அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 009

சமயங்களின் நீட்சிதானே ஆன்மீகம்?

இங்கு ஆன்மீகம் என்னும் பதம் Spiritual என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. சமயம் என்பதை Religion என்று சொல்வோம். உலகிலுள்ள சமயங்களின் வளர்ச்சியைப் பார்த்தீர்களெனில் அவை தனி மனிதரின் spiritual enlightenment-லிருந்து வளர்ந்திருப்பதைக் காணலாம். உலகின் மூத்த சமயமான இந்து தர்மம் ரிஷிகளின் ஆன்மீகத் தெளிவிலிருந்து பிறக்கிறது. இத்தனிமனிதர்கள் சமூகக் கட்டமைப்பின் எந்த படி நிலையிலிருந்தும் வரலாம். வேதத்தைத் தொகுத்த வியாசர் மீனவர். திருவாய்மொழி அருளிய நம்மாழ்வார் வேளாள சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்கள் கண்ட உண்மையின் பிரகாசம் ஒளிவிடும் போது அடியார்கள் இயல்பாக வந்து சேர்கிறார்கள். திருக்கூட்டம் அமைகிறது. யேசு என்ற தனி மனிதரின் உள்ளொளியை வைத்து கிறிஸ்தவம் பிறக்கிறது. முகமது நபியின் தரிசனங்கள் இஸ்லாம் பிறக்கக் காரணமாகிறது. எனவே சமயத்தின் நீட்சியல்ல ஆன்மீகம். பின்னதின் நீட்சியே முன்னது.

தமிழ் மறைகள் இப்படிப் பிறந்தவையே. இவைகளை அருளிச் செயல் என்று சொல்கிறோம். இதில் காணும் அளப்பரிய உண்மைகளை மக்களிடன் இட்டுச் செல்ல ஆச்சரியர்கள் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் தத்துவாசிரியர்கள். அருளிச் செயல்களில் பொதிந்துள்ள தத்துவங்களை விளக்கப்படுத்துகின்றனர். தத்துவங்களை பரவலாக்க புராண, இதிகாசங்கள் பிறக்கின்றன. இப்படிப் பல நிலைகளில் ஒழுங்கமைப்பட்ட உண்மை கோயில்களில் குடிபோகிறது. கோயில்களில் வழிபாடுகள், பிரசங்கங்கள் முதலியவை அருளிச் செயல்களின் அனுபவத்தை மக்களுக்கு எடுத்துச் செல்ல முயல்கின்றன. இச்செயல்களால் உந்தப்பட்டு பல தனிமனிதர்கள் ஆன்மீகப்பாதையில் போனதுண்டு. ஆயினும் ஒரு நீர்த்துப்போன நிலையிலே உண்மை அங்கு நிற்கிறது. எனவேதான் கோயில்கள் ஆன்மீகப்பாசறையாக அமையாமல் அரசியல், சமூகக் கட்டுமானப் பாசறையாக அமைந்து விடுகின்றன. சோழர்கள் கோயில்களை அரசியல் மையங்களாவே பாவித்தனர். அரசியல் இருப்பிற்கு சமூகப் பிரிவுகள் அவசியமாகின்றன. உழைப்பவன் உழைப்பைப் பெருபவன் என்ற exploitation அங்கு ஆரம்பமாகிறது.

செமித்தியச் சமயங்களான கிறிஸ்தவம், இஸ்லாம் இவைகளை ஒப்பு நோக்கும் போது இந்தியாவில் சமயம் என்பது தளர்ந்த, தனி மனிதனுக்கு அதிக சுதந்திரம் அளிக்கக் கூடிய ஒன்றாகவே இருக்கின்றது. 'எல்லா வழிகளும் ரோமாபுரிக்கு இட்டுச் செல்பவையே!' என்று சொல்வது போல் இந்தியாவில் பல்வேறு சமய தர்மங்கள் உருவாகி ஆன்மீகத் தேடலில் தங்கள் பங்கைச் செய்கின்றன. பல்வேறு முகங்கள் தெரிந்தாலும் இந்திய சமயங்களின் ஆன்மா ஒன்றுதான். இறைமை ஒன்று என்பதை எல்லா இந்தியச் சமயங்களும் உரத்த குரலில் சொல்கின்றன.

படைப்பு என்பதே கற்பனை, அதில் தோன்றிய மாபெரும் கற்பனை கடவுள்.

இது மிகவும் பிழையான கருத்து. படைப்பு உண்மை. கடவுள் உண்மை. ஆனால் இதை விளக்குவதில் பல திருகுதாளங்கள் இருக்கலாம். ஆனால் கடவுள் என்பது மனிதன் கண்ட கற்பனையல்ல. மனிதன் தோன்றிய பின் முதன் முறையாக கடவுள் தன் இருப்பை மானசீகமாக உணர்ந்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம். அதுவரை 'அந்த' உணர்வற்ற ஒரு செயல்பாடாக அப்பேரியக்கம் இருந்திருக்கலாம். ஆனால் ஞானம் என்ற கண்ணாடி தோன்றிய போது இறைமை முதன்முறையாகத் தன்னைப் பார்த்துக் கொள்கிறது. ஒரு reference point கிடைக்கிறது. இதைத்தான் ஆண்டாளின் சூடிக்கொடுத்தல் உணர்த்துகிறது. வள்ளலார் கண்ணாடியில் திரு முருக தரிசனம் பெற்றார் என்பதும் இதுதான். எங்கெல்லாம் சுயபிரக்ஞை (sentinal) உள்ளதோ அங்கெல்லாம் இறைமை பற்றிய உணர்வுண்டு. ஒருவகையான சுயத்தெளிவு. இதைத்தான் அகம் பிரம்மாஸ்மி என்கிறார்கள். அதன் பின் இப்பிரபஞ்சம் பொருள் உள்ளதாய் ஆகிப்போகிறது. ஒருவகையில் மீனா சொன்னது உண்மை. நாம் ஒவ்வொருவரும் கடவுள்தான் but with lots of limitations. ஏனெனில் இறைமை என்பது எப்போதும் ஊடுறுவிப்போவதாய் உள்ளது (Transcendental in nature). இதை ஸ்படிகம் உணர்த்துகிறது. சிவன் ஸ்படிக ரூபம் என்பது இதைத்தான். திருவிக்கிரம அவதாரம் இதைத்தெளிவாய் உணர்த்துகிறது. மூன்றடிக்குள் அகப்படுபவனல்ல அவன்.

பிறகு நீங்கள் சொன்ன புத்தர், கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாமல் மனிதனை திருத்த முற்பட்டார். திருவள்ளுவரும் இதை தானே செய்தார்?

இதுவும் பிழை. புத்தருக்கும் வள்ளுவருக்கும் நிறைய வித்தியாசமுண்டு. வள்ளுவன் ஓர் பேராசான். அவன் காலத்தில் நிலவிய சமய, அரசியல், சமூக அறவியல்களை எங்கும் சாராமல் தொகுத்தளித்தான். வள்ளுவன் உண்மையில் பக்கா ஆஸ்திகன். இறைவன் பற்றிய மிகத்தெளிவான கருத்து அவனுக்குண்டு. அவனது பாயிரமே அதற்கு சாட்சி. புத்தன் கதையே வேறு. புத்தன் வள்ளுவன் போல் இறைவனின் குணங்கள் பற்றிப் பேசவில்லை. இறைவனுக்கான வரைவிலக்கணம் தரவில்லை. மௌனம் சாதித்து விட்டான்.

உங்கள் பிற கேள்விகளுக்கு பின்னால் வருகிறேன்.

0 பின்னூட்டங்கள்: