சங்கீத நினைவுகள் 04

சங்கீதமென்பது ஒரு கேள்வி ஞானம். நல்ல இசைக்கு காதுகளை பழக்கப்படுத்த வேண்டும். தியானம் செய்வோம் என்று உட்காரும் போதுதான் ஆயிரம் எண்ணங்கள் மனதில் உதயமாகும். உடல் உட்கார்ந்திருக்க மனது இந்த எண்ணங்களின் பின்னாடி ஊர் சுத்தப்போய்விடும். அது போல்தான் கர்நாடக இசை கேட்போமென்று உட்காரும் போதுதான் "என்னையா பாடறான், ஒரே ஜவ்வு மிட்டாய் போல" என்று ஒரு மனது சொல்லும். இன்னொரு மனது "இவங்க பாடறது என்னத்தை புரியறது? தெரிஞ்ச பாசையிலே பாடினாதானே!" என்று சொல்லும். "இதெல்லாம் அந்தப் பாப்பான் செய்யற சதி!" என்று ஒரு மனது சொல்லும். இவைகளைப் பின் தொடர்ந்தால் அது எங்கெங்கோ இட்டுச் சென்றுவிடும். நல்ல இசை அனாதையாக விட்ட இடத்தில் நிற்கும் :-)

சங்கீதத்தை ரசிக்க மொழி அவசியம் என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் புரிவதால்தான் நான் இசையை இரசிக்கிறேன் என்று சொல்லிவிட முடியாது. அது உண்மையென்றால் நாம் பிறந்த காலத்திலிருந்து கேட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பாடல்களில் ஒன்று ரெண்டாவது முழுவதுமாய் நமக்கு பாட வர வேண்டும் (ராகத்தை விடுங்கள், ஒரு வாதத்திற்கு).

இசையின் பெரிய சூட்சுமமே அதுவே ஒரு மொழியாக அமைவதுதான். அதற்கென்று தனியாக ஒரு மொழி அவசியமில்லை. எல்லா இசையையும் இரசிக்க முடியும். பழகிக்கொள்ள வேண்டும்.

எனக்கு பஞ்சாபி பாங்ரா பிடிக்கும். அதுவும் நம்ம டாலேர் மெஹந்தி பாடினால் குதிக்காமல் இருக்கமுடியாது. மொழி தெரிந்து பிடிப்பதல்ல இது. ஐயா புருடா விடுறாருன்னு நீங்க கதைக்கிறது புரியுது! சமீபத்தில் கொரியாவில் நான் பழக்கப்படுத்திக் கொண்ட பஞ்சாபி நண்பர் வீட்டிற்குப் போயிருந்த போது. நண்பரின் மனைவி ஒரு பாங்ரா பாட்டைப் போட்டு விட்டுப் போனார். பார்த்து/கேட்டு விட்டு, 'சரி, அர்த்தமும் தெரிந்து கொள்ளலாமே' என்று அவரிடம் பொருள் கேட்கப்போனது பெரிய கூச்சநிலையை உருவாக்கிவிட்டது. ஏனெனில் அப்பெண் பொருள் புரிந்து அந்தப் பாடலைக் கேட்டதே இல்லை என்று புரிந்தது. ஒவ்வொரு வரியாக மீண்டும், மீண்டும் போட்டு அதற்கு அர்த்தம் அதுவோ? இதுவோ (கணவரிடம்தான்) என்று கேட்டபோது எனக்கு பொருள் வேண்டாம், பாடல் போதுமென்று சொல்லத்தோன்றி விட்டது! ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களின் யார் கவித்துவம் தேடுகிறார்கள்? தேடினாலும் கிடைக்குமா என்ன? ஆனால் பெரிய தமிழ் ரசிகனான நான் ரகுமானின் பெரிய விசிறி. இதுவரை நான் கேட்ட தமிழ் இசைகளிலே மிக நூதனமானது ரகுமானின் இசை. இவ்வளவு காம்பெளக்சாக மேலைக்கலைஞர்கள் கூட இசையமைக்கவில்லை. அவர் ஒரு மேதாவி. அது மொழி கடந்த ஒரு இசை.

ஹாம்பர்க் நகரில் எல்.சுப்பிரமணியம் இசையை எப்படியும் கொண்டுவந்துவிட வேண்டுமென நானும், நண்பர் கோபாலும் சேர்ந்து கச்சேரி அமைத்தோம். எல்.சுப்பிரமணியம் நாங்கள் கொடுத்த தொகையை வாங்கிக் கொண்டது மட்டுமல்ல, எதிர்காலத்தில் தென்னிந்திய இசையை ரசிக்க இசைப்பட்டறைகள் அமைத்தால் வந்து வாசிப்பதாகவும் சொன்னார்.

இடைவேளையில் அவரிடம் தியானத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு ராகத்தை எனக்காக வாசியுங்கள் என்று சொன்னேன். "கண்ணன், தியானத்திற்கு இட்டுச் செல்லாத ராகமென்று ஒன்றுண்டா?" என்று கேட்டார். ஆனாலும் என்னை வேறொரு உலகிற்கு இட்டுச் செல்லும் ஒரு இசையை அவர் தந்தது உண்மை.

கேள்விகளை ஒதுக்கிவிட்டு தமிழிசையைக் கேளுங்கள். நம் இசை அது. அது தெலுங்கு, கன்னடம், சமிஸ்கிருதம் என்று எந்த மொழியில் இருந்தால் என்ன?

இசையிடம் தஞ்சமடையுங்கள். அது உங்களை மீட்புலகிற்கு இட்டுச் செல்லும். வாழ்க.

0 பின்னூட்டங்கள்: