கோபாலம் சேவிதம்

கொரியாவிலிருக்கும் கோஜே தீவிற்கும் ஜெர்மனியில் நான் நீண்ட நாள் வாழ்ந்த கீல் நகர்க்கும் ஒரு பெருத்த வித்தியாசமுண்டு. அது கதிரவனின் கடைக்கண் பார்வை பற்றியது. பொதுவாகவே ஜெர்மனியில் சூரிய வெளிச்சம் குறைவு. எப்போது பார்த்தாலும் ஒரு மேக மூட்டம். ஒரு நவம்பரில் 14 நாட்கள் நான் சூரியனைப் பார்க்கவில்லை. பயித்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது. இந்த மாதத்தில் டிப்ரஷன் காரணமாக தற்கொலைகள் நடப்பதுண்டு. ஆனால் கோஜே தீவு எப்போதும் பளிச்சென்று இருக்கிறது. சுத்தமான காற்று, பசுமையான மலைகள், நல்ல வெளிச்சம். பனிக்காலத்தில் ஜெர்மனியின் குளிர் இங்கும் இருந்தாலும் இந்த வெள்ளை வெளேர் எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது.

காலையில் எழுந்தவுடன் மலைகளையும், கடலையும் பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இதற்கு மேல் தனியாக தியானம் என்பது அவசியமில்லை. மலைகள் இந்தப் பூமியின் வயதுடையவை. மிகப் பழமையான தோழர்கள். அது போதாது என்று காலையில் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டும் உண்டு. ராகா.டாட்.காமிலிருந்து தவறாமல் எம்.எஸ், டி.கே.பட்டம்மாள் (எப்போதாவது சித்ரா) பாடுகிறார்கள். பஞ்சரத்ன மாலை என்று ஒரு ஐஞ்சு பாட்டு. ஐந்தும் ரத்தினம். அதில் எனக்கு மிகவும் பிடித்தது "பாவயாமி கோபாலம்! ப(b)஡லம்! மனசே சேவிதம்" என்னும் பாடல். கல்யாணியா? மோகனமா? தெரியவில்லை. ஆனால் இதே ராகத்திலமைந்த பழைய சினிமாப்பாட்டொன்றுண்டு! அது "சிங்காரக்கண்ணே! உன்" எனும் வரலக்ஷமி பாடிய பாட்டு. (வீரபாண்டிய கட்டபொம்மன்). சாகித்யம் அன்னமாச்சாரியா.

இவ்வளவு சுகமும் ஒரு நாள் பட்டெனப் போய்விடும் என்னும் போது மனது 'பகீர்' என்கிறது. ஒரு சின்ன துக்கம் தொண்டையை அடைக்கிறது. இந்த துக்கத்திலிருந்து விடுபட 'சதா மனசே சிந்தயே கோபால பாலம்' என்கிறார் பெரியவர். ஸ்ரீமந் நாராயணின் பெயர்களில் மைசூர்பா (கு) மாதிரிக் கரைவது ரெண்டு பேர்தான். ஒன்று கோபாலம், அடுத்து கோவிந்தம். இதுவே துக்க நிவாரணம்!

(சாரி உஷா! இதெல்லாம் பேசக்கூடாதுண்ணு தோணுது, ஆனா மனசு அங்கேதான் போகுது என்ன செய்ய?)

0 பின்னூட்டங்கள்: