Åø ¦ºö §ÅñÊ ´Õ ¿¢¨ÄìÌ ¾Á¢ú þÄ츢 ú¨É þØÀðÎô §À¡ÉÐ.

þó¾ ¿¢¨Ä¢ø¾¡ý 'ŨÄôÀ¾¢×' (Weblog or Blog) ±ýÛõ ´Õ Ò¾¢Â À¾¢ôÀ¸Ó¨È ¨¸¸¡ÅÄ¡¸ ÅóÐ §º÷ó¾Ð. ŨÄôÀ¾¢Å¢ý ãÄÁ¡¸ Á¼Ä¡¼üÌØÅ¢ø ¦ÀÕõ «§¾ þÄ츢 þýÀò¨¾ þýÛõ ¦º¡Ìº¡¸ô ¦ÀÈÓÊó¾Ð. ¿ÁìÌ §ÅñÊ ¦À¡Ø¾¢ø, §ÅñÊ Åñ½õ ¡ÕìÌõ ¸¼¨ÁôÀ𧼡, ¸ð¼¡ÂôÀÎò¾ôÀ𧼡 þøÄ¡Áø ;ó¾¢ÃÁ¡¸ì ¸ÕòÐ ¦ÅǢ¢¼ ÓÊó¾Ð. Á¼Ä¡¼üÌØÅ¢ý º¡Ã¡õºõ ¿ÁìÌ Í¼î Í¼ì ¸¢¨¼ìÌõ ±¾¢÷Å¢¨É¸û¾¡ý. «Ð ¿õ¨Á Íè½Ô¼ý (stimulating) þÕì¸ ¨ÅìÌõ. þó¾ ±¾¢÷Å¢¨É¨Â 'ŨÄôÀ¾¢×' "À¢ýëð¼õ" (comments) ±ýÛõ ¯ò¾¢Â¢ý ÅƢ¡¸ ±Øò¾¡ÇÛìÌò ¾ó¾Ð. ¬É¡ø, ¨ÅÊ ¿¢ÃõÀ¢ÔûÇ ¸½É¢ Ô¸ò¾¢ø ÁÉ¢¾ ¨Åʸû À¢ýëð¼ò¾¢Öõ ¬ð¼õ §À¡¼ ¬ÃõÀ¢ò¾É. ¸ýÉ¡-À¢ýÉ¡¦ÅýÚ ±ØÐõ ´Õ «Àò¾ô §À¡ìÌ «íÌõ Åó¾Ð. ¬É¡ø, À¢ýëð¼í¸¨Ç ÁðÎÚòÐõ ¦ºÂÄ¢¸û (software) Åó¾×¼ý «Ð ¸ðÎôÀ¡ðÊüÌû Åó¾Ð. Comments ±ýÀ¾¢ø þøÄ¡¾ «÷ò¾õ 'À¢ýëð¼õ' ±ýÛõ ¾Á¢ú À¾ò¾¢ø þÕ츢ÈÐ. ´Õ ¸ðΨÃìÌ 'À¢ý' ÅÕõ '°ð¼õ' ±ýÚ ¦À¡Õû. þÐ×õ ú¨É¢ý ´Õ ÜÚ¾¡ý. °ð¼õ ¦¸¡ÎìÌõ §À¡Ð ±Øò¾¡Çý Üξġ¸ ±ØÐÅ¡ý. ¬É¡ø, ¼¡É¢ì ±ýÀ§¾ º¡ôÀ¡¼¡¸¢Å¢¼ì ܼ¡Ð. ¬É¡ø «Ð¾¡ý ¿¼ì¸¢ÈÐ. À¢ýëð¼õ ¦¸¡ÎìÌõ §À¡¨¾Â¢ø À¢ýëð¼ò¾¢üÌ ²í¸¢ ±ØÐõ ´Õ Ž¢¸ô§À¡ìÌ Å¨ÄÀ¾¢Å¢Öõ ѨÆóÐ ¦¸¡ñÊÕ츢ÈÐ.

þ¨½Âò¾¢ý ¬¾¡Ã ŠÕ¾¢§Â '¸ÅÉ ®÷ôÒ' ±ýÀо¡ý. ÀÄ ¦ºÂøÀ¡Î¸û þÄźÁ¡¸ ¿¼ò¾ôÀΞüÌì ¸¡Ã½õ þó¾ì ¸ÅÉ ®÷ô§À. ±É§Å þôÀÊ ÁüÈÅ÷ ¸ÅÉò¨¾ ®÷ìÌõ ´Õ ¦ºÂøÀ¡Î 'attention trading' ±Ûõ Ţ¡À¡Ã ÑÏì¸Á¡¸ ¸ÅÉÁ¡¸ ÅÇ÷ò¦¾Îì¸ôÀðÎ ÅÕ¸¢ÈÐ. þó¾ô Ò¾¢Â Ţ¡À¡Ãò¾¢ø ±ñ½¢ì¨¸ Á¢¸ Ó츢Âõ. ±ò¾¨É Á¢øÄ¢Âý ¦º¡Îì̸û ¿õ Ũĸò¾¢ø Å¢ØóÐûÇÉ ±ýÀ¨¾ ¨Åò§¾ ±øÄ¡õ ¸½ì¸¢¼ôÀθ¢ýÈÉ. ´Õ ¦º¡ÎìÌ=´Õ ¸ÅÉõ. ¦º¡ÎìÌ §Å¸ò¾¢ø ¯Ä×õ Ò¾¢Â ÀÆì¸ò¾¡ø ¾Á¢Æ÷¸Ç¢ý ¸ÅÉ þÕôÒ ±ýÀÐ ¬È «Áà ¯ð¸¡÷óÐ ¸¨¾ §¸ðÌõ À¡í¸¢Ä¢ÕóÐ «¨Ã§Å측¼¡¸ «ûÇ¢ô§À¡ðÎì ¦¸¡ñÎ §À¡Ìõ À¡í¸¢üÌ Á¡È¢Â¢Õ츢ÈÐ. À¡÷ò¾ Ó¾ø ¦¿¡Ê¢ø ¯í¸û ¸ÅÉò¨¾ì ¸ÅÕõ Åñ½õ ±ØòÐ þÕì¸ §ÅñÎõ. þø¨Ä¦ÂÉ¢ø §ÅÚ ¾Çõ §¿¡ì¸¢ §ÁÂô§À¡öÅ¢Îõ ÁÉÐ. «ÅºÃ ¯Ä¸¢ý «ÅÄðº½í¸¨Ç À¢Ã¾¢ÀÄ¢ìÌõ °¼¸Á¡¸ þÐ Á¡È «¾¢¸ ¿¡û À¢Ê측Ð. þôÀÊôÀð¼ ¸ÅÉ þØôÒ Å¢Â¡À¡Ãò¾¢ø ¿õ¨ÁÂȢ¡Á§Ä Å¢ØóÐÅ¢Îõ «À¡Âõ ¿¢¨È þÕ츢ÈÐ. ²¦ÉÉ¢ø, À¢ýëð¼õ þøÄ¡¾ ŨÄôâì¸û Ýâ ¸¢Ã¸½òÐò ¦¾Õ§À¡Ä §À¡ìÌÅÃòÐ þøÄ¡Áø ¸¢¼ì¸¢ýÈÉ.

¬É¡ø, ŨÄôÀ¾¢× ±ýÀ¾ü¸¡É þý¦É¡Õ ¦À¡Õû 'þÄò¾¢Ãý ¿¡ðÌÈ¢ôÒ' (electronic diary) ±ýÀÐ. ¿¡õ(ð) ÌÈ¢ôÒ ±ØÐŧ¾ ´Õ ¬Ú¾ÖìÌò¾¡ý. «ó¾ô ¦À¡Øиû ÓØÅÐÁ¡¸ ¿ÁìÌî ¦º¡ó¾Á¡É¨Å. ¿¡õ ¿õÓ¼ý ¦ºöÐ ¦¸¡ûÙõ ´Õ ºõÀ¡„¨½ «Ð. «Ð º¢Ä ºÁÂí¸Ç¢ø ¿øÄ Å¡º¢ôÀ¢üÌ ²üȾ¡¸ þÕì¸Ä¡õ. ¬É¡ø, ¿ÁРŨÄôÀ¾¢× ¿Á째 ¦º¡ó¾Á¢øÄ¡Áø Ţ¡À¡ÃÁ¡¸¢Å¢ð¼¡ø ¿ÁÐ ¬ýÁ¡¨Å Å¢üÚÅ¢Îõ «ÅÄõ. ¸½É¢ôÒÄõ ±ýÀ§¾¡÷ ÝðÍÁ ¯Ä¸õ. °ýÚ ¸ÅÉ¢ò¾¡ø «íÌõ ÁÉ¢¾ ÁÉõ¾¡ý ¦¾Ã¢Ôõ. ºí¸¸¡Äò ¾Á¢ÆÛìÌ ±ùÅÇ× ¬üÚôÀÎò¾ø §¾¨Å¡¸ þÕ󾧾¡ «Ð ÐÇ¢ìܼì ̨È¡Áø þÕÀò¾¢§Â¡Ã¡õ áüÈ¡ñÎ ÁÉ¢¾ÛìÌõ §¾¨Å¡¸ þÕ츢ÈÐ. þÐ À¢ýɨ¼Å¡? Óý§ÉüÈÁ¡ ±ýÀÐõ ¿¡õ §¸ðÎ즸¡ûÇ §ÅñÊ §¸ûÅ¢.

±ñ ±Øò¨¾ Å¢¨ÄìÌ Å¡íÌõ Óý ±ØòРŢƢòÐ즸¡ûÇ §ÅñÎõ. þÐ ¸½¢É¢ Ô¸õ ¾Á¢ú, þÄ츢Âò¾¢üÌò ¾Õõ Ò¾¢Â ºÅ¡ø! þÐÀüÈ¢¦ÂøÄ¡õ ¾Á¢úô§ÀẢâÂ÷¸Ùõ, ¾Á¢úôÀø¸¨Äì¸Æ¸í¸Ùõ ¸Å¨ÄôÀ¼ §ÅñÊ ¸¡Äõ ÅóÐÅ¢ð¼Ð. «È¢Å¢ÂĢĢÕóÐ ¾Á¢ØìÌ Åó¾ ¿¡ý, ¿¡ý ¸üÈ ¾Á¢¨Æ ¨ÅòÐ þÕº¡Ã¡ÕìÌõ ÒâÔõ Åñ½õ µ÷ ¬ö×ì¸ðΨà ±Ø¾¢Ôû§Çý. «¨¾ò ¦¾¡¼ì¸Á¡¸ ¨ÅòÐ ¾Á¢ÆÈ¢»÷¸û þòШȨ §ÁõÀÎò¾Ä¡õ. ²¦ÉÉ¢ø þÉ¢ ÅÕ¸¢ýÈ ¾º¡ô¾í¸Ç¢ø ¸½¢É¢ º¡÷ó¾ ¦¾¡Æ¢øÐ¨È ¾Á¢ú ±ØòÐ, «¾ý ¦ÅÇ¢ôÀ¡ðÎ, À¾¢ôÀ¢ò¾ø §À¡ýÈÅüÈ¢ý ¾¨Ä¦ÂØò¨¾§Â Á¡üÈô§À¡¸¢ÈÐ!

Samachar - Tamil

Like Rockfeller Foundation for Tamil studies

திசைகள் ஜுன் இதழ்

இம்மாத திசைகள் இதழில் எனது கட்டுரையை ஈழத்தமிழர்கள் கட்டாயம் வாசிக்கவேண்டும், மற்றவர்களும்தான்!

http://www.thisaigal.com/june%2004/serieskannanuni.html

Tamil will be declared as a 'classical language' by Govt. of India

பாரதி என்ற முரண்டு மீசை, முண்டாசுக்காரன், குடுகுடுப்பாண்டி "நல்ல காலம் வருகுது, நல்ல காலம் வருகுது" என்று அடித்த குடுகுடுப்பை இன்று வேலை செய்கிறது.

நம் அன்பிற்குரிய பேராசிரியர் அப்துல் கலாம் அவர்கள் கீழ்கண்ட அறிவித்தலை தனது பாராளுமன்ற உரையில் வெளியிட்டுள்ளார்.

41. The Government will set up a committee to examine the question of declaring all languages included in the Eighth Schedule of the Constitution as official languages. Tamil will be declared a classical language.

கி.ஆ.பெ.விஸ்வநாதம் அவர்கள் புதல்வி தலைமையில் ஒரு அறிஞர் குழு பாரதப்பிரதமரைப் பார்த்து தமிழ் உயர்தனிச் செம்மொழி என அறிவிக்கப்படவேண்டும் என்று மீண்டும் முறையிட போவதாக இருந்தது. அச்சமயத்தில் சென்னையிலிருந்த என்னையும் கூட வருமாறு அழைத்திருந்தனர். நானும் அந்தக் கூட்டத்தில் பேசினேன். ஆனால், பாரதப்பிரதமர் வாஜ்பாயி போர்ச் சூழல் காரணமாக வாக்குக் கொடுத்திருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டார். கனமான மனத்துடன்தான் ஜெர்மன் மீண்டேன்.

என் அன்பிற்குரிய குடியரசுத்தலைவரின் இவ்வுரை மகிழ்வு அளிப்பதாய் உள்ளது. தமிழுக்கு நல்லகாலம் பிறந்திருக்கிறது.

நன்றி: இச்சேதி குறித்து நான் கேட்டபோது மாலன் எனக்கு மேல் விவரங்கள் பல கொடுத்தார். அதில் மேற்சுட்டியுமொன்று. இது குறித்த மாலனின் கட்டுரை பல புதிய சேதிகளைத்தருகிறது. கட்டாயம் வாசியுங்கள்

Move - on the way!

நண்பர்களே!

இனிமேல் மெதுவாக யுனிகோட் வலைப்பூவகத்திற்கு வந்து பழகுங்கள். அங்கு குடித்தனம் போய்விடலாமென்று எண்ணுகிறேன். இதில் பல அனுகூலங்கள் உள்ளன:

1. யுனிகோடுதான் கடைசியில் நிற்கப்போகிறது. எனவே அதற்குப் பழகிக்கொள்ளுதல் நலம்.
2. ப்ளோகரில் நீங்கள் பதியும் கருத்துக்கள் எனக்கு தனி மடலில் வந்து விடுகிறது. இதனால் உடனே என் கவனத்திற்கு வருகிறது.
3. ப்ளோகரில் அதிகப்பதிவுகள் செய்ததால் எனக்கு ஜிமெயில் கணக்குவைப்பு கிடைத்திருக்கிறது. அது தமிழ் மரபு அறக்கட்டளை வேலைக்கு மிகவும் உதவுகிறது.
4. ஆனால் நான் இன்னும் ஒரேயடியாக யுனிகோடிற்கு போக முடியாதபடி யுனிகோடு இன்னும் அனைத்துத் தளத்திலும் பிரச்சனையின்றி செயல்படவில்லை. உதாரணமாக பல வலைப்பூக்கள் இன்னும் கட்டம் கட்டி பல் இளிக்கின்றன (எவ்வளவோ ததிகிணத்தோம் போட்டாச்சு); அடுத்து விண்டோ ஸ் 98-ல் சரியாக வரமாட்டேன் என்கிறது. மெக்கிண்டாஷில் இன்னும் யுனிகோடு பரவலாக்கப்படவில்லை. எனவே இரண்டு பதிவுகள் இருக்கும்.

நான் ஏன் பல வலைப்பூக்கள் வைத்திருக்கிறேன் என்ற கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் எல்லாமே 'சொடுக்கு' தொலைவில்தான் உள்ளன. இணையத்தில் தூரம் என்பது மனத்தின் அளவைப் பொருத்ததே! அலுப்பாக இருந்தால் போகமுடியாது. உற்சாகமாக இருந்தால் போகலாம். எல்லாம் உள்ளத்தைப் பொறுத்து. பல்வேறு பூக்கள் பல்வேறு மனோநிலையைக் கொடுக்கிறது. எனது படப்பூவிற்கு போய் பாருங்கள். அதனழகு இங்கிட்டால் வராது. பாசுரமடல் உள்ள இடத்தின் அழகு வேறு. வலைப்பூ ஒரு கோயிலென்றால் இவையெல்லாம் வெவ்வேறு சந்நிதிகள். எல்லா சந்நிதிகளுக்கும் ஒரு ரவுண்ட் போகலாம். இல்லை இஷ்ட தேவதைகளுடனும் நின்று விடலாம். என்ன குறை :-)!

by the way.....

இந்தச் சந்திரோதயத்திற்கு காத்திருந்து கண்டது இப்படியொரு பலன் தருமென நினைக்கவில்லை.

நான் இணைய உலகில் மிகவும் மதிக்கும் பெரியவர் இராம.கி என் வீடு தேடி வந்து என் கண்ணபுரத்து கட்டழகனையும் உடன் அமைத்து வந்து என் கண்களைப் பனிக்க வைத்துவிட்டார். இது அவர் 'வந்த திருக்கோலம்' எனக்கு. நன்றி.

அடுத்து நண்பர் ராஜா என் ஆதங்கத்தை வலைப்பூவில் மீண்டும் வெளியிட்டு எல்லோர் கவனைத்தையும் ஈர்க்க வைத்திருக்கிறார். ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலியில் என்னை மிகவும் பாதித்த வரிகள்

"சாளரத்தைத்திறந்து வைத்து,
வாசலை விரித்து வைத்து
காத்திருந்த காலம் விட்டு.
நான் கண்ணயர்ந்த பொழுதில்
என் வீடு வந்து போனாயாமே?
இது நியாயமா?"

பலர் இப்படித்தான் என் வீட்டிற்கு வந்து போகிறார்கள். என் வீட்டுக் கணக்கான் சொல்கிறது. எந்த நாட்டுக்காரர், யார் சொல்லி வந்தார் என்றெல்லாம் கூடச் சொல்கிறது. ஆனால் சனியன்! யார் வந்தார்கள் என்று சொல்வதில்லை! அதற்காவது ஒரு வரி, ஒரே வரி. இல்லை ஒரு சின்னப்புன்முறுவல் போட்டுவிட்டுப் போகலாம். நம்ம அதிர்ஷ்டம் அடிக்கடி வந்து , 'டேய் கண்ணா! விளையாட வரியா?" என்று சொல்லிப்போகும் நண்பர்களின் கணினி அடிக்கடி படுத்துவிடுகிறது.

ராஜா தயவால் சுந்தவடிவேலின் பதிவை (வலைப்பூ) படிக்கமுடிந்தது. எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார் நமது ஆதங்கங்களை. இதற்காகவே வேலையெல்லாம் விட்டுபுட்டு சீக்கிரம் ஓய்வு பெற்றுவிடலாம் போல் தோன்றுகிறது. தமிழுக்கு மதுவென்று பேர். ரொம்ப கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. நம்மள கவுத்துரும்!

சரி, இராம.கி கேட்ட கேள்விக்கும் கேட்காத கேள்விகளுக்கும் சில பதில்கள்.

உண்மையில் இ-சுவடி, தனிக்குடித்தனம் என்றில்லை. நான் ஒரு உற்சவப்பிள்ளை. தனிமையில் சுகம் காணாது. ஆனாலும் உண்மையிலேயே நேரமில்லாமல் தவிக்கிறேன். எனக்கு யாகூ அரட்டையிலோ, தனி மடலிலோ, இல்லை பின்னூட்டத்திலோ லேசாக சைகை காட்டினால் கூட உடனே அந்த வலைபதிவிற்குப்போய் வாசித்துவிட்டு வாயாறப்பாராட்டுகிறேன். இது என் குணம். எனவே மகாஜனங்களே நீங்க என் வீட்டிற்கு வருவதில் ரெட்டை சௌகர்யமிருக்கு. நீங்க வந்து என்னைப்பாத்தமாதிரியிருக்கும். நானும் உடனே உங்க வீட்டுக்கு வந்த மாதிரியிருக்கும்.

வேடிக்கை என்னவெனில், இ-சுவடியில் வரும் கடிதங்கள் அனைத்தையும் வாசிக்கக்கூட நேரமிருப்பதில்லை. நண்பர் பழனி என்னை மன்னித்தருளி விட்டார். கொஞ்ச நாள் வைராக்கியமாக ராயர்கிளப்பிற்கு போய் பார்த்தேன். அங்குவரும் போக்குவரத்தில் சிக்குமுக்காடிப்போய் ஒதுங்கிவிட்டேன். ஒருவகையில் இ-சுவடியில் அதிகம் பேர் எழுதாதது குறையின் வரமே!

இந்தப் பிரச்சனையைத் தொட்டு வருகின்ற வாரங்களில் சமாச்சார் தமிழில் என் கட்டுரையொன்று வரும். வாசியுங்கள். அதை எழுதத் தூண்டிய ராஜாவிற்கு நன்றி.

எனது ஆய்வு சூடு பிடித்திருக்கும் இந்த நேரத்தில்தான் தமிழ் மரபு அறக்கட்டளையின் வேளைகளும் சூடி பிடித்திருக்கின்றன. விரைவில் அது தமிழகத்தில் பதிவு பெற்ற ஈட்டுமுனைப்பற்ற கழகமாகும். நீங்களெல்லாம் அந்த இயக்கத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு கொள்ளையாசை. ஈடுபாடு உள்ளவர்கள் மறக்காமல் கடிதம் எழுதுங்கள். சேர்ந்து பணிபுரியும் காலம் வந்துவிட்டது. அதைவிட இன்னொரு பெரிய பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. அது பற்றி காரியம் கைவசமானபின் சொல்கிறேன். சிலரின் கொள்ளிப்பார்வையிலிருந்து அந்த இயக்கத்தைக்காக்க ஆழியானிடம் முறையிட்டுள்ளேன்.

"ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறையுடையோம்"