அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள்! 003


அன்புள்ள உஷா:

கலந்துரையாடலை முடித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறீர்கள். தாராளமாக. நீங்கள் ஆரம்பித்து வைத்தீர்கள். அதை முடிக்கும் உரிமை உங்களுக்கே :-) நீங்கள் தெரியாமல் கேட்கவில்லை :-) கடவுளைப் பற்றிய ஒரு அபிப்பிராயம் உங்களிடம் உள்ளது. அதைச் சொல்லியிருக்கிறீர்கள்! எனவே இது தேடல் அல்ல. தெரிந்ததைச் சொல்வது. அபிப்பிராய மாற்று!

இரண்டு விஷயங்கள் உங்களில் பதில்களில் தெளிவற்றுக் கலந்துள்ளன. ஒன்று தனது இருப்பு, தனக்கும் படைப்பிற்குமுள்ள தொடர்பு பற்றிய ஆழ்மான சுய தேடல். இது நமக்கெல்லாம் பொதுவாய் அமைந்துள்ள ஞானம் என்னும் ஒளிவிளக்கை வைத்துக் கொண்டு தேடுவது. மற்றது சமயம் என்னும் சமூக அமைப்பு பற்றியது. உண்மை என்பதை நாம் ஒழுங்கு படுத்த முற்படும் போதே அது அந்நியப்பட்டு போகிறது. எனவே ஒழுங்குபடுத்தப்பட்ட எந்தச் சமயமும் உண்மைக்கு அருகாமையில் இருக்கலாமே தவிர அதுவே உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. சமயங்கள் அனைத்தும் ஊழல் நிரம்பியவையே. சமயம் பலருக்கு சோறு போடுகிறது. வயிறு வளர்க்கப் பேசப்படும் சமய உரையாடல் அல்ல இது. என்னைப் பொருத்தவரை அர்த்தமுள்ள, ஆழமான தேடல்.

உங்கள் பதிலில் ஒரு அலுப்புத் தெரிகிறது. சமயம் அலுப்புத்தரக்கூடியது. ஆன்மீகம் அப்படியல்ல. இது பற்றியெல்லாம் நீங்கள் ஆழமாக யோசிக்க வேண்டும். பெரும்பாலான விஞ்ஞானிகள் நாத்திகர்களாக இருப்பதற்குக் காரணம் அலுப்புத்தரும் சமய ஊழலே காரணம். உண்மை தேடும் ஒரு தீவிர விஞ்ஞானி என்னைப் பொருத்தவரை ஒரு ஆன்மீகவாதியாகவே இருப்பான்.

இரவு வெகு நேரம் இது பற்றி யோசித்தேன். இறைவன் இல்லை என்று சொல்லி விடுவது எளிது. உண்டு என்று சொன்னால்தான் பிரச்சனையே. உண்டு இல்லை என்பது அவரவர் நோக்கு (attitude) சார்ந்தது. எதற்குமே 'பொருள்' ஒன்றைப் பார்ப்பவன் சார்ந்ததே. பொருள் இல்லையென்று சொல்லவோ, எனக்கு இதற்குப் பொருள் தெரிய வேண்டிய அவசியமில்லை என்று சொல்லவோ உங்களுக்கு உரிமையுண்டு.

ஓஷோவின் பதிலைச் சொல்லி என்னை மாட்டுவதாக எண்ணிக்கொள்கிறீர்கள். ஓஷோ பற்றிய ஒரு பெரிய மாயை இந்தியர்களிடம் உருவாகியிருக்கிறது. பெரும்பாலான இலக்கிய கர்த்தாக்களுக்கு ஓஷோ பற்றிப் பேசுவது கொஞ்சம் பேஷனாகக் கூட இருக்கிறது. அவர் என்னைப் போன்ற ஒரு பேராசிரியர் அவ்வளவே. நிறையக் கற்றவர். நீங்கள் சொல்லும் 'மத்திமர்'. நிற்க. மூலம் இறைவனாக இருக்கும் போது அவனைப் படைத்தது யார் என்று கேட்கிறீர்கள். கொஞ்சம் நீங்களே யோசித்துப் பார்த்தீர்களெனில் இக்கேள்வியின் அபத்தம் புரியும். அவன்தான் மூலம் என்ற பிறகு அதற்கேது தோற்றம்? புத்திசாலித்தனமாகப் பேசி அகந்தை தன் பேதமையைக் காட்டிக் கொள்ளும் வாதமிது.

எனது கல்லூரிப் பேராசிரியர் ஒரு நாத்திகர். அவர் எங்களிடம் கேட்பார். "இறைவன் சர்வ வல்லமை உள்ளவனென்றால் அவனால் தூக்க முடியாத ஒரு கல்லை உருவாக்க முடியுமா?" என்று. இதுவொரு அபத்த தர்க்கம். வளைவுத் தர்க்கம். எங்கும் இட்டுச் செல்லாது. அது போன்றதே உங்கள் ஓஷோவின் கேள்வியும்.

கண்டவர் விண்டதில்லை, விண்டவர் கண்டதில்லை என்பது அப்படியான ஒன்றில்லை. அது தர்க்கத்தின் அபத்தம் பற்றிக் கேலி பேசும் உண்மை. கௌதமன் நிர்வாணம் அடைந்தவுடன் உலகிற்குச் சொல்ல வேண்டுமென ஆசைப்பட்டான். ஆனால் உடனே அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது, இதை யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்று. எனவே போதனை செய்ய வேண்டாம் என்றே தீர்மானித்தான். இதுதான் கண்டவர் விண்டதில்லை என்பது. இறைவன் பற்றி மௌனம் சாதித்த கௌதமன் இன்று இறைவனாக ஆகியிருப்பது சமயத்தின் வலுவைக் காட்டுகிறது. சுய தரிசனத்திற்கு இட்டுச் செல்வது ஞானம். கூட்டு வாழ்விற்கு இட்டுச் செல்வது சமயம். முதல் வகை தாய்ப்பால். இரண்டாவது செவிலியின் பால். இதில் எது வேண்டும் என்று நீங்கள்தான் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நன்றி உஷானந்தா! :-)

0 பின்னூட்டங்கள்: