இதையேதான் நானும் குறிப்பிட்டிருந்தேன். மனிதனை உய்விக்க வெகுசில குருமார்கள் அல்லது ஞானவான்கள் பாடுப்பட்டனர் என்று. இவர்களுடன் இன்றைய தேதியில் நம்மிடம் வலம் வரும் பட்டுஜிப்பா மற்றும் கோர்ஸ்சுக்கு ஆயிரக்கணக்கில் வசூலிக்கும் ஆஷாடபூதிகளை சேர்க்காதீர்கள். அதிலும் அந்தக் காலத்தில் நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி மனிதனை மேம்படுத்த இவர்கள் பட்டப்பாடு! இவர்கள் யாரும் சுக வாழ்வு வாழவில்லை. இவர்களுக்கு வாழ்ந்தக்காலத்தில் இவர்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள்தான் அதிகம்.

பிறகு நீங்கள் சொன்ன புத்தர், கடவுளைப் பற்றி எதுவும் சொல்லாமல் மனிதனை திருத்த முற்பட்டார். திருவள்ளுவரும் இதை தானே செய்தார்? நீங்கள் நம் புராண பாத்திரங்களை எடுத்துகாட்டி அதன் தாத்பரியம் வேறு என்கிறீர்கள். ஆனால் சாதாரண மனிதனுக்கு அவை என்ன புரியும்? அவனுக்கு முருகனுக்கு ரெண்டு பெண்டாட்டி, கிருஷ்ணனுக்கு ஊரெல்லாம் பெண்டாட்டி என்று தானே நினைக்கிறான்?

பொதுவாய் மனிதவர்க்கத்தை மூன்று பிரிவாய் பிரித்துள்ளோம். பணக்காரர், ஏழை மற்றும் மத்தியவர்க்கம். இதில் பணக்காரனுக்கு செய்யும் தொழிலே தெய்வம். கடவுளுடன் ஒரு பார்ட்னர்ஷிப் அவ்வளவுதான். ஏழைக்கோ கடவுளை நினைக்கவும் நேரமில்லை. மிஞ்சிப் போனால் நாலணாவுக்கு கற்பூரமோ, ஆடி மாதம் ஆத்தாவுக்கு கூழ் ஊற்றினாலோ அவன் வழிப்பாடு முடிந்தது. இவர்கள் இருவரும் தன்னை நம்புகிறவர்கள். ஆனால் நம் மத்தியவர்க்க ஆசாமி இருக்கிறானே, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக் கொண்டிருக்கிறான். ஞான தேடல் அது இது என்று பெயரை வைத்து, வாழ்க்கைக்கு உதவாத வறட்டு சித்தாந்தம் இது. இந்த ஞானமார்க்கத்தில் கரைக்கண்டு ஞானவான் ஆகி என்ன செய்தார்கள்? தான் கண்டுபிடித்ததை பிறருக்கு போதித்தார்கள் அவ்வளவுதான். இதனால் மனிதன் மேம்பட்டானா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன். இத்தகைய கல்வி வெறும் அகந்தையைதான் வளர்கிறது. பல நூல்களை பயின்றவனுக்கு ஞானசெறுக்கு, வித்தியாகர்வம் என்னும் தலைகனம், அல்லது மண்டை கர்வம்தான் ஏற்படுகிறது. இதை வீசிவிட நாலு பேர் பின்னால். இதனால் இவனே ஏறக்குறைய கடவுள் ஆகிவிடுகிறான்.

ஆனால் படிப்பறிவில்லாத பலரிடம் மனித தன்மை மிகுந்துக் காணப்படுவதை நான் கண்டுள்ளேன். ராமகிருஷ்ணரின் குட்டிகதை ஒன்று- மேதாவி ஒருவர் படகில் பயணித்தாராம். படகோட்டியிடம் இதிகாசங்கள் தெரியுமா என்றுக் கேட்டாராம். தெரியாது என்று அவன் சொன்னதும், அடடா! வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கி விட்டாயே என்றாராம். பிறகு வேதங்கள் பற்றி ஏதாவது தெரியுமா என்றாராம். படகோட்டி தெரியாது என்றதும், மூடா பாதி வாழ்க்கையை வீணடித்துவிட்டாயே என்று கடித்துக்கொண்டாராம். அப்போது படகோட்டி, ஐயா நீச்சல் தெரியுமா என்று கேட்டதற்கு அவர் இல்லை என்றாராம். படகோட்டி, நீங்கள் முழு வாழ்க்கையையும் தொலைத்து விட்டீர்கள், படகில் ஓட்டை என்று சொல்லிவிட்டு நீந்தி கரையேறினானாம்.

இனி இரண்டாவது பதிலுக்கு வருவதற்கு முன்பு முதல் வரியிலேயே கண்ணன் மாட்டிக் கொண்டார். மூலமில்லாமல் தோற்றம் இல்லை. அந்த மூலத்தின் மூலம்தான் படைப்பு உருவானது. அதை உருவாக்கியது கடவுள். சரிதானே உங்கள் பதில்? மூலமில்லாமல் தோற்றமில்லை என்றால் அந்த மூலத்தை உண்டாக்கியது யார்? இது நான் கேட்கவில்லை, ஓஷோ கேட்கிறார் ! படைத்தவன் கடவுள் என்றால் கடவுளைப் படைத்தது யார்? படைப்பு என்பதே கற்பனை, அதில் தோன்றிய மாபெரும் கற்பனை கடவுள். கண்டவர் விண்டில்லை, விண்டவர் கண்டில்லை என்றால் பதில் எப்படி கிடைக்கும்? ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம், கர்மா, விதி போதும் ஐயா!

வாழ்க்கையில் ஏன் என்ற கேள்வி தேவையேயில்லை. வாழ்க்கை போகும் பாதையில் நாமும் போய் வாழ்ந்தால் போதும். அதை நம் இஷ்டத்திற்கு வளைக்கத் தொடங்கும் போதுதான் பிரச்னை ஆரம்பமாகிறது. இதைதான் புத்தர் ஆசையே மனிதனின் துன்பத்திற்கு முழு முதற்காரணம் என்றார். தன்னம்பிக்கையுடன் - கவனிக்க கர்வம், அகந்தையில்லை-உழைத்தால் எதையும் சாதிக்கலாம். அனாவசியமாய் பிறர் விஷயத்தில் தலை இடாமல், பிறர் பேசுவதை (அக்கப்போர்) காதில் வாங்காமல் ,லெளகீத விஷயங்களில் ஒரு லிமிட்டுடனும், எதிலும் (பொருள்களிலும், உறவிலும்) அதிக பற்று வைக்காமலும், எவ்வளவு செல்வம் சேர்த்தாலும் எளிய வாழ்க்கை வாழ்வதிலும், நம்மால் முடிந்தவரை இல்லாதவர்களுக்கு உதவுவதிலும் மன நிம்மதி கிடைக்கும். இத்துடன் ரசனையையும் சேர்த்துக் கொண்டால், இதுதான் வாழ்க்கை. தீதும் நன்றும் பிறர்தர வாரா! இப்படி வாழ்வது நம் கையில்தான் உள்ளது. இதுதாங்க, கர்ம யோகம். முற்றும் போட்டு விடலாமா?

எழுதியதைப் படித்துப்பார்த்தால் உஷானாந்தா பட்டம் கிடைத்து விடுமோ என்று பயமாய் இருக்கு!

0 பின்னூட்டங்கள்: