வைகைக்கரை காற்றே!......027

அந்த ஊரில் ரேடியோ பொட்டியுள்ள ஆள் பெரிய ஆள். அக்கிரஹாரத்தில் யார் வீட்டிலும் ரேடியோ பொட்டி கிடையாது. ரேடியோ பொட்டியிலிருந்து வெறுமனே சினிமாப் பாட்டு போட்டு குழந்தைகளைக் கெடுத்து விடுவார்கள் என்பதும் ரேடியோ பொட்டி வாங்காததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஐயர் வீட்டில் இல்லாத பொட்டி காண்டிராக்டர் வீட்டில் இருந்தது. அது அக்கிரஹாரத்தின் மூலை வீடாகவும் இருந்தது. இவர்களுக்கு கேட்கட்டும் என்று சினிமாப் பாட்டு வரும் போது சத்தமாக வைப்பார்கள். பெரிசுகள் முகம் சுழிச்சாலும் சிறிசுகளுக்கு அது கொண்டாட்டமே. ஆனால் அவர்கள் வீட்டிலும் வயசுக்கு வந்த பெண் இருந்ததால் எப்போதும் வீட்டைத் திறந்து வைக்க முடியாது. கண்ட பயலுக ஊர் மேயக் காத்திருப்பானுக. அதனால் அக்கிரஹாரத்தில் ரேடியோ கேட்க வேண்டுமென்றால் ஆத்தாங்கரை முனீசுவரர் கோயில் பக்கம் போனால்தான் உண்டு.

பஞ்சாயத்து போர்டு அங்கொரு லவுட் ஸ்பீக்கர் வைத்து ரேடியோவை எல்லோரும் கேட்கும்படி செய்திருந்தார்கள். நந்து ஸ்கூல் விட்டு ஆத்துக்கு விளையாடப்போறப்ப சினிமாப்பாட்டு வராது. அது 24 மணி நேர வானொலியல்ல. சாயந்தரம் பஞ்சாயத்து போர்டு ஆசாமி வந்து ரேடியோவை 2 மணி நேரம் கத்த விட்டுட்டுப் போவாரு. அதுல என்ன வருதோ அதைப் பொது ஜனங்கள் கேட்டுக்க வேண்டியது. நந்து கேட்ட பொழுதெல்லாம் 'பொழுதென்னிக்கும்' "வயலும் வாழ்வும்" நிகழ்ச்சிதான் வரும். அதுகூட சரியா வைக்கலேன்னா கரா புரான்னுட்டு வரும். அதைக்கேட்கிறத்திற்கும் நாலு சனம் குந்திக்கிட்டு வானைப்பாத்து உட்காந்திக்கிட்டு இருக்கும்.

அக்கிரஹாரத்தில் ரேடியோ மோகம் பரவாமல் பெரிசுகள் பார்த்துக் கொண்டதால் நாள், கிழமையென்றால் பொண்ணுகள் அரைப்பாவடையும் அதுவுமா சமத்தா உட்காந்து பாடுங்கள். வெள்ளிக்கிழமையென்றால் 'அயிகிரி நந்தினி' என்று எல்லாக்குழந்தைகளும் பாடும். கோபால மாமாத்து மாமிதான் எல்லோருக்கும் சொல்லிக்கொடுப்பா. சில குழந்தைகள் சௌந்தர்யலகரி கூடப்பாடும். ஆனால் இதிலெல்லாம் செல்லமும், சௌந்திரமும் கலந்து கொள்வதில்லை. அவர்கள் தமிழ்ப்பாட்டுத்தான் பாடுவார்கள். எங்கிருந்து கத்துக்கொள்கிறார்கள் என்று நந்து கண்டு கொண்டதே இல்லை. பாரதி பாடல்கள் நிறையப்பாடுவார்கள். செல்லம்மா ஒவ்வொரு இசை நிகழ்ச்சியிலும் தவறாமல் பரிசு வாங்கி வருவாள். அது அனேகமாக பாரதியார் கவிதைகளாக இருக்கும். இல்லையெனில் ராஜாஜி எழுதிய சக்கிரவர்த்தித்திருமகன் அல்லது வியாசர் விருந்து என்பது போன்ற புத்தகங்களாக இருக்கும்.

சித்தி சில நேரம் தெலுங்குக்கீர்த்தனங்கள் பாடுவாள். சித்திக்கு தெலுங்கு நன்கு வரும். பசங்களுக்கு சவலாக அப்போதிருந்த பாடல் அருணகிரிநாதர் படத்தில் வரும் 'முத்தைத்தரு பத்தித்திரு' என்று பல்லை உடைக்கும், மண்டை குடையும் சந்தம் அமைந்த பாடல். அதை உருப்படியாக அக்கிரஹாரத்துப் பசங்களால் பாடவே முடியவில்லை. ஆனால் வேறு தெருப்பசங்கள் அவ்வப்போது அங்கு வந்து 'அசால்ட்டாக' பாடி விட்டுப் போவதைப் பார்த்து அக்கிரஹாரம் வாயைப்பிளக்கும். போட்டிக்குப்போட்டியாக இதுகள் விஷ்ணு சகஸ்ரநாமம் எடுத்து விடும். அந்தப்பசங்கள் முழிக்கும்.

நந்து இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பானே தவிர, தீவிரமாக ஈடுபடுவதில்லை. குழந்தையில் 'பித்தாப்பிறை சூடி' என்று பாடியபோது ஏற்பட்ட அமர்க்களம் அவனுக்கு பாடல்கள் மீது இயல்பாக வரவேண்டிய ஈர்ப்பை தவிர்த்து விட்டது.

அக்கிரஹாரத்துக் குழந்தைகளுக்கு வேதம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று சில பெரியவர்கள் நினைத்து ஒரு கனபாடிகளை ஏற்பாடு செய்தனர். சிவன் கோயிலுக்கு அருகிலுள்ள கோமடத்தில் பாடம் சொல்வதாக ஏற்பாடாகியிருந்தது. படிக்கத்தான் குழந்தைகளே இல்லை. எல்லாம் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து வீட்டுப்பாடம் படிக்கவே நேரமில்லாத போது வேதம் சொல்லிக்கொள்ள நேரமேது? நந்து இந்த மாதிரி சமயத்தில் மட்டும் படிப்பில் மிகக்கவனமாக இருப்பதாகக் காட்டிக் கொள்வான்.

ஒருவழியாக கனபாடிகள் இங்கொன்றும் ஒப்பேறாது என்று சொல்லி விட்டு பஸ் ஏறிய அன்றுதான் செண்பகபட்டர் வீட்டு சுவரில் யாரோ இரவோடு இரவாக கரித்துண்டால் எழுதிவிட்டுப் போயிருந்தனர். அடுத்த நாள் வாயிக்கு வந்தபடி செண்பகபட்டர் திட்டிக்கொண்டே, 'உலகம் அழியப்போறதுக்கு சாட்சி இதோ வந்தாச்சு! அங்க புடி, இங்க புடின்னு, நம்ம குடுமியையே பிடிக்கிற அளவுக்கு நாஸ்திகம் வளந்து போச்சு இந்த ஊரிலே!' என்று சொல்லிக்கொண்டே அழித்துக்கொண்டிருந்த வாசகம்,

"கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை, கடவுளை நம்புகிறவன் முட்டாள்"

0 பின்னூட்டங்கள்: