அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில் 012

தான் அடைந்த ஞானத்தை (அடைந்ததாக நினைத்ததை) பிறருக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா? அதாவது ஞானமார்க்கம் இதுதான் என்று வழிக்காட்ட முடியுமா?

முடியுமென்று தோன்றுகிறது. ஆனால் அதற்கு சில முன்னாக்கங்கள் தேவைப்படுகின்றன. முதலில் நாம் மொழியை 'செந்தரமாக்கி'க்கொள்ளவேண்டும். கணிதம் ஒரு மொழி. அதில் ஆரம்பிக்கும் முன் a=so and so, b=so and so, the relationship between a and b is so and so என்று நிருவிக்கொள்வர். அதன் பின்தான் கணக்கே ஆரம்பிக்கும். இல்லையெனில் அடுத்தாளுக்கு ஒண்ணும் புரியாது. நாம் இதை இன்னும் செய்யவில்லை. தீ சுடும் என்றால் உங்களுக்குப்புரியும். ஏனெனில் தீயின் சூடு பற்றிய முன்னனுபம் உங்களுக்கு உண்டு. இந்த அனுபவம் பெறாதவரை 'தீ சுடும்' என்பது வெறும் வார்த்தை. அனுபவப்பின்புலம் இல்லை. இது மொழியின் குறைபாடு. மொழி என்பது ஒரு abstraction. மரம் என்னும் சொல் மரமல்ல. மரத்தின் abstraction. கலிபோர்னியாவிலுள்ள சிவப்புமரங்களைப் பார்த்திருக்கிறீர்களாவென்று தெரியாது. புத்தன் தோன்றுவதற்கு முன் தோன்றிய மரங்களெல்லாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகின் அற்புதம் அவை. ஆனால் செம்மரம் என்று சொல்லும் போது அது உங்களுக்கு வெறும் சொல்லாகவே படும் - நீங்கள் அவைகளைக் கண்டு அனுபவித்து இராதவரை. எனவே இறைவனுபவம் என்பதை வார்த்தைக்குள் வடிக்கமுடியாமல் இருப்பது மொழியின் குறைபாடே தவிர இறைமையின் குறைபாடல்ல. ஔவை இதை 'சொற்பதம் கடந்த அற்புதம்" என்கிறாள். மொழியின் இக்குறைபாடே இறைத்தேடலை 'மாயமான் வேட்டை' என்றாக்குகிறது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய ஞானவான் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி. அவரை 12 வயது முதல் படித்துவரும் எனது நண்பன் பெர்னாடு சொல்வான் அவர் ஒரு நிலைவரை வருகிறார் அதன்பின் 'அம்போ' என்று விட்டுவிடுகிறார் என்று. ஜே.கே அடிக்கடி சொல்வார் நான் ஆற்றங்கரைவரைதான் உன்னை எடுத்துச் செல்ல முடியும். நீந்திக்கடக்க வேண்டியது உன் பொறுப்பு என்று. இங்குதான் சுயதேடல் முக்கியப்படுகிறது. எவ்வளவுதான் நான் சொன்னாலும் கேட்பவர் சுய முயற்சியில் ஒரு ஆர்வத்துடன் இதில் ஈடுபடவில்லையென்றால் ஒன்றும் நிகழாது. இது முதலில் சுவாரசியமாகப்படவேண்டும். ஒரு ஆர்வம் இருக்க வேண்டும். ஒரு தேவை இருக்க வேண்டும். இது பற்றியெல்லாம் முன் அபிப்பிராயங்கள் (மாயமான் வேட்டை போன்ற அல்லது பிற நாத்திக வாதங்கள்) நிரம்பிக்கிடந்தால் ஞானத்தேடல் வெற்றி பெறாது. பௌத்தத்தில் சொல்வது போல் முதலில் குடைத்தைக் காலி செய்ய வேண்டும். பாரதி பேசுவது போல் அருளெனும் வெள்ளம் பாயும் பள்ளமாக நம் உள்ளம் இருக்கவேண்டும். அதற்குத்தயாராகதவரை ஒன்றும் நிகழாது. இதையெல்லாம் உணர்ந்துதான் இந்தியாவின் ஆகச்சிறந்த ஞானியான ஆதிசங்கரன் கடைசியில் "பஜ கோவிந்தம் மூடமதே" என்று சொல்லிப்போனான். ஞானமார்க்கம் ஒரு அளவுவரைதான் இட்டுச் செல்லும். அதன்பின் பக்தியும், அது தரும் அநுபவமும் இறைமைக்கு இட்டுச் செல்லும். உணர்ச்சிவசப்படாமல் இந்த அனுபவத்தைப்பெறமுடியாது. ஒரு மனைவி தன் கணவன் தொடும்போது எப்படி நெகிழ்கிறாளோ அதுபோல்தான் இதுவும். எப்படி உணர்ச்சி இல்லையெனில் கணவன்-மனைவி உறவு மரத்துப்போகிறதோ அதுபோல் உணர்ச்சியற்ற அணுகுமுறையில் இறைவனை உணரமுடியாது. முடிந்தால் இன்று இ-சுவடியில் வந்துள்ள பாசுர மடல் வாசியுங்கள். பக்தி இலக்கியம் தமிழின் ஆகப்பெரிய சொத்து. அதோடு நாம் பரிட்சியப்படுத்திக்கொள்ள வேண்டும்.

0 பின்னூட்டங்கள்: