வைகைக்கரை காற்றே!......028

மார்கழி மாதம் முழுவதும் கோயில் மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். மஞ்சு பூத்திருக்கும் அதிகாலைப்பனியில் ஆள் அடையாளம் கூடச் சரியாத்தெரியாத கருக்கல் நேரத்தில் கோயிலைச் சுற்றி நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். நந்துவிற்கு காலைக்கனவு போல் பல விஷயங்கள் பட்டும் படாமலும், புரிந்தும் புரியாமலும் அந்த மாதம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும். நந்து ரேழியில் படுத்திருந்தால் வாசலுக்கும் உள்ளிர்க்குமென்று பாவாடை, புடவை உரசும் கொலுசு ஒலி விட்டு விட்டுக் கேட்டுக் கொண்டேயிருக்கும். பெண்களின் கிசு, கிசுப்பும், நகையும் மார்கழியின் புரிபடாத அடையாளங்கள். சிரிப்பு வாசலில் கேட்கும், அடுத்த நிமிடம் இவனுக்கு அருகில் கேட்கும். பாவை நோன்பிருக்கும் பாவையெரெல்லாம் இவன் தூங்குவதைக் கண்டு நகைப்பது போலிருக்கும். "ஊமையோ, செவிடோ , அன்றி இவன் மந்திரப்பட்டானோ!" மாமன் மகனே எழுந்து வா! எங்களுடன் என்று கொலுசு சொல்லிவிட்டுப் போகும்.

அக்காவிற்கு இன்ஃப்ரா ரெட் கண்களாக இருக்க வேண்டும். இல்லையேல் எப்படி விடிந்தும், விடியாத காலை பொழுதில் அத்தனை வர்ணங்களைக் கொண்டு வீதியை மறிக்கும் கோலம் செய்யமுடியும்? அதுவும் வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று கலக்காமல், போட்ட கோட்டை அழிக்காமல், போடும் கோடு பிசகாமல்! மார்கழி மாதம் 'மந்திர மாதம்'. எது எப்படி நடக்கிறது என்று புரிவதே இல்லை. "அக்கா, இந்தா பூசணிப்பூ" என்று இருட்டில் குடியானவ வீட்டுப்பையன் மலர்ச்செண்டு கொடுத்துவிட்டுப் போவான். அது அவன் அக்கா கோலத்திற்கு தரும் பரிசு. அப்பரிசு சிலைக்கு கடைசியாக கண் திறப்பது போல் கோலமெல்லாம் முடிந்த பிறகு நட்ட நடுவில் முத்தாரமாக கொஞ்சம் சாணி வைத்து அதன் மேல் குத்தி வைக்கப்படும்.

"டீ குட்டிகளா! அழிக்காமல் ஓரமாப் போங்கடி!" என்று அவ்வப்போது அக்கா கூவும் குரல் மார்கழிக் காற்றில் கரைந்து வைகையுடன் நீராடப்போகும். ஒண்ணு, ரெண்டு குடியானவ வீட்டுக் குட்டிகள் கிழிந்த பாவாடை மேலும் கீழுமாக கிடக்க, மூக்கு ஒழுக அக்கா போடும் கோலத்தை மெய் மறந்து பார்த்துக் கொண்டு நிற்கும். அதுவே காலையில் அக்காவிற்குத் துணை. இந்தக் குழந்தைகளுக்கு எப்படி இவ்வளவு சிக்கிரம் முழிப்பு வருகிறது என்று நந்துவிற்குப் புரிவதில்லை! கோயில் வெண் பொங்கல் வாங்க வருகின்றன என்று நினைத்துக் கொள்வான். ஆனால் வெண் பொங்கலுக்கு முன் பல்லாயிரமாண்டு அம்மண்ணில் வளரும் கோலக்கலை பயிற்றுவிக்கப்படுகிறது என்று யாருக்கும் தெரிவதில்லை. கிராமத்தில் யார் சொல்லிக் கொடுத்து இச்சின்னஞ்சிறுசுகள் கோலம் போடுகின்றன? அக்காவிற்குத்தான் யார் சொல்லிக் கொடுத்தது. காலையில் பார்த்தால் நாராயணயங்கார் வீட்டு முன் ஒரே கும்பலாக இருக்கும். எல்லாம் அக்காவின் கோலத்திற்கு கிடைக்கும் பாராட்டுக்கள். அக்கா அந்த நேரத்தில் கோயில் வெளிப்பிரகாரத்திலிருப்பாள்.சித்தியா சட்டை போட்டு யாரும் பார்த்ததில்லை. நீண்ட, கரு, கரு பின் குடுமி. காதில் இரட்டைக் கடுக்கன். சிவப்பு நிறத்தில். முகத்திற்கு பொலிவு தரும் பட்டைத் திருமண். காலில் செருப்பு கிடையாது. பஞ்ச கச்சமுண்டு. மார்கழி மாதம் மட்டும் நீண்ட அங்கவஸ்திரம் உடலைப் போர்த்தியிருக்கும். பகல் வேலைகளில் தடித்த அருநாண் கொடி வேட்டிக்கு வெளியே தெரியும். அந்த ஊரில் பெரிசுகள் ஜட்டி போடுவதில்லை. கோமணம்தான் கட்டுவார்கள். நந்து அது கூடக் கட்டுவதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அருணாக்கொடியுண்டு.

மார்கழியின் அற்புதங்களெல்லாம் நந்துவிற்கு பெருமாள் புண்ணியத்தில் தெரிய வந்தது!

"குட்டி இன்னிக்கு ராத்திரி நாம தூங்கவே கூடாது! ஏன்னா இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி!" என்று செல்லம்மா சொல்லுவாள்.

"தூக்கம் வந்தா?"

"வராது! ஏன்னா ராப்பூரா நாம விளையாடிண்டே இருக்கலாம். அப்புறம் அம்மா நமக்கு கிருஷ்ணன் கதை சொல்லுவா. சித்தி பாட்டு சொல்லித்தருவா. அதுக்கு மேல 'பரமபத சோபனப்படம்' விளையாடலாம்"

நந்து தூங்க மாட்டான். பரமபதம் அவனுக்குப் பிடித்த விளையாட்டு. எத்தனை முறை நரகாசுரன் என்னும் பாம்பு கொத்திக் கொத்தி கீழே இறக்கி விட்டாலும். தாயம் சரியாகப் போட்டு ஏணியில் ஏறி விடுவான். இளம் பிராயத்திலே பலமுறை 'வைகுந்தம்' கண்டவன் அவன்.

விடியும் நேரத்தில் அக்கிரஹாரத்துக் குழந்தைகள் பட்டுப்பாவடை சல, சலக்க கையில் கோலாட்டக் கோலை வைத்துக் கொண்டு கோலாட்டமிட்டபடி கோயிலுக்குச் செல்வது பார்க்க ரம்மியமாக இருக்கும்.

சித்தியா பெருமாள் கோயில் பொறுப்பை முழுவதும் தானே ஏற்றுக் கொண்டு பெருமாளுக்கான தளிகை, நைவேத்தியம் எல்லாம் ஒத்த ஆளாக தானே செய்ய ஆரம்பித்திருந்தார். காலைப் பூஜையெல்லாம் முடிந்த பிறகு மீதிய பொங்கல் வீட்டிற்கு வரும். அதை காலையுணவாகச் சாப்பிட்டுவிட்டு நந்து பள்ளிக்குப் போவான்.

கிருஷ்ணப்பிரசாதம் தன் வேலையைக் காட்டத் தொடங்கியது. நந்துவிற்கு படிப்பில் ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது. வகுப்பில் அவனே முதல் மாணவனாக தேறத் தொடங்கினான்!

0 பின்னூட்டங்கள்: