தேடலின் சுகம்

உங்கள் பின்னூட்டங்களைப் படித்தேன். நிறைவாக இருந்தது. திருமதி கமலாதேவியும் எழுதியுள்ளார்கள் (தனிமடல்).

உஷா இன்னும் கீழ் படி நிலையில் நின்று கொண்டு வாதம் செய்து கொண்டு இருக்கிறார். அவரது வாதங்கள் 'மூலத்தை' விட ஒழுங்கமைக்கப்பட்ட சமூக அமைப்பைச் சுற்றியே வருகிறது. அதற்குள் போவதற்கு முன்..

நண்பர் பரிமேலழகர் ரிச்சர்ட் ஃபாக் எழுதிய ஜொனாதன் லிவிங்ஸ்டோ ன் சீகல் எனும் அற்புதமான புத்தகம் பற்றி எழுதியுள்ளார். கல்லூரி நாட்களில் உள்ளத்தை கொள்ளை கொண்ட புத்தகமது. அப்படியே முழுவதும் வாசிக்கக் கிடைக்கிறது. கட்டாயம் வாசியுங்கள். இவர் எழுதிய பிற புத்தகங்களும் அற்புதமானவை.

இதையெல்லாம் வாசித்தால் புரியும் எப்படி இறைமை என்பது

மாசில் வீணையும், மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேணிலும்
மூசுவண்டறைப் பொங்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே

என்னும் அனுபவத்தின் சுகம்.

சும்மாச்சும்மா போலிச் சாமியார்கள் பற்றியும், போலிச் சடங்குகள் பற்றியும் எழுதுவது, அதை எதிர்ப்பது அலுப்புத்தரும் விஷயம். நான் கருப்புச் சட்டையெல்லாம் போட மாட்டேன். ஒரே ஒருமுறை நேற்று நான் தந்த அமித் கோஸ்வாமியின் நேர்காணலை வாசியுங்கள். முடிந்தால் அவரது முழுப்புத்தகத்தையும் வாசியுங்கள்.

எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைமை விஞ்ஞானத்திற்கும் தப்பாது என்பதை கோஸ்வாமி நிறுவியுள்ளார். இறைமையின் இருப்பு சந்தேகத்திற்கு இடமின்றி இந்த நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்ட பின் 'சொல்லுடா, சொல்லுடா' என்று உலுப்புவது நகைப்பிற்கு இடமாகும்.

இறைத்தேடல் என்பது மிகவும் சீரியசான விஷயம். அதில் நேர்மை வேண்டும். விளையாட்டுக் கூடாது. கவனம் வேண்டும். கேலி கூடாது. தோழமை வேண்டும். தோற்பு-வெற்றி என்ற எண்ணம் கூடாது. நல்ல நண்பர்கள் போல் இணைந்து நடக்கப் பழக வேண்டும்.

இதற்கெல்லாம் தயாரா என்றுதான் கேட்டேன். ஆனால், மீண்டும், மீண்டும் இறை பற்றிய அபிப்பிராயம், சமயம் பற்றிய அபிப்பிராயம் அறியவே உலகம் முயல்கிறது. அபிப்பிராயம் இல்லாத மனிதன் யார்? உலகில் மிகவும் மலிதானவும், எளிதானதும் அபிப்பிராயம் கூறுவதுதான். கூறலாமே! இப்ப என்ன குறைந்துவிடப் போகிறது :-))

0 பின்னூட்டங்கள்: