அழகியின் கேள்விகளுக்கு அசடனின் பதில்கள்!

உஷா

பிள்ளையார் சுழிப்போட்டு ஆரம்பிக்கிறேன்,

1) கடவுள் என்பது உண்டா, உண்டு என்றால் அவர் யார்?

2) உலகத்தை உண்டாக்கியது கடவுளா?

3)அவன் தான் மூலக்கருவா? எப்படி?

பதில், பழைய செந்தமிழ் பாட்டை எடுத்துப்போட்டு பயமுறுத்தக்கூடாது!உஷா சில நிபந்தனைகள் போட்டு ஆரம்பிக்கிறார். அதாவது கேள்விக்கான பதில் 'மேற்கோள்' எனும் போர்வையில் மறைந்து கொள்ளக்கூடாது. அது சுயமாக, தெளிவுற்ற பதில்களாக இருக்க வேண்டும். சபாஷ்!

பிறப்பெடுத்தபின் வாழ்வு நமக்குக் கற்றுத் தருகிறது. இக்கல்வி நமது மூதாதையரின் அனுபவத்தின் ஊடாக இருக்கலாம் (knowledge based) அல்லது சுய தேடலின் மூலமாக இருக்கலாம் அல்லது இரண்டும் கலந்ததுமாக இருக்கலாம். சுயதேடல் என்று நான் சொல்வது சுய ஞானத்தை நம்பி (inteligence is different from knowledge), உள்ளொளி தரும் பதில்களை மட்டும் நம்பி கருத்துச் சொல்வது. வேதங்கள் இப்படித் தோன்றியவையே. வேதம் என்பது மறை என்று தமிழில் வருகிறது. இரண்டும் ஒன்றுதான்.

நான் முடிந்தவரை மேற்கோள் இல்லாமல் விடை பகர முனைகிறேன் (ரொம்ப செந்தமிழோ :-)!

"பிள்ளையார் சுழி" என்பது பலவற்றைச் சுட்டுகிறது. அது மிகப்பழமையான இந்திய நம்பிக்கை. செய்யும் காரியம் நலமே விளைய இறைவனை வேண்டுவது. ஒரு மூலம் இல்லாமல் தோற்றமில்லை. எனவே அந்த மூலத்தின் நினைவுடன் ஒரு வேலையைத் தொடங்குவது. இப்படி.

இதற்கும் மேலும், அதுவொன்றைச் சுட்டுவதாகப் படுகிறது. இறைவன் என்பது ஒரு நம்பிக்கையா? என்றும் அது கேட்பதாகப்படுகிறது. உஷாவிற்கு பதில் என்ற சாக்கில் எனது சுய தேடல் ஆரம்பமாகிறது. இது எனது பயணமே. இதில் எவ்வளவு தூரம் உங்களால் வரமுடிகிறது என்பது அவரவர் உந்து சக்தியைப் பொருத்தது.

1) "கடவுள்" உண்டா? - ரொம்பப் பழைய கேள்வி. மனிதன் சிந்திக்க ஆரம்பித்தவுடன் வந்த கேள்வி. தன்னைச் சுற்றி உள்ளவைகளைக் கண்டு, அவை தன்னால் படைக்கப்படவில்லை என்று அறிந்தவுடன், 'பின் யார் படைத்தது?' என்ற கேள்வி எழ "கடவுள்" மனிதனுள் தோற்றம் கொள்கிறார். இந்த்க் கெள்விக்கு ஒரே ஒரு பதில் இருக்க முடியாது. ஏனெனில், இப்படிக் கேள்வி கேட்பதின் மூலமாக இவன் பிறவற்றிலிருந்து தன்னைப் பிரித்துக் கொண்டாலும். இவனும் மற்றவைகளில் ஒரு அங்கமே. எனவெ அவைகளுக்குள்ள சர்வ சுதந்திரமும் இவனுக்கும் உண்டே. எனவே அச்சுதந்திரத்தின் அடிப்படையில் இவனால் தேட முடியும், தேடி விடை சொல்லமுடியும். எனவே ஒரு வகையில் கோடான கோடி விடைகள் இக்கேள்விக்கு சாத்தியம். என் விடை அவற்றுளொன்று.

கடவுள் உண்டு என்றால் அவர் யார்? என்னும் கேள்வியிலும் 'அவர்' என்ற மரியாதைக்குரிய விகுதி வருகிறது. கடவுள் நமது பால் வேறுபாடுகளுக்கு உட்பட்டதா? அவர், அவன், அவள், அது இவைகளில் ஒன்றா?

எனக்கு படுவதைச் சொல்கிறேன். என்னைப் பொருத்தவரை கடவுள் உண்டு. 'கடவுள்' பால் வேறுபாடுகளுக்கும் மீறியது. ஆனால் அவன், அவள் என்று விளிப்பதில் தவறில்லை. ஏனெனில் அதனால் அதுவாகவும் இருக்க முடியும். கடவுளை எத்தனையோ வகைகளில் உருவகப்படுத்த முடியும். கவனிக்க, கடவுள் என்பது ஒரு உள்ளுறை உவமம்/உருவகம். மரம் என்ற சொல் மரமல்ல. இந்த விளக்கங்கள்தான் 'அவன்' என்று கொள்ள முடியாது. எனவே மனித யத்தனத்தில் முடிந்தது உருவகப்படுத்துதலே. அதில் தவறில்லை. கடவுள் என்பதொரு பிரம்மாண்டமான இயக்கம். தன்னுள் சகலத்தையும் அடக்கி இயங்கும் இயக்கம். தனக்கு மீறியதொன்றுமில்லை. அதுதான் முதல். அதுவே முடிவும். அது காலம் அல்ல. ஆனால் காலம் அதனுள் அடக்கம். இப்போதைக்கு இது போதும்.

2) உலகத்தை உண்டாக்கியது கடவுளா?

"கடவுள்" என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோம் என்பதைப் பொருத்தே இதற்கான பதில் அமையும். கடவுள் ஒரு வெந்தாடி வேந்தர் என்று கொண்டு, அவர் சர்வ வல்லமை படைத்தவர் என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டு, அவர் மூன்று நாளில் படைத்தார், நான்கு நாளில் படைத்தார் என்பதெல்லாம் வெறும் ரீல். அது மனித கற்பனை. ஆனால், கடவுள் என்பது மனித இயக்கத்தையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் இயக்கம் என்று கொண்டால் உலகம் 'அவன்' படைப்பே. அதாவது அவன் உலகமாகவும் இருக்கிறான் என்று கொள்ளலாம்.

3) அவன்தான் 'மூலக்கருவா?" எப்படி?

இக்கேள்வி பல சித்தாந்தங்களுக்கு இட்டுச் செல்லும் கேள்வி. இதுவரை என்னால் புரிந்த கொண்ட அளவில் 'அவன்'தான் மூலம். அவனுக்கும் எஞ்சிய பொருளென்று ஒன்றில்லை. சகலமும் அவனுள் அடக்கம். இதில் கணிசமாக சுபா வேறுபடுகிறார். வேண்டுமானால் இது பற்றி மேலும் புரிந்து கொள்ள முயலலாம். என்னால் சுபாவின் பதிலை முழுவதுமாய் கிரகிக்க முடியவில்லை.

2 பின்னூட்டங்கள்:

Anonymous 1/23/2007 05:13:00 PM

கடவுள் என்பது சமுதாயத்தை நல்வழிப்படுத்த நம் மூதாதையர்கள் ஆய்ந்து அறிந்த ஒரு தத்துவம் இந்த உலகைப் படைத்ததெது? இயற்கை சக்திகள் தன் முறைதவறாது செயலாற்றுவது ஓரளவு சுழற்சி என்ற பெயரில் விளக்கப்பட்டாலும், பிறப்பு என்பதும் உடல் இப்படித்தான், நிறம், வடிவம் அதன் நிறை குறைகள் எல்லாம் "ஜீன்ஸ்" தத்துவம் என்று விஞ்ஞான விளக்கம் கொடுத்தாலும், இவற்றுக்கெல்லாம் மீறி ஒரு சக்தி இருப்பது மனிதன் ஒத்துக் கொண்ட ஒன்று. அதனிடத்து அவனுக்கு அச்சம் உண்டு. தவறு செய்பவன் தானாகத் திருந்தாவிட்டால் தவற்றை ஒழிக்க முடியாது என்பதனால், இறைவனிடத்து அச்சம், செயலின் விளைவுகளிடத்து அச்சம் இவற்றின் அடிப்படையில், மனித செயல்பாடுகளைக் கட்டுக்குள் வைக்க நம் மூதாதையர்கள் முடிவு செய்து இறைவன் என்ற கோட்பாட்டினை உண்டாக்கினார்கள். மக்களும் இறைவழியில் நம்பிக்கை கொண்டு ஒழுக்கமாக வாழ்ந்தார்கள். அவரவர்கள் தங்கள் கற்பனைகேற்ப கடவுளை வடிவமாக உருவாக்கினார்கள்; மதங்கள் உருவாகி, வளர்ந்தது; நல்வழி கூறும் கதைகள், புராணங்கள் உருவாகின. கதை வடிவில் தர்ம நியாயங்கள் கற்பிக்கப்பட்டன. ஆனால் நாளடைவில் சுய நலமிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்தி,மதம், கடவுள் என்ற பெயரில், சமுதாயத்தைத் தங்களுக்கு அடிமைப் படுத்தத் தொடங்கிய பொழுது அந்தத் தத்துவம் அடி வாங்கியது. பகுத்தறிவு வாதம் வளர்ந்த பொழுது, அந்தத் தத்துவம் மேலும் வலுவிழந்து, இன்று போலியாக இருந்து வருகிறது. கதைகளும் புராணங்களும் காலப் போக்கில் அவரவர் கற்பனையை ஏற்று, சிதைக்கப்பட்டு இந்த நம்பிக்கை போலி என பகுத்தறிவுவாதிகளால் நிரூபிக்கப்பட்டு எந்த காரணத்திற்காக உண்டாக்கப்பட்டதோ அந்தப் பலன் கிடைக்காது அழிந்து வருகிறது. சமுதாய அமைப்பும் நியாய தர்ம வழிகளை மறந்து வருகிறது. இறைவன் எனும் நம்பிக்கை tension இல்லாத வாழ்வினைத் தந்தது. இப்பொழுது அது குறைவதால்/இல்லாததால் tension அதிகரித்து, இருதய நோய்கள் அதிகரித்து வருகிறது.இது எனது கருத்து.
அன்புடன்
செபரா

நா.கண்ணன் 1/23/2007 05:37:00 PM

அட! இவ்வளவு நாளைக்கு அப்புறம்! என் தேடல் முடிவற்றது. புதிதாக எழுந்துள்ள "ஆழ்வார்க்கடியானுக்கும்" வந்து போங்கள்!! நன்றி.