சங்கீத நினைவுகள் 03

சுபமங்களா தொடர்ந்து வந்து கொண்டிருந்த காலத்தில் கோமல் அவர்கள் புஷ்பவனம் குப்புசாமி பாடற்தொகுப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதியிருந்தார். சும்மாச் சும்மா சினிமாப்பாட்டு கேட்டு அலுத்துப் போன காது, நாட்டுப்புற பாடல்களைக் கேள்! என்றது. கேட்டேன். பிடித்துப் போனது. அதன் பிறகு லண்டனிலிருந்து வரும் தீபம் இவரது நேர்காணலை சிலமுறை வெளியிட்டது.

ஆனால் அவரது கச்சேரி கேட்கும் வாய்ப்பு அவர் ஸ்டுட்கார்டு வந்தபோது கிடைத்தது. மனைவி, குழந்தை என்று குடும்பமே மேடையிலிருந்தது! ஈழத்து விடுதலை இயக்கத்திற்கு ஆதரவு திரட்டும் கச்சேரி. குப்புசாமி ஒரு முனைவர் பட்டதாரி என்பதால் விலாவாரியாக தமிழிசையின் தோற்றம், வளர்ச்சி பற்றி இராக உதாரணங்கள் மூலம் செய்முறை (demonstration) பண்ணினார். இன்று கர்நாடக இசை என்று பெரும்பாலும் பிராமணப் பாடகர்களால் பிரபலமடைந்திருக்கும் இசை அடிப்படையில் தமிழிசையே என்று இவர் நிறுவி வருகிறார். சேஷகோபாலன் கூட சிலம்பிலிருந்து இசை சம்மந்தமான பாடல்களை அமெரிக்காவில் பாடி மகிழ்வித்ததாக பெ.சந்திரசேகர் எழுதியிருக்கிறார். நான் பிரிட்டிஷ் நூலகத்தில் பழம் தமிழ் நூற்களை இலக்கப்பதிவாக்கத் தேடியபோது ஆப்ரகாம் பண்டிதரின் புத்தகங்களும் இருந்தன. ஆப்ரகாம் பண்டிதர் ஆய்வு பூர்வமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தமிழையின் தோற்றம் பற்றி விரிவாக எழுதியுள்ளார். தமிழ் மண்ணில் பல்லவர் காலத்தில் சமிஸ்கிருதம் கோலோட்சியது. சோழர் காலத்தில் சாளுக்கியருடனான போர் ஒப்பந்தமாக தெலுங்கு ராணிகள் தமிழ் மண்ணில் வந்து புகுந்தனர். கிருஷ்ணதேவராயரின் தளபதிகள் தமிழகத்தை ஆண்டபோது தெலுங்கு அரசு மொழியானது. அக்காலக்கட்டத்தில்தான் நமது இசைக்கலைஞர்கள் தெலுங்கு கீர்த்தனங்கள் பாடும் பழக்கத்திற்கு ஆளானார்கள். தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற படி அது இன்னும் நம் பாகவதர்களை விட்டுப் போனபாடில்லை! [ஆப்ரகாம் பண்டிதரின் புத்தகங்கள் இப்போது தமிழகத்தில் மறுபதிப்பாகியுள்ளன]பாகவதர்களோடு விவாதம் பண்ணிப் பிரயோசனமில்லை. அவர்களுக்கு கச்சேரி பந்தா என்பதுதான் முக்கியம். எனவே கச்சேரி பந்தா என்பது தமிழிசை என்று மக்களின் பேராதரவு பெரும்போது தன்னாலே தமிழில் பாடுவார்கள். அந்தப் போக்கு தமிழ் மண்ணில் ஆரம்பித்து விட்டது. தெலுங்குக்கச்சேரிகள் இன்னும் இரண்டு தசாப்தம் தாக்கு பிடிக்கலாம். காரணம் என்னவெனில் இப்போது வருகின்ற இசைக்கலைஞர்களுக்கு தெலுங்கு தெரியாது (முன்பு பிராமணகுடும்பங்களில் தமிழ், சமிஸ்கிருதம், தெலுங்கு பாடமாக இருந்தன). நண்பர் காசி தனது வலைப்பதிவில் 'ஒன்றும் புரியாத இசை' என்று சொன்னார். உண்மை. பாடகருக்கு என்ன பாடுகிறோம் என்று பல நேரம் புரிவதில்லை. சுப்புடு, பாலமுரளி போன்றோர் இதுபற்றி கிழி, கிழியென்று கிழித்தும் புத்தி வரவில்லை. தமிz மேன்மையுறும் போது இவர்கள் தமிழில் மட்டுமே பாடுவர் என்று நம்பலாம்!

கச்சேரி முடிந்தவுடன் மேடையில் போய் பேசிக்கொண்டிருந்தேன். குப்புசாமியை விட அவர் குஜராத்தி மனைவி எளிமையானவர் :-) நம்ம ஆட்கள் வலிந்து வலிந்து தெலுங்கும், கன்னடமும் பாடிவரும் போது, இந்தக் குஜராத்திப் பெண் இனிமையாகத்தமிழ் பாடல் பாடுவது மகிழ்வாக இருக்கிறது.

நான் திருச்சி வானொலியில் முன்பெல்லாம் நிகழ்ச்சிகள் தயாரித்தபோது, டிரைக்டர் பார்த்தசாரதி அவர்கள் தியாகைய்யரின் பாடல்களுக்கு தெலுங்கு மொழி பெயர்ப்பு செய்து கொண்டிருந்தார். அப்படியாவது பொருள் புரிந்து பாடட்டுமென்று. பலர் மென்று, விழுங்கி, ஒதப்பி, மழுப்பி என்ன வார்த்தையென்று புரியாமல் பாடி விடுவர். புரிந்தால்தானே குத்தம் சொல்ல முடியும்? :-)

0 பின்னூட்டங்கள்: