ஒரு தன்னிலை விளக்கம்: (உஷா)

முதலில் சொல்லவிரும்புவது , இந்த சமய விசாரணை இது வரை நான் யாரிடமும் செயததில்லை. யாருக்கும் அட்வைஸ் செய்வதோ, ஆர்கியூமெண்ட் செய்வதோ எனக்கு பிடிக்காது. ஒருவர் சொல்லி மற்றவர் ஏற்றுக் கொள்ளுதல் என்பது கிடையவே கிடையாது. கடவுள் வழிப்பாடு என்பது ஒரு நம்பிக்கை. இதில் நம்பிக்கை உள்ளவர்களிடம் என் கருத்தை சொல்வது முற்றிலும் தவறு என்பது என் எண்ணம். "தெய்வம் என்றால் அது தெய்வம், அது சிலை என்றால் வெறும் சிலைதான்" அதுப்போல, என் சுதந்திரம், என் லட்சியம் என்பது எனக்குக்குள்தான். என் சுதந்திரம்-கொள்கை பிறரை பாதிக்க நான் அனுமதிக்கமாட்டேன்.

ஒரு சமுகத்தில் வாழும் போது என்னால் பிறர் மன வருத்தம் அடைவது சரியில்லை. நான் தாலி அணியமாட்டேன் என்றால் அது கட்டாயம், என் அம்மா, மாமியார், கணவருக்கு மன வருத்தத்தைத் தரும். என் கொள்கையால் என் குடும்பம் பாதிக்கப் படும் என்றால் அத்தகைய கொள்கை எனக்கு வேண்டாம். விபூதி, குங்குமம் தரும் பொழுது அதை மறுப்பது கொடுப்பவர் மனதை கட்டாயம் புண் படுத்தும். கோவிலுக்கு நானே போய் எந்த வேண்டுதலும் செய்வதில்லை. ஆனால் சென்னைக்குப் போனால் ஊர் சுற்றும் போது, கோவிலுக்கு எல்லாரும் போவது உண்டு. ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது வழக்கம். என்னுடைய நிலையில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

இதுவரை நான் சந்தித்த மத்தியமர்களின் ஆன்மீகத்தைப் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன். இனி நான் கேள்விப்பட்ட ஆன்மீக வாதிகள் புத்தர் முதல் பாபா(ரஜினி) சொல்லப்போகிறேன். கட்டாயம் யாருக்காவது கோபம் வரலாம். விஷயம் தலைக்கு மேலே போயாச்சு, இனி சாண் போனால் என்ன? முழம் போனால் என்ன?

பி.கு நேர்மை, உண்மை என்று பெரிய வார்த்தை எல்லாம் வேண்டாம். நிஜமாய் நிகழ்ந்துக் கொண்டிருப்பது என்னவென்றால் இணையம் மூலம் அறிமுகம் ஆனவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் யாரை பற்றியும் எதுவும் தெரியாது. அவர்களின் சாதனைகளும் தெரியாது. அதனால் எல்லாரையும் என் அளவில் வைத்து காய்த்துக் கொண்டிருக்கிறேன். மூணு வயசு பாப்பா, இங்கிலாந்து ராணியைப் பார்த்து உன் பெயர் என்னவென்று கேட்டதாம். அந்தம்மா ஆடிப்போய்விட்டாளாம். அவள் வாழ்நாளில் அந்தக் கேள்வியை யாராவது கேட்டு இருப்பார்களா? கண்ணன் என்றைக்கு தலையில் அடித்துக் கொள்ளப்போகிறாரோ?

உஷா

0 பின்னூட்டங்கள்: