அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 011

சமயம், ஆன்மீகம் இவற்றால் மனித குலத்திற்கு நன்மை ஏற்பட்டதா, தீமை ஏற்பட்டதா? இது எல்லாம் வேண்டாம், உன் வேலையை பார்த்துக்கொண்டு போ! என்று சொல்வதில் என்ன அலுப்பு தெரிகிறது? அலுப்பு எப்பொழுது ஏற்படுகிறது தெரியுமா, இல்லாத ஒன்றை மாயமானை தேடி அலைகிறார்களே அவர்களைப் பார்க்கும்போதுதான் அலுப்பு ஏற்படுகிறது!

மதம் என்பது அபின் என்றான் மாசேதுங். வேடிக்கை என்னவென்றால் நாஸ்திக கம்யூனிசம் ஒரு மதமாகிப்போனது :-) இப்படியே உஷா பேசிக்கொண்டிருந்தால் அவருக்கு ஒரு கோஷ்டி உருவாகி உஷானந்தாஜி-யாகி அவர்கள் உபதேசங்கள் அடுத்த நூற்றாண்டில் மதமாகிப் போகலாம். எம்ஜியார் பெரியார் கட்சி. அவர் சமாதிக்கு செருப்பு போட்டுக்கொண்டு போகக்கூடாது என்கிறார்கள். பெரியார் மேல் அதி தீவிர பக்தி வைத்திருக்கும் பலரை எனக்குத்தெரியும். ஜெர்மனியில் எனக்கொரு ஈழத்து நண்பர். அவர் 'அக்மார்க்' மார்க்சிஸ்ட். அவருக்கு எல்லாமே மார்க்சியப் பார்வையில்தான் விளக்கமுடியும். அது ஐன்ஸ்டைன் கடைசிவரை நிறுவ முயற்சித்த "general theory of relativity" போல் சகலத்தையும் மார்க்சிசம் விளக்கிவிடும் என்று நம்புகிறார். அவருடன் பேசும் போது ஏதோ விசேஷ சுவிஷேசப் பிரசங்கம் கேட்கும் போது இருக்கும் ஒரு பரவசம் இருக்கும். :-))

எனவே இதை மிகத்தெளிவாகப் புரிந்து கொள்வோம். மதம், சமயம் என்பதற்கும் enlightenment-ற்கும் தூரத்து உறவுதான். ஆன்மீகத்தெளிவுடன் மதப்பற்று இல்லாமல் இருக்கலாம். நான் மிகவும் போற்றும் வடலூர் வள்ளலார் "மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்" என்று சொல்கிறார். ஆனால், ஒரு கிருபை காரணமாக பல ஞானிகள் இப்படிச் சொல்வதில்லை.

சமயங்களினால் நிறையக் குழப்பம் நிகழ்ந்துள்ளது உண்மை. ஹிட்லர் ஒரு பக்கா கிறிஸ்தவன். சைவன் (அதாவது vegetarian:-). ஒசாமா பின் லாடன் 'அக்மார்க்' முஸ்லிம். நம்ம cow boy புஷ் நாகரீகமான கிறிஸ்தவர். பால் தாகரே! சுத்த இந்து. காந்தியைச் சுட்டவன் கூட இந்துமதத்தைச் சீர்தூக்கவே அதைச் செய்ததாகச் சொன்னான். இவர்கள் பேசும் மதத்திற்கும் ஆன்மீகத்திற்கும் ஸ்நானப்பிராப்தி கிடையாது.

கிறிஸ்தவ-இஸ்லாம் யுத்தம், பௌத்த-இந்து யுத்தம், காதோலிக்-புரோட்டஸ்டண்ட் யுத்தம், கிறிஸ்தவ/இஸ்லாம்-யூத யுத்தம், சைவ-வைணவச் சண்டைகள் என்று மனித அழிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இரண்டு உலகப்போர்களில் செத்தவர் எண்ணிக்கையைவிட சமயச் சண்டையில் செத்தவர் எண்ணிக்கை கூடுதல் என்பதுதான் கணக்கு. ஆனால், மதம், சமயம் இல்லையென்றாலும் கூட மனிதர் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வர் என்கிறார் கார்ல் சாகன்.

அதனால்தான் சொல்கிறேன் இறைமை பற்றிய ஆன்மீகத்தெளிவு ஒவ்வொருவருக்கும் அவசியம். அப்போதுதான் நமகுள்ள உறவு புரியும். அதன் சிறப்பு புரியும். வாழ்விற்கு பொருள் தருவது ஆன்மீகம்.

சமயங்களை ஒரேயடியாக என்னால் புறக்கணிக்கமுடியாது. ஒரு தஞ்சைக் கோயில் இல்லையென்றால் தமிழகம் வறுமையுற்றிருக்கும். ஒரு தியாகராஜர், ஒரு புரந்தரதாசர் இல்லையெனில் தமிழிசை வறுமையுற்றிருக்கும். பக்தி இலக்கியம் இல்லையெனில் தமிழே வறுமையுற்றிருக்கும் (கம்பனில்லாத தமிழ் என்ன தமிழ்?) சமயத்திற்கு ஆக்க சக்தி உண்டு. அந்தப் பிரம்மாண்டமான தேவாலயங்கள் இல்லாத ஐரோப்பா என்ன ஐரோப்பா? எனவே, இங்கு கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டியது மனித மனம் சார்ந்த ஆராய்ச்சியே தவிர சமயம் சார்ந்த ஆராய்ச்சியல்ல!

'மாயமான்' பற்றி முன்பே தெளிவுறுத்திவிட்டேன். ஆன்மீகம் சொல்வது எல்லைக்கல் (destination) பற்றியல்ல. பயணம் பற்றி. எனவே மாயமான் வேட்டை இதற்குப் பொருந்தாது.

0 பின்னூட்டங்கள்: