எனது வலைப்பூ வாசத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவுள்ளேன். நேற்று பத்ரியுடன் அரட்டை அடித்த போது அவர் நான் முழுமையாக யுனிகோடுக்கு போய்விட வேண்டுமென்றார். இது இப்படி நிகழும் என எதிர்பார்த்துத்தான் நான் ஒரு கண்ணாடித்தளத்தை யுனிகோடில் அமைத்திருந்தேன். நான் வலைப்பூ ஆரம்பித்த காலத்தில் யுனிகோடில் இவ்வளவு வளர்ச்சி கிடையாது. ஆறுமாத காலத்திற்குள் அபரித வளர்ச்சி. தமிழ் ஆர்வலர்கள் சுரதா, முகுந்தராஜ், அமீர், பத்ரி போன்றவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். நான் இன்னும் அவர்கள் செயலிகளை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. உமர் தரும் இயங்குவார்ப்பிற்கு போய்விட உத்தேசம்.

அடுத்து, இப்போது செய்கின்ற மாதிரி தினப்படி இனிமேல் எழுதமுடியுமா எனத்தெரியவில்லை. திசைகளில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இ-சங்கமம் எனும் புதிய சஞ்சிகையிலும் பொறுப்பேற்றுள்ளேன். நண்பர் சிஃபி வெங்கடேஷ் முன்பு போல் என்னை மீண்டும் அவர்கள் நடத்தும் சமாச்சார்-தமிழ் இ-தழில் எழுதச் சொல்கிறார். வலைப்பூவை பிரபலப்படுத்தவேண்டும் என்று நினைத்தேன். அதற்கு என்னாலானதை செய்த மனநிறைவு எனக்கிருக்கிறது.

வலைப்பூ வந்த பிறகு சிறுகதைகள் எழுதுவதை விட்டுவிட்டேன். மீண்டும் அந்த உலகிற்குப் போக வேண்டும். இணையத்தொடர்புள்ள ஆனால் அச்சில் வெளிவரும் தமிழ் இதழ்களின் முகவரி தந்து உதவுங்கள்.

நந்துவின் தொடர் தொடரும். அது ஒரு autobiographical novel. 1957-1967 வரை தமிழகத்தின் ஒரு சிறு கிராமத்தில், ஒரு பார்ப்பனச்சேரியில் நடக்கும் கதையின் பதிவது. அந்தக் காலக்கட்டத்தில் நிகழும் சமூக, பொருளாதார, சரித்திர மாற்றங்களை ஒரு சிறுவனின் கண் கொண்டு பதிவு செய்யும்.

எனது வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கும் அல்லது விலக்க வேண்டிய ஐட்டங்கள் இருந்தால் சொல்லுங்கள். உவப்புடன் ஏற்றுச் செய்வேன்.

0 பின்னூட்டங்கள்: