லா.ச.ரா

இணையக் கொழுந்துகளுக்கு இந்தப் பெயர் எவ்வளவு பரிட்சயம் என்று தெரியாது. ஆனால், நான் நவீன தமிழ் இலக்கியத்தை சீரியசாக எடுத்துக் கொண்டபோது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு எழுத்தாளர்களில் இவர் ஒருவர். இன்னொருவர் தி.ஜானகிராமன். பள்ளி நாட்களிலே சுஜாதா தெரியுமென்றாலும் அது வசந்த்-கணேஷ் type excitement-க்குத்தான். ஆனா, பின்னாடி கணையாழி வாசிக்க ஆரம்பிச்ச பிறகுதான் தெரிந்தது எனக்குப் பிடித்த சுஜாதாவுக்கு இவர் inspiration-ன்னு. லா.ச.ராவை ஒண்ணுவிடாம வாசிச்சபிறகு அவர் மதுரைப் பல்கலைக்கழகம் வந்தார். உயிரியல் துறையிலிருந்து தமிழ் டிபார்ட்மெண்டை யாரும் சீரியசா எடுத்துக்க மாட்டாங்க. நான் அப்ப ஒரு odd man out!.

கரு, கருண்ணு புருவம். முகமெல்லாம் வெறும் புருவம்தான். நிறையப் பேசினார், ஆனா நெத்தியடியா விழுந்தது, "லா.ச.ரா இனிமே நிறைய எழுதுவான்னு நினைக்க வேண்டாம். எதுக்கு சும்மா வார்த்தைகள் எச்சில் பட்டு அதோட புனிதத்தை இழக்கணும்? ஒரே ஒரு புள்ளி. அதுலேயே நான் என்ன சொல்றேன்னு புரிஞ்சுக்கணும்". ம்..ம்..மறக்கக் கூடிய வசனமா இது? ஆனா அதுக்கப்புறமும் நிறைய எழுதினார். ஆனா குறைந்து கொண்டே வந்தது. இப்போ முற்றுப்புள்ளிக்கு பக்கத்துலே நிக்குது.சென்னை போன போது என் மருமான் சொன்னான், "ஏய்! கண்ணா (மாமாவுக்கு என்ன மரியாதை வீட்டிலேன்னு பாருங்க!) லா.ச.ராவை பாக்க வரேயா? அவர் வீட்டுக்கு பக்கத்திலேதான் ஜானு இருக்கான்னான். (யாரு இந்த ஜானுன்னு இப்ப சொல்ல மாட்டேன் ;-). சரின்னு சொல்லிட்டு லா.ச.ராவுக்கு ஒரு கார்டு போட்டேன். அவருக்கு இன்ன தேதி தோதுப்படுமான்னு.

மேலே இருக்கிற படத்திலே இருக்கிற மாதிரியே இருந்தார். ஏதோ சித்தர்கிட்ட வந்த மாதிரி இருந்தது.

"நீர் வைஷ்ணவரோ?"

இதுதான் முதல் கேள்வி. நெத்தியைப் பாத்துண்டேன். ஏதாவது தெரியாத்தனமா திருமண் இட்டுண்ண்டு போயிட்டோ மோன்னு. இல்லையே! பின் எப்படி?

"ஒண்ணுமில்லே! கடுதாசியிலே "தோதுப்படுமான்னு" கேட்டிருந்தேள். அது வைஷ்ணவ பாஷை" அப்படின்னு சொன்னார்.

சரிதான் இவர் ஷெர்லாக் ஹோம் டைப் சித்தர்ன்னு நினைத்துக் கொண்டே பேச ஆரம்பித்தோம். மத்தியானத்திலிருந்து சாயந்திரம் வரை பேசினோம். விட்டுப் பிரிய மனசே இல்லை.

"சார், உங்கள சேவிச்சுட்டு போகலாம்ன்னு நினைக்கிறேன்" அப்படின்னு சொன்னேன்.

"பேஷா! வாங்க உள்ளே என்று கூட்டிக்கொண்டு போனார். அதுவரை அவரது பிரத்தியேக எழுத்தறையிலிருந்தோம். ஹாலில் சுஜாதா குமுதம் ஆசிரியராக இருந்தபோது இவரைக் குடும்பத்துடன் எடுத்த அட்டைப்படம் பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. குழந்தை போன்ற உற்சாகத்தில் போட்டோ வைக் காண்பித்தார். உள்ளிருந்து மாமியும் வந்து சேர சேவித்தோம். அப்படியே சிவப்பழம். கையில் விபூதித்தட்டுடன் இருக்கும் போது எத்தனை முறை வேண்டுமானாலும் சேவிக்கலாம் போலிருந்தது. விபூதி இட்டு விட்டார்.

"கண்ணன் பிரியவே மனசு வரலே. இப்ப வந்த உறவு மாதிரி இது தெரியலே. உங்கள எனக்கு ஏற்கனவே தெரியும்" அப்படின்னார்.

இதுதான் அவரோட mystical touch!

அவர் எழுத்திலே பரவியிருக்கிற magical realism!..அவரது "முற்றுப் பெறாத தேடலில்" ஒரு சம்பவம் வரும். அதில் அவரோட லால்குடி அம்பாள் கருப்பா மூக்கு முழி எல்லாம் அபிஷாகம் பண்ணிப் பண்ணி அழிஞ்சு போய்..மழுக்குன்னு கருப்பா. திடீர்ன்னு இவரோட பாட்டி, தாத்தா...ஏன் எல்லோரும் ஒவ்வொன்னா குதிக்க ஆரம்பிப்பாங்க. அப்பதான் அவருக்குப் புரியும் 'உலகத்திற்கு ஒரே தொப்புள்கொடி'ன்னு.

இதுவொரு ஆன்மீகப் புரிதல். இதுவொரு அநுபவம். அது ஆளையே மாத்தற அனுபவம். இதையும், நம்மாழ்வாரோட கீழ்க்கண்ட வரியையும் பாருங்கோ...

"உலகுக்கோர் முந்தைத் தாய் தந்தையே"

லா.ச.ரா திருவாய்மொழி வாசிச்சு இருக்க சான்சே இல்லை. ஆனா, அதே புரிதல்.

ஏன்னா, உலகுக்கு ஒரே ஒரு தாய், தந்தைதான் உண்டு. அவன் பெயர் இறைவன்.

0 பின்னூட்டங்கள்: