அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 006

என்னிடம் இருப்பது சந்தேகங்களும், கேள்விகள் மட்டும்தான் மற்றும் குற்றம் குறை பாடுகள் இருக்கும். என் படிப்பு நுனிபுல் தான் என்று பெரியதாய் போர்ட் போட்டுவிட்டுதான் உள்ளே வந்தேன். அதனால் அபத்தங்கள் கட்டாயம் இருக்கும்.

உஷா! முதலில் உங்கள் தைர்யத்திற்கு வந்தனம். அப்புறம் உங்கள் வெளிப்படையான கேள்விகளுக்கு. ஞானத் தேடலில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று கேள்விகளை தனித்துப் பார்க்கப்பழகுவது. கேள்விகள் சில நேரம் அபத்தமாய் அமைந்துவிடுவதுண்டு. அதனால் கேட்டவர் அபத்தம் என்று பொருளில்லை. உங்களை அப்படியெல்லாம் சொல்லமாட்டேன். கவலை வேண்டும். தோழர்கள் போல் நடந்தே எனக்குப் பழக்கம்.


ஆனால் கடவுள் இல்லை என்பது சுலபம் என்றீர்கள். இது எனக்கு மிக ஆச்சரியமாய் இருக்கிறது. உலகில் 99.9% கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள். மிச்சமிருப்பவர்களில் பெண்களை நீங்கள் எண்ணிவிடலாம். இல்லை என்பதை சொல்வதில் எத்தனை பிரச்சனைகளை நாளும் சந்திக்கிறேன் தெரியுமா? விளக்கு பூஜைக்கு என்னைக் கூப்பிட்டு, நான் வர முடியாது என்றதும், அந்த அம்மாளின் முகத்தில் தோன்றிய பீதி, இன்னும் என்றாவது என்னை சந்திக்க நேரிடுவதும் தொடரும் சோகக்கதை!

உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன். உலகில் 99.99% நாஸ்திகர்கள்தான். கோயிலுக்கு போபவனெல்லாம் ஆஸ்திகன் என்றால் ஊரில் வன்முறைக்கு இடமேயில்லை. In God We trust என்று டாலர் நோட்டில் அச்சடித்து போட்டுக்கொண்டிருக்கும் அமெரிக்காதான் உலகின் முதல் அணுகுண்டைப் போட்டு லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது. வியட்நாமில் கொடிய விஷயத்தை கலந்து பச்சிளம் குழந்தைகளை முடமாக்கியது. இன்று ஆஃகானிஸ்தான், ஈராக் என்று கதை தொடர்கிறது. 'இறைவன் பெயரால் யுத்தம்' என்று பின் லாடன் செய்வது ஆஸ்திகச் செயலா? எனவே கோயிலுக்குப் போய் விழுந்து, விழுந்து சேவிப்பதாலோ, வீட்டில் நூறு சாமி படம் போட்டு வைத்திருப்பதாலோ, விளக்கு பூஜை செய்வதாலோ ஆஸ்திகராகிவிடமுடியாது. ஆஸ்திகம் என்ற பெயரில் போலியும், கூத்தும், நாடகமும்தான் இவ்வுலகில் நடக்கிறது. உண்மையான ஆஸ்திகர்கள் உலகில் மிகக்குறைவு. 'வைஷ்ணவ ஜனதோ' பாடலில் நரசிம்மமேத்தா ஒரு உண்மையான ஆஸ்திகனின் லக்ஷணங்கள் சொல்கிறார். கேட்டுப் பாருங்கள். காந்தி அப்படியிருக்க ரொம்ப பாடுபட்டார். எனவே உங்க கோஷ்டிதான் உலகில் ஜாஸ்தி. கவலை வேண்டாம் :-)

மாமி விளக்கு பூஜைக்குக் கூப்பிட்டால் போய் ஜாலியா கூத்தடித்துவிட்டு வாருங்கள். எதற்கு எதிர்ப்பு? எதற்கு embarassement? பெரும்பாலான கிறிஸ்தவர்கள் சர்ச்சுக்கு போவது socialize பண்ணத்தான். நம்ம விளக்கு பூஜை சமச்சாரமெல்லாம் அதுதான். சும்மா ஜாலியா போய்ட்டு வாங்க. ஃபிரி ஜாக்கெட் பிளவுஸ், தேங்கா மூடி, குங்குமச்சிமிழ் கிடைக்கும். எதற்கு விடுவானே :-) ?

உலகில் நாஸ்திகனாக இருப்பது போன்ற சுகம் எதிலுமில்லை! எதற்கும் விளக்கம் சொல்ல வேண்டியதில்லை. இதன் மூலமென்ன, அதன் மூலமென்ன என்று மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. "கண்டதே காட்சி, கொண்டதே கோலம்" என்று இருந்துவிட வேண்டியது. சிம்பிள். மதுரைத்திட்டத்தில் "விழுப்பரையன் மடல்" வாசித்து இருக்கிறீர்களா? கவிச்சக்ரவர்த்தி ஜெயங்கொண்டார் இயற்றியிருக்கிறார். காப்புச் செய்யுள் எப்படி இருக்கு தெரியுமா?

கொன்றை முடிந்தார்க்கும், கோபாலர் ஆனார்க்கும்,
அன்று படைத்தார்க்கும் ஆளல்லேம்- இன்று
மடப்பாவை யார்நம் வசமாகத் தூது
நடப்பாரே தெய்வம் நமக்கு!

சபாஷ் கோனாரே! :-) முழுக்க, முழுக்க நாஸ்திக நூல். ஜாலியா இருக்கும் வாசிக்க.

சரி, இப்ப நிம்மதியா இருக்கா? உலகில் ஆஸ்திகர்கள் அதிகம் கிடையாது, நாஸ்திகர்களே அதிகமென்று. இன்னும் உங்கள் கேள்விகளுக்கு விடை வேண்டுமா? தெரிந்து இப்போ என்ன ஆகப்போகிறது? எதற்காகக் கேட்கிறீர்கள். எனக்கு எவ்வளவுதெரியுமென்று அறியவா? இல்லை, 'அது' என்ன என்று உண்மையாக அறிந்து கொள்ளும் அவாவா? இல்லை ஏதோ கொஞ்சம், அப்படி இப்படிப் புரிந்தால் துளசி மாமி கோஷ்டியிலே குதூகலமா இருக்கலாம் என்ற எண்ணத்திலா? உங்கள் கேள்விகள் உங்களை துன்புறுத்துகின்றனவா? இல்லை, இவை கிச்சு, கிச்சு மூட்டும் கேள்விகளா?

வருகின்ற ஐந்து நாளைக்கு இங்கு விடுமுறை. சந்திர நாட்காட்டி படி சீன வம்சாவழிமுறையினருக்கு புதிய வருடம் இனிமேல்தான் பிறக்கப் போகிறது. உங்கள் பதிலை வைத்து மேலே செல்லலாம் :-)

0 பின்னூட்டங்கள்: