பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்!

காசி என் ஆத்ம நண்பர். பொதுவாகவே ஆன்மீகத்தில் "கேளுங்கள் தரப்படும்" என்பது வேத வாக்கு. அதிலும் ஆப்தர்கள் கேட்டுவிட்டால் இல்லையென்று சொல்லமுடியாது, கூடாது! பின்னூட்டத்தில் காசி இவ்வாறு எழுதுகிறார்..

>>>>
அருமையான விளக்கங்கள். இப்போதுதான் பழைய பாசுரமடல் கண்ணன் தெரிகிறார்
//நம்மாழ்வார் கிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு 42 ஆண்டுகள் கழித்து பிறந்து,வாழ்ந்தவர்.// இதைப்பற்றியும் நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
>>>>

இதுபற்றிப் பேசுவதென்றால் நிறையக் கொட்டுகிறது. ஆனால் கட்டுப்படுத்தியே எழுதவேண்டியுள்ளது. காலத்தின் கட்டாயம் (இரண்டு பொருளிலும் :-)

துவாபர யுகம் முடிகிறது. அதுதான் இறைவனை நேரில் தரிசித்துப் பேசும் காலத்தின் முடிவு. அடுத்து கலி ஆரம்பித்துவிடுகிறது. துவாபர யுகத்தின் முடிவிலேயே கலியின் ஆட்டம் தொடங்கிவிடுகிறது. வானவில்லில் நிறங்கள் அடுத்தடுத்து உடனே மாறுவதில்லை. கொஞ்சம் கலப்பு முன்னும் பின்னும் இருக்கும். யாதவர்கள் வெறி கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்கின்றனர். இது பொறுக்காமல் வடமதுரை விட்டு வெளி வந்து கலங்கிப் படுத்திருக்கும் கிருஷ்ணனையும் ஒரு அம்பு காலில் குத்தி அவன் காலம் முடிந்துவிட்டதைச் சொல்கிறது. அவன் இவ்வுலகை விட்டுப் போய்விடுகிறான்.

கலியின் காலத்தில் இனி அவதாரங்கள் கிடையாது என்று முடிவு செய்கின்றான். ஆனால் 'பத்துடை அடியவர்க்கு எளியவனாயிற்றே' கண்ணபரமாத்மா! எனவே உலகு நிரம்ப பக்தர்களை அனுப்புகிறான். தான் உட்கருவாக உள்ளிருப்பதை அறிந்த அந்த மகான்கள் உலக மக்களை நல்வழிப்படுத்துவர் என்று அவனுக்குத்தெரியும்.

அதன் தொடக்கமாக நம்மாழ்வார் திருக்குருகூரில் வந்து பிறக்கிறார். நம்மாழ்வார் பிறந்த கதையும் ஏசு பிறந்து அதை மூன்று கிழக்காசியர்கள் 'நட்சத்திரம் வழி நடத்த' வந்து சேவிப்பதும் ஒரே கதையே! ஏசு எப்படி வைணவரென்று எனது பழைய பாசுரமடலில் விவரித்திருப்பேன். இது என் கணிப்பு மட்டுமல்ல. ஜோசப் கேம்பல் என்ற அமெரிக்க தத்துவஞானியின் கணிப்பும்தான். இந்திய மண்ணில் நம்மாழ்வாரின் தாக்கம் அபரிதமானது. இன்று உலகில் இஸ்கான் இயக்கத்தினர் கிருஷ்ணநாம ஸ்மரணை செய்து உலா வருவதை நம்மாழ்வார் பார்த்து பரவசிக்கிறார். அவரது வார்த்தை விளையாட்டைப் பாருங்கள் (இப்பாடல் பாரதிக்கும் பிடித்த பாட்டு என்பது கூடுதல் செய்தி)

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோ ம்


கலியில் நமக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. நம்பிக்கை ஊட்டுபவர்களும், நம்பிக்கை ஊட்டும் சொற்களும் அடிக்கடி தேவைப்படுகிறது. இதை மிக நன்றாக அறிந்தே நம்மாழ்வார் பாடுகிறார். போயிற்று வல்லுயிர் சாபம் என்று தெம்பூட்டுகிறார். சமீப காலத்தில் கூட தமிழ் இலக்கிய உலகில் ஒரு இருண்மை தோன்றி நம்பிக்கை இழக்க வைத்தது. திசைகள் இயக்கம் பாரதி வழிப்படி மீண்டும் ஒரு தெம்பான வழிக்கு தமிழ் இலக்கியத்தை இட்டுச் செல்ல முனைந்துள்ளது. இது கலி காலத்தில் அவசியம். ஒருவகையில் Lord of the ring படம் கூட இருண்மையை நம்பிக்கை கொள்ளும் வெற்றி என்றே காணவேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் 'கலியும் கெடும்' என்று சொல்கிறார் நம்மாழ்வார். (அந்த 'உம்' பொருள் நிறைந்தது!)

கடல்வண்ணன் பூதங்கள் என்று இங்கு அவர் சொல்வது கிருஷ்ணபக்தர்களை. இவர்கள் இந்தியா, மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பாவென்று 'மலியப்புகுந்து' இசை பாடி; ["உழி தருகை" என்றால் பயப்படாமல் திரிவது] திரிகின்றனர். இது எவ்வளவு பொருந்தி வருகிறது பாருங்கள். நாடிழந்து வெளிநாட்டில் வதிக்கும் பல ஈழச்சகோதர்கள் முதன் முறையாக கிருஷ்ணபக்தியை வெள்ளையரிடமிருந்து கற்றுக் கொண்டு சுவிஸ் தெருக்களில் உழி தருதல் காண்பதற்கு இனியது!

உழி தருதல் என்பதை எந்த வெட்கமும் இல்லாமல் தனது ஆன்ம வேட்கையை, அநுபூதியை (ectasy) வெளிக்காட்டுதல் என்றும் கொள்ளலாம். எல்லோருக்கும் வெட்கம் என்பது கூடப்பிறந்தது. அதை மறந்து, அதாவது 'தன்னை' மறந்து தெருக்களில் உழி தருதல் ஒரு ஆச்சர்யமான விஷயம்!

நம்மாழ்வாரின் இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர்கள் தமிழர்களைவிட மற்றவர்களே. உதாரணம் புரந்தரதாசர், தியாகராஜர், கபீர், மீரா, கிருஷ்ணசைதன்யர்-அவர் வழியில் இன்று பிரபுபாதா மற்றும் அவரது சகாக்கள். தமிழர்களுக்கு "தான்" ரொம்ப ஜாஸ்தி. அதுதான் அவர்களின் பெரும் தடை. விதண்டாவாதத்தில் ஈடுபடவே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் :-)

மூளையைக் குடையும் அத்தனை தர்க்கங்களும் தென்னகத்தில் பிறந்தவையே! அத்வைதம் புரிந்துகொள்ள தர்க்க சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டும். ராமானுஜர் கூட "பாஷ்யம்" எழுதியதால்தான் இங்கு பாராட்டப்படுகிறார். "அறிவொன்றுமில்லாத ஆயர்கள்" எல்லாம் வடக்கேதான் :-) நல்லதனமாகத்தான் சொல்கிறேன்! அவர்களுக்கு இருக்கும் பக்தி எளிதாக தமிழனுக்கு வராது (இது என்னையும் சேர்த்துதான்).

நம்மாழ்வார் துவாபரயுகம் முடிந்து 42 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார் என்று கார்த்திகேயன் தவறாக எழுதிவிட்டார். கிருஷ்ணன் பரமபதமடைந்த கி.மு.6.2.3101 வியாழக்கிழமையினின்று. 43 நாட்களுக்குப் பின் கிமு 21.3.3101 வெள்ளிக்கிழமை தமிழ் விக்ரம ஆண்டு மேஷ சித்திரை 25ம் நாள் நம்மாழ்வார் பிறக்கிறார். கிருஷ்ணனுக்குப் பின் என்பதே சரி. கிருஷ்ணன் "கரி" இவர் "காரி" அதுதான் வித்தியாசம் :-)

பாசுர மடல்கள்

திரு.கார்த்திகேயன் வலைப்பூவில் ஆன்மீகம் பற்றிப் பேசிவருகிறார். இது வலைப்பூவில் முதல்முறை நடந்துள்ளது. நான் எழுதும்போது கூட கூச்சப்பட்டு அது பற்றி எழுதவில்லை. ஜெயமொகனைப் பிடிப்பதற்குக் காரணம் "பொலிக! பொலிக! பொலிக! போயிற்று வல்லுயிர் சாபம்!" என்று தமிழ் இலக்கிய உலகின் இன்றைய சாபக்கேடுகள் ஒழியும் வண்ணம் ஆன்மீக தரிசனம் பற்றி எழுதி வருகிறார். At one time he wanted me to team up with him. I'll come to that later. கார்த்திகேயன் வாழ்க.

அவர் வலைப்பூவில் எழுதியவைக்கு என் பதில்கள் கீழே!
>>>
கண்ணன் ஆழ்வார் வலைப்பதிவு. மிகவும் விரும்பதக்க ஒன்று, நாத்திகர்களால் அல்ல. இது எப்படி மற்ற விளக்கங்களோடு வேறு படுகிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.
>>>
ஆழ்வார்களின் teaching-ஐ நான் ஏற்றுக் கொள்கிறேன் (as a guide, as a friend). பக்தி இலக்கியத்தின் சிறப்பு அது பக்தனுக்கும்-இறைவனுக்குமிடையே நடக்கும் தனிப்பட்ட உரையாடல் பற்றிப்பேசுவது. இத்தகைய இலக்கிய மரபு வேறு எந்த உலக மொழியிலும் இல்லை. இந்த ஆழத்திற்கு யாரும் செல்லவில்லை என்பது என் கணிப்பு.

ஆனால் அதே நேரத்தில் எனக்கு எந்த religious authority மீதும் நம்பிக்கை இல்லை. ஆச்சர்யர்களின் வியாக்கியானத்தைப் படித்துப் புரிந்து கொண்டு என் நோக்கில் எழுதுகிறேன். அது சில நேரங்களில் conventional interpretation-லிருந்து வெகுவாக மாறுபடுவதுமுண்டு. எனது பாசுரமடலின் தனிச் சிறப்பு அது அறிவியல் நோக்கில் பாசுரங்களைக் காணுவதுதான்.

எனது முந்தைய108 கட்டுரைகளைப் படித்தால் அது தெளிவாகும். சென்னையில் கீதாச்சாரியன் நடத்தும் பழுத்த வைஷ்ணவரான முனைவர் வேங்கடகிருஷ்ணன் எனது வியாக்கியானங்களைப் படித்துள்ளார். எனது எதிர்பார்ப்பிற்கும் மேலாக அவர் அதை வரவேற்றது ஆச்சர்யத்தைத்தந்தது. இணையப் பெரியவர்கள் ஜேபி, ஹரிகிருஷ்ணன், நா.கணேசன், லோகநாதன் போன்றவர்கள் இம்முயற்சிக்கு உற்ற துணை இன்றளவும்.

ஜெயமோகன் செய்கின்ற அளவிற்கு அதைச் செம்மைப்படுத்தி இலக்கிய வடிவில் கொடுக்க நேரமில்லாமல் கிடக்கிறேன்!

நம்மாழ்வார்

நம்மாழ்வார் கிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு 42 ஆண்டுகள் கழித்து பிறந்து,வாழ்ந்தவர். அவருக்கு சடகோபர் என்ற பெயரும் உண்டு.
ஆயிரத்து பத்து பாடல்களுக்கு மேல் எழுதியவர். ஆனாலும், கருமத்தில் ஈடுபட்டேன் ,காலத்தை வெல்ல முடியவில்லை என்று
புலம்புகிறார்.
>>>>

எனது புரிதலில் திருமூலர் போலவே நம்மாழ்வாரும் ஜீவன் முக்தர். அவரது எழுத்து எவ்வளவுதூரம் தமிழக மக்களைப் பாதித்து இருக்கிறது என்றால் அவர் மறைந்த ஒரு நூற்றாண்டுகளுக்குள் தமிழகத்தின் அத்தனை வைணவக் கோயில்களிலும் அவருக்கு சந்நிதி வந்துவிட்டது. அவரை நாரண அவதாரமாகப் பார்க்கும் மரபு ஸ்ரீராமானுஜருக்குப் பின்னால் வருகிறது. இதற்குக் காரணம் அவர் காலத்தில் சங்கரரை விஞ்சக்கூடிய தத்துவஞானி இல்லை. ஆனால் விஷிட்டாத்துவைதம் என்ற மாற்றுக் கோட்பாடு ராமானுஜருக்கு நம்மாழ்வாரிடமிருந்து கிடைக்கிறது. மேலும் ஸ்ரீ ராமானுஜரை ஆதி சேஷன் அவதாரமெனக் கொண்டால் அவருக்குத்தெரியாத அவதார ரகசியம் இருக்க ஞாயமில்லை. நிற்க.

இப்படிப் பேசுவதிலிருந்தே புரியும் அடிப்படையில் சைவமும், வணைவமும் ஒன்றில் வேறுபடுகிறது என்று. அது காலம் குறித்த தனது கண்ணோட்டத்தில்.

வைணவம் இறைவனை கால-வெளி என்ற பூகோள அளவிற்குள் கொண்டு வந்து சிறப்பாகக் கொண்டாடுகிறது. In essence, Vaishnavism is a celebration of life. God falls in this category because he is the governing principle of life.

ஆனால் சைவம் இறைவனைக் காலம் கடந்தவனாக, அப்பாலுக்கு அப்பாலாய், ஒரு விஞ்சிய பரிமாணத்தில் (transcendental nature) பார்க்கிறது. So essentially, Saivism gives the appearance that it looks deeper in to this enquiry. ஆனால் அது உண்மையல்ல.

நம்மாழ்வாரைப் புரிந்து கொள்ள அவரது நான்கு தமிழ் வேதங்களையும் படிக்க வேண்டும். எடுத்தவுடன் அவர் திருமூலர் போன்ற ஒரு ஞானியாக தனது திருவாய்மொழியை ஆரம்பிக்கின்றார். ஆனால் அடுத்த பத்து வருவதற்குள் "பத்துடை அடியவர்க்கு எளியவன்" என்று இறங்கிவிடுகிறார். காரணம் இறைவனது transcendental-குணத்தைவிட அவன் இறங்கிவந்து நம்முடன் இருக்கும் குணமே நமக்கு இலகுவாய் புரியும் தன்மையில் உள்ளது. கிருஷ்ண அவதாரம் பிடிக்காத பேர்கள் மிகக் குறைவு. இதன் பொருள் மக்களுக்கு இறைவனின் சௌலப்பியமே பிடித்திருக்கிறது என்பது. இந்த வெகுஜன அங்கீகரித்தல் சைவத்தையும் பின்னால் மாற்றிவிடுகிறது. மதுரையில் சிவன் நடத்தியதாக வரும் திருவிளையாடல்கள் the concept of Avatar in disguise என்றுதான் கொள்ள வேண்டும்.

காலம் கடந்த பரம்பொருளுடன் அவர் இறுதியில் கலப்பதாகவே ஐதீகம். திருவாய்மொழியின் கடைசிப் பத்து அவர் "திருநாடு" (வைகுந்தம்) செல்லும் காட்சியை வருணிப்பதாக நம்பப்படுகிறது. காலத்தை வெல்லாத ஒருவனால் காலம் கடந்த பொருளுடன் கலப்பது எவ்வாறு?

ஜேகே (J.Krishnamurti)
>>>
காலத்தை வெல்லும் கணக்கை அறிந்தவர்களே ஞானிகள்(ஜிட்டு கிருஷ்ணமுர்த்தி எங்கேயோ நின்றுவிடுகிறார் என்று குறிபிட்டீர்களே,அது இங்குதான்).
>>>

இல்லை என்னைத் தவறாக வாசிக்கிறீர்கள். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சென்ற நூற்றாண்டின் பெரிய ஞானி. அதில் சந்தேகமில்லை. அவரது teachings முழுவதும் இந்தக் "காலம் கடத்தல்" பற்றியதே. அவரை எனக்கு அவரது close quarters-லிருந்து தெரியும். இது அவரது நூல்களிலிருந்து கிடைக்கும் அறிவிற்குத் துணை நிற்கும்.

அவர் ஒரு நிலையில் நின்று விடுகிறார் என்று சொன்னது, ஞான மார்க்கத்தில் நம்மை இட்டுச் செல்லும் போது ஒரு நிலையில் நம்மைத் தனியாக விட்டுவிடுவார். அது இரக்கம் இல்லாத செயல் அல்ல. நம்மாழ்வார் சொல்கின்ற பிரகாரம் இறைவன் "உணர்வின் மூர்த்தி". அவனை உணர வேண்டும். அல்லது ஞானக் கண்ணால் தரிசிக்க வேண்டும். கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி பாவிக்கும் வார்த்தை "look". அவர் நமது ஞானக் கண்ணால் பார்க்கச் சொல்வதது. ஞானக் கண்ணை எப்படித்திறப்பது என்பதையும் சொல்லித்தருகிறார் அவரது 'Awakening of Intelligence' ஏனும் புத்தகத்தில்.

ஒரு ஒப்பு நோக்கில் திருமூலர் காலத்தைக் கடந்தவர். நம்மாழ்வாரும், ஜேகேயும் கடக்காதவர் என்று சொல்வது பழமை மீது நமக்குள்ள பற்றையும், ஏதாவதொரு religious authority-ஐ நாம் ஏற்றுக் கொண்டுவிட்டோம் என்பதையும் காட்டுவதாக உள்ளது.

நாராயணன்

<<<
நார - ஜலம் , அயனன் - யோக நித்திரையில் இருப்பவன். பாற்கடலாகிய ஜலத்தில் நித்திரையில் வீற்றிருப்பவனே நாரயணன் என்பது சமீபத்தில் சமஸ்கிருத வகுப்பில் கற்று கொண்டது.
>>>>

நாரணன் என்பதற்கு வேறு வகையான விளக்கம் உண்டு. அது மிகவும் பொருள் செறிந்தது.

நாராயணன் என்பதை நாரம்+அயனம் என்று பிரிப்பர். இதற்கு இரண்டு பொருளுண்டு.

நாரம்=அழிவில்லாப் பொருள்களின் கூட்டம். அவை மூலப்பகுதியின் விகாரமாயுள்ள அனைத்து உயிர்களும், பரமபதத்திலுள்ள அனைத்து பொருட்களும்.
அயனம்= இடம்.

1) அழிவில்லாப் பொருள்களுக்கு இடமாக உள்ளவன்.
2) அழிவில்லாப் பொருள்களை இடமாகக் கொண்டவன்.

முதற் பொருளில் He is the 'ground' for all things. அதுதான் மூலம்.
இரண்டாவது பொருளில் அனைத்துப் பொருட்களிலும் 'உட்கரு'வாக அவனே இருக்கின்றான்.

இந்த அழகிய பொருள் ஒரு திருவாய்மொழியில் வருகிறது...

'அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும் நிற்க
நெறியினால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்' - 9.6.4

இத்தன்மையினால்தான் அவனுக்கும் மேல் என்று எதுவும் கிடையாது. 'சாமியைப் படைச்சது யாரு?' என்ற கேள்வி இங்கு அடிபட்டுப் போகிறது.

கோபாலம் சேவிதம்

கொரியாவிலிருக்கும் கோஜே தீவிற்கும் ஜெர்மனியில் நான் நீண்ட நாள் வாழ்ந்த கீல் நகர்க்கும் ஒரு பெருத்த வித்தியாசமுண்டு. அது கதிரவனின் கடைக்கண் பார்வை பற்றியது. பொதுவாகவே ஜெர்மனியில் சூரிய வெளிச்சம் குறைவு. எப்போது பார்த்தாலும் ஒரு மேக மூட்டம். ஒரு நவம்பரில் 14 நாட்கள் நான் சூரியனைப் பார்க்கவில்லை. பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது. இந்த மாதத்தில் டிப்ரஷன் காரணமாக தற்கொலைகள் நடப்பதுண்டு. ஆனால் கோஜே தீவு எப்போதும் பளிச்சென்று இருக்கிறது. சுத்தமான காற்று, பசுமையான மலைகள், நல்ல வெளிச்சம். பனிக்காலத்தில் ஜெர்மனியின் குளிர் இங்கும் இருந்தாலும் இந்த வெள்ளை வெளேர் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.

காலையில் எழுந்தவுடன் மலைகளையும், கடலையும் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு மேல் தனியாக தியானம் என்பது அவசியமில்லை. மலைகள் இந்தப் பூமியின் வயதுடையவை. மிகப் பழமையான தோழர்கள். அது போதாது என்று காலையில் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டும் உண்டு. ராகா.டாட்.காமிலிருந்து தவறாமல் எம்.எஸ், டி.கே.பட்டம்மாள் (எப்போதாவது சித்ரா) பாடுகிறார்கள். பஞ்சரத்ன மாலை என்று ஒரு ஐஞ்சு பாட்டு. ஐந்தும் ரத்தினம். அதில் எனக்கு மிகவும் பிடித்தது "பாவயாமி கோபாலம்! ப(b)஡லம்! மனசே சேவிதம்" என்னும் பாடல். கல்யாணியா? மோகனமா? தெரியவில்லை. ஆனால் இதே ராகத்திலமைந்த பழைய சினிமாப்பாட்டொன்றுண்டு! அது "சிங்காரக்கண்ணே! உன்" எனும் வரலக்ஷமி பாடிய பாட்டு. (வீரபாண்டிய கட்டபொம்மன்). சாகித்யம் அன்னமாச்சாரியா.

இவ்வளவு சுகமும் ஒரு நாள் பட்டெனப் போய்விடும் என்னும் போது மனது 'பகீர்' என்கிறது. ஒரு சின்ன துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த துக்கத்திலிருந்து விடுபட 'சதா மனசே சிந்தயே கோபால பாலம்' என்கிறார் பெரியவர். ஸ்ரீமந் நாராயணின் பெயர்களில் மைசூர்பா (கு) மாதிரிக் கரைவது ரெண்டு பேர்தான். ஒன்று கோபாலம், அடுத்து கோவிந்தம். இதுவே துக்க நிவாரணம்!

(சாரி உஷா! இதெல்லாம் பேசக்கூடாதுண்ணு தோணுது, ஆனா மனசு அங்கேதான் போகுது என்ன செய்ய?)

எனது வலைப்பூ வாசத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளேன். நேற்று பத்ரியுடன் அரட்டை அடித்த போது அவர் நான் முழுமையாக யுனிகோடுக்கு போய்விட வேண்டுமென்றார். இது இப்படி நிகழும் என எதிர்பார்த்துத்தான் நான் ஒரு கண்ணாடித்தளத்தை யுனிகோடில் அமைத்திருந்தேன். நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் யுனிகோடில் இவ்வளவு வளர்ச்சி கிடையாது. ஆறுமாத காலத்திற்குள் அபரித வளர்ச்சி. தமிழ் ஆர்வலர்கள் சுரதா, முகுந்தராஜ், அமீர், பத்ரி போன்றவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நான் இன்னும் அவர்கள் செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. உமர் தரும் இயங்குவார்ப்பிற்கு போய்விட உத்தேசம்.

அடுத்து, இப்போது செய்கின்ற மாதிரி தினப்படி இனிமேல் எழுதமுடியுமா எனத்தெரியவில்லை. திசைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இ-சங்கமம் எனும் புதிய சஞ்சிகையிலும் பொறுப்பேற்றுள்ளேன். நண்பர் சிஃபி வெங்கடேஷ் முன்பு போல் என்னை மீண்டும் அவர்கள் நடத்தும் சமாச்சார்-தமிழ் இ-தழில் எழுதச் சொல்கிறார். வலைப்பூவை பிரபலப்படுத்தவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்னாலானதை செய்த மனநிறைவு எனக்கிருக்கிறது.

வலைப்பூ வந்த பிறகு சிறுகதைகள் எழுதுவதை விட்டுவிட்டேன். மீண்டும் அந்த உலகிற்குப் போக வேண்டும். இணையத்தொடர்புள்ள ஆனால் அச்சில் வெளிவரும் தமிழ் இதழ்களின் முகவரி தந்து உதவுங்கள்.

நந்துவின் தொடர் தொடரும். அது ஒரு autobiographical novel. 1957-1967 வரை தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில், ஒரு பார்ப்பனச்சேரியில் நடக்கும் கதையின் பதிவது. அந்தக் காலக்கட்டத்தில் நிகழும் சமூக, பொருளாதார, சரித்திர மாற்றங்களை ஒரு சிறுவனின் கண் கொண்டு பதிவு செய்யும்.

எனது வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது விலக்க வேண்டிய ஐட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். உவப்புடன் ஏற்றுச் செய்வேன்.

வைகைக்கரை காற்றே!......031

அம்மாவை இறுகக்கட்டிக்கொண்டு நின்றான் நந்து. அம்மா சனி நீராடிவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டு சாம்பிராணி போட்டு முடித்து சமையல் கட்டை நோக்கி நகரவிடாமல் நந்துவின் அன்பு முத்திரை. அந்த சாம்பிராணிப் புகை தரும் சுகந்தம், சித்தியா வாங்கி வந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப்பவுடரின் சுகந்தம்...நந்துவுக்கு மட்டுமே உரிய அம்மாவின் தனி சுகந்தம் எல்லாம் சேர்ந்து விளக்கைச் சுற்றும் விட்டில் போல் அவனை கோகிலத்தைச் சுற்றி வட்டமிட வைத்தது.

"இது என்னடி கூத்தாயிருக்கு? என்ன அடுப்படிக்கு விடமாட்டேங்கறான்?"

"அக்கா! நீ அவ்வளவு வாசனையா இருக்கோள்யோ அதான்" என்றாள் குஞ்சரம் கையில் சாம்பிராணிப் புகை கக்கும் அனல் தட்டுடன். அக்காவிற்கு இந்த சிஷ்ருதை தங்கையோடது. "குழந்தைகளெல்லாம் வளைய, வளைய வரது எவ்வளவு நன்னாயிருக்கு" என்றும் சொன்னாள் குஞ்சரம்.

"சரிதான் போ! ஊரு சிரிக்கப்போறது. நல்ல வேளை இவன் ஆம்பிளப்பிள்ளையாப் பொறந்தான். இன்னிமே என்னால பெத்துக்க முடியாதுடி. அடுத்த மாசம் பத்மா பிரசவத்து வந்துறுவா. இங்க என்னடான்னா இது குழந்தை மாதிரி விளையாடிண்டு இருக்கு"

"அவனுக்கு பரிட்சை முடிஞ்சு லீவு விட்டுருக்கா, பொழுது போகல உன்னையச் சுத்தி சுத்தி வரான்"

"நன்னா விட்டாடி லீவு. எனக்கு ஒரு வேளையும் ஆகல, டேய் விடுடா! சமையலைக் கவனிக்கணும்"

"மாட்டேன்! உன்னிட்ட நன்னாருக்கு!"

"இருக்கும், இருக்கும். அப்பபுறம் சமையலை யாரு கவனிச்சுப்பா?"

"பங்கஜம்"

"ஆமா! பங்கஜம். காலைலே மாட்டுக்கொட்டிலுக்கு போனவ இன்னும் வரலே"

"கமலா!"

"கமலாதானே!" என்று சிரித்தாள் கோகிலம்.

"ஏம்மா சிரிக்கிற, நேக்கு ஏதாச்சும் நீ கத்துக் கொடுத்தாதானே?" என்று சுயபாதுகாப்பில் இறங்கினாள் கமலா.

"ஆமாடி! உங்க பாட்டி கத்துக்கொடுத்துதான் நான் சமைக்கிறேனாக்கும்! எல்லாம் அதுவா வரும். டேய்! விடுடா!"

"மாட்டேன்"

"ஈதென்னடி கூத்தாயிருக்கு. சரி! நந்து நீ சமத்தா விளையாடப்போனா சாயந்திரம் பெருமாளுக்கு அம்சியப்பண்ணிட்டு நோக்கு ஏதாவது தரேன். சரியா? தோ பாரு, நாகன் இங்கேயும் அங்கேயும் சுத்திண்டு அலையலறான். நீ எப்ப வருவேன்னு காத்துண்டு இருக்கான். ஓடு!"

நந்து மனதில்லாமல் தனது இரும்புப்பிடியை விட்டான். பையில் கையை வைத்தான். வலது பை ஓட்டை. இடது பைக்குள் கைவிட்டான் பம்பரம் இருந்தது.

பம்பரம் என்பது சாமனியப்பட்ட விளையாட்டில்லை. சும்மாச்சுத்தி விடறது பொண்ணுகள் கூடச் செய்யும். ஆனா, பழையூர்காரப்பசங்க வரும் போது ஆக்கர் வாங்கம விளையாடனும் பாரு அதுதான் சவால். நந்துவிற்கு மதுரையிலிருந்து மஞ்சள் தாத்தா இரண்டு பம்பரம் வாங்கித்தந்திருந்தார். அதில் ஒன்று ஆக்கர் வாங்கியே உடைந்து விட்டது. கட்டை சரியில்லை. பிஸ்கோத்து மாதிரி உடைஞ்சு போச்சு. ஆனா, இரண்டாவது பம்பரம் தேவலை. குத்து வாங்கினாலும் உடையலை. இதெல்லாம் கடையிலே வாங்கினது. ஆனா, இந்த குடியானவ வீட்டுப்பசங்களோடது வேலிக்கருவை மரத்திலேர்ந்து கட்டையெடுத்து கொடஞ்சு செஞ்சது. குத்தினா கூட நம்ம பம்பரத்து ஆணிதான் கோணும். அப்படி வச்சிரக்கட்டை. ஆனாலும் இந்த பசங்களோட பம்பரத்திலே கட்டையைவிட ஆணிதான் பெரிசா இருக்கு. அக்கிரஹாரத்து பம்பரங்களை உடைக்கிறதுக்குன்னே யாரோ செஞ்சு அனுப்பறா.

நந்து நாகன், பாண்டி, குட்ட மணி இவங்களோட விளையாடவே விரும்புவான். ஏன்னா இவனை அந்தக்கூட்டத்திலே அடிச்சிக்க ஆளில்லை. ஆனா, மகாலிங்க ஐயர் பிள்ளை சுந்தர் எங்கேயிருந்தோ ஒரு வானர கோஷ்டியோட வருவான். அவா, அக்கிரஹாரத்திலே இல்லாம ஹோட்டலோடயே இருக்கிறதாலே அவனோட பழக்க, வழக்கமெல்லாம் ஹோட்டல்லே வேலை செய்யற வேலையாள்களோட பசங்களோடதான். அவங்களுக்கு வேலையே அக்கிரஹாரத்து பம்பரங்களை சிதைப்பது, இல்லை உடைப்பது. வட்டம் போட்டு ஆட்டம் ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். பம்பரம் சுழலும் முன் அவனவன் பம்பரமாய் சுழலுவான். உள்ளே மாட்டிக்கிட்டா பம்பரம் குளோஸ். வட்டத்தை விட்டு கிளப்பற போதும் குத்து, பின்னால தவறவிட்டா ஆக்கர் குத்து வேற. எனவே இருக்கின்ற ஒரே பம்பரத்தை தக்க வைத்துக் கொள்ள நந்து பிரமாதமாய் ஆடுவான். பெருமாள் கோயிலுக்கருகில் இருக்கும் தென்னந்தோப்பில்தான் தொந்தரவு இல்லாம விளையாட முடியும். தெருவிலே விளையாண்டா போற வரவா காலைப் பதம் பாக்கிறதுண்டு.

இப்படித்தான் ஒரு நாள் தெருவிலேயே ஆட்டம் சூடு பிடித்து விட்டது. விளையாட்டு மும்மரத்திலே யாரு வரா, யாரு போறான்னு தெரியலே. சுந்தர்விட்ட பம்பரம் வட்டம் தாண்டி தெருவிலே போயிண்டிருந்த கோணக்குண்டி மாமா காலைப்பதம் பார்த்துவிட்டது.

"அட தருதலைப்பசங்களா! ஊரிலே விளையாடறதுக்கு இடமா இல்லே? டேய் நந்து! இதுலே நீ வேறயா? கோகிலத்திட்டே சொல்லறேன்" என்று கத்த ஆரம்பித்தார்.

கோணக்குண்டி நாராயணன் இவர்களுக்கு தூரத்துச் சொந்தம். இரட்டை அக்கிரஹாரத்தின், இன்னும் விவரிக்கப்படாத பகுதியில் இருக்கிறார். கொஞ்சம் இடுப்பு வளைந்து கோணலாக இருக்கும். அப்பவே ஆள் ஆஜானுபாவாக உசரமா இருப்பார். பார்க்க லட்சணமாய் திருமண் இட்டுக்கொண்டு வந்தாலும் முன்னும் பின்னும் ஆள் கிட்ட வரமுடியாதவாறு நாராயணன் குசுப்போட்டுக் கொண்டே நடப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் தெரு முனையில் ஆரம்பித்து அடுத்த முனைவரை கூட விடாமல் விடுவார். பசங்களெல்லாம் இந்த வேடிக்கை காணக் கூட வரும். மாமாவுக்கு இன்னும் குஷியாகிவிடும். சத்தம் பெரிதாகும்.

"டேய்! நாராயணா! ஏண்டா எங்களை இப்படி இம்சை பண்ணறே. அப்படி என்னதான் உன் ஆத்துக்காரி சமைச்சுப்போடறா? இப்படி ஏவுகணைகளைத் தொடுத்துக் கொண்டே போறயே?" என்று சிலர் கேட்பதுண்டு.

ஆனால் கோ.கு.நாராயணன் செய்யும் தொழிலே தெய்வமென்று படு கவனமாக காரியத்திலே கண்ணாக இருப்பார். யாருக்கும் அவர் பதில் சொல்லி நந்து பார்த்ததில்லை.

Mind your Language!

நான் படித்த கிராமத்து சூழலில் தமிழில் பேசுவது, படிப்பது இயல்பாகவே இருந்தது. பள்ளி மாணவர்களின் அறிவியல் பசிக்கு விருந்தாகக் கோயம்புத்தூரிலிருந்து வரும் "கலைக்கதிர்" இருந்தது. ஆழிப்பேரலைகள் பற்றி வந்திருந்த அறிவியல் கட்டுரைகளைப் படித்த போது எழுந்த வியப்பு இன்றும் அடங்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் நானே கலைக்கதிருக்கு எழுதுவேன் என்று அப்போது நினைக்கவில்லை. ஆனால் தமிழில் அறிவியல் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அந்தச் சின்ன நூலகத்தில் உருவாகியிருக்கிறது. பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வரும் போது ஒரு பெருத்த "கலாச்சார தாக்குதல்" நடக்கிறது. தமிழிலிருந்து ஆங்கில மீடியத்திற்கு மாறுவதுதானது. இது வெறும் மொழி மாற்றம் என்பதோடு நிக்காமல் இவனை/இவளை ஒரு புதிய பாசாங்குத்தனம் நிறைந்த, மேட்டிமைத்தனம் நிறைந்த, போலிகள் நிறைந்த, ஒரு சூடோ ஆங்கில உலகிற்கு இட்டுச் செல்கிறது. இந்தக் கலாச்சார தாக்குதலிலிருந்து இவன் பின் வாழ்வாள் முழுவதும் விடுபடுவதே இல்லை.

கொரியாவில் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தனியாக யாகூ குழுமம் நடத்துமளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் அது ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகிறது. Happy Maattuppongal என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்புவது வேடிக்கையாக இல்லை அதன் பின்னாலுள்ள பாசாங்குத்தானம் ஏன் தமிழர்களுக்குப் புரிவதில்லை? தமிழில் மடலாடற் குழுக்கள் நடத்தமுடியும் என்று அவர்களுக்கு வழிகாட்டினேன். ஆனாலும் தமிழனுக்கு தமிழில் பேசுவதில் பெருத்த கூச்சம் இருப்பது எதனால் என்று புரியவே இல்லை.

வெண்ணை போன்ற நிறமுடைய அழகிய தமிழ் நர்தகிகள் தங்கள் கொஞ்சும் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தமிழ் கலையான பரதத்தை விளக்குவது போன்ற மேட்டிமைத்தனம் உலகில் எங்கும் காணமுடியாது. இது ஒண்ணும் ஐ.நா சபையல்ல. இணையத்தமிழ் 2002 மாநாட்டு நிகழ்ச்சி. சான்பிரான்சிஸ்கோ நகரில். தாங்க முடியாமல் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன் என் ஆதங்கத்தை. இது என்னைய்யா பாசாங்கு? அருணாச்சல கவி தமிழில் ராமநாடகம் எழுதுகிறான். அதைத்தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் இந்த நர்தகி விளக்குகிறாள். மக்கு போல் நம்ம ஜனங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. கொடுமை! கொடுமை!!

சரி, இதிலாவது இந்த மேட்டுக்குடி ஆங்கிலம் கேட்கக்கூடியதாக பிழையில்லாமல் இருக்கிறது. நம்ம ஆட்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும், எழுத வேண்டுமென தமிழ் குழுமங்களில் வேலை மெனக்கெட்டு செய்யும் கொடும் ஆங்கிலம் ( x கொடுந்தமிழ்) இருக்கிறதே! தமிழில் சீத்தலைச் சாத்தனார் போல் ஆங்கிலத்தில் யாராவதொருவர் இருப்பார். அந்த மகானுபாவன் இருந்தால் உடம்பெல்லாம் ரத்தம் வழியும். ஏன் நாம் அழகு தமிழை விட்டு ஆங்கிலத்தைக் கொலை செய்ய வேண்டும். தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதை ஆவணப்படுத்த வேண்டும். Mind your language (BBC) க்கு நல்ல தீனி கிடைக்குமளவிற்கு கேலிக்கூத்தாய் இருக்கும்!

ஒருமுறைச் சென்னையில் திரு.மாலன், திரு.சுஜாதா, முனைவர்.நா.கோவிந்தசாமி கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழில் பேச வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னேன். சுஜாதா அவருக்கேயுரிய கிண்டலுடன், 'வெளிநாடு போனவுடன் நம்மவருக்கு தமிழின் மீது பக்தி வந்துவிடுகிறது' என்றார். தமிழில் பேசினால் ஒரு இளக்காரம். அவர்கள் எனக்கு ஆங்கிலம் வராது போலும் என்று எண்ணிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் எனது கருத்து முழுவதையும் நான் நல்ல ஆங்கிலத்தில் சொன்னேன். அப்போது சிலருக்கு உறைத்தது! இதுபோல் பேரா.ஞானம், பேரா.ஆனந்தவல்லி கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் (மதுரைப் பல்கலைக்கழகம்) தமிழ்க் கல்வி பற்றிச் சொன்னேன். எல்லோருமே எளிதாகத் தமிழில் பேசுவதை விட தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவதையே விரும்புகிறார்கள்.

எனக்கு ஆங்கில மொழி பிடிக்கும். எந்த மொழி கற்றுக் கொண்டாலும் அதைக் கவனமாய் கற்றுக் கொள்ள வேண்டும். பிழையின்றி எழுத, பேசப்பயில வேண்டும். முடிந்தவரை ஆங்கிலத்தை ஆங்கிலேயருடன் பேசி, ஆங்கில இதழ்களை வாசித்து நமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் செய்வதெல்லாம் ' ஏற்கனவே குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற நம்ம ஆள்ட்ட ஆங்கிலம் கற்று, அவனிடமே குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்'. இவர்கள் ஆங்கிலம் என்னைக் கொல்கிறது.

மாற்று இல்லாமல் இல்லை. இதற்கான ஒரே மாற்று தாய்மொழியில் பேசி, எழுதுவதுதான். ஆனால் சிக்கல் என்னவென்றால் இவர்களுக்கு தமிழும் வராது. எனவே தப்பும் தவறுமாய் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழில் எழுதுவதைவிட மேல் என்று எண்ணுகிறார்கள். என்ன செய்வது.

நாம் பயப்படாமல் தமிழில் எழுத வேண்டும். நல்ல தமிழ் இலக்கணம் அறிந்த பல நல்ல இணைய நண்பர்கள் நம் தவறுகளைத் திருத்தத்தயாராக உள்ளார்கள். கற்றல் என்பதில் கூச்சம் கூடாது. 80 வயதில் தமிழ்க் கவிதை கற்றுக் கொள்கிறேன் என்று வந்த சமிஸ்கிருத ஆசிரியர் பற்றி நண்பர் ஹரிகிருஷ்ணன் எழுதியிருந்தார். That's the spirit!

The Ground

இன்று பூசான் நகரிலிருந்து வந்து கொண்டிருந்தேன். நீண்டு நெடிய தீவாக நாக சர்பம் போல் வளைந்து, வளைந்து கூடவே எனது கோஜே தீவு வந்து கொண்டிருந்தது. இது இவ்வளவு நீளமென்று இன்றுதான் புரிந்தது. பூசான் போகும்வரை சின்னைச் சின்ன தீவுகளாக பல நூறு. தீவு என்பது கடலால் சூழப்பட்டது. நிலப்பாதை இல்லாதது. நீர் மார்க்கமாக மட்டுமே போகக்கூடியது.

எங்கிருந்து இத்தனை தீவுகள்? இவையெல்லாம் நீரில் பூத்த புஷ்பங்களா? வெளியே, நீர்பரப்பிலிருந்து பார்க்கும் போது எல்லாம் தனித்தனித்தீவாய் தொடர்பற்று....

ஆனால் அறிவியல் புரட்சி நடந்த சென்ற இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் கடலாய்வு எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. Sonograph, ecolocation போன்றவை கொண்டு கடலின் ஆழம், அதன் அடி நில அமைவு இவை அனேகமாக உலகக்கடல்கள் அனைத்திற்கும் அறியப்பட்டுவிட்டன. அது என்ன சொல்கிறது? தீவு என்னும் விளக்கம் உண்மையில் சரியில்லை ஏனெனில் நிலப்பரப்பு அனைத்தும் அடியில் தொடர்புடையனவாக உள்ளன. அதாவது நிலத்தில் மலைத்தொடர்களைக் காண்கிறோம் இல்லையா? அதுபோல், கடலிலும் மலைகள் உள்ளன. ஆனால் நீர் சூழ்ந்துள்ளதால் அதன் நுனி மட்டுமே நமக்குத்தெரிகிறது. அதை நாம் தீவு என்கிறோம். உலகின் நீர் வற்றிவிட்டால் நிலவு போலோ அல்லது செவ்வாய் போல் மலைகள் சூழ்ந்த ஒரே நிலப்பரப்பு மட்டுமே இருக்கும்.ஆக, அறிவியல் ஆய்வால் நிலங்களுக்குள் உள்ள ஆதித்தொடர்பு நிருவப்பட்டுவிட்டது. ஆர்டிக், அண்டார்டிக் பனி உருகினால் இன்னும் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் போகும். இப்படித்தான் சென்ற பனிக்கால உருகலில் பூம்புகார் உள்ளே போய்விட்டது. இப்போதுள்ள தரைக்கு 23 மீட்டர் தூரத்தில் அது நீருக்கடியில் கிடக்கிறது.

பூமி ஒரு நீர்க்கோளம். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் அழகாகச் சொல்கிறான். அது இருக்கட்டும் நம்ம கம்பன் தஞ்சாவூர்காரன். வயல் தவிர கடல் பார்த்திருக்க வாய்பில்லை. இல்லை கடல் பார்த்திருந்தாலும் பல்வேறு தீவுகளுக்குப் போயிருக்க வாய்பில்லை. ஆனால் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. எங்கள் கோஜே தீவெல்லாம் நீரால் சூழ்ந்தது மட்டுமல்ல அது பரதனுக்குச் சொந்தமென்று கைகேயி வாயிலாக நமக்குச் சொல்கிறான்.

"ஆழி சூழ் உலகலாம் பரதனே ஆள!" என்பது அவள் ராமனுக்கு இடும் கட்டளை. கைகேயி அளவுக்கு (ஒரு குடும்பப்பெண்) உலகம் நீரால் சூழ்ந்தது என்னும் அறிவு அவர்களுக்கு இருந்திருக்கிறது. எப்படி இந்த அறிவு சித்தித்தது. உலகம் சுற்றிய வாலிபர்கள் ராமன் காலத்திலேயே உண்டா? கவனிக்க வேண்டும். மேலாகப்பார்க்கும் போது இல்லாத தொடர்பு ஆழமாய் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் புரிதல் அறிவியல் செய்துதான் வரமேண்டுமென்றில்லை.

அது வெறும் தொடர்பின் காரணமாகவே புரிய வரும். குழந்தைக்கு மூச்சா வருகிறது! அம்மாக்காரி சட்டுனு குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கிவிடுவா? அது ஒரு சொட்டு ஒண்ணுக்கு போனப்புறமல்ல. அதற்கு முந்தி!! அது ஒரு தொடர்பு. ஒரு காலத்தில் அது அவளின் ஒரு பாகமாக இருந்த ஒன்று. பின்னால் செயற்கையாக துண்டிக்கப்படுகிறது. எனவே ஆதித்தொடர்பின் காரணமாக வாய் பேசாமலே அது அம்மாவிற்குப் புரிகிறது. அட, அது என்ன? சம்மந்தமே இல்லாத ஆள் யோசிச்சுட்டு இருக்கிறது சட்டுனு நமக்குச் சில நேரம் புலப்படுவது இல்லையா? அது எப்படி நிகழ்கிறது? நம் எல்லோரையும் ஏதோ ஒன்று சூசகமாக பிணைத்திருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது தொடர்பு தெரிய மாட்டேன் என்கிறது!

அந்தப் பிணைக்கும் கயிறை. ஆதிக் கொடியை. தொப்புள் கொடியை உணர்வால் புரிந்து கொள்ளமுடியுமா? முயன்று பாருங்களேன் :-)

லா.ச.ரா

இணையக் கொழுந்துகளுக்கு இந்தப் பெயர் எவ்வளவு பரிட்சயம் என்று தெரியாது. ஆனால், நான் நவீன தமிழ் இலக்கியத்தை சீரியசாக எடுத்துக் கொண்டபோது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு எழுத்தாளர்களில் இவர் ஒருவர். இன்னொருவர் தி.ஜானகிராமன். பள்ளி நாட்களிலே சுஜாதா தெரியுமென்றாலும் அது வசந்த்-கணேஷ் type excitement-க்குத்தான். ஆனா, பின்னாடி கணையாழி வாசிக்க ஆரம்பிச்ச பிறகுதான் தெரிந்தது எனக்குப் பிடித்த சுஜாதாவுக்கு இவர் inspiration-ன்னு. லா.ச.ராவை ஒண்ணுவிடாம வாசிச்சபிறகு அவர் மதுரைப் பல்கலைக்கழகம் வந்தார். உயிரியல் துறையிலிருந்து தமிழ் டிபார்ட்மெண்டை யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க. நான் அப்ப ஒரு odd man out!.

கரு, கருண்ணு புருவம். முகமெல்லாம் வெறும் புருவம்தான். நிறையப் பேசினார், ஆனா நெத்தியடியா விழுந்தது, "லா.ச.ரா இனிமே நிறைய எழுதுவான்னு நினைக்க வேண்டாம். எதுக்கு சும்மா வார்த்தைகள் எச்சில் பட்டு அதோட புனிதத்தை இழக்கணும்? ஒரே ஒரு புள்ளி. அதுலேயே நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்கணும்". ம்..ம்..மறக்கக் கூடிய வசனமா இது? ஆனா அதுக்கப்புறமும் நிறைய எழுதினார். ஆனா குறைந்து கொண்டே வந்தது. இப்போ முற்றுப்புள்ளிக்கு பக்கத்துலே நிக்குது.சென்னை போன போது என் மருமான் சொன்னான், "ஏய்! கண்ணா (மாமாவுக்கு என்ன மரியாதை வீட்டிலேன்னு பாருங்க!) லா.ச.ராவை பாக்க வரேயா? அவர் வீட்டுக்கு பக்கத்திலேதான் ஜானு இருக்கான்னான். (யாரு இந்த ஜானுன்னு இப்ப சொல்ல மாட்டேன் ;-). சரின்னு சொல்லிட்டு லா.ச.ராவுக்கு ஒரு கார்டு போட்டேன். அவருக்கு இன்ன தேதி தோதுப்படுமான்னு.

மேலே இருக்கிற படத்திலே இருக்கிற மாதிரியே இருந்தார். ஏதோ சித்தர்கிட்ட வந்த மாதிரி இருந்தது.

"நீர் வைஷ்ணவரோ?"

இதுதான் முதல் கேள்வி. நெத்தியைப் பாத்துண்டேன். ஏதாவது தெரியாத்தனமா திருமண் இட்டுண்ண்டு போயிட்டோ மோன்னு. இல்லையே! பின் எப்படி?

"ஒண்ணுமில்லே! கடுதாசியிலே "தோதுப்படுமான்னு" கேட்டிருந்தேள். அது வைஷ்ணவ பாஷை" அப்படின்னு சொன்னார்.

சரிதான் இவர் ஷெர்லாக் ஹோம் டைப் சித்தர்ன்னு நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தோம். மத்தியானத்திலிருந்து சாயந்திரம் வரை பேசினோம். விட்டுப் பிரிய மனசே இல்லை.

"சார், உங்கள சேவிச்சுட்டு போகலாம்ன்னு நினைக்கிறேன்" அப்படின்னு சொன்னேன்.

"பேஷா! வாங்க உள்ளே என்று கூட்டிக்கொண்டு போனார். அதுவரை அவரது பிரத்தியேக எழுத்தறையிலிருந்தோம். ஹாலில் சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தபோது இவரைக் குடும்பத்துடன் எடுத்த அட்டைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. குழந்தை போன்ற உற்சாகத்தில் போட்டோ வைக் காண்பித்தார். உள்ளிருந்து மாமியும் வந்து சேர சேவித்தோம். அப்படியே சிவப்பழம். கையில் விபூதித்தட்டுடன் இருக்கும் போது எத்தனை முறை வேண்டுமானாலும் சேவிக்கலாம் போலிருந்தது. விபூதி இட்டு விட்டார்.

"கண்ணன் பிரியவே மனசு வரலே. இப்ப வந்த உறவு மாதிரி இது தெரியலே. உங்கள எனக்கு ஏற்கனவே தெரியும்" அப்படின்னார்.

இதுதான் அவரோட mystical touch!

அவர் எழுத்திலே பரவியிருக்கிற magical realism!..அவரது "முற்றுப் பெறாத தேடலில்" ஒரு சம்பவம் வரும். அதில் அவரோட லால்குடி அம்பாள் கருப்பா மூக்கு முழி எல்லாம் அபிஷாகம் பண்ணிப் பண்ணி அழிஞ்சு போய்..மழுக்குன்னு கருப்பா. திடீர்ன்னு இவரோட பாட்டி, தாத்தா...ஏன் எல்லோரும் ஒவ்வொன்னா குதிக்க ஆரம்பிப்பாங்க. அப்பதான் அவருக்குப் புரியும் 'உலகத்திற்கு ஒரே தொப்புள்கொடி'ன்னு.

இதுவொரு ஆன்மீகப் புரிதல். இதுவொரு அநுபவம். அது ஆளையே மாத்தற அனுபவம். இதையும், நம்மாழ்வாரோட கீழ்க்கண்ட வரியையும் பாருங்கோ...

"உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே"

லா.ச.ரா திருவாய்மொழி வாசிச்சு இருக்க சான்சே இல்லை. ஆனா, அதே புரிதல்.

ஏன்னா, உலகுக்கு ஒரே ஒரு தாய், தந்தைதான் உண்டு. அவன் பெயர் இறைவன்.


உளன்எனில் உளன் அவன் உருவம்இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அருவம்இவ் வுருவுகள்
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன்இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே
- திருவாய்மொழி

இவ்வளவு நாள் நான் எந்த மேற்கோளும் காட்டாமல் பேசிவந்தேன். இன்றோடு இத்தொடர் நிறைவுரும் தருவாயில் என்னப்பன் நம்மாழ்வாரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் இறைமை பற்றி மிக விரிவாகப் பேசினாலும் இந்த ஒரு பாசுரத்தை எடுத்துக் கொள்வோம். அது கொஞ்சம் பொருந்துமென்று தோன்றுகிறது.

ஒருவர் இறைவன் உண்டு என்று சொல்கிறார். இன்னொருவர் அவன் இல்லை என்று சொல்கிறார். உண்மை என்ன? என்று கேட்டால், எவன் உண்டு என்று சொல்கிறானோ அப்போது உருவத்தோடு இருக்கும் அனைத்தும் அவனது தூல சரீரமாகிறது. இலன் என்று சொன்னாலும் அவன் உள்ளவனே, ஏனெனில் உள்ளவை எனும் பொருட்களுக்கே தோன்றுகின்ற வேறுபாடுகள் இருக்கும். நீர் உள்ளது. காணக்கூடியதாயுள்ளது. ஆனால் நீராவியாய் இருக்கும் போது தோற்றவேறுபாடு உள்ளதே தவிர அது இல்லை என்று ஆகிவிடவில்லை. எனவே இல்லையென்னும் போது நாம் காணமுடியாத பொருட்களை சூட்சும சரீரமாக அவன் கொண்டுள்ளான் என்று பொருள். எனவே உளன், இலன் என கூறப்படும் இவை அவனது இயல்பான குணங்களாக அமைகின்றன என்றறிக. உருவம், அருவம் எனும் தூல, சூக்குமப் பொருள்களையுடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப் பரந்து இருக்கின்றவனே இறைவன் ஆவான்.

திருவாய்மொழியிலிருந்து முதல்பத்து எடுத்து ஆராய்ந்தாலே பல விஷயங்கள் தெள்ளத்தெளிவாய் விளங்கும். ஆனால் அதை அவரவர்க்கு விட்டுவிடுகிறேன். திருவாய்மொழி மதுரைத்திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

நான் இதுவரை பேசியது என் புரிதலில் அகப்பட்டவை மட்டும். புரியாத விஷயங்கள் இன்னும் பலவுண்டு. இவரது கடைசிக்கேள்வியில் பல விஷயங்கள் இதிலடங்கும். எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆன்மீக விஷயங்கள் எப்போதும் என் ஜீவனை தளிர்ப்பிக்கின்ற குணமுடையதாய் இருப்பதால் நான் மகிழ்வுடனே இதை அநுபவித்தேன். உஷாவுக்கு இதை என்னிடம் ஏன் கேட்க வேண்டுமென்று தோன்றியதோ! The pleasure was mine. Thanks.

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 012

தான் அடைந்த ஞானத்தை (அடைந்ததாக நினைத்ததை) பிறருக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா? அதாவது ஞானமார்க்கம் இதுதான் என்று வழிக்காட்ட முடியுமா?

முடியுமென்று தோன்றுகிறது. ஆனால் அதற்கு சில முன்னாக்கங்கள் தேவைப்படுகின்றன. முதலில் நாம் மொழியை 'செந்தரமாக்கி'க்கொள்ளவேண்டும். கணிதம் ஒரு மொழி. அதில் ஆரம்பிக்கும் முன் a=so and so, b=so and so, the relationship between a and b is so and so என்று நிருவிக்கொள்வர். அதன் பின்தான் கணக்கே ஆரம்பிக்கும். இல்லையெனில் அடுத்தாளுக்கு ஒண்ணும் புரியாது. நாம் இதை இன்னும் செய்யவில்லை. தீ சுடும் என்றால் உங்களுக்குப்புரியும். ஏனெனில் தீயின் சூடு பற்றிய முன்னனுபம் உங்களுக்கு உண்டு. இந்த அனுபவம் பெறாதவரை 'தீ சுடும்' என்பது வெறும் வார்த்தை. அனுபவப்பின்புலம் இல்லை. இது மொழியின் குறைபாடு. மொழி என்பது ஒரு abstraction. மரம் என்னும் சொல் மரமல்ல. மரத்தின் abstraction. கலிபோர்னியாவிலுள்ள சிவப்புமரங்களைப் பார்த்திருக்கிறீர்களாவென்று தெரியாது. புத்தன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மரங்களெல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகின் அற்புதம் அவை. ஆனால் செம்மரம் என்று சொல்லும் போது அது உங்களுக்கு வெறும் சொல்லாகவே படும் - நீங்கள் அவைகளைக் கண்டு அனுபவித்து இராதவரை. எனவே இறைவனுபவம் என்பதை வார்த்தைக்குள் வடிக்கமுடியாமல் இருப்பது மொழியின் குறைபாடே தவிர இறைமையின் குறைபாடல்ல. ஔவை இதை 'சொற்பதம் கடந்த அற்புதம்" என்கிறாள். மொழியின் இக்குறைபாடே இறைத்தேடலை 'மாயமான் வேட்டை' என்றாக்குகிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஞானவான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரை 12 வயது முதல் படித்துவரும் எனது நண்பன் பெர்னாடு சொல்வான் அவர் ஒரு நிலைவரை வருகிறார் அதன்பின் 'அம்போ' என்று விட்டுவிடுகிறார் என்று. ஜே.கே அடிக்கடி சொல்வார் நான் ஆற்றங்கரைவரைதான் உன்னை எடுத்துச் செல்ல முடியும். நீந்திக்கடக்க வேண்டியது உன் பொறுப்பு என்று. இங்குதான் சுயதேடல் முக்கியப்படுகிறது. எவ்வளவுதான் நான் சொன்னாலும் கேட்பவர் சுய முயற்சியில் ஒரு ஆர்வத்துடன் இதில் ஈடுபடவில்லையென்றால் ஒன்றும் நிகழாது. இது முதலில் சுவாரசியமாகப்படவேண்டும். ஒரு ஆர்வம் இருக்க வேண்டும். ஒரு தேவை இருக்க வேண்டும். இது பற்றியெல்லாம் முன் அபிப்பிராயங்கள் (மாயமான் வேட்டை போன்ற அல்லது பிற நாத்திக வாதங்கள்) நிரம்பிக்கிடந்தால் ஞானத்தேடல் வெற்றி பெறாது. பௌத்தத்தில் சொல்வது போல் முதலில் குடைத்தைக் காலி செய்ய வேண்டும். பாரதி பேசுவது போல் அருளெனும் வெள்ளம் பாயும் பள்ளமாக நம் உள்ளம் இருக்கவேண்டும். அதற்குத்தயாராகதவரை ஒன்றும் நிகழாது. இதையெல்லாம் உணர்ந்துதான் இந்தியாவின் ஆகச்சிறந்த ஞானியான ஆதிசங்கரன் கடைசியில் "பஜ கோவிந்தம் மூடமதே" என்று சொல்லிப்போனான். ஞானமார்க்கம் ஒரு அளவுவரைதான் இட்டுச் செல்லும். அதன்பின் பக்தியும், அது தரும் அநுபவமும் இறைமைக்கு இட்டுச் செல்லும். உணர்ச்சிவசப்படாமல் இந்த அனுபவத்தைப்பெறமுடியாது. ஒரு மனைவி தன் கணவன் தொடும்போது எப்படி நெகிழ்கிறாளோ அதுபோல்தான் இதுவும். எப்படி உணர்ச்சி இல்லையெனில் கணவன்-மனைவி உறவு மரத்துப்போகிறதோ அதுபோல் உணர்ச்சியற்ற அணுகுமுறையில் இறைவனை உணரமுடியாது. முடிந்தால் இன்று இ-சுவடியில் வந்துள்ள பாசுர மடல் வாசியுங்கள். பக்தி இலக்கியம் தமிழின் ஆகப்பெரிய சொத்து. அதோடு நாம் பரிட்சியப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 011

சமயம், ஆன்மீகம் இவற்றால் மனித குலத்திற்கு நன்மை ஏற்பட்டதா, தீமை ஏற்பட்டதா? இது எல்லாம் வேண்டாம், உன் வேலையை பார்த்துக்கொண்டு போ! என்று சொல்வதில் என்ன அலுப்பு தெரிகிறது? அலுப்பு எப்பொழுது ஏற்படுகிறது தெரியுமா, இல்லாத ஒன்றை மாயமானை தேடி அலைகிறார்களே அவர்களைப் பார்க்கும்போதுதான் அலுப்பு ஏற்படுகிறது!

மதம் என்பது அபின் என்றான் மாசேதுங். வேடிக்கை என்னவென்றால் நாஸ்திக கம்யூனிசம் ஒரு மதமாகிப்போனது :-) இப்படியே உஷா பேசிக்கொண்டிருந்தால் அவருக்கு ஒரு கோஷ்டி உருவாகி உஷானந்தாஜி-யாகி அவர்கள் உபதேசங்கள் அடுத்த நூற்றாண்டில் மதமாகிப் போகலாம். எம்ஜியார் பெரியார் கட்சி. அவர் சமாதிக்கு செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்கிறார்கள். பெரியார் மேல் அதி தீவிர பக்தி வைத்திருக்கும் பலரை எனக்குத்தெரியும். ஜெர்மனியில் எனக்கொரு ஈழத்து நண்பர். அவர் 'அக்மார்க்' மார்க்சிஸ்ட். அவருக்கு எல்லாமே மார்க்சியப் பார்வையில்தான் விளக்கமுடியும். அது ஐன்ஸ்டைன் கடைசிவரை நிறுவ முயற்சித்த "general theory of relativity" போல் சகலத்தையும் மார்க்சிசம் விளக்கிவிடும் என்று நம்புகிறார். அவருடன் பேசும் போது ஏதோ விசேஷ சுவிஷேசப் பிரசங்கம் கேட்கும் போது இருக்கும் ஒரு பரவசம் இருக்கும். :-))

எனவே இதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வோம். மதம், சமயம் என்பதற்கும் enlightenment-ற்கும் தூரத்து உறவுதான். ஆன்மீகத்தெளிவுடன் மதப்பற்று இல்லாமல் இருக்கலாம். நான் மிகவும் போற்றும் வடலூர் வள்ளலார் "மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று சொல்கிறார். ஆனால், ஒரு கிருபை காரணமாக பல ஞானிகள் இப்படிச் சொல்வதில்லை.

சமயங்களினால் நிறையக் குழப்பம் நிகழ்ந்துள்ளது உண்மை. ஹிட்லர் ஒரு பக்கா கிறிஸ்தவன். சைவன் (அதாவது vegetarian:-). ஒசாமா பின் லாடன் 'அக்மார்க்' முஸ்லிம். நம்ம cow boy புஷ் நாகரீகமான கிறிஸ்தவர். பால் தாகரே! சுத்த இந்து. காந்தியைச் சுட்டவன் கூட இந்துமதத்தைச் சீர்தூக்கவே அதைச் செய்ததாகச் சொன்னான். இவர்கள் பேசும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஸ்நானப்பிராப்தி கிடையாது.

கிறிஸ்தவ-இஸ்லாம் யுத்தம், பௌத்த-இந்து யுத்தம், காதோலிக்-புரோட்டஸ்டண்ட் யுத்தம், கிறிஸ்தவ/இஸ்லாம்-யூத யுத்தம், சைவ-வைணவச் சண்டைகள் என்று மனித அழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உலகப்போர்களில் செத்தவர் எண்ணிக்கையைவிட சமயச் சண்டையில் செத்தவர் எண்ணிக்கை கூடுதல் என்பதுதான் கணக்கு. ஆனால், மதம், சமயம் இல்லையென்றாலும் கூட மனிதர் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர் என்கிறார் கார்ல் சாகன்.

அதனால்தான் சொல்கிறேன் இறைமை பற்றிய ஆன்மீகத்தெளிவு ஒவ்வொருவருக்கும் அவசியம். அப்போதுதான் நமகுள்ள உறவு புரியும். அதன் சிறப்பு புரியும். வாழ்விற்கு பொருள் தருவது ஆன்மீகம்.

சமயங்களை ஒரேயடியாக என்னால் புறக்கணிக்கமுடியாது. ஒரு தஞ்சைக் கோயில் இல்லையென்றால் தமிழகம் வறுமையுற்றிருக்கும். ஒரு தியாகராஜர், ஒரு புரந்தரதாசர் இல்லையெனில் தமிழிசை வறுமையுற்றிருக்கும். பக்தி இலக்கியம் இல்லையெனில் தமிழே வறுமையுற்றிருக்கும் (கம்பனில்லாத தமிழ் என்ன தமிழ்?) சமயத்திற்கு ஆக்க சக்தி உண்டு. அந்தப் பிரம்மாண்டமான தேவாலயங்கள் இல்லாத ஐரோப்பா என்ன ஐரோப்பா? எனவே, இங்கு கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது மனித மனம் சார்ந்த ஆராய்ச்சியே தவிர சமயம் சார்ந்த ஆராய்ச்சியல்ல!

'மாயமான்' பற்றி முன்பே தெளிவுறுத்திவிட்டேன். ஆன்மீகம் சொல்வது எல்லைக்கல் (destination) பற்றியல்ல. பயணம் பற்றி. எனவே மாயமான் வேட்டை இதற்குப் பொருந்தாது.

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 010

(பின்னூட்டத்திலிருந்து) அப்பா! ஒரு ஆளாவது தேறினாரே! உறுதியாய் செய்யும் செயலில் நம்பிக்கை, குழப்பமில்லாமனம் இவர்களுக்கு கடவுள் தேவையில்லை. இதுதான் செய்யும் தொழிலே தெய்வம்.உம்- காசியின் தாய்!

இங்கு சில விஷயங்களை தெளிவு செய்து கொள்ள வேண்டியுள்ளது. கடவுள் என்பதை ஒரு பெரிய pre-occupation போல் பார்த்தால் இந்த மாதிரி விளக்கங்கள் தேவையாகின்றன. அதுவொரு புரிதல். ஒரு தெளிவு. ஒரு பொருளாதல். ஒரு தனி மனிதனுக்கும் இப்பிரபஞ்சப் படைப்பிற்குமிடையே நடக்கும் விசேஷ உரையாடல். அது மூடநம்பிக்கையில்லை. நான் காசி சொன்ன படகிலிருந்தால் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கமாட்டேன். உண்மையில் என் பெண் சிறுமியாய் இருக்கும் போது ஜப்பானில் அவளை ஒரு படகில் வைத்து ஆழத்திற்குப் போனபின் துடுப்பு நழுவி நீரில் விழுந்துவிட்டது. மெதுவாகப் படுத்து இரண்டு கைகளாலும் துடுப்பு போட்டு கரையேறி விட்டேன். குழந்தை இதுவொரு விதமான படகு ஓட்டுதல் என்று சிரித்துக் கொண்டு இருந்தது. Enlightenment என்பது ஒரு நிலை. அதன் பிறகு உங்கள் பார்வை மாறுகிறது. உலகத்துடனான உங்கள் உறவு மாறுகிறது. உள்ளத்தில் ஒரு புதிய ஊற்று -அடைபட்ட ஊற்றுக்கண்கள் விடுபட- சுரக்க ஆரம்பிக்கிறது. இவையெல்லாம் கடலுக்குள் வெடிக்கும் எரிமலை போல் உள்ளுக்குள் நடப்பவை. வெளியே அதே மனிதன். அதே தொழில். அதே காரியங்கள். எந்த மாற்றமும் தெரியாது. ஆனால் நடந்து முடிந்த இராசயன மாற்றத்தை இதுபோல் இராசயனம் நடந்த ஆசாமிகளால் பேசாமலே புரிந்து கொள்ளமுடியும். அது கூட ஒரு சின்ன புன்னைகையில் முடிந்து போகும். கடவுள் என்பது ரொம்பவும் பகுத்தறிவான விஷயம். ஆனால் அதன் பௌதீகம், இராசயனம் இப்பதான் அறிவியலின் பிடிக்குள் இப்போதுதான் வந்து கொண்டிருக்கிறது. என்னால் உங்களையெல்லம் விட rational-ஆகப் பேசமுடியும். நான் ஏதோ இங்கு குடுமி வைத்துக் கொண்டு சமயப் பிரசங்கம் செய்வதாக மறந்தும் நினைத்து விடாதீர்கள். இளமையில் நான் துள்ளாத துள்ளலா? அதுவொரு காலம்! வாழ்வு கற்றுத்தருகிறது. உங்களுக்கும் அது நிகழும். இன்னும் இருபது வருஷம் கழித்து இந்தப் பக்கம் வந்து மீண்டும் வாசித்துப் பாருங்கள். வித்தியாசம் புரியும் :-) (காசியின் தாய்க்கு ஒரு கடவுள் தேவைப்பட்டிருக்கும். அவர்களிடம் கேளுங்கள்!)

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 009

சமயங்களின் நீட்சிதானே ஆன்மீகம்?

இங்கு ஆன்மீகம் என்னும் பதம் Spiritual என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமயம் என்பதை Religion என்று சொல்வோம். உலகிலுள்ள சமயங்களின் வளர்ச்சியைப் பார்த்தீர்களெனில் அவை தனி மனிதரின் spiritual enlightenment-லிருந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். உலகின் மூத்த சமயமான இந்து தர்மம் ரிஷிகளின் ஆன்மீகத் தெளிவிலிருந்து பிறக்கிறது. இத்தனிமனிதர்கள் சமூகக் கட்டமைப்பின் எந்த படி நிலையிலிருந்தும் வரலாம். வேதத்தைத் தொகுத்த வியாசர் மீனவர். திருவாய்மொழி அருளிய நம்மாழ்வார் வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் கண்ட உண்மையின் பிரகாசம் ஒளிவிடும் போது அடியார்கள் இயல்பாக வந்து சேர்கிறார்கள். திருக்கூட்டம் அமைகிறது. யேசு என்ற தனி மனிதரின் உள்ளொளியை வைத்து கிறிஸ்தவம் பிறக்கிறது. முகமது நபியின் தரிசனங்கள் இஸ்லாம் பிறக்கக் காரணமாகிறது. எனவே சமயத்தின் நீட்சியல்ல ஆன்மீகம். பின்னதின் நீட்சியே முன்னது.

தமிழ் மறைகள் இப்படிப் பிறந்தவையே. இவைகளை அருளிச் செயல் என்று சொல்கிறோம். இதில் காணும் அளப்பரிய உண்மைகளை மக்களிடன் இட்டுச் செல்ல ஆச்சரியர்கள் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தத்துவாசிரியர்கள். அருளிச் செயல்களில் பொதிந்துள்ள தத்துவங்களை விளக்கப்படுத்துகின்றனர். தத்துவங்களை பரவலாக்க புராண, இதிகாசங்கள் பிறக்கின்றன. இப்படிப் பல நிலைகளில் ஒழுங்கமைப்பட்ட உண்மை கோயில்களில் குடிபோகிறது. கோயில்களில் வழிபாடுகள், பிரசங்கங்கள் முதலியவை அருளிச் செயல்களின் அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல முயல்கின்றன. இச்செயல்களால் உந்தப்பட்டு பல தனிமனிதர்கள் ஆன்மீகப்பாதையில் போனதுண்டு. ஆயினும் ஒரு நீர்த்துப்போன நிலையிலே உண்மை அங்கு நிற்கிறது. எனவேதான் கோயில்கள் ஆன்மீகப்பாசறையாக அமையாமல் அரசியல், சமூகக் கட்டுமானப் பாசறையாக அமைந்து விடுகின்றன. சோழர்கள் கோயில்களை அரசியல் மையங்களாவே பாவித்தனர். அரசியல் இருப்பிற்கு சமூகப் பிரிவுகள் அவசியமாகின்றன. உழைப்பவன் உழைப்பைப் பெருபவன் என்ற exploitation அங்கு ஆரம்பமாகிறது.

செமித்தியச் சமயங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவைகளை ஒப்பு நோக்கும் போது இந்தியாவில் சமயம் என்பது தளர்ந்த, தனி மனிதனுக்கு அதிக சுதந்திரம் அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. 'எல்லா வழிகளும் ரோமாபுரிக்கு இட்டுச் செல்பவையே!' என்று சொல்வது போல் இந்தியாவில் பல்வேறு சமய தர்மங்கள் உருவாகி ஆன்மீகத் தேடலில் தங்கள் பங்கைச் செய்கின்றன. பல்வேறு முகங்கள் தெரிந்தாலும் இந்திய சமயங்களின் ஆன்மா ஒன்றுதான். இறைமை ஒன்று என்பதை எல்லா இந்தியச் சமயங்களும் உரத்த குரலில் சொல்கின்றன.

படைப்பு என்பதே கற்பனை, அதில் தோன்றிய மாபெரும் கற்பனை கடவுள்.

இது மிகவும் பிழையான கருத்து. படைப்பு உண்மை. கடவுள் உண்மை. ஆனால் இதை விளக்குவதில் பல திருகுதாளங்கள் இருக்கலாம். ஆனால் கடவுள் என்பது மனிதன் கண்ட கற்பனையல்ல. மனிதன் தோன்றிய பின் முதன் முறையாக கடவுள் தன் இருப்பை மானசீகமாக உணர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவரை 'அந்த' உணர்வற்ற ஒரு செயல்பாடாக அப்பேரியக்கம் இருந்திருக்கலாம். ஆனால் ஞானம் என்ற கண்ணாடி தோன்றிய போது இறைமை முதன்முறையாகத் தன்னைப் பார்த்துக் கொள்கிறது. ஒரு reference point கிடைக்கிறது. இதைத்தான் ஆண்டாளின் சூடிக்கொடுத்தல் உணர்த்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் திரு முருக தரிசனம் பெற்றார் என்பதும் இதுதான். எங்கெல்லாம் சுயபிரக்ஞை (sentinal) உள்ளதோ அங்கெல்லாம் இறைமை பற்றிய உணர்வுண்டு. ஒருவகையான சுயத்தெளிவு. இதைத்தான் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள். அதன் பின் இப்பிரபஞ்சம் பொருள் உள்ளதாய் ஆகிப்போகிறது. ஒருவகையில் மீனா சொன்னது உண்மை. நாம் ஒவ்வொருவரும் கடவுள்தான் but with lots of limitations. ஏனெனில் இறைமை என்பது எப்போதும் ஊடுறுவிப்போவதாய் உள்ளது (Transcendental in nature). இதை ஸ்படிகம் உணர்த்துகிறது. சிவன் ஸ்படிக ரூபம் என்பது இதைத்தான். திருவிக்கிரம அவதாரம் இதைத்தெளிவாய் உணர்த்துகிறது. மூன்றடிக்குள் அகப்படுபவனல்ல அவன்.

பிறகு நீங்கள் சொன்ன புத்தர், கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாமல் மனிதனை திருத்த முற்பட்டார். திருவள்ளுவரும் இதை தானே செய்தார்?

இதுவும் பிழை. புத்தருக்கும் வள்ளுவருக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வள்ளுவன் ஓர் பேராசான். அவன் காலத்தில் நிலவிய சமய, அரசியல், சமூக அறவியல்களை எங்கும் சாராமல் தொகுத்தளித்தான். வள்ளுவன் உண்மையில் பக்கா ஆஸ்திகன். இறைவன் பற்றிய மிகத்தெளிவான கருத்து அவனுக்குண்டு. அவனது பாயிரமே அதற்கு சாட்சி. புத்தன் கதையே வேறு. புத்தன் வள்ளுவன் போல் இறைவனின் குணங்கள் பற்றிப் பேசவில்லை. இறைவனுக்கான வரைவிலக்கணம் தரவில்லை. மௌனம் சாதித்து விட்டான்.

உங்கள் பிற கேள்விகளுக்கு பின்னால் வருகிறேன்.

ஒரு தன்னிலை விளக்கம்: (உஷா)

முதலில் சொல்லவிரும்புவது , இந்த சமய விசாரணை இது வரை நான் யாரிடமும் செயததில்லை. யாருக்கும் அட்வைஸ் செய்வதோ, ஆர்கியூமெண்ட் செய்வதோ எனக்கு பிடிக்காது. ஒருவர் சொல்லி மற்றவர் ஏற்றுக் கொள்ளுதல் என்பது கிடையவே கிடையாது. கடவுள் வழிப்பாடு என்பது ஒரு நம்பிக்கை. இதில் நம்பிக்கை உள்ளவர்களிடம் என் கருத்தை சொல்வது முற்றிலும் தவறு என்பது என் எண்ணம். "தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலை என்றால் வெறும் சிலைதான்" அதுப்போல, என் சுதந்திரம், என் லட்சியம் என்பது எனக்குக்குள்தான். என் சுதந்திரம்-கொள்கை பிறரை பாதிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.

ஒரு சமுகத்தில் வாழும் போது என்னால் பிறர் மன வருத்தம் அடைவது சரியில்லை. நான் தாலி அணியமாட்டேன் என்றால் அது கட்டாயம், என் அம்மா, மாமியார், கணவருக்கு மன வருத்தத்தைத் தரும். என் கொள்கையால் என் குடும்பம் பாதிக்கப் படும் என்றால் அத்தகைய கொள்கை எனக்கு வேண்டாம். விபூதி, குங்குமம் தரும் பொழுது அதை மறுப்பது கொடுப்பவர் மனதை கட்டாயம் புண் படுத்தும். கோவிலுக்கு நானே போய் எந்த வேண்டுதலும் செய்வதில்லை. ஆனால் சென்னைக்குப் போனால் ஊர் சுற்றும் போது, கோவிலுக்கு எல்லாரும் போவது உண்டு. ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். என்னுடைய நிலையில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இதுவரை நான் சந்தித்த மத்தியமர்களின் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இனி நான் கேள்விப்பட்ட ஆன்மீக வாதிகள் புத்தர் முதல் பாபா(ரஜினி) சொல்லப்போகிறேன். கட்டாயம் யாருக்காவது கோபம் வரலாம். விஷயம் தலைக்கு மேலே போயாச்சு, இனி சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?

பி.கு நேர்மை, உண்மை என்று பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நிஜமாய் நிகழ்ந்துக் கொண்டிருப்பது என்னவென்றால் இணையம் மூலம் அறிமுகம் ஆனவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் யாரை பற்றியும் எதுவும் தெரியாது. அவர்களின் சாதனைகளும் தெரியாது. அதனால் எல்லாரையும் என் அளவில் வைத்து காய்த்துக் கொண்டிருக்கிறேன். மூணு வயசு பாப்பா, இங்கிலாந்து ராணியைப் பார்த்து உன் பெயர் என்னவென்று கேட்டதாம். அந்தம்மா ஆடிப்போய்விட்டாளாம். அவள் வாழ்நாளில் அந்தக் கேள்வியை யாராவது கேட்டு இருப்பார்களா? கண்ணன் என்றைக்கு தலையில் அடித்துக் கொள்ளப்போகிறாரோ?

உஷா

அழகனின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 008

<<ு஡ு஢ ௅஢ே௬ௌ ௢நஃ௬ௌ௬ ௜௴ீ஢௰஼஡௸ ஧ீ஡௶ ஃ஡௄஢ூ஡ ௜௲ாொ௲ௐ௅஢௰௎ ௅஡௕௭ஸ௻.>>
இது எல்லாராலும் முடியாது. அதிலும் பாசாங்கு பண்ணக்கூடாது என்ற நம்பிக்கையுடையவர்களுக்கு ஒரு எல்லை இருக்கு. அதற்கு மேல் போக முடியாது. இன்னிக்கு எனக்கு கடவுளின் இருப்பு மேல் நம்பிக்கை இருக்கிறது. அவரை அது கொடு இது கொடு என்று கேட்பதில் நம்பிக்கை இல்லை. அவர் தன்னை நிந்தித்தால் நம்மைப் பந்தாடி விடுவார் என்பதில் நம்பிக்கையில்லை. ஆனாலும் என்னாலும் இப்படி பொய்யாகக் கூத்தடிப்பது சாத்தியமில்லை.

அன்பின் காசி: எனக்கு சடங்குகளில் என்றுமே விருப்பம் இருந்ததில்லை. பஜனைகளில் கூட மிக அரிதாகவேக் கலந்து கொண்டுள்ளேன். முதன்முறையாக ஒரு மிகப்பெரிய விளக்கு பூஜையை சென்னைக் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பார்த்தேன். அற்புதமாக இருந்தது. இறை வழிபாட்டின் உச்சம் 'ஜோதி' வடிவில் இறைவனைக் காண்பது. விளக்கு வழிபாடு சில நொடிகளில் உங்களை ஒருவகையான 'trance' க்கு இட்டுச் சென்றுவிடும். திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி கோயிலில் இரவு லட்சக்கணக்கான விளக்குகள் எரியும் போது 'எங்கோ இருப்பது' போன்ற ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது. அந்தக் கோயிலை அவர்கள் பராமரிக்கும் அழகே அழகு. திருப்பாற்கடல் போல் வெள்ளை மணலைக் கொட்டி வைத்திருக்கிறார்கள். குலசேகர மன்னன் இன்று இருந்திருந்தால் இந்த சொர்க்கத்தை விட்டு விட்டு ஸ்ரீர்ரங்கம் வருகிறேன் என்று அடம் பிடித்திருக்க மாட்டார் :-) அதுவும் போக, விளக்கே அழகு. அதுவும் பட்டுப்புடவையுடன் அழகிய பெண்கள் பூஜை செய்யும் போது. காசி நமக்கெல்லாம் இப்படி சான்சே கிடைக்கிறதில்லே :-) இந்த உஷாவுக்கு என்ன வந்தது. பாசாங்கு எங்க சார் வந்தது? 'sheer beauty'! அழகை இரசிக்க மட்டும் போனா போதும்!

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 007

விளக்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு மணிநேரம் உட்கார்ந்து மேலும் கட்டணம் உண்டு இந்தக் கேள்விகளை எதற்கு கேட்கிறேன் என்றீர்கள் அல்லவா நான் சொல்வது உண்மை என்று ஒரு கணமாவது நீங்கள் மனதில் நினைக்கவேண்டும்.வெளியே சொல்லாவிட்டால் பரவாயில்லை.

அன்பின் உஷா! நீங்கள் சொல்வதின் உண்மையை நான் காணாமல் இல்லை. விளக்கு பூஜைக்கு ஏன் காசு வாங்குகிறார்கள் என்றால் விளக்கு, எண்ணெய், போக்குவரத்து என்று செலவு இருக்கத்தானே செய்யும்? அதுவும் வெளிநாட்டில். இதற்கு காசு கட்டிப் போவதற்கோ போகாமல் இருப்பதற்கோ உங்களுக்கு உரிமையுண்டு. உதாரணமாக ஜெர்மனியில் சர்ச் டாக்ஸ் என்றொண்டு. கிறிஸ்தவ நாடான ஜெர்மனியில் மதாலயங்களை நிருவகித்து பராமரிக்க இந்த வரி விதிக்கப்படுகிறது. உங்களுக்கு கிறிஸ்தவத்தின் மீது நம்பிக்கை இல்லையென்றாலோ, வேறு மதத்தவராகவோ இருந்தால் இவ்வரி கட்டமுடியாது என்று மறுக்க முடியும். நான் மறுத்துவிட்டேன். அதே போல் நீங்கள் 'உங்களுக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை' என்று மறுக்க உரிமையுண்டு. "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்" என்றும் முணு, மந்திரமென்று பூஜாரிகளைக் கேலி செய்த ஆஸ்திகர்கள் பிறந்த நாட்டிலிருந்து வந்திருக்கும் நீங்கள் ஏன் தயங்க வேண்டும். இந்து என்பதற்கு விளக்கம் தாருங்கள் என்று மாமியிடம் கேள்வி கேளுங்கள். எனக்குப் பிடித்த, சமீபத்தில் வாசித்த விளக்கம் ஜெயகாந்தன் தந்தது "நான் ஒரு நாஸ்திகன். ஆனால் இந்து" உலகிலேயே இவ்வளவு சுதந்திரத்தை எந்த சமயமும் அளித்ததில்லை. நீங்கள் ஏன் தயங்க வேண்டும்?

காசி சொன்ன கதையில் வரும் ஆள் நாந்தான். பெரியார் கட்சியும் கிடையாது, ஆஸ்தீக கோஷ்டியிலும் இல்லை. அதேபோல், விபூதி, குங்குமம் கொடுத்தால் மறுப்பதும் கிடையாது. கோவிலுக்கு அழைத்தால் போவதும் உண்டு.

கமல் மாதிரிங்கறீங்க :-) "கடவுள் பாதி, மிருகம் பாதி...விளங்க முடியாக் கவிதை" என்கிறீர்கள் :-) இந்த பேதலித்ததன்மை இருப்பதற்குக் காரணம் உங்கள் தேடுதலில் தீவிரம் இல்லை. "கிருஷ்ணா! கிருஷ்ணா பூப்போடு" என்று இன்னும் கருடனைப் பாத்து நகத்தை உரசுகிறீர்கள் :-) கருடன் பூப்போடாது :-) தீவிரப் படுத்துங்கள். இதுவொண்ணும் மந்திர மாயமில்லை. நிதர்சனம்.

பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்துள்ளீர்கள். நலமே முடியும். எனவே நான் உங்கள் பிற கேள்விகளுக்கு வருகிறேன்.

தேடலின் சுகம்

உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். நிறைவாக இருந்தது. திருமதி கமலாதேவியும் எழுதியுள்ளார்கள் (தனிமடல்).

உஷா இன்னும் கீழ் படி நிலையில் நின்று கொண்டு வாதம் செய்து கொண்டு இருக்கிறார். அவரது வாதங்கள் 'மூலத்தை' விட ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பைச் சுற்றியே வருகிறது. அதற்குள் போவதற்கு முன்..

நண்பர் பரிமேலழகர் ரிச்சர்ட் ஃபாக் எழுதிய ஜொனாதன் லிவிங்ஸ்டோ ன் சீகல் எனும் அற்புதமான புத்தகம் பற்றி எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் உள்ளத்தை கொள்ளை கொண்ட புத்தகமது. அப்படியே முழுவதும் வாசிக்கக் கிடைக்கிறது. கட்டாயம் வாசியுங்கள். இவர் எழுதிய பிற புத்தகங்களும் அற்புதமானவை.

இதையெல்லாம் வாசித்தால் புரியும் எப்படி இறைமை என்பது

மாசில் வீணையும், மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேணிலும்
மூசுவண்டறைப் பொங்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

என்னும் அனுபவத்தின் சுகம்.

சும்மாச்சும்மா போலிச் சாமியார்கள் பற்றியும், போலிச் சடங்குகள் பற்றியும் எழுதுவது, அதை எதிர்ப்பது அலுப்புத்தரும் விஷயம். நான் கருப்புச் சட்டையெல்லாம் போட மாட்டேன். ஒரே ஒருமுறை நேற்று நான் தந்த அமித் கோஸ்வாமியின் நேர்காணலை வாசியுங்கள். முடிந்தால் அவரது முழுப்புத்தகத்தையும் வாசியுங்கள்.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைமை விஞ்ஞானத்திற்கும் தப்பாது என்பதை கோஸ்வாமி நிறுவியுள்ளார். இறைமையின் இருப்பு சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்ட பின் 'சொல்லுடா, சொல்லுடா' என்று உலுப்புவது நகைப்பிற்கு இடமாகும்.

இறைத்தேடல் என்பது மிகவும் சீரியசான விஷயம். அதில் நேர்மை வேண்டும். விளையாட்டுக் கூடாது. கவனம் வேண்டும். கேலி கூடாது. தோழமை வேண்டும். தோற்பு-வெற்றி என்ற எண்ணம் கூடாது. நல்ல நண்பர்கள் போல் இணைந்து நடக்கப் பழக வேண்டும்.

இதற்கெல்லாம் தயாரா என்றுதான் கேட்டேன். ஆனால், மீண்டும், மீண்டும் இறை பற்றிய அபிப்பிராயம், சமயம் பற்றிய அபிப்பிராயம் அறியவே உலகம் முயல்கிறது. அபிப்பிராயம் இல்லாத மனிதன் யார்? உலகில் மிகவும் மலிதானவும், எளிதானதும் அபிப்பிராயம் கூறுவதுதான். கூறலாமே! இப்ப என்ன குறைந்துவிடப் போகிறது :-))

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 006

என்னிடம் இருப்பது சந்தேகங்களும், கேள்விகள் மட்டும்தான் மற்றும் குற்றம் குறை பாடுகள் இருக்கும். என் படிப்பு நுனிபுல் தான் என்று பெரியதாய் போர்ட் போட்டுவிட்டுதான் உள்ளே வந்தேன். அதனால் அபத்தங்கள் கட்டாயம் இருக்கும்.

உஷா! முதலில் உங்கள் தைர்யத்திற்கு வந்தனம். அப்புறம் உங்கள் வெளிப்படையான கேள்விகளுக்கு. ஞானத் தேடலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று கேள்விகளை தனித்துப் பார்க்கப்பழகுவது. கேள்விகள் சில நேரம் அபத்தமாய் அமைந்துவிடுவதுண்டு. அதனால் கேட்டவர் அபத்தம் என்று பொருளில்லை. உங்களை அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். கவலை வேண்டும். தோழர்கள் போல் நடந்தே எனக்குப் பழக்கம்.


ஆனால் கடவுள் இல்லை என்பது சுலபம் என்றீர்கள். இது எனக்கு மிக ஆச்சரியமாய் இருக்கிறது. உலகில் 99.9% கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். மிச்சமிருப்பவர்களில் பெண்களை நீங்கள் எண்ணிவிடலாம். இல்லை என்பதை சொல்வதில் எத்தனை பிரச்சனைகளை நாளும் சந்திக்கிறேன் தெரியுமா? விளக்கு பூஜைக்கு என்னைக் கூப்பிட்டு, நான் வர முடியாது என்றதும், அந்த அம்மாளின் முகத்தில் தோன்றிய பீதி, இன்னும் என்றாவது என்னை சந்திக்க நேரிடுவதும் தொடரும் சோகக்கதை!

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உலகில் 99.99% நாஸ்திகர்கள்தான். கோயிலுக்கு போபவனெல்லாம் ஆஸ்திகன் என்றால் ஊரில் வன்முறைக்கு இடமேயில்லை. In God We trust என்று டாலர் நோட்டில் அச்சடித்து போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காதான் உலகின் முதல் அணுகுண்டைப் போட்டு லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது. வியட்நாமில் கொடிய விஷயத்தை கலந்து பச்சிளம் குழந்தைகளை முடமாக்கியது. இன்று ஆஃகானிஸ்தான், ஈராக் என்று கதை தொடர்கிறது. 'இறைவன் பெயரால் யுத்தம்' என்று பின் லாடன் செய்வது ஆஸ்திகச் செயலா? எனவே கோயிலுக்குப் போய் விழுந்து, விழுந்து சேவிப்பதாலோ, வீட்டில் நூறு சாமி படம் போட்டு வைத்திருப்பதாலோ, விளக்கு பூஜை செய்வதாலோ ஆஸ்திகராகிவிடமுடியாது. ஆஸ்திகம் என்ற பெயரில் போலியும், கூத்தும், நாடகமும்தான் இவ்வுலகில் நடக்கிறது. உண்மையான ஆஸ்திகர்கள் உலகில் மிகக்குறைவு. 'வைஷ்ணவ ஜனதோ' பாடலில் நரசிம்மமேத்தா ஒரு உண்மையான ஆஸ்திகனின் லக்ஷணங்கள் சொல்கிறார். கேட்டுப் பாருங்கள். காந்தி அப்படியிருக்க ரொம்ப பாடுபட்டார். எனவே உங்க கோஷ்டிதான் உலகில் ஜாஸ்தி. கவலை வேண்டாம் :-)

மாமி விளக்கு பூஜைக்குக் கூப்பிட்டால் போய் ஜாலியா கூத்தடித்துவிட்டு வாருங்கள். எதற்கு எதிர்ப்பு? எதற்கு embarassement? பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு போவது socialize பண்ணத்தான். நம்ம விளக்கு பூஜை சமச்சாரமெல்லாம் அதுதான். சும்மா ஜாலியா போய்ட்டு வாங்க. ஃபிரி ஜாக்கெட் பிளவுஸ், தேங்கா மூடி, குங்குமச்சிமிழ் கிடைக்கும். எதற்கு விடுவானே :-) ?

உலகில் நாஸ்திகனாக இருப்பது போன்ற சுகம் எதிலுமில்லை! எதற்கும் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இதன் மூலமென்ன, அதன் மூலமென்ன என்று மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று இருந்துவிட வேண்டியது. சிம்பிள். மதுரைத்திட்டத்தில் "விழுப்பரையன் மடல்" வாசித்து இருக்கிறீர்களா? கவிச்சக்ரவர்த்தி ஜெயங்கொண்டார் இயற்றியிருக்கிறார். காப்புச் செய்யுள் எப்படி இருக்கு தெரியுமா?

கொன்றை முடிந்தார்க்கும், கோபாலர் ஆனார்க்கும்,
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம்- இன்று
மடப்பாவை யார்நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு!

சபாஷ் கோனாரே! :-) முழுக்க, முழுக்க நாஸ்திக நூல். ஜாலியா இருக்கும் வாசிக்க.

சரி, இப்ப நிம்மதியா இருக்கா? உலகில் ஆஸ்திகர்கள் அதிகம் கிடையாது, நாஸ்திகர்களே அதிகமென்று. இன்னும் உங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டுமா? தெரிந்து இப்போ என்ன ஆகப்போகிறது? எதற்காகக் கேட்கிறீர்கள். எனக்கு எவ்வளவுதெரியுமென்று அறியவா? இல்லை, 'அது' என்ன என்று உண்மையாக அறிந்து கொள்ளும் அவாவா? இல்லை ஏதோ கொஞ்சம், அப்படி இப்படிப் புரிந்தால் துளசி மாமி கோஷ்டியிலே குதூகலமா இருக்கலாம் என்ற எண்ணத்திலா? உங்கள் கேள்விகள் உங்களை துன்புறுத்துகின்றனவா? இல்லை, இவை கிச்சு, கிச்சு மூட்டும் கேள்விகளா?

வருகின்ற ஐந்து நாளைக்கு இங்கு விடுமுறை. சந்திர நாட்காட்டி படி சீன வம்சாவழிமுறையினருக்கு புதிய வருடம் இனிமேல்தான் பிறக்கப் போகிறது. உங்கள் பதிலை வைத்து மேலே செல்லலாம் :-)

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள் 005

சென்ற மடலில் நான் சொல்ல வந்தது என்னவெனில். ஆன்மீக விசாரணைக்கும், அதற்கான பதில் அறியவும் நாம் பக்குவப்பட வேண்டியுள்ளது. நடைமுறைக் கல்வியில் எப்படி ஆரம்பநிலை, உயர்நிலை, இளம்கலை, முதுகலை, முனைவர் என்று படிப்படியாக நம்மை பக்குவப்படுத்திக் கொள்கிறோமோ அதே போல் ஆன்மீகத் தேடலுக்கும் நம்மை நாம் பக்குவப்படுத்துதல் அவசியமாகிறது.

மிகச்சிலருக்கே இளமையில் ஆன்மீகத்தேடல் வாய்க்கிறது. ஆதி சங்கரர் தனது 'பஜ கோவிந்தம்' பாடலில் சொல்வது போல் இளமை மத, மதப்பு கர்வம் இவை நம்மை இப்பாதையிலிருந்து விலக்கிவிடுகின்றன. வயது கூட, கூட மனது இளகுகிறது. ஆன்மீகத்தேடல் என்பது வாழ்வு உள்ளவரை உள்ள விஷயம். ஏதோ இன்று தேடினோம் கிடைத்தது, நாளை தேடுவதற்கொன்றுமில்லை என்பதல்ல இது.

இதை மிக அழகாக விளக்குகிறார் பரமஹம்ச யோகானந்தர் தனது "An autobiography of a Yogi" என்ற புத்தகத்தில். இதை வாசித்தால் புரியும் எப்படி கணிதம் கற்பது எவ்வளவு கடினமோ அது போல் இதுவும் கடினமான செயலென்று. "there is no such thing as a free meal" என்று சொல்வார்கள். அது ஆன்மீகத்திற்கும் பொருந்தும்.

இலக்கிய ரசனை உடையவரென்றால் ஜெர்மன் எழுத்தாளர் Hermann Hesse எழுதிய 'சித்தார்த்தா' என்ற புத்தகத்தை வாசியுங்கள். அதில் கௌதமன் படும் அவஸ்தயை விவரித்திருப்பார். ஆன்மீகத்தின் முக்கிய கூறு 'mystical realization' என்பது. பிரென்சு எழுத்தாளர் செயிண்ட் எக்சுபெரி எழுதிய 'குட்டி இளவரன்' வாசியுங்கள். நாம் என்ன தேடுகிறோம் என்பது ஓரளவு புரியும் (இதைத் தமிழில் மொழிபெயர்த்த ஸ்ரீராம் அவர்களுடனான சந்திப்பு மறக்கவியலாதது). Moksha Foundation எனும் அமைப்பு What is Enlightenment? என்றொரு பத்திரிக்கை நடத்துகிறது ஆண்டுரூ கொஹன் நாடு, நாடாகப் போய் உஷா கேட்ட கேள்விகளை பல்வேறு சமயப் பெரியவர்களிடம், mytiques கேட்டு நடத்தி வருகிறார்.

கொஞ்சம் அறிவியல் பூர்வமாக இதையெல்லாம் புரிந்து கொள்ள வேண்டுமெனில் Fritjof Capra எழுதிய The Tao of Physics வாசியுங்கள். இல்லையெனில் அமித் கோஸ்வாமி எழுதிய "The self aware Universe" வாசியுங்கள். இவை உங்களை இத்தேடலுக்கு தயார் படுத்தும். Of course, J.Krishnamurti எழுதிய எந்தப் புத்தகமும் வாசிக்கலாம். ஓஷோவின் புத்தகங்கள் வாசிக்கலாம்.

உங்களைத் திருமூலர் வாசியுங்கள் அல்லது திருவாய்மொழி வாசியுங்கள் என்று சொல்லவில்லை. சொன்னாலும் நீங்கள் வாசிக்கப் போவதில்லை. அவ்வளவு தூரம் நாம் நம் மரபிலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறோம். ஆங்கிலம் நமக்கு உகந்த மொழி. அதன் வழியாகத்தான் இந்திய மெய்ஞானம் இனி இந்தியர்களுக்கு வர வேண்டும்.

(உஷா பொறுமை காக்க.... கேள்விக்கு வருகிறேன்)

தெய்வம் நின்று கொல்லும்

ஹாலிவுட் சூப்பர்மேன்
கிறிஸ்டோபர் ரீவ்ஸ்
முதுகெலும்பு மரத்துப் போய்
முடமாகிவிட்டார்.

பழை ஞாபகத்த்¢ல் பத்துகாசு போட
முகத்தில் விட்டெறிந்தாள்
பெருமாள் கோயில் பிச்சைக்காரி.

தெய்வம் மனித உருவில் என்று நம்பிய எம்
பெரியவரும் படுத்துவிட்டார் முடக்கு வாதத்தில்.

சங்கர மடத்துக்கு
எதிரேதான்
பெரியார் சிலையும்...
இரண்டுக்கும் கூட்டம்
போகத்தான் செய்கிறது.

தினம் ஒரு கிளாஸ் சாக்கே குடி
நூறு வயசு வாழலாம் என்கிறது
ஜப்பானிய பெரிசு.

சாப்பாடே வேண்டாம்
இயேசு கருணை போதும் என்கிறாள்
இத்தாலியக் கிருத்துவ மாது.

இப்படிச்...
சிந்தனையில் லயிக்க...

வந்த பஸ் தப்பிப் போச்சு
ஏழு மைல் நடக்க வேண்டும்..

தனியாக ராவில்.....


இந்தக்கவிதை நான் ஜப்பானில் வாழ்ந்தபோது எழுதியது. பின்னால் 'கணையாழியில்' வந்தது. ஒருமுறை யூகி சேதுவின் ஷோவில் வந்தேன் (அதுவொரு அனுபவம். தனியாக எழுதவேண்டும்) அப்போது தனக்குப் பிடித்த என் கவிதை என்று இக்கவிதையை தேர்ந்தெடுத்து என்னை வாசித்துக் காட்டச்சொன்னார். நம்ம காசி இது மாதிரியே முடிக்கலை? அப்ப அவரும் கவிஞர்/எழுத்தாளர்ங்கிறீங்க :-)

Fellowship of Rings 005

முதலில் உஷாவின் நேர்மைக்குப் பாராட்டுகள். உஷா சொல்வதைப் பார்த்தால், அப்படியே நான் கண்ணாடிக்கு முன் நின்று பேசுவது போல இருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம், இதெல்லாம் பேசினதுமில்லை, எழுதினதுமில்லை. ஆனால் மனதுக்குள்ளேயே ஒரு ஆயிரம் முறை சொல்லிப்பார்த்துக்கொண்டவை. எத்தனை வயசில் என்று தெரியாது, ஆனால் கடவுள் மறுப்பு (வெறுப்பில்லை;-) என் கூடவோ அல்லது என்னோடு அண்ணனாய் எனக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்போ பிறந்திருந்தது. எந்த தி.க.வோ பெரியாரோ சிறியோரோ சொன்னதோ கேட்டதோ இல்லை. ஆனாலும் என்றும் சாமியை நம்பியதில்லை. ஒரு முறை ஒன்றைக் கேட்கப்போய் அதுவும் நடக்காமல் போனதுக்கு முன்பே அப்படித்தான். போதும் தன்னிலை விளக்கம்...

<<உஷா: நம் மத்தியவர்க்க ஆசாமி இருக்கிறானே, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக் கொண்டிருக்கிறான்.>>
கிட்டத்தட்ட சரி. மற்ற வர்க்கத்தினரைக் காட்டிலும் இந்த விஷயங்களுக்கு தேவைக்கு அதிகமான நேரம், உழைப்பு, பணம், இத்யாதிகளை செலவு செய்பவன் நம் ஆளே.

<<உஷா:ராமகிருஷ்ணரின் குட்டிகதை ஒன்று- மேதாவி ஒருவர் படகில் பயணித்தாராம்.>>
இன்னொரு கதை நான் சொல்லுவேன், என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். எங்கோ படித்ததை/கேட்டதை கொஞ்சம் திரித்து மாற்றி சொல்வேன். கண்ணன், உஷா ரெண்டுபேரும் கதாசிரியர்கள்தானே இன்னிக்கு என்கிட்டே மாட்டிக்கிட்டீங்க, கேளுங்க ;-)


ஒரு படகில் மூன்று பிரயாணிகள் பயணித்தார்கள். ஆற்றில் அன்று ஓட்டம் அதிகம் எனவே படகு கட்டுக்கடங்காமல் அலைக்கழிய படகோட்டி மிகுந்த சிரமப்பட்டு துடுப்புப் போட்டு அக்கரைக்குப் போய்க்கொண்டிருந்தார். கொஞ்ச தூரம்தான் பாக்கி. திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி. படபடப்பு. அப்படியே அவருடைய கையிலிருந்து துடுப்பு ஆற்றில் நழுவ, மயங்கினார். மாரடைப்பு!

மூன்று பிரயாணிகளும் 'அய்யோ' என்று பதைத்தார்கள். படகோட்டிக்காக மட்டுமல்ல, தங்கள் உயிருக்காகவும். துடுப்பில்லாமல் ஆற்றின் போக்குக்கு விட்டால் படகு கட்டாயம் சுழலில் சிக்கி அனைவரும் மாண்டுபோவார்கள். அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் நீந்திப் பிழைப்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது. அவர்களில் சாந்தமான அமைதி தவழும் முகத்துடைய அந்தப் பெரியவர், 'பயப்படவேண்டாம், எந்த சிக்கலிலும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நான் வணங்கும் கடவுள் நம்மைக் கைவிட மாட்டான். இதோ நம் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். கட்டாயம் நாம் காப்பாற்றப் படுவோம்' என்று தனக்குத் தெரிந்த மந்திரங்களைக் உச்சரித்து, கண்ணை மூடி, கடவுளைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்தார் ஆர்வமும் அறிவும் கொப்பளிக்கும் முகத்துடைய அந்த துறுதுறு இளைஞர், இரண்டாவது பிரயாணி. 'இந்தப் பெரியவருக்கு இன்னும் புத்தி வரவில்லையா? இந்த நட்டாற்றில், எந்தக் கடவுள் வந்து நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும். ஆற்று நீரை ஆ·ப் செய்யப் போகிறாரா, இல்லை மேலே இருந்து ஹெலிகாப்டரில் வந்து நம்மைக் காக்கப் போகிறாரா? கண்னை மூடிப் பிரார்த்தனை செய்யும் நேரம், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம். முட்டாள்தனத்திற்கு அளவில்லையா? பிரார்த்தனைக்குப் பதிலாக இவர் போட்டிருகும் வெள்ளை உடுப்பைக் கழட்டி ஆட்டினாலாவது தூரத்தில் யாருக்காவது நாம் தத்தளிப்பது தெரியலாம்...'

மூன்றாவது நபர் கண்ணைமூடி ஜபிக்கும் பெரியவரையும் பார்த்தார், அவரை ஏசிக்கொண்டிருக்கும் இளைஞரையும் பார்த்தார். சரிந்து கிடக்கும் படகோட்டியையும் பார்த்தார். அக்கம் பக்கம் யாரும் தென்படுகிறார்களா என்று சுற்று முற்றும் தேடினார். 'யாராவது வாங்களேன், எங்களைக் காப்பாத்துங்க' என்று குரல் கொடுத்தார். ஒன்றும் பயனில்லை. படகோ இங்கும் அங்குமாய் ஆடிப் பயமுறுத்தியது. படகோட்டி இல்லாவிட்டலும் துடுப்பு ஒன்று இருந்தால்கூட சமாளித்திருக்கலாம். என்ன செய்வது?

பெரியவர் தன் பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். இளைஞருக்கு இன்னும் கோபம் அதிகமானது. அவரும் தன் எதிர்ப்புக் குரலை உயர்த்தினார். நம் மூன்றாமவர் படகில் துடுப்பு ஏதும் கிடைக்கிறதா என்று தேடினார். ம்ஹ¤ம்..ஆனால்..படகோட்டி வைத்திருந்த பழைய பைக்குள் ஒரு தட்டம் இருந்தது, படகோட்டி சாப்பாடு சாப்பிடுவதற்காக வைத்திருந்தது போல..அதைக் கையில் எடுத்ததும் பொறிதட்டியது. அதைக் கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படகின் முன்புறம் நோக்கி குப்புறப்படுத்துக்கொண்டு இரு கையிலும் மாறிமாறி அந்தத் தட்டத்தால் தண்ணீரைத் துழாவினார். படகு கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வருவது போல் தெரிந்தது. இன்னும் விடாமல் முயலவே, படகு அவர் சொன்னபடி கேட்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் போராட்டத்துக்குப் பின் படகை ஒருவழியாக அக்கரையில் ஒதுக்கினார்.

கரைக்கு வந்ததும் பெரியவர் கண் திறந்தார். இரு கைகளையும் உயரத்தூக்கி இறைவனுக்கு நன்றி சொன்னார். இளைஞர் 'அய்யா, நன்றி சொல்ல வேண்டியவர் இதோ இவர், உங்கள் சாமியல்ல..; என்று மீண்டும் அவருடன் மல்லுக்கு நிற்க, பெரியவர் அதை உதாசீனம் செய்துவிட்டு இறங்கிப் போனார். 'இவர்களைத் திருத்த முடியாது' என்று பொருமிக்கொண்டே இளைஞரும் இறங்கிப்போனார்.

கரைக்கு வந்த படகை, கயிறால் முளையில் கட்டிவிட்டு, மயங்கிக்கிடக்கும் படகோட்டியை எழுப்ப முயற்சித்தார் நம் ஆள். எழவில்லை. கரையில் தூரத்தில் படகுத்துறை தெரிந்தது, அங்கு போய் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் ஓடிவந்தார்கள், அனைவரும் படகோட்டியை தூக்கி வண்டியில் ஏற்றி பக்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு விரைந்தார்கள். பிழைத்துக்கொள்வார் என்று நம்பிக்கை வந்தது. நம் நபர் அப்போதுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வர, தன் பையைத்தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

அவர் ஊருக்குள் நடந்து போகும்போது தூரத்தில் கோயிலில் ஒலிபெருக்கியில் வந்த குரல் எங்கோ கேட்டதாக இருந்தது. அட, நம்ம பெரியவர்! ' கடவுளை நம்பினோன் கைவிடப்படான். இதை நான் எத்தனையோ இடங்களில் சொன்னதுக்கும் இன்னிக்கு உங்க கிட்டே சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஏன்னா இன்னிக்கு நான் உங்க முன்னால் நிற்பதே அவன் கருணையால்தான். நான் வந்த படகு இன்று ஆற்றுவெள்ளத்தில் சிக்கியதில் இன்னேரம் மாண்டு போயிருப்பேன். அவன் மேல் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை என்னைக் காத்தது. நான் செய்ததெல்லாம், மனமுருகி அவனை வேண்டியதே. பாக்கியெல்லாம் அவன் விளையாட்டு. நம் கையில் ஒன்றுமில்லை, அவனிடம் பாரத்தைப்போட்டு அவனை எண்ணி உருகி வணங்குங்கள். என்றும் நல்லதே நடக்கும்...'

அதற்குள் கடைவீதி வந்துவிட்டது. கோயிலை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோமா..பெரியவர் குரல் இப்போது அமுங்கிப்போனது. பஸ்டாண்டு அருகே ஒரு மேடை. அதில் பளீரென்ற வெளிச்சத்துடன் மைக் பிடித்து கணீரென்ற குரலெடுத்துப் பேசுவது..அட, நம்ம இளைஞர். 'கடவுள் மனிதனால் படைக்கப் பட்டவன். மனிதனின் சக்திக்குமீறினது எதுவும் இல்லை. இதை நானும் நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றுதான் நேரடியாக உணர்ந்தேன். இன்னிக்கு நான் உங்கள் முன் முழுதாய் உயிருடன் நிற்கிறேன் என்றால் அது மனிதனின் மூளை, சமயோசிதம், அறிவு ஆகியவற்றால். நான் வந்த படகு ஆற்றில் தத்தளிக்க, என்னுடன் இருந்தாரே ஒரு சாமியார், அவர் கடவுளைக்கூப்பிட்டார். நானும் சுற்றும்முற்றும் கண்ணில் விளக்கெண்ணையுடன் பார்த்தேன், கடவுள் தென்படுகிறாரா என்று. ம்ஹ¤ம். இருந்தால்தானே வருவதற்கு. ஆனால் என்னுடன் வந்த மனிதர் இப்படியெல்லாம் முட்டாள்தனமாக இருக்காமல் தன் மூளையை பயன்படுத்தி, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி, எப்படி இங்கிருந்து மீள்வது என்று சிந்தித்து, அதன் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர் மட்டும் இவரைப் போல் உட்கார்ந்திருந்தால், எங்கே இருந்து யார் காப்பாற்றியிருக்க முடியும்? ஆகவே நண்பர்களே, மனிதன், அவன் மூளை, உழைப்பு, சிந்தனை, இதற்கு மீறியது எதுவும் இல்லை...'

பேச்சைக் கேட்டுகொண்டு நின்றதில் தான் போகவேண்டிய பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வருவதை கண்ட நம் நபர் ஓடிப்போய் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்.. அப்பாடா..இதை விட்டால் அடுத்தது இன்னும் 2 மணி நேரத்துக்கப்புறம்தான். பஸ் போய்விட்டது. அட அவர் பேரைக்கூடத் தெரிஞ்சுக்காமல் விட்டுவிட்டோமே...

* * * * *


இன்னும் என் பங்கு முடியவில்லை. இன்னிக்கு என்னால் இதுக்குமேல் முடியவில்லை.. நாளைக்கு வருகிறேன்.

அன்புடன்,
-கா

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள் 004

இதை நான் முதலிலேயே எழுதியிருக்க வேண்டும். இப்போதுமொன்றும் குறைந்து விடவில்லை! இது ஒரு முன்னுரை மாதிரி. முடியுரையாகும் அமையும்.

சென்ற முறை சென்னை சென்றபோது எனது மருமானும், மருமாளும் தனது 4 வயதுப் பெண்ணைக் கிண்டர்கர்டனில் சேர்ப்பதற்கான டென்ஷனில் இருந்தார்கள். குழந்தைக்கும், பெற்றோருக்கும் அன்று இண்டர்வியூ! குழந்தைகளுக்கு A,B,C மற்றும் ரைம்ஸ்ஸெல்லாம் தெரியுதா என்று சோதித்துப் பார்ப்பார்களாம். இது என்ன கூத்து என்று எனக்குத் தோன்றியது! ஆனா, இங்க பாயிண்ட் என்னனா கிண்டர்கார்டனுக்கு தகுதி பார்த்து சேர்க்க வேண்டிய காலத்திலே இருக்கோம்ங்கிறதுதான்.

வெண்கலச்சிலை எப்படி உருவாகிறது என்று தெரிய வேண்டுமெனில் வேதிமவியல் படித்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.

வயிற்றில் போன உணவு எப்படி செரிக்கிறது என்று கேட்டால் வைத்திய சாஸ்திரம் படிக்க வேண்டும்.

காற்றில் எப்படி விமானம் பறக்கிறது என அறிய இயற்பியல் படிக்கணும்.

வீதியோரம் ஆப்பம் விக்கிற கிழவிட்டே போய் அணுகுண்டு எப்படி செய்யறதுன்னு கேட்டா அவ அணுவும் கிடையாது, குண்டும் கிடையாது என்றுதான் சொல்வாள். கிழவி இல்லை என்று சொல்வதால் அணுகுண்டு இல்லை என்று ஆகிவிடாது (அப்புறம் அமெரிக்கா எப்படி பொழைக்கிறது!)

டாக்டராக வேண்டுமென மெடிகல் காலேஜுக்குள் போகும் மாணவனுக்கு அத்துறை மீது ஒரு ஈர்ப்பும், மரியாதையும் இருக்கும். அந்த ஈர்ப்புடன் படித்தால்தான் ஏறும்.

ஐந்தாந்கிளாஸில் தேறிவிட்டது என்பதற்காக அந்தக்குழைந்தையை யாரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக ஏற்றுக்கொள்வதில்லை. எதற்கு இவ்வளவு விஸ்தாரமான வியாக்கியானமென்று கேட்கலாம். காரணமிருக்கு.

இப்பிரபஞ்சத்தின் மூலத்தைப்பற்றி அறிய வேண்டுமென்று ஒரு கேள்வியைப் போட்டு வைக்கிறோம். இந்த இயற்பியல், வேதிமவியல், உயிரியல் எல்லாம் தன்னுள் அடங்கிய ஒரு துறை பற்றிய கேள்வியை, கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் கேட்டுவிட முடிகிறது!

இயற்பியல் அறிவு இல்லாமல் ஐன்ஸ்டைனிடம் சார்புடமை பற்றிப் பேசமுடியாது. எனக்கு கணினிப் பரிட்சயம் உண்டு அதனால் வேலை கொடு என்று ஐ.பி.எம் கம்பெனியில் வேலை கேட்டுவிட முடியாது. அத்துறை சார்ந்த அறிவு இருப்பதற்கான அத்தாட்சியாகச் சான்றிதழ்கள் காட்ட வேண்டும்.

இது அப்படியே ஆன்மீக விசாரணைக்கு (spiritual enquiry)ப் பொருந்தும். இங்கு விவாதிக்கப்படும் கேள்விகள் புத்தர் பிறப்பதற்கு முன்பே இந்திய மண்ணில் கேட்கப்பட்டு பல்வேறு துறைகள் உருவாகிவிட்டன. யோகமார்க்கம், தியான மார்க்கம், பக்தி மார்க்கம், சித்தர் வழி, வைணவம், காபாலிகம், வீர சைவம், தென்னிந்திய சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிட்டாத்துவைதம், துவைதம், சமணம், பௌத்தம், சீக்கியம், கிறித்துவம், இஸ்லாம் என்று எத்தனையோ மார்க்கங்கள். ஒவ்வொன்றும் இக்கேள்விகளை வெவ்வேறு வகையில் அணுகுகின்றன.

ஒரு சரியான விடையறிய சரியான அணுகுமுறை தெரிந்திருக்க வேண்டும். எங்கள் ஆய்வுக்கூடத்தில் யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்துவிட முடியாது, இல்லையா? அணுகுமுறை அறிந்தவர்களே அங்கு அனுமதிக்கப்படுவர். கல்வி கேள்விகளுக்கென வாழ்வின் பாதி காலத்தை நாம் செலவிடுகிறோம். படித்து வேலைக்குப் போன பின்பும் தொழில் ரீதியாக கற்றுக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால் வாழ்வின் ஆதாரம் பற்றிய கேள்வியை, உயிரின் மூலம் பற்றிய கேள்வியை எந்த முற்பயிற்சியுமில்லாமல் கேட்டுவிடமுடிகிறது. அவசரப்பட்டால் டாக்டராகிவிட முடியுமா? படித்துத்தேற வேண்டாமா? ஆனால், இறைவனை எனக்கு உடனே காட்டு என்று அவசரப்படுகிறோம். மிக, மிக ஆதாரமான கேள்விகளை அவசரமாய் கேட்கிறோம். சட்டென விடை வேண்டுமென்கிறோம். கிடைக்கவில்லையெனில் அது "மாயமான்" என்று குறை கூறுகிறோம். மெடிக்கல் காலேஜ் போன முதல் வருடம் யாரும் சர்ஜரி செய்வதில்லை. அப்படி அவசரப்பட்டு செய்துவிட்டு நினைத்தபடி காரியம் ஆகவில்லையென்றால் அதை "மாயமான்" என்று யாரும் சொல்வதில்லை! ஆனால், ஆன்மீகத்தில் இதை ஒப்பு நோக்குவதில்லை. அங்கு ரெடிமேடாக விடைகள் இருப்பது போலும். கேட்டவுடன் கிடைத்துவிடும் என்றும் பாவனை செய்கிறோம். நம் அவசர புத்தியை அறிந்து கொண்ட போலிச் சாமியார்கள் அசட்டு விடைகளைச் சொல்லி நம்மை போணி பண்ணிவிடுகிறார்கள். அது சரியான பதிலில்லை என்று தெரிந்தவுடன் வேறொரு சாமியாரிடம் அசரமாய் ஓடுகிறோம்.

இதுதான் நமது ஆன்மீகத்தேடலின் இன்றைய கதி. எல்லாம் ஒரே அவசர கோலம். தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது கடவுளை அறியாவிட்டால் என்ன குடிமுழுகிவிடப்போகிறது? உலகம் சுற்றுவது நிறகப்போவதில்லை. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கப் போவதில்லை.

கடவுள் இல்லை என்பதால் அவருக்குத்தான் ஏதாவது குறை ஏற்படுமா? பூரணத்திலிருந்து கொஞ்சம் பிச்சு வைத்துவிட்டு பூரணம் குறைந்துவிட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில் பிரிக்கப்பட்டதும், பிரிப்பவனும் பூரணத்தின் ஒரு அங்கம் என்பதால் பூரணம் என்றும் நிறைவாக இருக்கிறது. இது இந்திய மூதாதையார் ஒரு 5000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு சொன்னது. அது எப்போதும் பொருளுடையதாகவே இருக்கும்.

சரி..இனி உஷாவின் கேள்விகளுக்கு வருவோம். பதில் சொல்ல வரும் போது ஆப்பக்கார கிழவிதான் ஞாபகத்துக்கு வருகிறாள். ஆப்பக்கார கிழவியிடம் அணுகுண்டு சாஸ்திரம் அறிந்து கொள்ள உஷா முயல்கிறார் என்று தோன்றுகிறது :-))

Fellowship of Rings 004
(உஷாவின் கேள்விகளுக்கு யாரும் பதிலளிக்கலாம். என் பதில் நாளை - அசடன்)

காசி தந்த நம்பிக்கையில் மீண்டும்...........

அன்புள்ள கண்ணன் அவர்களுக்கு,

என்னிடம் இருப்பது சந்தேகங்களும், கேள்விகள் மட்டும்தான் மற்றும் குற்றம் குறை பாடுகள் இருக்கும். என் படிப்பு நுனிபுல் தான் என்று பெரியதாய் போர்ட் போட்டுவிட்டுதான் உள்ளே வந்தேன். அதனால் அபத்தங்கள் கட்டாயம் இருக்கும்.

ஆனால் கடவுள் இல்லை என்பது சுலபம் என்றீர்கள். இது எனக்கு மிக ஆச்சரியமாய் இருக்கிறது. உலகில் 99.9% கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். மிச்சமிருப்பவர்களில் பெண்களை நீங்கள் எண்ணிவிடலாம். இல்லை என்பதை சொல்வதில் எத்தனை பிரச்சனைகளை நாளும் சந்திக்கிறேன் தெரியுமா? விளக்கு பூஜைக்கு என்னைக் கூப்பிட்டு, நான் வர முடியாது என்றதும், அந்த அம்மாளின் முகத்தில் தோன்றிய பீதி, இன்னும் என்றாவது என்னை சந்திக்க நேரிடுவதும் தொடரும் சோகக்கதை!

இதுதான் உண்மை என்று உலகத்திற்கு உணர்த்திய புத்தர் இன்று, கடவுளாக்கப் பட்டதும் அங்கு அவர் சொன்னது அத்தனையும் தோற்றுவிடுகிறதே? இன்றும் இலங்கையில் புத்தபிட்சுகள் செய்வது என்ன? உலகில் *** மதத்திற்காக நடந்தப் போரில் இறந்தவர்கள் எண்ணிக்கைதான் அதிகம்.

1) சமயம், ஆன்மீகம் இவற்றால் மனித குலத்திற்கு நன்மை ஏற்பட்டதா, தீமை ஏற்பட்டதா? இது எல்லாம் வேண்டாம், உன் வேலையை பார்த்துக்கொண்டு போ! என்று சொல்வதில் என்ன அலுப்பு தெரிகிறது? அலுப்பு எப்பொழுது ஏற்படுகிறது தெரியுமா, இல்லாத ஒன்றை மாயமானை தேடி அலைகிறார்களே அவர்களைப் பார்க்கும்போதுதான் அலுப்பு ஏற்படுகிறது!

2) சமயங்களின் நீட்சிதானே ஆன்மீகம்?

3) தான் அடைந்த ஞானத்தை( அடைந்ததாக நினைத்ததை) பிறருக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா? அதாவது ஞானமார்க்கம் இதுதான் என்று வழிக்காட்ட முடியுமா?

4) சொர்க்கம், நரகம், கர்மா, விதி, மறுமை - விளக்குக? இந்த நாலு கேள்விக்கும் பதில் கொடுங்கள்!

தொடரும்

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள்! 003


அன்புள்ள உஷா:

கலந்துரையாடலை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். தாராளமாக. நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள். அதை முடிக்கும் உரிமை உங்களுக்கே :-) நீங்கள் தெரியாமல் கேட்கவில்லை :-) கடவுளைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் உங்களிடம் உள்ளது. அதைச் சொல்லியிருக்கிறீர்கள்! எனவே இது தேடல் அல்ல. தெரிந்ததைச் சொல்வது. அபிப்பிராய மாற்று!

இரண்டு விஷயங்கள் உங்களில் பதில்களில் தெளிவற்றுக் கலந்துள்ளன. ஒன்று தனது இருப்பு, தனக்கும் படைப்பிற்குமுள்ள தொடர்பு பற்றிய ஆழ்மான சுய தேடல். இது நமக்கெல்லாம் பொதுவாய் அமைந்துள்ள ஞானம் என்னும் ஒளிவிளக்கை வைத்துக் கொண்டு தேடுவது. மற்றது சமயம் என்னும் சமூக அமைப்பு பற்றியது. உண்மை என்பதை நாம் ஒழுங்கு படுத்த முற்படும் போதே அது அந்நியப்பட்டு போகிறது. எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட எந்தச் சமயமும் உண்மைக்கு அருகாமையில் இருக்கலாமே தவிர அதுவே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. சமயங்கள் அனைத்தும் ஊழல் நிரம்பியவையே. சமயம் பலருக்கு சோறு போடுகிறது. வயிறு வளர்க்கப் பேசப்படும் சமய உரையாடல் அல்ல இது. என்னைப் பொருத்தவரை அர்த்தமுள்ள, ஆழமான தேடல்.

உங்கள் பதிலில் ஒரு அலுப்புத் தெரிகிறது. சமயம் அலுப்புத்தரக்கூடியது. ஆன்மீகம் அப்படியல்ல. இது பற்றியெல்லாம் நீங்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். பெரும்பாலான விஞ்ஞானிகள் நாத்திகர்களாக இருப்பதற்குக் காரணம் அலுப்புத்தரும் சமய ஊழலே காரணம். உண்மை தேடும் ஒரு தீவிர விஞ்ஞானி என்னைப் பொருத்தவரை ஒரு ஆன்மீகவாதியாகவே இருப்பான்.

இரவு வெகு நேரம் இது பற்றி யோசித்தேன். இறைவன் இல்லை என்று சொல்லி விடுவது எளிது. உண்டு என்று சொன்னால்தான் பிரச்சனையே. உண்டு இல்லை என்பது அவரவர் நோக்கு (attitude) சார்ந்தது. எதற்குமே 'பொருள்' ஒன்றைப் பார்ப்பவன் சார்ந்ததே. பொருள் இல்லையென்று சொல்லவோ, எனக்கு இதற்குப் பொருள் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லவோ உங்களுக்கு உரிமையுண்டு.

ஓஷோவின் பதிலைச் சொல்லி என்னை மாட்டுவதாக எண்ணிக்கொள்கிறீர்கள். ஓஷோ பற்றிய ஒரு பெரிய மாயை இந்தியர்களிடம் உருவாகியிருக்கிறது. பெரும்பாலான இலக்கிய கர்த்தாக்களுக்கு ஓஷோ பற்றிப் பேசுவது கொஞ்சம் பேஷனாகக் கூட இருக்கிறது. அவர் என்னைப் போன்ற ஒரு பேராசிரியர் அவ்வளவே. நிறையக் கற்றவர். நீங்கள் சொல்லும் 'மத்திமர்'. நிற்க. மூலம் இறைவனாக இருக்கும் போது அவனைப் படைத்தது யார் என்று கேட்கிறீர்கள். கொஞ்சம் நீங்களே யோசித்துப் பார்த்தீர்களெனில் இக்கேள்வியின் அபத்தம் புரியும். அவன்தான் மூலம் என்ற பிறகு அதற்கேது தோற்றம்? புத்திசாலித்தனமாகப் பேசி அகந்தை தன் பேதமையைக் காட்டிக் கொள்ளும் வாதமிது.

எனது கல்லூரிப் பேராசிரியர் ஒரு நாத்திகர். அவர் எங்களிடம் கேட்பார். "இறைவன் சர்வ வல்லமை உள்ளவனென்றால் அவனால் தூக்க முடியாத ஒரு கல்லை உருவாக்க முடியுமா?" என்று. இதுவொரு அபத்த தர்க்கம். வளைவுத் தர்க்கம். எங்கும் இட்டுச் செல்லாது. அது போன்றதே உங்கள் ஓஷோவின் கேள்வியும்.

கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பது அப்படியான ஒன்றில்லை. அது தர்க்கத்தின் அபத்தம் பற்றிக் கேலி பேசும் உண்மை. கௌதமன் நிர்வாணம் அடைந்தவுடன் உலகிற்குச் சொல்ல வேண்டுமென ஆசைப்பட்டான். ஆனால் உடனே அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது, இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று. எனவே போதனை செய்ய வேண்டாம் என்றே தீர்மானித்தான். இதுதான் கண்டவர் விண்டதில்லை என்பது. இறைவன் பற்றி மௌனம் சாதித்த கௌதமன் இன்று இறைவனாக ஆகியிருப்பது சமயத்தின் வலுவைக் காட்டுகிறது. சுய தரிசனத்திற்கு இட்டுச் செல்வது ஞானம். கூட்டு வாழ்விற்கு இட்டுச் செல்வது சமயம். முதல் வகை தாய்ப்பால். இரண்டாவது செவிலியின் பால். இதில் எது வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நன்றி உஷானந்தா! :-)

இதையேதான் நானும் குறிப்பிட்டிருந்தேன். மனிதனை உய்விக்க வெகுசில குருமார்கள் அல்லது ஞானவான்கள் பாடுப்பட்டனர் என்று. இவர்களுடன் இன்றைய தேதியில் நம்மிடம் வலம் வரும் பட்டுஜிப்பா மற்றும் கோர்ஸ்சுக்கு ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் ஆஷாடபூதிகளை சேர்க்காதீர்கள். அதிலும் அந்தக் காலத்தில் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி மனிதனை மேம்படுத்த இவர்கள் பட்டப்பாடு! இவர்கள் யாரும் சுக வாழ்வு வாழவில்லை. இவர்களுக்கு வாழ்ந்தக்காலத்தில் இவர்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள்தான் அதிகம்.

பிறகு நீங்கள் சொன்ன புத்தர், கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாமல் மனிதனை திருத்த முற்பட்டார். திருவள்ளுவரும் இதை தானே செய்தார்? நீங்கள் நம் புராண பாத்திரங்களை எடுத்துகாட்டி அதன் தாத்பரியம் வேறு என்கிறீர்கள். ஆனால் சாதாரண மனிதனுக்கு அவை என்ன புரியும்? அவனுக்கு முருகனுக்கு ரெண்டு பெண்டாட்டி, கிருஷ்ணனுக்கு ஊரெல்லாம் பெண்டாட்டி என்று தானே நினைக்கிறான்?

பொதுவாய் மனிதவர்க்கத்தை மூன்று பிரிவாய் பிரித்துள்ளோம். பணக்காரர், ஏழை மற்றும் மத்தியவர்க்கம். இதில் பணக்காரனுக்கு செய்யும் தொழிலே தெய்வம். கடவுளுடன் ஒரு பார்ட்னர்ஷிப் அவ்வளவுதான். ஏழைக்கோ கடவுளை நினைக்கவும் நேரமில்லை. மிஞ்சிப் போனால் நாலணாவுக்கு கற்பூரமோ, ஆடி மாதம் ஆத்தாவுக்கு கூழ் ஊற்றினாலோ அவன் வழிப்பாடு முடிந்தது. இவர்கள் இருவரும் தன்னை நம்புகிறவர்கள். ஆனால் நம் மத்தியவர்க்க ஆசாமி இருக்கிறானே, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக் கொண்டிருக்கிறான். ஞான தேடல் அது இது என்று பெயரை வைத்து, வாழ்க்கைக்கு உதவாத வறட்டு சித்தாந்தம் இது. இந்த ஞானமார்க்கத்தில் கரைக்கண்டு ஞானவான் ஆகி என்ன செய்தார்கள்? தான் கண்டுபிடித்ததை பிறருக்கு போதித்தார்கள் அவ்வளவுதான். இதனால் மனிதன் மேம்பட்டானா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். இத்தகைய கல்வி வெறும் அகந்தையைதான் வளர்கிறது. பல நூல்களை பயின்றவனுக்கு ஞானசெறுக்கு, வித்தியாகர்வம் என்னும் தலைகனம், அல்லது மண்டை கர்வம்தான் ஏற்படுகிறது. இதை வீசிவிட நாலு பேர் பின்னால். இதனால் இவனே ஏறக்குறைய கடவுள் ஆகிவிடுகிறான்.

ஆனால் படிப்பறிவில்லாத பலரிடம் மனித தன்மை மிகுந்துக் காணப்படுவதை நான் கண்டுள்ளேன். ராமகிருஷ்ணரின் குட்டிகதை ஒன்று- மேதாவி ஒருவர் படகில் பயணித்தாராம். படகோட்டியிடம் இதிகாசங்கள் தெரியுமா என்றுக் கேட்டாராம். தெரியாது என்று அவன் சொன்னதும், அடடா! வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கி விட்டாயே என்றாராம். பிறகு வேதங்கள் பற்றி ஏதாவது தெரியுமா என்றாராம். படகோட்டி தெரியாது என்றதும், மூடா பாதி வாழ்க்கையை வீணடித்துவிட்டாயே என்று கடித்துக்கொண்டாராம். அப்போது படகோட்டி, ஐயா நீச்சல் தெரியுமா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றாராம். படகோட்டி, நீங்கள் முழு வாழ்க்கையையும் தொலைத்து விட்டீர்கள், படகில் ஓட்டை என்று சொல்லிவிட்டு நீந்தி கரையேறினானாம்.

இனி இரண்டாவது பதிலுக்கு வருவதற்கு முன்பு முதல் வரியிலேயே கண்ணன் மாட்டிக் கொண்டார். மூலமில்லாமல் தோற்றம் இல்லை. அந்த மூலத்தின் மூலம்தான் படைப்பு உருவானது. அதை உருவாக்கியது கடவுள். சரிதானே உங்கள் பதில்? மூலமில்லாமல் தோற்றமில்லை என்றால் அந்த மூலத்தை உண்டாக்கியது யார்? இது நான் கேட்கவில்லை, ஓஷோ கேட்கிறார் ! படைத்தவன் கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்? படைப்பு என்பதே கற்பனை, அதில் தோன்றிய மாபெரும் கற்பனை கடவுள். கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்றால் பதில் எப்படி கிடைக்கும்? ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், கர்மா, விதி போதும் ஐயா!

வாழ்க்கையில் ஏன் என்ற கேள்வி தேவையேயில்லை. வாழ்க்கை போகும் பாதையில் நாமும் போய் வாழ்ந்தால் போதும். அதை நம் இஷ்டத்திற்கு வளைக்கத் தொடங்கும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இதைதான் புத்தர் ஆசையே மனிதனின் துன்பத்திற்கு முழு முதற்காரணம் என்றார். தன்னம்பிக்கையுடன் - கவனிக்க கர்வம், அகந்தையில்லை-உழைத்தால் எதையும் சாதிக்கலாம். அனாவசியமாய் பிறர் விஷயத்தில் தலை இடாமல், பிறர் பேசுவதை (அக்கப்போர்) காதில் வாங்காமல் ,லெளகீத விஷயங்களில் ஒரு லிமிட்டுடனும், எதிலும் (பொருள்களிலும், உறவிலும்) அதிக பற்று வைக்காமலும், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் எளிய வாழ்க்கை வாழ்வதிலும், நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவுவதிலும் மன நிம்மதி கிடைக்கும். இத்துடன் ரசனையையும் சேர்த்துக் கொண்டால், இதுதான் வாழ்க்கை. தீதும் நன்றும் பிறர்தர வாரா! இப்படி வாழ்வது நம் கையில்தான் உள்ளது. இதுதாங்க, கர்ம யோகம். முற்றும் போட்டு விடலாமா?

எழுதியதைப் படித்துப்பார்த்தால் உஷானாந்தா பட்டம் கிடைத்து விடுமோ என்று பயமாய் இருக்கு!ஆலிலைக் கண்ணனின் இந்தப்படம் மிகப்பிரபலமானது. இந்த போசில் கிருஷ்ணன் ரொம்ப அக்ரபாடிக் செய்து இரண்டு கைகளையும் காலுக்குக் கீழ் கொடுத்து ஒரு காற்பெருவிரலை சுவைக்கின்றார்.

எதுக்கு இவ்வளவு கஷ்டமான போஸ்? வியாக்கியானம்: கண்ணனின் பக்தர்களெல்லாம் அவனது பாத தூளிகை பற்றி அவ்வளவு பேசுகிறார்கள். தாமரைப்பூ பாதம். கந்தம் கமழும் பாதம். சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கும் ஜீவராசிகளுக்கு சரணம் அளிக்கும் பாதம் என்று. கிருஷ்ணனுக்குத் தோன்றியதாம் ஒரு நாள் 'அட! என்னப்பா! இந்த பாதத்தில் அவ்வளவு சிறப்பு' ன்னு யாரும் பாக்காத நேரத்திலே சப்புக் கொண்டிப்பாத்தாராம்.

ஆனா அதை நம்ம பெயிண்டர்கள் எப்படியோ பாத்துட்டாங்க :-) படமும் வரைஞ்சுட்டாங்க.

ஆனால் மிக நுணுக்கங்கள் கொண்ட இந்தப் படத்தை வரைந்த 10 வயது பாலனுக்கு இரண்டு கைகளும் ஒரு விபத்தால் எடுக்கப்பட்டு விட்டன. சப்புக்கொட்ட எந்த விரல்களும் கால்களில் இல்லை. ஒரு காலில் பாதி இல்லை.வாழ்வில் திட நம்பிக்கை வேண்டும். ஒரு சின்ன முட்டையில் ஒரு பேருயிரின் சூட்சுமங்களை வைக்கிறான் இறைவன். உடலின் எல்லா செல்லுக்கும் மற்ற எல்லா உறுப்புகளையும் உருவாக்கும் திறன் இருக்கிறது. இதை வைத்துதான் டோ லி என்ற ஒரு ஆட்டுக்குட்டியை வேறொரு ஆட்டின் மடுவிலிருந்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கிக் காட்டினர். ஜனார்தனன் என்னும் இச்சிறுவன் மனம் தளராமல் தனது வாயால் எழுத, ஓவியம் வரையக் கற்றுக் கொண்டுவிட்டான்.

இது இந்தியாவைப் பொருத்தவரை பெரிய விஷயம். ஜெர்மனியில் இப்படி வாயால் வரையும் ஓவியர்கள் சங்கமே வைத்திருக்கிறார்கள். உடல் ஊனம் என்பது இழிவல்ல என்பது மேலைத்திய சித்தாந்தம். நம்ம ஊரில் ஊமையாக, நொண்டியாகப் பிறந்துவிட்டால் கொடுமை செய்தே கொன்றுவிடுவார்கள். ஜனா அதிர்ஷ்டக்காரன். அவன் டாக்டர், குடும்பம், நண்பர்கள் அவனை அப்படிச் செய்யவில்லை.

ஜனா பற்றிய குறிப்பு வலைப்பக்கத்தில் கிடைக்கிறது. கட்டாயம் போய் வாசியுங்கள். சுபாவும் தனது எண்ண அலைகளில் எழுதியுள்ளார்.

நாமெல்லாம் நாம் பட்ட கஷ்டங்கள் பெரிது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு இளம் பயிர் வேர்கள் அற்றுக் கிடக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாமென்று யோசிக்க வேண்டும்!

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள் 002

தமிழ்ச் சமயங்கள் ஓர் ஆழ்கடல். எவ்வளவோ தெரிந்து கொள்ள உள்ளன. நண்பர் உஷா (நண்பி என்பது அவ்வளவு அழகாக இல்லை. எனவே பொதுமையில் நண்பர் என்னும் 'ஆர்' விகுதியுடன் பயன்படுத்துகிறேன்) "அழகி" என்பதைப் பற்றி பிரஸ்தாபித்துள்ளார்!

நான் அழகியென்று இரு பொருள் படும்படிதான் பயன்படுத்தினேன்.

1) நல்ல புத்தி: ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தனின்/பக்தையின் லக்ஷணமாக ஒன்றை வலியுறுத்துகிறார்கள். "தான்" சர்வ லக்ஷணமும் பொருந்திய அழகன்/அழகி என்று பக்தி செய்ய வேண்டும் என்பது. இது நாயக-நாயகி பாவத்தில் முக்கியம். புவன சுந்தரனான இறைவனுக்கு சமமாக பக்தன் நிற்க வேண்டுமெனில் அவன் அழகாகத்தானே இருக்க வேண்டும். அப்போதுதான் சமன்பாடு சரிப்படும்? இது பற்றி வாசிக்க நிறைய உள்ளது.

2) கெட்ட புத்தி: உஷா சொல்ற மாதிரி. அழகிற்கும் அறிவிற்கும் சம்மந்தமில்லை என்பது. அதனால்தான் என்னையும் அடி முட்டாளக் காண்பித்துக் கொண்டேன் (அசடன்). இந்த பாவமும் முக்கியம் ஏனெனில் "விண்டவர் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை". இந்த உரையாடல் ஒரு முயற்சி. அவ்வளவே.

உஷா தன்னடக்கம் கொண்டவர். அவர் வீச்சை வலைப்பூவில் காணலாம். அவர் அழகியா இல்லையா என்பதை அவர் தந்திருக்கும் படத்திலிருந்து கண்டு கொள்க. நிற்க. இன்றைய விஷயத்திற்கு வருவோம்.

கொரியா எனக்கு நிறையக் கத்துக் கொடுக்கிறது. ஒவ்வொரு புத்தர் போயிலுக்கும் போகும் போது புத்தர் வெவ்வேறு முத்திரைகள் காட்டுகிறார். உதாரணத்திற்கு கீழே இரண்டு.இதற்கெல்லாம் அர்த்தமிருக்கிறது. அது பற்றி யோசியுங்கள் என்று பௌத்தம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பௌயமாக கொரியர்கள் விழுந்து, விழுந்து சேவித்து விட்டுப் போய் விடுகிறார். பலர் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழிபாடு தவறில்லை. மனதை ஒருமுகப்படுத்தும் வழிமுறைகளில் வழிபாடு முக்கியம். ஆனாலும் அதையும் விட முக்கியம் அங்கு புத்தர் நமக்குச் சொல்லும் சேதி. புத்தர் இறைவன் பற்றி மௌனம் சாதித்துவிட்டார். இருப்பின் சோகத்தை முதலில் புரிந்து கொண்டால் இறைமை என்னவென்று தெரியும் என்பது அந்த மௌனத்தின் பொருள். சும்மாச் சும்மா சாமி கும்பிட்டால் துக்கம் போய்விடாது. இறைவன் தந்திருக்கும் புத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்கிறது அந்த மௌனம்.

இல்லையெனில் புத்தருக்கு உலகின் ஆகப்பெரிய தியான அறை கொண்ட கோயிலை ஏன் எழுப்பியுள்ளனர் கொரியர்கள்?கொரியர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள். இந்தியாவிலிருந்து பௌத்தம். சீனாவிலிருந்து கன்பூசியனிசம். இருபெரும் தந்துவச் செல்வங்கள்! கன்பூசியன் கோயிலில் வெற்று வெளி தவிர வேறு ஒன்றும் இருப்பதில்லை!சமணமும், பௌத்தமும் இருந்த இடத்தை வைணைவமும், சைவமும் நிரப்ப வேண்டுமெனில் அதனையும் விஞ்சிய தத்துவங்களை மக்களுக்குக் காட்ட வேண்டும். அப்போதுதானே அவை ஏற்றுக் கொள்ளப்படும்? இதைத்தான் செய்தார் ஆதி சங்கரர். இவரை 'பிரசன்ன புத்தர்' (போலி புத்தர்) என்று கேலி செய்கிறான் பாரதி (பாரதியை அத்வைதி என்று சொல்வது அபத்தம்). ஆதீசங்கரரின் பூஜ்ய குரு ஒரு பௌத்தர். எனவே பௌத்தம் கற்று அதற்கு மேலான தர்க்கத்தை சங்கரை வைக்கிறார். பின்னால் அதிலுள்ள குறைபாடுகளை தனது 'விசேஷ அத்வைதம்' எனும் கோட்பாட்டால் ஸ்ரீராமானுஜர் களைகிறார். அதன் பின் வரும் 'மெய்கண்டார்' மேலும் இத்த்தத்துவங்களுக்கு தன் கூர் மதியால் மெருகூட்டுகிறார்.

இவர்கள் கண்ட தத்துவ தரிசனங்களை சுமந்து நிற்கின்றன நமது கோயில்கள். கோயில் முழுக்க முழுக்க தத்துவக் குறியீடுகள். முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி, கிருஷ்ணனுக்கு ஆயிரம் பொண்டாட்டி என்பதெல்லாம் வெறும் அபத்தம். கண்ணனைக் காமக்குறியீடாகக் காட்டுவதைப் போன்ற அபத்தம் உலகில் வேறு எங்குமில்லை. பௌத்தம் எதைச் சுட்டி நின்றதோ, சமணக் கோயில்கள் எதைச் சுட்டுகின்றனவோ அதையே மெருகூட்டி இந்துக் கோயில்கள் செய்கின்றன. இறைவனுக்கு மனித உரு ஏன் கொடுக்கப்பட்டது? இறைவன் கைகளிலுள்ள ஆயுதங்களின் குறியீடு சொல்லும் தத்துவமென்ன? கோயில் மூளைக்கு வேலை தரும் இடம். இத்தனை 'சாமிகள்' எதற்கு? அவை சுட்டுவதென்ன? யோசிக்க வேண்டும்!

இதெல்லாம் செய்ய மாட்டேன். ஆனால் எனக்கு கோயில் வேண்டும் என்று சொல்லும் மூட இந்துக்கள் அதற்குப் பதில் கோயிலுக்குப் போய் டாவடிக்கலாம். அது நேர்மையானது. இயற்கையானதும் கூட!

Fellowship of Rings 002

அன்புள்ள கண்ணனுக்கு,

இத்துடன் அனுப்பியதைப்படித்துவிட்டு( நொந்துவிட்டு),போடலாம் என்றால் உங்கள் வலைபூவில் போடவும்.

கண்ணன் என்னை அழகி என்று சொல்லிவிட்டார். அப்போதே உங்களுக்கு புரிந்திருக்கும் அழகுக்கும், மூளைக்கும் சம்மந்தமில்லை என்று. என்னால் உதாரணம் எல்லாம் கொடுத்து ஆக்ரோஷமாய் வாதிட வராது. வாதம் என்பதே அபத்தம். எந்த கருத்தையும் சொல்லி பிறரை ஏற்றுக்கொள்ள செய்ய முடியாது. இந்த கருத்தும் படிப்பவர் மனதின் ஆழத்தில் ஊறி மேலும் சில மசாலாக்கள் சேர்ந்து பக்குவப்படலாம்.

என்னுடைய படிப்பு நுனிபுல் மேய்தல்தான். ஆழமாய் எந்த விஷயமும் தெரிந்துக் கொள்ள விரும்பியதே இல்லை. நிறைய கடவுளர்களை பற்றி படித்துள்ளேன். அதில் இருந்து என் மனதிற்கு தோன்றியதை இங்கு வைக்கிறேன். குற்றம் குறை இருக்கும், ஆனால் உங்கள் நம்பிக்கையை நான் கேலி செய்யவில்லை என்பதை மனதில் கொண்டு இதை படிக்க ஆரம்பியுங்கள்.

நான் பிறந்த இந்து சமயத்தை மட்டும்தான் சொல்லுவேன். பிற மதத்தை பற்றி சொல்ல எனக்கு உரிமையில்லை என்று நினைக்கிறேன்.

மூன்று கேள்விகள் வைத்தேன். இதில் முதல் இரண்டிற்கு சுபாவும், கண்ணனும் ஒரே பதிலை சொல்லியிருக்கிறார்கள்.

சுபா கடவுள் உண்டு என்று சுருக்கமாய் சொன்னதை கண்ணன் விலாவாரியாய் விளக்கியிருக்கிறார். அதாவது புரியாத விஷயங்களைப் பார்த்த மனிதன், அதை உண்டாக்கியவனுக்கு கடவுள் என்று பெயர் வைத்துவிட்டான் என்று கண்ணன் சொன்னதைநானும் வழி மொழிகிறேன்..

ஆதி மனிதனுக்கு நெருப்பு முதலில் ஆச்சரியத்தை தந்தது. அது இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று தெரிந்து அதை வணங்க ஆரம்பித்தான். இயற்கையின் மா பெரும் சக்தியான, தன்னால் சமாளிக்க முடியாத பஞ்ச பூதங்களையும் வழிப்பட ஆரம்பித்தது இப்படிதான். லிங்க ரூபமும் இப்படி ஆச்சரியத்தையும், அதனால் உலகம் பெருக ஆரம்பித்ததையும் கண்டு அதையும் வழிப்பட ஆரம்பித்தான். தனக்கு விளங்காத, பயத்தைக்கொடுக்கும், பிரமிப்பு ஊட்டுவதை கடவுளாய் வணங்க ஆரம்பித்தான். நாகரீகம் வளர வளர கடவுள்களும், மனிதர்களிடையே பிரிவும் தோன்ற ஆரம்பித்தது. இந்த தட்டில் மேலே இருந்தவர்கள் வழிப்பாட்டு முறையை ஆரம்பித்தனர் அல்லது கண்டுப்பிடித்தனர். தன்னை மற்ற பிரிவுகளைவிட மேலானவர்கள் என்று நிலை நாட்டிக் கொள்ள அவர்கள் கடவுள்களை பயன் படுத்திக் கொண்டனர். ஆள் ஆளுக்கு புதிய கடவுளையும், அதை வழிப்படும் முறைகளையும் சொல்ல ஆரம்பித்தனர்.

சிலர் மனிதனை நாகரீகப்படுத்த,நல் வழிப்படுத்த புதிய முறையை அதாவது புதிய கடவுளை அறிமுகப்படுத்தினர். ஆனால் சொன்னதை எல்லாம் மனிதன் சுலபமாய் மறந்துவிட்டு, அந்த வழிப்பட்டு முறையை மட்டும் பலமாய் பற்றிக் கொள்ள ஆரம்பித்தான். திருமந்திரத்தில் எத்தனை நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் ப்ரோதஷத்துக்கு கபாலி கோவிலை வலம் வந்தால் போதும், பாவங்கள் தொலையும் என்றல்லாவா நினைக்கிறான். கடவுள் பக்தி என்பது பயம் மற்றும் மனிதனுக்கு தன் சுமையை பகிர்ந்துக் கொள்ள ஒரு துணையும் ஆகும். சின்ன வயதிலேயே உம்மாச்சி கண்ணைக்குத்தி விடும் என்று பயமுறுத்தல் ஆரம்பிக்கிறது. "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு போலீஸ்காரனைப் போட்டு காவல்காக்க முடியாது. அதுவே கடவுள் நீ செய்யும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால் பாவம் செய்ய அஞ்சுவான்" இதை சொன்னது நம் மூதறிஞர் ராஜாஜி.

கடவுள், பக்தி இதன் நீட்சியாய் பூஜை, மந்திரங்கள் போன்ற வழிப்பாட்டு முறைகள், பிறகு கடவுளை குஷி படுத்த, வழிக்கொண்டுவர, சமாதானப்படுத்த யாகங்கள், சோதிடங்கள், சாஸ்திரங்கள் இத்தியாதி தோன்றி மனிதன் எது செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்று பாவங்களை செய்துவிட்டு அதில் இருந்து மீளும் வழியைக் கண்டுபிடித்து தங்கள் பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டார்கள். மொத்தத்தில் கடவுள் இன்றைய தேதியில் பணங்கொட்டும் வியாபாரத்தின் சீப்பான மூல பொருள் ஆனார்.(தொடரும்.)

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள்!

உஷா

பிள்ளையார் சுழிப்போட்டு ஆரம்பிக்கிறேன்,

1) கடவுள் என்பது உண்டா, உண்டு என்றால் அவர் யார்?

2) உலகத்தை உண்டாக்கியது கடவுளா?

3)அவன் தான் மூலக்கருவா? எப்படி?

பதில், பழைய செந்தமிழ் பாட்டை எடுத்துப்போட்டு பயமுறுத்தக்கூடாது!உஷா சில நிபந்தனைகள் போட்டு ஆரம்பிக்கிறார். அதாவது கேள்விக்கான பதில் 'மேற்கோள்' எனும் போர்வையில் மறைந்து கொள்ளக்கூடாது. அது சுயமாக, தெளிவுற்ற பதில்களாக இருக்க வேண்டும். சபாஷ்!

பிறப்பெடுத்தபின் வாழ்வு நமக்குக் கற்றுத் தருகிறது. இக்கல்வி நமது மூதாதையரின் அனுபவத்தின் ஊடாக இருக்கலாம் (knowledge based) அல்லது சுய தேடலின் மூலமாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்ததுமாக இருக்கலாம். சுயதேடல் என்று நான் சொல்வது சுய ஞானத்தை நம்பி (inteligence is different from knowledge), உள்ளொளி தரும் பதில்களை மட்டும் நம்பி கருத்துச் சொல்வது. வேதங்கள் இப்படித் தோன்றியவையே. வேதம் என்பது மறை என்று தமிழில் வருகிறது. இரண்டும் ஒன்றுதான்.

நான் முடிந்தவரை மேற்கோள் இல்லாமல் விடை பகர முனைகிறேன் (ரொம்ப செந்தமிழோ :-)!

"பிள்ளையார் சுழி" என்பது பலவற்றைச் சுட்டுகிறது. அது மிகப்பழமையான இந்திய நம்பிக்கை. செய்யும் காரியம் நலமே விளைய இறைவனை வேண்டுவது. ஒரு மூலம் இல்லாமல் தோற்றமில்லை. எனவே அந்த மூலத்தின் நினைவுடன் ஒரு வேலையைத் தொடங்குவது. இப்படி.

இதற்கும் மேலும், அதுவொன்றைச் சுட்டுவதாகப் படுகிறது. இறைவன் என்பது ஒரு நம்பிக்கையா? என்றும் அது கேட்பதாகப்படுகிறது. உஷாவிற்கு பதில் என்ற சாக்கில் எனது சுய தேடல் ஆரம்பமாகிறது. இது எனது பயணமே. இதில் எவ்வளவு தூரம் உங்களால் வரமுடிகிறது என்பது அவரவர் உந்து சக்தியைப் பொருத்தது.

1) "கடவுள்" உண்டா? - ரொம்பப் பழைய கேள்வி. மனிதன் சிந்திக்க ஆரம்பித்தவுடன் வந்த கேள்வி. தன்னைச் சுற்றி உள்ளவைகளைக் கண்டு, அவை தன்னால் படைக்கப்படவில்லை என்று அறிந்தவுடன், 'பின் யார் படைத்தது?' என்ற கேள்வி எழ "கடவுள்" மனிதனுள் தோற்றம் கொள்கிறார். இந்த்க் கெள்விக்கு ஒரே ஒரு பதில் இருக்க முடியாது. ஏனெனில், இப்படிக் கேள்வி கேட்பதின் மூலமாக இவன் பிறவற்றிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டாலும். இவனும் மற்றவைகளில் ஒரு அங்கமே. எனவெ அவைகளுக்குள்ள சர்வ சுதந்திரமும் இவனுக்கும் உண்டே. எனவே அச்சுதந்திரத்தின் அடிப்படையில் இவனால் தேட முடியும், தேடி விடை சொல்லமுடியும். எனவே ஒரு வகையில் கோடான கோடி விடைகள் இக்கேள்விக்கு சாத்தியம். என் விடை அவற்றுளொன்று.

கடவுள் உண்டு என்றால் அவர் யார்? என்னும் கேள்வியிலும் 'அவர்' என்ற மரியாதைக்குரிய விகுதி வருகிறது. கடவுள் நமது பால் வேறுபாடுகளுக்கு உட்பட்டதா? அவர், அவன், அவள், அது இவைகளில் ஒன்றா?

எனக்கு படுவதைச் சொல்கிறேன். என்னைப் பொருத்தவரை கடவுள் உண்டு. 'கடவுள்' பால் வேறுபாடுகளுக்கும் மீறியது. ஆனால் அவன், அவள் என்று விளிப்பதில் தவறில்லை. ஏனெனில் அதனால் அதுவாகவும் இருக்க முடியும். கடவுளை எத்தனையோ வகைகளில் உருவகப்படுத்த முடியும். கவனிக்க, கடவுள் என்பது ஒரு உள்ளுறை உவமம்/உருவகம். மரம் என்ற சொல் மரமல்ல. இந்த விளக்கங்கள்தான் 'அவன்' என்று கொள்ள முடியாது. எனவே மனித யத்தனத்தில் முடிந்தது உருவகப்படுத்துதலே. அதில் தவறில்லை. கடவுள் என்பதொரு பிரம்மாண்டமான இயக்கம். தன்னுள் சகலத்தையும் அடக்கி இயங்கும் இயக்கம். தனக்கு மீறியதொன்றுமில்லை. அதுதான் முதல். அதுவே முடிவும். அது காலம் அல்ல. ஆனால் காலம் அதனுள் அடக்கம். இப்போதைக்கு இது போதும்.

2) உலகத்தை உண்டாக்கியது கடவுளா?

"கடவுள்" என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தே இதற்கான பதில் அமையும். கடவுள் ஒரு வெந்தாடி வேந்தர் என்று கொண்டு, அவர் சர்வ வல்லமை படைத்தவர் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு, அவர் மூன்று நாளில் படைத்தார், நான்கு நாளில் படைத்தார் என்பதெல்லாம் வெறும் ரீல். அது மனித கற்பனை. ஆனால், கடவுள் என்பது மனித இயக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் இயக்கம் என்று கொண்டால் உலகம் 'அவன்' படைப்பே. அதாவது அவன் உலகமாகவும் இருக்கிறான் என்று கொள்ளலாம்.

3) அவன்தான் 'மூலக்கருவா?" எப்படி?

இக்கேள்வி பல சித்தாந்தங்களுக்கு இட்டுச் செல்லும் கேள்வி. இதுவரை என்னால் புரிந்த கொண்ட அளவில் 'அவன்'தான் மூலம். அவனுக்கும் எஞ்சிய பொருளென்று ஒன்றில்லை. சகலமும் அவனுள் அடக்கம். இதில் கணிசமாக சுபா வேறுபடுகிறார். வேண்டுமானால் இது பற்றி மேலும் புரிந்து கொள்ள முயலலாம். என்னால் சுபாவின் பதிலை முழுவதுமாய் கிரகிக்க முடியவில்லை.

Fellowship of Rings - 001

உஷா

பிள்ளையார் சுழிப்போட்டு ஆரம்பிக்கிறேன்,

1) கடவுள் என்பது உண்டா, உண்டு என்றால் அவர் யார்?

2) உலகத்தை உண்டாக்கியது கடவுளா?

3)அவன் தான் மூலக்கருவா? எப்படி?


பதில், பழைய செந்தமிழ் பாட்டை எடுத்துப்போட்டு பயமுறுத்தக்கூடாது!Feedback-to-Feedback
Suba (http://subaonline.blogdrive.com) @ 01/17/2004 04:29:


உஷா, இந்த கேள்விக்கு பதில் சொல்லனும்னா பெரிய விளக்கம் தரணுமே! ஆனாலும் குட்டியா எனக்கு பட்டதைச் சொல்லலாமா?

1. உண்டு - நமது கற்பனைகளால், புத்தியால் காட்டமுடியாதவர்.

2. ஆம்.

3. அவனும் மூலக்கரு!

அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள்!

வலைப்பூ சரித்திரத்தில் இன்றொரு புதிய அத்தியாயம். பின்னூட்டத்தின் வழியே தத்துவக் கேள்விகள் வரும். அதற்கு 'என் மடல்' மூலமாக யாரும் பதில் சொல்லலாம்.

பதில்கள் சிறியதாக 'பின்னூட்டத்திலும்' இருக்கலாம்,

ஆனால், நல்ல விளக்கங்கள் தேவைப்படுமானால் அது மேடையிலும் வைக்கப்படலாம்.

உங்கள் பதில்கள், என் மடலில் பதிவாக வேண்டுமெனில் எனக்கு nkannan@freenet.de என்ற முகவரிக்கு எழுதுங்கள், இல்லை

நீங்கள் வலைப்பூ வைத்திருந்தால் அதில் போட்டு விட்டு எனக்கு கட்டாயம் சொல்லுங்கள், அல்லது பின்னூட்டத்தில் உடனே இணைப்புக் கொடுங்கள்.

ஏனெனில் உஷா கேள்விகள் மூலம் உருவாக்குவது ஒரு Fellowship of Rings! ('மோதிர மாமா' கடைசிப் படமும் பார்த்தாச்சு :-).

எனது பதில்களை அடுத்த மடலில் வைக்கிறேன். சுபா மிக அழகாக, ரத்தினச் சுருக்கமாக சைவ சித்தாந்தப் பார்வையில் பதில் சொல்லியிருக்கிறார். எனக்கு என்ன தெரிகிறது என்று விரைவில் பார்ப்போம்.

பார்த்துக் கொண்டிருப்பவரெல்லாம் ஜோரா கை தட்டுங்க! (இதை 'லந்து' அடிச்சு வேறு வகையான Fellowship of Rings உருவாகும் என்று கௌளி சொல்கிறது :-)

மின்வெளியில் எத்தனையோ வகையில் அரட்டையடிக்கமுடியும்! மடலாடற்குழுக்கள் இதில் பிரதானம். தனியாக வலையகம் வைத்து அதில் பின்னூட்டத்திற்கு இடமளிக்கலாம். ஆனால் இதை மிகச்சுலபமாக வலைப்பூ செய்துவிட்டது. வலைப்பூ என்பது வலைப்பதிவு. அதுவொரு தனி மடல், சஞ்சிகை, டைரி..எப்படிவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அதுவொரு சஞ்சிகையென்றால் அதில் சிறப்பு விருந்தினர் (Guest Editor) வைப்பது தவறில்லை. எனவே 'என் மடல்' என்ற என் சஞ்சிகையிலும் சிறப்பாசிரியர்களை வரவேற்று சிறப்பளிக்க வேண்டுமென்று நீண்ட நாள் ஆசை. ஒருமுறை துபாய் நண்பர் சடையன் சாபு அப்படி வந்தார். இப்போ நம்ம உஷா இதற்குத்தயாரென்று சொல்லியிருக்கிறார்.

இவர் தனியாக இன்னும் வலைப்பூ அமைக்கவில்லை. எனவே இப்படி அப்பப்ப 'ராஜபார்ட்' மன்னிக்க 'ராணிபார்ட்' வேறு மேடைகளில் போடுவதில் தப்பில்லை. சும்மாச்சும்மா பின்னூட்டத்தில் கொஞ்சம் கொஞ்சம் வெட்டி, ஒட்டி எத்தனை நாள் எழுதுவது? அவருக்கோ எழுத நிறைய விஷயமிருக்கு எனவே இங்கே கொஞ்ச நாள் அவங்க கச்சேரி நடக்கட்டுமே. என்ன சொல்லறீங்க?

உஷாவிற்கு எல்லோரும் சேர்ந்து ஒரு பெரிய 'ஓ' போடுங்க!

பின்குறிப்பு: இதை வலைபூக்கு போட்டின்னு மதி நினைக்கமாட்டங்கன்னு நினைக்கிறேன். அது மரத்தடி. இது தெருவோர அரட்டை :-) மரத்தடி கோஷ்டியும் இங்க வந்து அரட்டையில் கலந்து கொள்ளலாம். கொள்ளனும்!