பொலிக, பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்!

காசி என் ஆத்ம நண்பர். பொதுவாகவே ஆன்மீகத்தில் "கேளுங்கள் தரப்படும்" என்பது வேத வாக்கு. அதிலும் ஆப்தர்கள் கேட்டுவிட்டால் இல்லையென்று சொல்லமுடியாது, கூடாது! பின்னூட்டத்தில் காசி இவ்வாறு எழுதுகிறார்..

>>>>
அருமையான விளக்கங்கள். இப்போதுதான் பழைய பாசுரமடல் கண்ணன் தெரிகிறார்
//நம்மாழ்வார் கிருஷ்ண பரமாத்மாவிற்கு பிறகு 42 ஆண்டுகள் கழித்து பிறந்து,வாழ்ந்தவர்.// இதைப்பற்றியும் நீங்கள் எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.
>>>>

இதுபற்றிப் பேசுவதென்றால் நிறையக் கொட்டுகிறது. ஆனால் கட்டுப்படுத்தியே எழுதவேண்டியுள்ளது. காலத்தின் கட்டாயம் (இரண்டு பொருளிலும் :-)

துவாபர யுகம் முடிகிறது. அதுதான் இறைவனை நேரில் தரிசித்துப் பேசும் காலத்தின் முடிவு. அடுத்து கலி ஆரம்பித்துவிடுகிறது. துவாபர யுகத்தின் முடிவிலேயே கலியின் ஆட்டம் தொடங்கிவிடுகிறது. வானவில்லில் நிறங்கள் அடுத்தடுத்து உடனே மாறுவதில்லை. கொஞ்சம் கலப்பு முன்னும் பின்னும் இருக்கும். யாதவர்கள் வெறி கொண்டு ஒருவரையொருவர் அழித்துக் கொள்கின்றனர். இது பொறுக்காமல் வடமதுரை விட்டு வெளி வந்து கலங்கிப் படுத்திருக்கும் கிருஷ்ணனையும் ஒரு அம்பு காலில் குத்தி அவன் காலம் முடிந்துவிட்டதைச் சொல்கிறது. அவன் இவ்வுலகை விட்டுப் போய்விடுகிறான்.

கலியின் காலத்தில் இனி அவதாரங்கள் கிடையாது என்று முடிவு செய்கின்றான். ஆனால் 'பத்துடை அடியவர்க்கு எளியவனாயிற்றே' கண்ணபரமாத்மா! எனவே உலகு நிரம்ப பக்தர்களை அனுப்புகிறான். தான் உட்கருவாக உள்ளிருப்பதை அறிந்த அந்த மகான்கள் உலக மக்களை நல்வழிப்படுத்துவர் என்று அவனுக்குத்தெரியும்.

அதன் தொடக்கமாக நம்மாழ்வார் திருக்குருகூரில் வந்து பிறக்கிறார். நம்மாழ்வார் பிறந்த கதையும் ஏசு பிறந்து அதை மூன்று கிழக்காசியர்கள் 'நட்சத்திரம் வழி நடத்த' வந்து சேவிப்பதும் ஒரே கதையே! ஏசு எப்படி வைணவரென்று எனது பழைய பாசுரமடலில் விவரித்திருப்பேன். இது என் கணிப்பு மட்டுமல்ல. ஜோசப் கேம்பல் என்ற அமெரிக்க தத்துவஞானியின் கணிப்பும்தான். இந்திய மண்ணில் நம்மாழ்வாரின் தாக்கம் அபரிதமானது. இன்று உலகில் இஸ்கான் இயக்கத்தினர் கிருஷ்ணநாம ஸ்மரணை செய்து உலா வருவதை நம்மாழ்வார் பார்த்து பரவசிக்கிறார். அவரது வார்த்தை விளையாட்டைப் பாருங்கள் (இப்பாடல் பாரதிக்கும் பிடித்த பாட்டு என்பது கூடுதல் செய்தி)

பொலிக! பொலிக! பொலிக!
போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த
நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின்
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி
யாடி யுழிதரக் கண்டோ ம்


கலியில் நமக்கு நம்பிக்கை குறைந்துவிடுகிறது. நம்பிக்கை ஊட்டுபவர்களும், நம்பிக்கை ஊட்டும் சொற்களும் அடிக்கடி தேவைப்படுகிறது. இதை மிக நன்றாக அறிந்தே நம்மாழ்வார் பாடுகிறார். போயிற்று வல்லுயிர் சாபம் என்று தெம்பூட்டுகிறார். சமீப காலத்தில் கூட தமிழ் இலக்கிய உலகில் ஒரு இருண்மை தோன்றி நம்பிக்கை இழக்க வைத்தது. திசைகள் இயக்கம் பாரதி வழிப்படி மீண்டும் ஒரு தெம்பான வழிக்கு தமிழ் இலக்கியத்தை இட்டுச் செல்ல முனைந்துள்ளது. இது கலி காலத்தில் அவசியம். ஒருவகையில் Lord of the ring படம் கூட இருண்மையை நம்பிக்கை கொள்ளும் வெற்றி என்றே காணவேண்டும். இந்த நம்பிக்கை இருந்தால் 'கலியும் கெடும்' என்று சொல்கிறார் நம்மாழ்வார். (அந்த 'உம்' பொருள் நிறைந்தது!)

கடல்வண்ணன் பூதங்கள் என்று இங்கு அவர் சொல்வது கிருஷ்ணபக்தர்களை. இவர்கள் இந்தியா, மலேசியா, அமெரிக்கா, ஐரோப்பாவென்று 'மலியப்புகுந்து' இசை பாடி; ["உழி தருகை" என்றால் பயப்படாமல் திரிவது] திரிகின்றனர். இது எவ்வளவு பொருந்தி வருகிறது பாருங்கள். நாடிழந்து வெளிநாட்டில் வதிக்கும் பல ஈழச்சகோதர்கள் முதன் முறையாக கிருஷ்ணபக்தியை வெள்ளையரிடமிருந்து கற்றுக் கொண்டு சுவிஸ் தெருக்களில் உழி தருதல் காண்பதற்கு இனியது!

உழி தருதல் என்பதை எந்த வெட்கமும் இல்லாமல் தனது ஆன்ம வேட்கையை, அநுபூதியை (ectasy) வெளிக்காட்டுதல் என்றும் கொள்ளலாம். எல்லோருக்கும் வெட்கம் என்பது கூடப்பிறந்தது. அதை மறந்து, அதாவது 'தன்னை' மறந்து தெருக்களில் உழி தருதல் ஒரு ஆச்சர்யமான விஷயம்!

நம்மாழ்வாரின் இப்பாடலுக்கு உயிர் கொடுத்தவர்கள் தமிழர்களைவிட மற்றவர்களே. உதாரணம் புரந்தரதாசர், தியாகராஜர், கபீர், மீரா, கிருஷ்ணசைதன்யர்-அவர் வழியில் இன்று பிரபுபாதா மற்றும் அவரது சகாக்கள். தமிழர்களுக்கு "தான்" ரொம்ப ஜாஸ்தி. அதுதான் அவர்களின் பெரும் தடை. விதண்டாவாதத்தில் ஈடுபடவே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும் :-)

மூளையைக் குடையும் அத்தனை தர்க்கங்களும் தென்னகத்தில் பிறந்தவையே! அத்வைதம் புரிந்துகொள்ள தர்க்க சாஸ்திரம் தெரிந்திருக்க வேண்டும். ராமானுஜர் கூட "பாஷ்யம்" எழுதியதால்தான் இங்கு பாராட்டப்படுகிறார். "அறிவொன்றுமில்லாத ஆயர்கள்" எல்லாம் வடக்கேதான் :-) நல்லதனமாகத்தான் சொல்கிறேன்! அவர்களுக்கு இருக்கும் பக்தி எளிதாக தமிழனுக்கு வராது (இது என்னையும் சேர்த்துதான்).

நம்மாழ்வார் துவாபரயுகம் முடிந்து 42 வருடங்களுக்குப் பிறகு பிறந்தார் என்று கார்த்திகேயன் தவறாக எழுதிவிட்டார். கிருஷ்ணன் பரமபதமடைந்த கி.மு.6.2.3101 வியாழக்கிழமையினின்று. 43 நாட்களுக்குப் பின் கிமு 21.3.3101 வெள்ளிக்கிழமை தமிழ் விக்ரம ஆண்டு மேஷ சித்திரை 25ம் நாள் நம்மாழ்வார் பிறக்கிறார். கிருஷ்ணனுக்குப் பின் என்பதே சரி. கிருஷ்ணன் "கரி" இவர் "காரி" அதுதான் வித்தியாசம் :-)

0 பின்னூட்டங்கள்: