அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள் 004

இதை நான் முதலிலேயே எழுதியிருக்க வேண்டும். இப்போதுமொன்றும் குறைந்து விடவில்லை! இது ஒரு முன்னுரை மாதிரி. முடியுரையாகும் அமையும்.

சென்ற முறை சென்னை சென்றபோது எனது மருமானும், மருமாளும் தனது 4 வயதுப் பெண்ணைக் கிண்டர்கர்டனில் சேர்ப்பதற்கான டென்ஷனில் இருந்தார்கள். குழந்தைக்கும், பெற்றோருக்கும் அன்று இண்டர்வியூ! குழந்தைகளுக்கு A,B,C மற்றும் ரைம்ஸ்ஸெல்லாம் தெரியுதா என்று சோதித்துப் பார்ப்பார்களாம். இது என்ன கூத்து என்று எனக்குத் தோன்றியது! ஆனா, இங்க பாயிண்ட் என்னனா கிண்டர்கார்டனுக்கு தகுதி பார்த்து சேர்க்க வேண்டிய காலத்திலே இருக்கோம்ங்கிறதுதான்.

வெண்கலச்சிலை எப்படி உருவாகிறது என்று தெரிய வேண்டுமெனில் வேதிமவியல் படித்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.

வயிற்றில் போன உணவு எப்படி செரிக்கிறது என்று கேட்டால் வைத்திய சாஸ்திரம் படிக்க வேண்டும்.

காற்றில் எப்படி விமானம் பறக்கிறது என அறிய இயற்பியல் படிக்கணும்.

வீதியோரம் ஆப்பம் விக்கிற கிழவிட்டே போய் அணுகுண்டு எப்படி செய்யறதுன்னு கேட்டா அவ அணுவும் கிடையாது, குண்டும் கிடையாது என்றுதான் சொல்வாள். கிழவி இல்லை என்று சொல்வதால் அணுகுண்டு இல்லை என்று ஆகிவிடாது (அப்புறம் அமெரிக்கா எப்படி பொழைக்கிறது!)

டாக்டராக வேண்டுமென மெடிகல் காலேஜுக்குள் போகும் மாணவனுக்கு அத்துறை மீது ஒரு ஈர்ப்பும், மரியாதையும் இருக்கும். அந்த ஈர்ப்புடன் படித்தால்தான் ஏறும்.

ஐந்தாந்கிளாஸில் தேறிவிட்டது என்பதற்காக அந்தக்குழைந்தையை யாரும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக ஏற்றுக்கொள்வதில்லை. எதற்கு இவ்வளவு விஸ்தாரமான வியாக்கியானமென்று கேட்கலாம். காரணமிருக்கு.

இப்பிரபஞ்சத்தின் மூலத்தைப்பற்றி அறிய வேண்டுமென்று ஒரு கேள்வியைப் போட்டு வைக்கிறோம். இந்த இயற்பியல், வேதிமவியல், உயிரியல் எல்லாம் தன்னுள் அடங்கிய ஒரு துறை பற்றிய கேள்வியை, கேட்க நமக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் கேட்டுவிட முடிகிறது!

இயற்பியல் அறிவு இல்லாமல் ஐன்ஸ்டைனிடம் சார்புடமை பற்றிப் பேசமுடியாது. எனக்கு கணினிப் பரிட்சயம் உண்டு அதனால் வேலை கொடு என்று ஐ.பி.எம் கம்பெனியில் வேலை கேட்டுவிட முடியாது. அத்துறை சார்ந்த அறிவு இருப்பதற்கான அத்தாட்சியாகச் சான்றிதழ்கள் காட்ட வேண்டும்.

இது அப்படியே ஆன்மீக விசாரணைக்கு (spiritual enquiry)ப் பொருந்தும். இங்கு விவாதிக்கப்படும் கேள்விகள் புத்தர் பிறப்பதற்கு முன்பே இந்திய மண்ணில் கேட்கப்பட்டு பல்வேறு துறைகள் உருவாகிவிட்டன. யோகமார்க்கம், தியான மார்க்கம், பக்தி மார்க்கம், சித்தர் வழி, வைணவம், காபாலிகம், வீர சைவம், தென்னிந்திய சைவ சித்தாந்தம், அத்வைதம், விசிட்டாத்துவைதம், துவைதம், சமணம், பௌத்தம், சீக்கியம், கிறித்துவம், இஸ்லாம் என்று எத்தனையோ மார்க்கங்கள். ஒவ்வொன்றும் இக்கேள்விகளை வெவ்வேறு வகையில் அணுகுகின்றன.

ஒரு சரியான விடையறிய சரியான அணுகுமுறை தெரிந்திருக்க வேண்டும். எங்கள் ஆய்வுக்கூடத்தில் யார் வேண்டுமானாலும் வந்து ஆய்வு செய்துவிட முடியாது, இல்லையா? அணுகுமுறை அறிந்தவர்களே அங்கு அனுமதிக்கப்படுவர். கல்வி கேள்விகளுக்கென வாழ்வின் பாதி காலத்தை நாம் செலவிடுகிறோம். படித்து வேலைக்குப் போன பின்பும் தொழில் ரீதியாக கற்றுக்கொண்டே இருக்கிறோம்.

ஆனால் வாழ்வின் ஆதாரம் பற்றிய கேள்வியை, உயிரின் மூலம் பற்றிய கேள்வியை எந்த முற்பயிற்சியுமில்லாமல் கேட்டுவிடமுடிகிறது. அவசரப்பட்டால் டாக்டராகிவிட முடியுமா? படித்துத்தேற வேண்டாமா? ஆனால், இறைவனை எனக்கு உடனே காட்டு என்று அவசரப்படுகிறோம். மிக, மிக ஆதாரமான கேள்விகளை அவசரமாய் கேட்கிறோம். சட்டென விடை வேண்டுமென்கிறோம். கிடைக்கவில்லையெனில் அது "மாயமான்" என்று குறை கூறுகிறோம். மெடிக்கல் காலேஜ் போன முதல் வருடம் யாரும் சர்ஜரி செய்வதில்லை. அப்படி அவசரப்பட்டு செய்துவிட்டு நினைத்தபடி காரியம் ஆகவில்லையென்றால் அதை "மாயமான்" என்று யாரும் சொல்வதில்லை! ஆனால், ஆன்மீகத்தில் இதை ஒப்பு நோக்குவதில்லை. அங்கு ரெடிமேடாக விடைகள் இருப்பது போலும். கேட்டவுடன் கிடைத்துவிடும் என்றும் பாவனை செய்கிறோம். நம் அவசர புத்தியை அறிந்து கொண்ட போலிச் சாமியார்கள் அசட்டு விடைகளைச் சொல்லி நம்மை போணி பண்ணிவிடுகிறார்கள். அது சரியான பதிலில்லை என்று தெரிந்தவுடன் வேறொரு சாமியாரிடம் அசரமாய் ஓடுகிறோம்.

இதுதான் நமது ஆன்மீகத்தேடலின் இன்றைய கதி. எல்லாம் ஒரே அவசர கோலம். தும்பை விட்டு வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

இப்போது கடவுளை அறியாவிட்டால் என்ன குடிமுழுகிவிடப்போகிறது? உலகம் சுற்றுவது நிறகப்போவதில்லை. கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிக்கப் போவதில்லை.

கடவுள் இல்லை என்பதால் அவருக்குத்தான் ஏதாவது குறை ஏற்படுமா? பூரணத்திலிருந்து கொஞ்சம் பிச்சு வைத்துவிட்டு பூரணம் குறைந்துவிட்டது என்று சொல்லமுடியாது. ஏனெனில் பிரிக்கப்பட்டதும், பிரிப்பவனும் பூரணத்தின் ஒரு அங்கம் என்பதால் பூரணம் என்றும் நிறைவாக இருக்கிறது. இது இந்திய மூதாதையார் ஒரு 5000 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு சொன்னது. அது எப்போதும் பொருளுடையதாகவே இருக்கும்.

சரி..இனி உஷாவின் கேள்விகளுக்கு வருவோம். பதில் சொல்ல வரும் போது ஆப்பக்கார கிழவிதான் ஞாபகத்துக்கு வருகிறாள். ஆப்பக்கார கிழவியிடம் அணுகுண்டு சாஸ்திரம் அறிந்து கொள்ள உஷா முயல்கிறார் என்று தோன்றுகிறது :-))

0 பின்னூட்டங்கள்: