வைகைக்கரை காற்றே!......029

"கமலா! நானும் ஒண்ணோட தோசைக்கு அரைக்கட்டுமா?" என்று நந்து கேட்ட போது கமலா ஆட்டுக்கல்லில் ஊறிய உளுந்தைப் போட்டுக்கொண்டிருந்தாள்.

"பங்கஜம் வர வரைக்கும் வேணுமினா அரை, ஆனா விரலை ஆட்டுக்கல்லிலே விட்டுட்டு குய்யோ முறையோ என்று கத்தக்கூடாது. அதுக்கும் மேலே, அம்மா கேட்டா, 'கமலா ஆட்டச் சொன்னா அதனாலே ஆட்டினேன், இப்படி ஆயிடுத்துன்னு' பொய் சொல்லக் கூடாது. இதுக்கெல்லாம் சரின்னா எதுக்க ஒக்காரு. இல்லாட்டி நானே அரைச்சுக்கிறேன். நேக்கு ஒந் உதவி தேவையில்லை"

"சரி, சரி, விரலை உள்ளே விடாம பாத்துக்கறேன். ஆனா நீ மெதுவா ஆட்டணும். சரியா?"

"ஐயரு ஆட்டுக்கல்லு ஆட்டற அழகைப்பாருடி!" என்றொரு குரல் பின்னாலே கேட்டது. வேற யாரு? ராக்குவோட பொண்ணு லட்சுமிதான்.

"ஏன் நான் ஆட்டக்கூடாதா?" என்றான் நந்து.

"ஆம்பிளைக எங்க ஊடுகள்ளே ஆட்டறது இல்லே"

"ஆனா இது எங்க ஆம்(ங்). நான் என்னமும் செய்வேன்" என்று திரும்பித் திரும்பி பதில் சொன்ன போது நந்துவின் விரல் ஆட்டுக்கல்லுக்குள் அரை பட்டுவிட்டது.

"ஐயோ! அம்மா!" என்று ஒரே அலறல்.

"என்னடி ஆச்சு" என்று கோகிலம் கொல்லைக்கு வந்த போது நந்துவின் விரல்களிலிருந்து இரத்தம்.

அவ்வளவுதான். விழுந்தது கமலாவிற்கு மொத்து!

"நான் அப்பவே சொன்னேன். இந்த விளையாட்டெல்லாம் வேண்டாம்னு. சனியன் கேட்டதோ?" என்று முணு முணுத்துக் கொண்டே கமலா உள்ளெ போனாள்.

"ஏண்டி மிச்ச மாவை யாருடி அரைப்பா"?

"நான் ஏன் அரைக்கணும்? நீ தான் என்ன ஏதுன்னு கேட்காம என்னை மொத்தறயே?"

"என்னடி! எதுத்து, எதுத்துப் பேசிண்டு. அவனுக்கு என்ன தெரியும். வாண்டு"

"இதுவா வாண்டு? வாய் கிழிய ராக்கு பொண்ணோட வாயாடிண்டே கையை உள்ளே விட்டுறுத்து. நான் என்ன பண்ணுவேன்?"

"அவனுக்கு என்னடி தெரியும். நீ தான் கவனமா இருக்கணும். சரி விடு. பங்கஜத்தைக் கூப்பிடு அவளும், செல்லம்மாவும் அரைக்கட்டும்"

"இல்லேம்மா, நான் படிக்கணும்"

"டீ சௌந்திரம்?"

"நானுந்தான்!"

"என்னடி? ஆளு ஆளுக்கு இப்படியே சொல்லிண்டிருந்தா? யாருடி மீதத்தை அரைப்பா?"

"நான் ஒழுங்கா அரைச்சுண்டுதான் இருந்தேன்" என்று விசும்பினாள் கமலா.

"நா வேனா இன்னொருமுறை முயற்சி பண்ணட்டுமா?" என்றான் நந்து.

"அப்பா! சாமி! நீ போய் பம்பரம் விடு. பொம்மணாட்டி காரியத்திலே மூக்கை நுழைக்காதே!" என்று கமலா சொல்ல, பங்கஜமும் வந்து சேர்ந்தாள்.

பெரிய குடும்பங்களில் தோசை, இட்லிக்கு அரைப்பது கடின வேலை. அதைப் பெரும்பாலும் வயதுக்கு வந்த பெண்களே செய்தனர்.

திருவோணம், கார்த்திகை என்று வந்தால் அரிசியை முன்னமே ஊறப்போட்டு. ஊறிய அரிசியை ஒரு துண்டில் கட்டி இரவில் தொங்க விட்டு விடுவர். காலையில் குளித்து மடியோடு அரிசியை எடுத்து உரலில் போட்டு உலக்கையை வைத்து இடிக்க வேண்டும். அப்படி வரும் மாவை எடுத்து பெருமாளுக்கு "மா விளக்கு நெய் விட்டு வைக்க வேண்டும்". சித்தி இதை வெகு அழகாகச் செய்வாள்.

கோகிலம் இன்னும் கடினமான அப்பள மாவு செய்வாள். பிரண்டை, உளுந்து இவை சேர்த்து இரும்பு உலக்கை கொண்டு இடிக்க வேண்டும். அடித்து, அடித்து நொய்யப் புடைத்து மாவாக்க வேண்டும். இதற்கெல்லாம் நந்துவை பார்க்க மட்டுமே அனுமதித்திருந்தாள் கோகிலம். ஒரு அடி பிசகினாலும் இரும்பு உலக்கை கை காலை உடைத்து விடும். இது பெரியவர்கள் செய்யும் வேலை. பெரும்பாலும் கோகிலத்தின் வேலை.

இதே போல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதும் அம்மாவின் வேலையே. அம்மா சேலையைத்தூக்கிக் கொண்டு பானையில் உறியை வைத்து சர், சரென்று கடையும் போது அம்மாவின் தொடை நிறத்திலே வெண்ணெய் திரண்டு வரும். நந்து பார்த்துக் கொண்டே இருப்பான். தயிர் நொப்பும் நுரையுமா மாறி, பள, பளக்கும் வெண்ணெயாகத் திரளும்.

"வேணுமாடா?"

"வே! இத யாரு தின்பா?"

"ஏண்டா? கிருஷ்ணன் பேருதானே வச்சிருக்கு நோக்கு! சாப்பிடேன்"

"இதெல்லாம் அவர் சாப்பிடுவார். நமக்கு ஆகாது! லோகத்தைச் சாப்பிடறவாளுக்குத்தான் இது லாயக்கு"

"நன்னாதான் பேசக்கத்துண்டு வரே!"

அன்றெல்லாம் வீட்டில் வெண்ணெய் மணக்கும்.

தோசை, இட்லிக்கு அரைப்பது எப்போதும் மாலை வேளைகளில்தான். அரைத்து வைத்து விட்டால் காலையில் பொங்கிண்டு மாவு நிக்கும். ஆட்டுக்கல் கொல்லையில் இருக்கும்.

ஆனால் அம்மி முத்தத்தின் ஓரத்தில் இருக்கும். தோசை இட்லிக்கு சட்னி அரைக்க, அரைத்துவிட்ட குழம்புபிற்கான சாமான்கள் அரைக்கவென்று. நந்து சில நேரம் சௌந்திரம், செல்லாம்மாவுடன் சேர்ந்து மருதாணி அரைப்பான். அப்போதும் இந்த வேலையை பங்கஜம் எடுத்துக் கொள்வாள். ஏனெனில் அரைத்த கை முழுவதும் சிவப்பாகிவிடும். எனவே மசிய அரைத்துக் கொடுத்த பின் குழந்தைகள் இட்டுக்கொள்ளும்.

நந்துவும் இட்டுக் கொள்வேன் என்று அடம் பிடிப்பான். "டேய், இதுவெல்லாம் பொண்ணுக வச்சுக்கற சமாச்சாரம்டா" என்று என்ன சொன்னாலும் விட மாட்டான். இரவில் இட்டு விடுவார்கள். பகலில் கை மொர மொரவென்று காய்ந்து இருக்கும். தண்ணியில் ஊறப்போட்டுக் கழுவ வேண்டும். பெரும்பாலும் நந்துவின் மருதாணி பக்கத்தில் படுத்திருக்கும் பட்டம்மாவின் முகத்தில் ஒட்டியிருக்கும்.

"நேக்கு சிவக்கவே இல்ல" என்று கத்துவான் நந்து.

"நீ ஆடாம, அசையாமப் படுத்திருந்தாத்தானே! சௌந்திரத்திற்கு பாரு எப்படிச் சிவந்திருக்கு!" என்று பதில் வரும்.

"ஏன் பங்கஜத்திற்கு மட்டும் கருப்பா வந்திருக்கு?"

"அவளுக்கு பித்த உடம்பு. அதான்" என்று பதில் வரும்.

ஆனால் மத்தியான நேரங்களில் வேறு வகையான அரைவை நடக்கும் வீட்டில். வறுத்த உளுந்து, கடலைப் பருப்பு இவைகளைப் போட்டு வேறொரு உருளைக் கல்லில் அரைத்துக் கொண்டிருப்பார்கள். நட்ட நடுவில் ஒரு மர அச்சாணியொன்று இருக்கும். அதன் இடுக்கில் பருப்பைப் போட்டால் எல்லாப் பக்கமிருந்தும் மாவு வந்து கொட்டும். அதனால் முன்னமே விரித்த செய்தித்தாளில் இந்த அரவை நடக்கும். நந்துவிற்கு குழியில் பருப்பு போடும் வேலை சில நேரம் கிடைக்கும்.

இந்த வேலைகளில் ஒரு இசை இருக்கும். ஒரு நளினமிருக்கும். ஒரு தியானமிருக்கும். ஒரு குடும்பமிருக்கும்.

பெண்மை பஞ்சு மெத்தையில்லை அது கல்லுடைக்கும் வலுவுள்ளது என்பதை இவை காட்டும். பெரும்பாலும் பங்கஜத்தின் கைகள் வேலை, செய்து உரமேறிப் போயிருக்கும்.

அந்த ஊரில் பின் அரவை மில் வந்தது.

0 பின்னூட்டங்கள்: