ஆலிலைக் கண்ணனின் இந்தப்படம் மிகப்பிரபலமானது. இந்த போசில் கிருஷ்ணன் ரொம்ப அக்ரபாடிக் செய்து இரண்டு கைகளையும் காலுக்குக் கீழ் கொடுத்து ஒரு காற்பெருவிரலை சுவைக்கின்றார்.

எதுக்கு இவ்வளவு கஷ்டமான போஸ்? வியாக்கியானம்: கண்ணனின் பக்தர்களெல்லாம் அவனது பாத தூளிகை பற்றி அவ்வளவு பேசுகிறார்கள். தாமரைப்பூ பாதம். கந்தம் கமழும் பாதம். சம்சார சாகரத்தில் உழன்று தவிக்கும் ஜீவராசிகளுக்கு சரணம் அளிக்கும் பாதம் என்று. கிருஷ்ணனுக்குத் தோன்றியதாம் ஒரு நாள் 'அட! என்னப்பா! இந்த பாதத்தில் அவ்வளவு சிறப்பு' ன்னு யாரும் பாக்காத நேரத்திலே சப்புக் கொண்டிப்பாத்தாராம்.

ஆனா அதை நம்ம பெயிண்டர்கள் எப்படியோ பாத்துட்டாங்க :-) படமும் வரைஞ்சுட்டாங்க.

ஆனால் மிக நுணுக்கங்கள் கொண்ட இந்தப் படத்தை வரைந்த 10 வயது பாலனுக்கு இரண்டு கைகளும் ஒரு விபத்தால் எடுக்கப்பட்டு விட்டன. சப்புக்கொட்ட எந்த விரல்களும் கால்களில் இல்லை. ஒரு காலில் பாதி இல்லை.வாழ்வில் திட நம்பிக்கை வேண்டும். ஒரு சின்ன முட்டையில் ஒரு பேருயிரின் சூட்சுமங்களை வைக்கிறான் இறைவன். உடலின் எல்லா செல்லுக்கும் மற்ற எல்லா உறுப்புகளையும் உருவாக்கும் திறன் இருக்கிறது. இதை வைத்துதான் டோ லி என்ற ஒரு ஆட்டுக்குட்டியை வேறொரு ஆட்டின் மடுவிலிருந்து இங்கிலாந்து விஞ்ஞானிகள் உருவாக்கிக் காட்டினர். ஜனார்தனன் என்னும் இச்சிறுவன் மனம் தளராமல் தனது வாயால் எழுத, ஓவியம் வரையக் கற்றுக் கொண்டுவிட்டான்.

இது இந்தியாவைப் பொருத்தவரை பெரிய விஷயம். ஜெர்மனியில் இப்படி வாயால் வரையும் ஓவியர்கள் சங்கமே வைத்திருக்கிறார்கள். உடல் ஊனம் என்பது இழிவல்ல என்பது மேலைத்திய சித்தாந்தம். நம்ம ஊரில் ஊமையாக, நொண்டியாகப் பிறந்துவிட்டால் கொடுமை செய்தே கொன்றுவிடுவார்கள். ஜனா அதிர்ஷ்டக்காரன். அவன் டாக்டர், குடும்பம், நண்பர்கள் அவனை அப்படிச் செய்யவில்லை.

ஜனா பற்றிய குறிப்பு வலைப்பக்கத்தில் கிடைக்கிறது. கட்டாயம் போய் வாசியுங்கள். சுபாவும் தனது எண்ண அலைகளில் எழுதியுள்ளார்.

நாமெல்லாம் நாம் பட்ட கஷ்டங்கள் பெரிது என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு இளம் பயிர் வேர்கள் அற்றுக் கிடக்கிறது. இதற்கு நாம் என்ன செய்யலாமென்று யோசிக்க வேண்டும்!

0 பின்னூட்டங்கள்: