Fellowship of Rings 002

அன்புள்ள கண்ணனுக்கு,

இத்துடன் அனுப்பியதைப்படித்துவிட்டு( நொந்துவிட்டு),போடலாம் என்றால் உங்கள் வலைபூவில் போடவும்.

கண்ணன் என்னை அழகி என்று சொல்லிவிட்டார். அப்போதே உங்களுக்கு புரிந்திருக்கும் அழகுக்கும், மூளைக்கும் சம்மந்தமில்லை என்று. என்னால் உதாரணம் எல்லாம் கொடுத்து ஆக்ரோஷமாய் வாதிட வராது. வாதம் என்பதே அபத்தம். எந்த கருத்தையும் சொல்லி பிறரை ஏற்றுக்கொள்ள செய்ய முடியாது. இந்த கருத்தும் படிப்பவர் மனதின் ஆழத்தில் ஊறி மேலும் சில மசாலாக்கள் சேர்ந்து பக்குவப்படலாம்.

என்னுடைய படிப்பு நுனிபுல் மேய்தல்தான். ஆழமாய் எந்த விஷயமும் தெரிந்துக் கொள்ள விரும்பியதே இல்லை. நிறைய கடவுளர்களை பற்றி படித்துள்ளேன். அதில் இருந்து என் மனதிற்கு தோன்றியதை இங்கு வைக்கிறேன். குற்றம் குறை இருக்கும், ஆனால் உங்கள் நம்பிக்கையை நான் கேலி செய்யவில்லை என்பதை மனதில் கொண்டு இதை படிக்க ஆரம்பியுங்கள்.

நான் பிறந்த இந்து சமயத்தை மட்டும்தான் சொல்லுவேன். பிற மதத்தை பற்றி சொல்ல எனக்கு உரிமையில்லை என்று நினைக்கிறேன்.

மூன்று கேள்விகள் வைத்தேன். இதில் முதல் இரண்டிற்கு சுபாவும், கண்ணனும் ஒரே பதிலை சொல்லியிருக்கிறார்கள்.

சுபா கடவுள் உண்டு என்று சுருக்கமாய் சொன்னதை கண்ணன் விலாவாரியாய் விளக்கியிருக்கிறார். அதாவது புரியாத விஷயங்களைப் பார்த்த மனிதன், அதை உண்டாக்கியவனுக்கு கடவுள் என்று பெயர் வைத்துவிட்டான் என்று கண்ணன் சொன்னதைநானும் வழி மொழிகிறேன்..

ஆதி மனிதனுக்கு நெருப்பு முதலில் ஆச்சரியத்தை தந்தது. அது இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று தெரிந்து அதை வணங்க ஆரம்பித்தான். இயற்கையின் மா பெரும் சக்தியான, தன்னால் சமாளிக்க முடியாத பஞ்ச பூதங்களையும் வழிப்பட ஆரம்பித்தது இப்படிதான். லிங்க ரூபமும் இப்படி ஆச்சரியத்தையும், அதனால் உலகம் பெருக ஆரம்பித்ததையும் கண்டு அதையும் வழிப்பட ஆரம்பித்தான். தனக்கு விளங்காத, பயத்தைக்கொடுக்கும், பிரமிப்பு ஊட்டுவதை கடவுளாய் வணங்க ஆரம்பித்தான். நாகரீகம் வளர வளர கடவுள்களும், மனிதர்களிடையே பிரிவும் தோன்ற ஆரம்பித்தது. இந்த தட்டில் மேலே இருந்தவர்கள் வழிப்பாட்டு முறையை ஆரம்பித்தனர் அல்லது கண்டுப்பிடித்தனர். தன்னை மற்ற பிரிவுகளைவிட மேலானவர்கள் என்று நிலை நாட்டிக் கொள்ள அவர்கள் கடவுள்களை பயன் படுத்திக் கொண்டனர். ஆள் ஆளுக்கு புதிய கடவுளையும், அதை வழிப்படும் முறைகளையும் சொல்ல ஆரம்பித்தனர்.

சிலர் மனிதனை நாகரீகப்படுத்த,நல் வழிப்படுத்த புதிய முறையை அதாவது புதிய கடவுளை அறிமுகப்படுத்தினர். ஆனால் சொன்னதை எல்லாம் மனிதன் சுலபமாய் மறந்துவிட்டு, அந்த வழிப்பட்டு முறையை மட்டும் பலமாய் பற்றிக் கொள்ள ஆரம்பித்தான். திருமந்திரத்தில் எத்தனை நல்ல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் ப்ரோதஷத்துக்கு கபாலி கோவிலை வலம் வந்தால் போதும், பாவங்கள் தொலையும் என்றல்லாவா நினைக்கிறான். கடவுள் பக்தி என்பது பயம் மற்றும் மனிதனுக்கு தன் சுமையை பகிர்ந்துக் கொள்ள ஒரு துணையும் ஆகும். சின்ன வயதிலேயே உம்மாச்சி கண்ணைக்குத்தி விடும் என்று பயமுறுத்தல் ஆரம்பிக்கிறது. "ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு போலீஸ்காரனைப் போட்டு காவல்காக்க முடியாது. அதுவே கடவுள் நீ செய்யும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்றால் பாவம் செய்ய அஞ்சுவான்" இதை சொன்னது நம் மூதறிஞர் ராஜாஜி.

கடவுள், பக்தி இதன் நீட்சியாய் பூஜை, மந்திரங்கள் போன்ற வழிப்பாட்டு முறைகள், பிறகு கடவுளை குஷி படுத்த, வழிக்கொண்டுவர, சமாதானப்படுத்த யாகங்கள், சோதிடங்கள், சாஸ்திரங்கள் இத்தியாதி தோன்றி மனிதன் எது செய்தாலும் தப்பித்துக் கொள்ளலாம் என்று பாவங்களை செய்துவிட்டு அதில் இருந்து மீளும் வழியைக் கண்டுபிடித்து தங்கள் பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டார்கள். மொத்தத்தில் கடவுள் இன்றைய தேதியில் பணங்கொட்டும் வியாபாரத்தின் சீப்பான மூல பொருள் ஆனார்.(தொடரும்.)

0 பின்னூட்டங்கள்: