அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள் 002

தமிழ்ச் சமயங்கள் ஓர் ஆழ்கடல். எவ்வளவோ தெரிந்து கொள்ள உள்ளன. நண்பர் உஷா (நண்பி என்பது அவ்வளவு அழகாக இல்லை. எனவே பொதுமையில் நண்பர் என்னும் 'ஆர்' விகுதியுடன் பயன்படுத்துகிறேன்) "அழகி" என்பதைப் பற்றி பிரஸ்தாபித்துள்ளார்!

நான் அழகியென்று இரு பொருள் படும்படிதான் பயன்படுத்தினேன்.

1) நல்ல புத்தி: ஆழ்வார்களும், நாயன்மார்களும் பக்தனின்/பக்தையின் லக்ஷணமாக ஒன்றை வலியுறுத்துகிறார்கள். "தான்" சர்வ லக்ஷணமும் பொருந்திய அழகன்/அழகி என்று பக்தி செய்ய வேண்டும் என்பது. இது நாயக-நாயகி பாவத்தில் முக்கியம். புவன சுந்தரனான இறைவனுக்கு சமமாக பக்தன் நிற்க வேண்டுமெனில் அவன் அழகாகத்தானே இருக்க வேண்டும். அப்போதுதான் சமன்பாடு சரிப்படும்? இது பற்றி வாசிக்க நிறைய உள்ளது.

2) கெட்ட புத்தி: உஷா சொல்ற மாதிரி. அழகிற்கும் அறிவிற்கும் சம்மந்தமில்லை என்பது. அதனால்தான் என்னையும் அடி முட்டாளக் காண்பித்துக் கொண்டேன் (அசடன்). இந்த பாவமும் முக்கியம் ஏனெனில் "விண்டவர் கண்டதில்லை. கண்டவர் விண்டதில்லை". இந்த உரையாடல் ஒரு முயற்சி. அவ்வளவே.

உஷா தன்னடக்கம் கொண்டவர். அவர் வீச்சை வலைப்பூவில் காணலாம். அவர் அழகியா இல்லையா என்பதை அவர் தந்திருக்கும் படத்திலிருந்து கண்டு கொள்க. நிற்க. இன்றைய விஷயத்திற்கு வருவோம்.

கொரியா எனக்கு நிறையக் கத்துக் கொடுக்கிறது. ஒவ்வொரு புத்தர் போயிலுக்கும் போகும் போது புத்தர் வெவ்வேறு முத்திரைகள் காட்டுகிறார். உதாரணத்திற்கு கீழே இரண்டு.இதற்கெல்லாம் அர்த்தமிருக்கிறது. அது பற்றி யோசியுங்கள் என்று பௌத்தம் சொல்கிறது. ஆனால் நடைமுறையில் பௌயமாக கொரியர்கள் விழுந்து, விழுந்து சேவித்து விட்டுப் போய் விடுகிறார். பலர் ஜபம் செய்து கொண்டிருக்கிறார்கள். வழிபாடு தவறில்லை. மனதை ஒருமுகப்படுத்தும் வழிமுறைகளில் வழிபாடு முக்கியம். ஆனாலும் அதையும் விட முக்கியம் அங்கு புத்தர் நமக்குச் சொல்லும் சேதி. புத்தர் இறைவன் பற்றி மௌனம் சாதித்துவிட்டார். இருப்பின் சோகத்தை முதலில் புரிந்து கொண்டால் இறைமை என்னவென்று தெரியும் என்பது அந்த மௌனத்தின் பொருள். சும்மாச் சும்மா சாமி கும்பிட்டால் துக்கம் போய்விடாது. இறைவன் தந்திருக்கும் புத்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்கிறது அந்த மௌனம்.

இல்லையெனில் புத்தருக்கு உலகின் ஆகப்பெரிய தியான அறை கொண்ட கோயிலை ஏன் எழுப்பியுள்ளனர் கொரியர்கள்?கொரியர்கள் அதிர்ஷ்ட்டசாலிகள். இந்தியாவிலிருந்து பௌத்தம். சீனாவிலிருந்து கன்பூசியனிசம். இருபெரும் தந்துவச் செல்வங்கள்! கன்பூசியன் கோயிலில் வெற்று வெளி தவிர வேறு ஒன்றும் இருப்பதில்லை!சமணமும், பௌத்தமும் இருந்த இடத்தை வைணைவமும், சைவமும் நிரப்ப வேண்டுமெனில் அதனையும் விஞ்சிய தத்துவங்களை மக்களுக்குக் காட்ட வேண்டும். அப்போதுதானே அவை ஏற்றுக் கொள்ளப்படும்? இதைத்தான் செய்தார் ஆதி சங்கரர். இவரை 'பிரசன்ன புத்தர்' (போலி புத்தர்) என்று கேலி செய்கிறான் பாரதி (பாரதியை அத்வைதி என்று சொல்வது அபத்தம்). ஆதீசங்கரரின் பூஜ்ய குரு ஒரு பௌத்தர். எனவே பௌத்தம் கற்று அதற்கு மேலான தர்க்கத்தை சங்கரை வைக்கிறார். பின்னால் அதிலுள்ள குறைபாடுகளை தனது 'விசேஷ அத்வைதம்' எனும் கோட்பாட்டால் ஸ்ரீராமானுஜர் களைகிறார். அதன் பின் வரும் 'மெய்கண்டார்' மேலும் இத்த்தத்துவங்களுக்கு தன் கூர் மதியால் மெருகூட்டுகிறார்.

இவர்கள் கண்ட தத்துவ தரிசனங்களை சுமந்து நிற்கின்றன நமது கோயில்கள். கோயில் முழுக்க முழுக்க தத்துவக் குறியீடுகள். முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி, கிருஷ்ணனுக்கு ஆயிரம் பொண்டாட்டி என்பதெல்லாம் வெறும் அபத்தம். கண்ணனைக் காமக்குறியீடாகக் காட்டுவதைப் போன்ற அபத்தம் உலகில் வேறு எங்குமில்லை. பௌத்தம் எதைச் சுட்டி நின்றதோ, சமணக் கோயில்கள் எதைச் சுட்டுகின்றனவோ அதையே மெருகூட்டி இந்துக் கோயில்கள் செய்கின்றன. இறைவனுக்கு மனித உரு ஏன் கொடுக்கப்பட்டது? இறைவன் கைகளிலுள்ள ஆயுதங்களின் குறியீடு சொல்லும் தத்துவமென்ன? கோயில் மூளைக்கு வேலை தரும் இடம். இத்தனை 'சாமிகள்' எதற்கு? அவை சுட்டுவதென்ன? யோசிக்க வேண்டும்!

இதெல்லாம் செய்ய மாட்டேன். ஆனால் எனக்கு கோயில் வேண்டும் என்று சொல்லும் மூட இந்துக்கள் அதற்குப் பதில் கோயிலுக்குப் போய் டாவடிக்கலாம். அது நேர்மையானது. இயற்கையானதும் கூட!

0 பின்னூட்டங்கள்: