காலப்பயணம்

காலத்தினூடாகப் பயணிப்பது விசித்திரமானதும், மகிழ்வளிப்பதுமாகும். நேற்று சோல் நகரிலிருந்து திரும்பும் போது வெள்ளை வெளேரென்று பனிப்புயல். நான் தெற்கே 500 கிலோமீட்டர் போகவேண்டும். ஒரு மணிக்குப்பிறகு வானம் தெளிந்தது. கொரியாவின் நிலப்பரப்பில் 70 விழுக்காடு மலைகள். இது முழுக்க கந்தவேள் கோட்டம் (குறிஞ்சி என்று சொல்ல வருகிறேன்). மலைகள் பிரம்மாண்டமானவை, பூடகமானவை. இதோ முடிந்துவிட்டது என்று தோன்றும் போது இன்னொன்று ஆரம்பிக்கும். இதுதான் மிகப்பெரிய உச்சி என்று பார்த்து வியக்கும் போது அதைவிடப் பெரிய உச்சி தலைகாட்டும். ஒன்றுக்குப் பின்னால் ஒன்றென அடுக்கி, நெருங்கியிருக்கும். கண்களின் தோற்றத்திற்கு கூப்பிடு தூரத்தில் தெரியும் மலைகள் நடக்கும் போது தள்ளி, தள்ளிப் போகும்.

மலைகள் ஒளியுடன் விளையாடும் போது அதன் பூடகம் இன்னும் கூடுகிறது. மாலை வெய்யிலைத் தன்னுள்ளே வாங்கிக் கொண்டு தணிந்து போகிறது மலைக்காடு. உலகை வெள்ளை-கருப்பு என்று பார்ப்பவர்கள் சாய ரக்ஷையில் மலைகளின் ஊடாகப் பயணித்த அனுபவமற்றவர்கள் என்று பொருள். வெள்ளையென்பது பளுப்பாகி, கருப்பாகும் பொழுதுகள் விசித்திரமானவை. பளுப்பு என்பதில் நூறு கோடி விகிதாசாரத்தைக் காட்டுகிறது மாலை. சீன, கொரிய, ஜப்பானியப் படங்களில் மலைகளின் இந்த பளுப்பு சூசகமாகக் காட்டப்படும். ஒரு வெள்ளிக்கோடு போட்டது போல் மலைகள் காட்டப்பட்டு, தீப்பெட்டிக்குள் அடங்கக்கூடிய மெல்லிய பட்டுக் கம்பளத்தை போர்த்திக்கொண்டிருப்பது போல் காட்டப்படும். ஜப்பானின் தேசியக்குறியீடான ஃபுஜி மலையை நான் கண்ட காட்சி இத்தகையதே. அதி காலையில் பட்டும், படாமலும், இருந்தும் இல்லாமலும் என் முன் அது நின்றது. அது மனதிற்கு ஆறுதளிக்கக்கூடிய காட்சி. ஆரவாரப்பேய்கள் தன்னாலே அடங்கிவிடும் இதன் முன்னால், ஓர் நொடியில். பௌத்தம் தழைத்தது ஆச்சர்யமில்லை.எனது கேள்வி வேறு வகையானது. இயற்கையில் வெட்டு, துட்டென்று எதுவும் கிடையாது. எல்லாம் மெதுவாய் மாறும். படி நிலைகளில் மாற்றமுறும். மிகக்கவனமாக இல்லாவிடில் பல பொழுதுகளில் கோடிக்காட்சிகள் வாழ்வில் காணவே முடியாமல் காணாமல் போகும். எனது காலப்பயணம் இதைத்தான் காட்டியது. படி நிலைகளில்தான் ஒடுக்கம் கூட. மரணித்தலையும் சேர்த்து. ஷப்த நாடியும் ஒடுங்க வேண்டும் என்கிறார்கள். இந்த ஆறு நாடுகள் எவை? டாக்டர் கூறும் மரணம் ஒரு தொடக்கம் என்று தோன்றுகிறது. புத்தர் கோயிலிலுள்ள பல ஓவியங்கள் இதை சித்திரப்படுத்த முயல்கின்றன. படி நிலைகளில் ஆவி பிரிந்து வேற்றுலகிற்குச் செல்வதை. இறை வடிவங்களில் அபய முத்திரை நம்மைப் பயம் கொள்ள வேண்டாமென்று காட்டுகின்றன. புத்தரும் அப்படியேதான் காட்சியளிக்கிறார்.

உயிர் படி நிலைகளில் பிரிய எவ்வளவு காலமாகும் என்பதைப்பற்றிய கணக்கேதுமுண்டா?

படி நிலையில் பிரியும் உயிரை அவசர கோலத்தில் எரியிட்டு வன்பிரித்தல் முறையா? இந்துக்களைத் தவிர பிற எந்த சமயத்தவரும் உடலை எரிப்பதில்லை. புதையுறும் உடலிலிருந்து படி நிலையில் உயிர் பிரிய வாய்ப்பு அதிகமில்லையா? மனத்தால் ஆழ்வாராகவும், பரம்பரையில் சைவராகவும், உயிர்நிலையில் சித்தராகவும் மிளிர்ந்தவர் வடலூர் வள்ளலார். அவர் உடலை எரியூட்டக்கூடாது என்று சொல்கிறார். ஆனால் எல்லா சித்தர்களும் ஒத்த கருத்தைச் சொல்கின்றனரா என்று தெரியவில்லை. பட்டினத்தார், "அன்னையிட்ட தீ அடிவயிற்றிலே" என்று பாடிவிட்டு தாய் உடலுக்கு எரியூட்டுவதாகச் சொல்கிறது கதை. ஆதி சங்கரரும் அவ்வாறே செய்வதாகப் படித்திருக்கிறோம். மடத்தில் வாழ்ந்து ஓய்ந்த சாமியார்களைப் புதைப்பதைக் காண்கின்றோம். சில சமயம் அவர்கள் தலையில் தேங்காயைப் போட்டு உடைத்து கபாலத்தைப் பிளப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம் (மறைந்த காஞ்சிப் பெரியவருக்கு அப்படிச் செய்த்தாக வாசித்த ஞாபகம்). இந்துக்களின் இந்த முறை குரூரமாகவும், வன்முறையாகவும் படுகிறது!இதில் சித்தர்களின் உண்மை நிலைப்பாடு என்ன?

அன்று அம்மலைகளின் சூட்சுமான செய்தியாக இது என்னை வந்தடைந்தது. எரித்தல் வன்முறையன்றோ?

0 பின்னூட்டங்கள்: