உளன்எனில் உளன் அவன் உருவம்இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அருவம்இவ் வுருவுகள்
உளன்என இலன்என இவைகுணம் உடைமையில்
உளன்இரு தகைமையொடு ஒழிவுஇலன் பரந்தே
- திருவாய்மொழி

இவ்வளவு நாள் நான் எந்த மேற்கோளும் காட்டாமல் பேசிவந்தேன். இன்றோடு இத்தொடர் நிறைவுரும் தருவாயில் என்னப்பன் நம்மாழ்வாரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. அவர் இறைமை பற்றி மிக விரிவாகப் பேசினாலும் இந்த ஒரு பாசுரத்தை எடுத்துக் கொள்வோம். அது கொஞ்சம் பொருந்துமென்று தோன்றுகிறது.

ஒருவர் இறைவன் உண்டு என்று சொல்கிறார். இன்னொருவர் அவன் இல்லை என்று சொல்கிறார். உண்மை என்ன? என்று கேட்டால், எவன் உண்டு என்று சொல்கிறானோ அப்போது உருவத்தோடு இருக்கும் அனைத்தும் அவனது தூல சரீரமாகிறது. இலன் என்று சொன்னாலும் அவன் உள்ளவனே, ஏனெனில் உள்ளவை எனும் பொருட்களுக்கே தோன்றுகின்ற வேறுபாடுகள் இருக்கும். நீர் உள்ளது. காணக்கூடியதாயுள்ளது. ஆனால் நீராவியாய் இருக்கும் போது தோற்றவேறுபாடு உள்ளதே தவிர அது இல்லை என்று ஆகிவிடவில்லை. எனவே இல்லையென்னும் போது நாம் காணமுடியாத பொருட்களை சூட்சும சரீரமாக அவன் கொண்டுள்ளான் என்று பொருள். எனவே உளன், இலன் என கூறப்படும் இவை அவனது இயல்பான குணங்களாக அமைகின்றன என்றறிக. உருவம், அருவம் எனும் தூல, சூக்குமப் பொருள்களையுடையவனாய் எங்கும் ஒழிவு இல்லாதவனாகிப் பரந்து இருக்கின்றவனே இறைவன் ஆவான்.

திருவாய்மொழியிலிருந்து முதல்பத்து எடுத்து ஆராய்ந்தாலே பல விஷயங்கள் தெள்ளத்தெளிவாய் விளங்கும். ஆனால் அதை அவரவர்க்கு விட்டுவிடுகிறேன். திருவாய்மொழி மதுரைத்திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

நான் இதுவரை பேசியது என் புரிதலில் அகப்பட்டவை மட்டும். புரியாத விஷயங்கள் இன்னும் பலவுண்டு. இவரது கடைசிக்கேள்வியில் பல விஷயங்கள் இதிலடங்கும். எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆன்மீக விஷயங்கள் எப்போதும் என் ஜீவனை தளிர்ப்பிக்கின்ற குணமுடையதாய் இருப்பதால் நான் மகிழ்வுடனே இதை அநுபவித்தேன். உஷாவுக்கு இதை என்னிடம் ஏன் கேட்க வேண்டுமென்று தோன்றியதோ! The pleasure was mine. Thanks.

0 பின்னூட்டங்கள்: