வைகைக்கரை காற்றே!......031

அம்மாவை இறுகக்கட்டிக்கொண்டு நின்றான் நந்து. அம்மா சனி நீராடிவிட்டு தலையைத் துவட்டிக் கொண்டு சாம்பிராணி போட்டு முடித்து சமையல் கட்டை நோக்கி நகரவிடாமல் நந்துவின் அன்பு முத்திரை. அந்த சாம்பிராணிப் புகை தரும் சுகந்தம், சித்தியா வாங்கி வந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஸ்நானப்பவுடரின் சுகந்தம்...நந்துவுக்கு மட்டுமே உரிய அம்மாவின் தனி சுகந்தம் எல்லாம் சேர்ந்து விளக்கைச் சுற்றும் விட்டில் போல் அவனை கோகிலத்தைச் சுற்றி வட்டமிட வைத்தது.

"இது என்னடி கூத்தாயிருக்கு? என்ன அடுப்படிக்கு விடமாட்டேங்கறான்?"

"அக்கா! நீ அவ்வளவு வாசனையா இருக்கோள்யோ அதான்" என்றாள் குஞ்சரம் கையில் சாம்பிராணிப் புகை கக்கும் அனல் தட்டுடன். அக்காவிற்கு இந்த சிஷ்ருதை தங்கையோடது. "குழந்தைகளெல்லாம் வளைய, வளைய வரது எவ்வளவு நன்னாயிருக்கு" என்றும் சொன்னாள் குஞ்சரம்.

"சரிதான் போ! ஊரு சிரிக்கப்போறது. நல்ல வேளை இவன் ஆம்பிளப்பிள்ளையாப் பொறந்தான். இன்னிமே என்னால பெத்துக்க முடியாதுடி. அடுத்த மாசம் பத்மா பிரசவத்து வந்துறுவா. இங்க என்னடான்னா இது குழந்தை மாதிரி விளையாடிண்டு இருக்கு"

"அவனுக்கு பரிட்சை முடிஞ்சு லீவு விட்டுருக்கா, பொழுது போகல உன்னையச் சுத்தி சுத்தி வரான்"

"நன்னா விட்டாடி லீவு. எனக்கு ஒரு வேளையும் ஆகல, டேய் விடுடா! சமையலைக் கவனிக்கணும்"

"மாட்டேன்! உன்னிட்ட நன்னாருக்கு!"

"இருக்கும், இருக்கும். அப்பபுறம் சமையலை யாரு கவனிச்சுப்பா?"

"பங்கஜம்"

"ஆமா! பங்கஜம். காலைலே மாட்டுக்கொட்டிலுக்கு போனவ இன்னும் வரலே"

"கமலா!"

"கமலாதானே!" என்று சிரித்தாள் கோகிலம்.

"ஏம்மா சிரிக்கிற, நேக்கு ஏதாச்சும் நீ கத்துக் கொடுத்தாதானே?" என்று சுயபாதுகாப்பில் இறங்கினாள் கமலா.

"ஆமாடி! உங்க பாட்டி கத்துக்கொடுத்துதான் நான் சமைக்கிறேனாக்கும்! எல்லாம் அதுவா வரும். டேய்! விடுடா!"

"மாட்டேன்"

"ஈதென்னடி கூத்தாயிருக்கு. சரி! நந்து நீ சமத்தா விளையாடப்போனா சாயந்திரம் பெருமாளுக்கு அம்சியப்பண்ணிட்டு நோக்கு ஏதாவது தரேன். சரியா? தோ பாரு, நாகன் இங்கேயும் அங்கேயும் சுத்திண்டு அலையலறான். நீ எப்ப வருவேன்னு காத்துண்டு இருக்கான். ஓடு!"

நந்து மனதில்லாமல் தனது இரும்புப்பிடியை விட்டான். பையில் கையை வைத்தான். வலது பை ஓட்டை. இடது பைக்குள் கைவிட்டான் பம்பரம் இருந்தது.

பம்பரம் என்பது சாமனியப்பட்ட விளையாட்டில்லை. சும்மாச்சுத்தி விடறது பொண்ணுகள் கூடச் செய்யும். ஆனா, பழையூர்காரப்பசங்க வரும் போது ஆக்கர் வாங்கம விளையாடனும் பாரு அதுதான் சவால். நந்துவிற்கு மதுரையிலிருந்து மஞ்சள் தாத்தா இரண்டு பம்பரம் வாங்கித்தந்திருந்தார். அதில் ஒன்று ஆக்கர் வாங்கியே உடைந்து விட்டது. கட்டை சரியில்லை. பிஸ்கோத்து மாதிரி உடைஞ்சு போச்சு. ஆனா, இரண்டாவது பம்பரம் தேவலை. குத்து வாங்கினாலும் உடையலை. இதெல்லாம் கடையிலே வாங்கினது. ஆனா, இந்த குடியானவ வீட்டுப்பசங்களோடது வேலிக்கருவை மரத்திலேர்ந்து கட்டையெடுத்து கொடஞ்சு செஞ்சது. குத்தினா கூட நம்ம பம்பரத்து ஆணிதான் கோணும். அப்படி வச்சிரக்கட்டை. ஆனாலும் இந்த பசங்களோட பம்பரத்திலே கட்டையைவிட ஆணிதான் பெரிசா இருக்கு. அக்கிரஹாரத்து பம்பரங்களை உடைக்கிறதுக்குன்னே யாரோ செஞ்சு அனுப்பறா.

நந்து நாகன், பாண்டி, குட்ட மணி இவங்களோட விளையாடவே விரும்புவான். ஏன்னா இவனை அந்தக்கூட்டத்திலே அடிச்சிக்க ஆளில்லை. ஆனா, மகாலிங்க ஐயர் பிள்ளை சுந்தர் எங்கேயிருந்தோ ஒரு வானர கோஷ்டியோட வருவான். அவா, அக்கிரஹாரத்திலே இல்லாம ஹோட்டலோடயே இருக்கிறதாலே அவனோட பழக்க, வழக்கமெல்லாம் ஹோட்டல்லே வேலை செய்யற வேலையாள்களோட பசங்களோடதான். அவங்களுக்கு வேலையே அக்கிரஹாரத்து பம்பரங்களை சிதைப்பது, இல்லை உடைப்பது. வட்டம் போட்டு ஆட்டம் ஆரம்பித்துவிட்டால் அவ்வளவுதான். பம்பரம் சுழலும் முன் அவனவன் பம்பரமாய் சுழலுவான். உள்ளே மாட்டிக்கிட்டா பம்பரம் குளோஸ். வட்டத்தை விட்டு கிளப்பற போதும் குத்து, பின்னால தவறவிட்டா ஆக்கர் குத்து வேற. எனவே இருக்கின்ற ஒரே பம்பரத்தை தக்க வைத்துக் கொள்ள நந்து பிரமாதமாய் ஆடுவான். பெருமாள் கோயிலுக்கருகில் இருக்கும் தென்னந்தோப்பில்தான் தொந்தரவு இல்லாம விளையாட முடியும். தெருவிலே விளையாண்டா போற வரவா காலைப் பதம் பாக்கிறதுண்டு.

இப்படித்தான் ஒரு நாள் தெருவிலேயே ஆட்டம் சூடு பிடித்து விட்டது. விளையாட்டு மும்மரத்திலே யாரு வரா, யாரு போறான்னு தெரியலே. சுந்தர்விட்ட பம்பரம் வட்டம் தாண்டி தெருவிலே போயிண்டிருந்த கோணக்குண்டி மாமா காலைப்பதம் பார்த்துவிட்டது.

"அட தருதலைப்பசங்களா! ஊரிலே விளையாடறதுக்கு இடமா இல்லே? டேய் நந்து! இதுலே நீ வேறயா? கோகிலத்திட்டே சொல்லறேன்" என்று கத்த ஆரம்பித்தார்.

கோணக்குண்டி நாராயணன் இவர்களுக்கு தூரத்துச் சொந்தம். இரட்டை அக்கிரஹாரத்தின், இன்னும் விவரிக்கப்படாத பகுதியில் இருக்கிறார். கொஞ்சம் இடுப்பு வளைந்து கோணலாக இருக்கும். அப்பவே ஆள் ஆஜானுபாவாக உசரமா இருப்பார். பார்க்க லட்சணமாய் திருமண் இட்டுக்கொண்டு வந்தாலும் முன்னும் பின்னும் ஆள் கிட்ட வரமுடியாதவாறு நாராயணன் குசுப்போட்டுக் கொண்டே நடப்பார். இதில் வேடிக்கை என்னவென்றால் தெரு முனையில் ஆரம்பித்து அடுத்த முனைவரை கூட விடாமல் விடுவார். பசங்களெல்லாம் இந்த வேடிக்கை காணக் கூட வரும். மாமாவுக்கு இன்னும் குஷியாகிவிடும். சத்தம் பெரிதாகும்.

"டேய்! நாராயணா! ஏண்டா எங்களை இப்படி இம்சை பண்ணறே. அப்படி என்னதான் உன் ஆத்துக்காரி சமைச்சுப்போடறா? இப்படி ஏவுகணைகளைத் தொடுத்துக் கொண்டே போறயே?" என்று சிலர் கேட்பதுண்டு.

ஆனால் கோ.கு.நாராயணன் செய்யும் தொழிலே தெய்வமென்று படு கவனமாக காரியத்திலே கண்ணாக இருப்பார். யாருக்கும் அவர் பதில் சொல்லி நந்து பார்த்ததில்லை.

0 பின்னூட்டங்கள்: