வைகைக்கரை காற்றே!......030

நந்துவின் ஆயர்பாடியில் அந்தணர்களே அதிகமிருந்தனர். கனுப்பொங்கலன்று வைக்கின்ற அன்னம் போல் அவர்கள் பல நிறத்தவராயிருந்தனர். பல மொழி பேசினர். பல தெய்வங்களை வழிபட்டனர்.

பெருமாள் கோயில் முக்கிலிருந்து வருவோம். அதுதான் அக்கிரஹாரத்தின் கிழக்கு எல்லை. அங்கிருந்த ஒரு வீட்டில் குடியிருந்தார் எல்.வி சார். எல்.வெங்கிட்டராமன் என்பது முழுப்பெயர். இவர் உயர்நிலைப்பள்ளியில் பாடம் சொல்லிக்கொடுத்தார். இவர் ராயர் வகுப்பைச் சேர்ந்தவர். கன்னடம் தாய் மொழி. எனவே தமிழ் பாடமென்று மாட்டிக் கொள்ளாமல் ஆங்கிலம் நடத்தினார். அவர் பாடம் எப்படி நடத்துவார் என்பதை சௌந்திரமும், சேதுவும் பின்னால் விளக்கப் போகிறார்கள். அடுத்து பெருமாள் கோயில். உண்மையில் அந்த ஆயர்பாடியின் ஒரே கோனாரு அந்தக் கிருஷ்ணன்தான். அவர் வீட்டுக்கு அடுத்து கோயில் பட்டாசாரியர். இவர் வைணவ பிராமணர். இவருக்கு ஜெயராமன் என்றொரு பையனுண்டு. அவன் புகழை ஊர் அறியும்படி பின்னால் நந்து செய்விக்கின்றான். அந்தக் கதைக்கும் பின்னால் வருவோம்.

அடுத்து சுப்பிரமணிய ஸ்வாமி கோயில், அதன் முன்னால் சின்ன விநாயகர் கோயில். ஒருவர் கணங்களுக்கு அதிபதி. இன்னொருவர் வள்ளியென்ற குரத்தியை மணம் புரிந்ததாலும், மாமா இடையராக இருப்பதாலும், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமாவென? மாடு மேய்க்கும் போது கேட்டதாலும் அவரையும் கோனார் என்றே கொள்ளலாம். இந்தக் கோயில்களுக்கு எதிரே சின்னதாக ஒரு தென்னந்தோப்பு.

தென்னந்தோப்பையடுத்து கிருஷ்ணய்யர் வீடு. இவர் கேரளாவிலிருந்து நாஞ்சி நாடு வந்து எப்படியோ அந்த ஊருக்கு வந்து சேர்ந்தார். அவர்கள் பேச்சில் பாலக்காடு மணக்கும். வீட்டில் குருவாயூரப்பன் படம் பிரதானமாகத் தொங்கும். அந்த ஊரின் பிரபலமான 'ஜோதி கிருஷ்ணா கபே' யின் முதலாளி இவர். ஓட்டல் ஓகோவென ஓட, உதவிக்கென்று இவரது இரண்டு மைத்துனர்கள் நாளாவட்டத்தில் அக்கிரஹாரத்தில் வந்து சேர்ந்தனர். கோபால மாமா, அனந்தலக்ஷ்மி மாமி, வெங்கராமமாமா, கோமா மாமி. இவர்கள் தங்குவதற்கான வீட்டை கிருஷ்ணய்யர் அதற்குள் வாங்கியிருந்தார். இவர்கள் ஸ்மார்த்த பிராமணர்கள். வடமா.கிருஷ்ணய்யர் வீட்டிற்கு அடுத்து சப்-ரெஜிஸ்டிரார் ஆபிஸில் வேலை பாத்து ரிடையரான சாம்பசிவ அய்யர் வீடு. இவர்களும் ஸ்மார்த்தர்கள் என்றாலும் தமிழ் பிராமணர்கள். வீட்டில் தமிழ்தான் தாய் மொழி. அடுத்த வீட்டில் மீனாக்ஷிசுந்தரமய்யர் குடியிருந்தார். கொஞ்ச காலத்தில் வேறு ஊருக்குப் போய்விட்டார். அவருக்கு தஞ்சாவூர் பக்கம். அந்த வீட்டில் பின்னால் நந்துவின் அத்யந்த தோழனும், வழி காட்டியுமான கிருஷ்ணன் வருகிறார். கிருஷ்ணன் அம்மா தென்கலை, அப்பா வடகலை. கிருஷ்ணன் தன்னை வடகலையென்றுதான் சொல்லுவார்.

அடுத்து வெங்கட்ராம/கோபால மாமா வீடு. பின்னால் தூரத்துச் சொந்தமென அப்பாத்துரை மாமா வந்து சேர்கிறார். ஒரு கட்டத்தில் கிருஷ்ணய்யரின் சொந்தமென நான்கு குடும்பங்கள் அந்த வீட்டில் வாழ்ந்தன.

அடுத்து பால்கார பாட்டி வீடு. இவர்கள் தெலுங்கர்கள். மழித்த தலையில் முக்காடு போட்டிருக்கும் பாட்டிக்கு பொலிவான முகம். ஒரு காலத்தில் அழகியாக இருந்திருக்க வேண்டும். ஆந்திராவில் அந்தக்காலத்து ஸ்ரீதேவியாக இருந்து ஏதாவதொரு நாயக்கர் காலத்தில் தமிழ் மண்ணில் குடியேறியிருக்க வேண்டும். பாட்டிக்கு மந்திரமெல்லாம் தெரியும். அங்கு யாருக்காவது தேள் கொட்டிவிட்டால் பாட்டியிடம்தான் ஓடி வருவார்கள். பாட்டி தலைப்பு முனையால் ஏதோ மந்திரித்துக் கொண்டே விசிறிக் கொண்டிருப்பாள். வரும் போது கடு கடுவென வரும் முகம் பாட்டி போட்ட மந்திரத்தில் சிரித்த முகமாகப் போகும். மஞ்சக்காமாலை வந்தால் கூட பாட்டியிடம் மந்திரிக்க வருவார்கள். சில பேர் பாட்டியிடம் விசேஷமாக உறை மோர் வாங்கிப்போவர். பயந்து போன குழந்தைகள் பாட்டியிடம் மந்திரித்த மோர் வாங்கிக்குடிக்கும். பாட்டி அங்கொரு 'ஷமான்'. அவளுக்கு இரண்டு பிள்ளைகள். மதுரையில் வேலை. வெள்ளை வெளேரென்று மாட்டுப் பெண். ஆனால் முகம் எப்படியிருக்குமென்று கூட யாருக்கும் தெரியாது. அந்த எட்டடிக்குச்சுக்குள் வளையவரும் புள்ளிமானது.

அதற்குள் அக்கிரஹாரத்தின் மாற்றுமுனை வந்து விடுகிறது. முதல் வீடு ஜடாதரய்யர் வீடு. இவரும் தெலுங்கர். படு கோபக்காரர். எப்போதும் சிடு, சிடு முகம். இவர் முதல் மனைவி இறந்து விட்டதால் வயதான காலத்திலும் கருப்பாக இரண்டாம் தாரம் கட்டியிருந்தார். கருப்பில் மெருகூட்டும் கருமணியுடன் மாமி எப்போதாவது தெருவில் தலை காட்டுவாள். யாராவது பார்ப்பதற்குள் வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். இவளது பிள்ளை குட்டை மணி நந்துவின் சகா. இவரது தமையனார் பிள்ளை கிட்டி (கிருஷ்ணன்) அடிக்கடி வந்து இவர் குடும்பத்தைப் பார்த்துக் கொள்வான். கிட்டியும் ஐய்யருக்கு சளைத்தவனில்லை கோபத்தில். வாய் பேசுமுன் கைதான் பேசும்! அடுத்த வீடு அழகி சகுந்தலா வீடு. கன்னடத்து கட்டழகி சரோஜாதேவி போல இருக்கும் சகுந்தலா திருநெல்வேலி அய்யர்கள். ப்ரஹசரணம். சகுந்தளாவின் தாய் ஒரு காலத்தில் கைகேகியாக இருந்திருக்க வேண்டும். தசரதனுடன் போருக்கு போய் வில் வித்தை காட்டியது போதாது என்று கைவித்தை காட்ட அந்த ஊரில் பிறந்திருக்கிறாள். இவளது மூத்த பையன் 'கைகழுவின கேசு' அவனது நடத்தை, பேச்சு, வழக்கம் (சிகரெட்டு, பீடி) எல்லாம் புதூரில் அதிகமாக வாழும் முஸ்லிம்கள் போலவே இருக்கும். இவன் வரும் போது வீடே அமளி, துமளிபடும். மூன்று பையன்கள். இரண்டாவது புஷ்பவனம் என்னும் 'பெரிய கண்ணன்'. மாமியின் ஆச்சாரம், அபிலாஷை இவையெல்லாம் கட்டிக்காக்கப் பிறந்த சத்புத்திரன். அடுத்தவன் பாலு என்னும் பாலகிருஷ்ணன். இவன் பெரியவன் போல் கொஞ்சம் அராத்து. கொஞ்சம் ஆச்சாரம் இரண்டும் கலந்த கலவை. நந்துவிற்கு ஒரு வயது பெரியவன். கோபம் மூக்கில் நிற்கும். ஏதோ காரணத்திற்காக மூக்கில் எப்போது ஜலதோஷமும் நிற்கும்.அடுத்து சாரதாம்பா டீச்சர் வீடு. டீச்சரை யாரும் மாமியென்று அழைப்பதில்லை. கெத்து குறைந்துவிடுமென்று 'டீச்சர்' என்றழைப்பதையே விரும்புவாள். விதைத்தாயான சாரதாம்பாள் ஒரே பிள்ளையான சேதுவுடன் அந்த ஊரில் வாழ்ந்து வந்தாள். கொல்லு, கொல்லென்ற இடைவிடாத இரும்பல். அதன் காரணமான சிடு, சிடுப்பு. பிள்ளையை வேலைகெல்லாம் போகவேண்டாமென்று சொல்லிவிட்டாள். அம்மா வேலைக்குப்போக இவன் வீட்டில் சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தான். வீட்டோ டு ஒட்டிய புருஷன் என்பதால் இவனை யாரும் 'புருஷனாக' மதிப்பதில்லை. அதனால் இவனும் சிடு, சிடுவென்றே இருப்பான். இவர்கள் தாய்மொழி மராட்டி கலந்த தெலுங்கு.

அக்கிரஹாரத்தின் ஒரு பாதியிலேயே இந்தியாவின் 'வேற்றுமையில் ஒற்றுமை' தெரிந்துவிடும். இவர்கள் அடிப்படையில் வெவ்வேறு சாதிக்காரர்கள். கொடுக்கல் வாங்கல் கிடையாது. சமபந்தி கிடையாது. வேதம் சொல்லும் போதும் வெவ்வேறு வேதம் சொல்வார்கள். ஒரே மொழிக்காரர்கள் கூடக் கிடையாது. ஆனால் இந்த வண்ணக்கலவை ஒரே நிறமென்று உள்ளூர் கட்சிகள் பறைசாற்றி வந்தன.

0 பின்னூட்டங்கள்: