Fellowship of Rings 005

முதலில் உஷாவின் நேர்மைக்குப் பாராட்டுகள். உஷா சொல்வதைப் பார்த்தால், அப்படியே நான் கண்ணாடிக்கு முன் நின்று பேசுவது போல இருக்கிறது. ஆனால் ஒரு வித்தியாசம், இதெல்லாம் பேசினதுமில்லை, எழுதினதுமில்லை. ஆனால் மனதுக்குள்ளேயே ஒரு ஆயிரம் முறை சொல்லிப்பார்த்துக்கொண்டவை. எத்தனை வயசில் என்று தெரியாது, ஆனால் கடவுள் மறுப்பு (வெறுப்பில்லை;-) என் கூடவோ அல்லது என்னோடு அண்ணனாய் எனக்கு ஒரு சில வினாடிகளுக்கு முன்போ பிறந்திருந்தது. எந்த தி.க.வோ பெரியாரோ சிறியோரோ சொன்னதோ கேட்டதோ இல்லை. ஆனாலும் என்றும் சாமியை நம்பியதில்லை. ஒரு முறை ஒன்றைக் கேட்கப்போய் அதுவும் நடக்காமல் போனதுக்கு முன்பே அப்படித்தான். போதும் தன்னிலை விளக்கம்...

<<உஷா: நம் மத்தியவர்க்க ஆசாமி இருக்கிறானே, தானும் குழம்பி பிறரையும் குழப்பிக் கொண்டிருக்கிறான்.>>
கிட்டத்தட்ட சரி. மற்ற வர்க்கத்தினரைக் காட்டிலும் இந்த விஷயங்களுக்கு தேவைக்கு அதிகமான நேரம், உழைப்பு, பணம், இத்யாதிகளை செலவு செய்பவன் நம் ஆளே.

<<உஷா:ராமகிருஷ்ணரின் குட்டிகதை ஒன்று- மேதாவி ஒருவர் படகில் பயணித்தாராம்.>>
இன்னொரு கதை நான் சொல்லுவேன், என் நண்பர்களிடம் பல முறை சொல்லியிருக்கிறேன். எங்கோ படித்ததை/கேட்டதை கொஞ்சம் திரித்து மாற்றி சொல்வேன். கண்ணன், உஷா ரெண்டுபேரும் கதாசிரியர்கள்தானே இன்னிக்கு என்கிட்டே மாட்டிக்கிட்டீங்க, கேளுங்க ;-)


ஒரு படகில் மூன்று பிரயாணிகள் பயணித்தார்கள். ஆற்றில் அன்று ஓட்டம் அதிகம் எனவே படகு கட்டுக்கடங்காமல் அலைக்கழிய படகோட்டி மிகுந்த சிரமப்பட்டு துடுப்புப் போட்டு அக்கரைக்குப் போய்க்கொண்டிருந்தார். கொஞ்ச தூரம்தான் பாக்கி. திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி. படபடப்பு. அப்படியே அவருடைய கையிலிருந்து துடுப்பு ஆற்றில் நழுவ, மயங்கினார். மாரடைப்பு!

மூன்று பிரயாணிகளும் 'அய்யோ' என்று பதைத்தார்கள். படகோட்டிக்காக மட்டுமல்ல, தங்கள் உயிருக்காகவும். துடுப்பில்லாமல் ஆற்றின் போக்குக்கு விட்டால் படகு கட்டாயம் சுழலில் சிக்கி அனைவரும் மாண்டுபோவார்கள். அந்தக் காட்டாற்று வெள்ளத்தில் நீந்திப் பிழைப்பது நினைத்துப் பார்க்கவே முடியாதது. அவர்களில் சாந்தமான அமைதி தவழும் முகத்துடைய அந்தப் பெரியவர், 'பயப்படவேண்டாம், எந்த சிக்கலிலும் நாம் நம்பிக்கை இழக்க வேண்டியதில்லை. நான் வணங்கும் கடவுள் நம்மைக் கைவிட மாட்டான். இதோ நம் அனைவருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன். கட்டாயம் நாம் காப்பாற்றப் படுவோம்' என்று தனக்குத் தெரிந்த மந்திரங்களைக் உச்சரித்து, கண்ணை மூடி, கடவுளைப் பிரார்த்திக்க ஆரம்பித்தார்.

இதைப் பார்த்தார் ஆர்வமும் அறிவும் கொப்பளிக்கும் முகத்துடைய அந்த துறுதுறு இளைஞர், இரண்டாவது பிரயாணி. 'இந்தப் பெரியவருக்கு இன்னும் புத்தி வரவில்லையா? இந்த நட்டாற்றில், எந்தக் கடவுள் வந்து நம்மை எப்படிக் காப்பாற்ற முடியும். ஆற்று நீரை ஆ·ப் செய்யப் போகிறாரா, இல்லை மேலே இருந்து ஹெலிகாப்டரில் வந்து நம்மைக் காக்கப் போகிறாரா? கண்னை மூடிப் பிரார்த்தனை செய்யும் நேரம், யாரையாவது உதவிக்கு அழைக்கலாம். முட்டாள்தனத்திற்கு அளவில்லையா? பிரார்த்தனைக்குப் பதிலாக இவர் போட்டிருகும் வெள்ளை உடுப்பைக் கழட்டி ஆட்டினாலாவது தூரத்தில் யாருக்காவது நாம் தத்தளிப்பது தெரியலாம்...'

மூன்றாவது நபர் கண்ணைமூடி ஜபிக்கும் பெரியவரையும் பார்த்தார், அவரை ஏசிக்கொண்டிருக்கும் இளைஞரையும் பார்த்தார். சரிந்து கிடக்கும் படகோட்டியையும் பார்த்தார். அக்கம் பக்கம் யாரும் தென்படுகிறார்களா என்று சுற்று முற்றும் தேடினார். 'யாராவது வாங்களேன், எங்களைக் காப்பாத்துங்க' என்று குரல் கொடுத்தார். ஒன்றும் பயனில்லை. படகோ இங்கும் அங்குமாய் ஆடிப் பயமுறுத்தியது. படகோட்டி இல்லாவிட்டலும் துடுப்பு ஒன்று இருந்தால்கூட சமாளித்திருக்கலாம். என்ன செய்வது?

பெரியவர் தன் பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். இளைஞருக்கு இன்னும் கோபம் அதிகமானது. அவரும் தன் எதிர்ப்புக் குரலை உயர்த்தினார். நம் மூன்றாமவர் படகில் துடுப்பு ஏதும் கிடைக்கிறதா என்று தேடினார். ம்ஹ¤ம்..ஆனால்..படகோட்டி வைத்திருந்த பழைய பைக்குள் ஒரு தட்டம் இருந்தது, படகோட்டி சாப்பாடு சாப்பிடுவதற்காக வைத்திருந்தது போல..அதைக் கையில் எடுத்ததும் பொறிதட்டியது. அதைக் கையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு படகின் முன்புறம் நோக்கி குப்புறப்படுத்துக்கொண்டு இரு கையிலும் மாறிமாறி அந்தத் தட்டத்தால் தண்ணீரைத் துழாவினார். படகு கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள் வருவது போல் தெரிந்தது. இன்னும் விடாமல் முயலவே, படகு அவர் சொன்னபடி கேட்க ஆரம்பித்தது. சில நிமிடங்கள் போராட்டத்துக்குப் பின் படகை ஒருவழியாக அக்கரையில் ஒதுக்கினார்.

கரைக்கு வந்ததும் பெரியவர் கண் திறந்தார். இரு கைகளையும் உயரத்தூக்கி இறைவனுக்கு நன்றி சொன்னார். இளைஞர் 'அய்யா, நன்றி சொல்ல வேண்டியவர் இதோ இவர், உங்கள் சாமியல்ல..; என்று மீண்டும் அவருடன் மல்லுக்கு நிற்க, பெரியவர் அதை உதாசீனம் செய்துவிட்டு இறங்கிப் போனார். 'இவர்களைத் திருத்த முடியாது' என்று பொருமிக்கொண்டே இளைஞரும் இறங்கிப்போனார்.

கரைக்கு வந்த படகை, கயிறால் முளையில் கட்டிவிட்டு, மயங்கிக்கிடக்கும் படகோட்டியை எழுப்ப முயற்சித்தார் நம் ஆள். எழவில்லை. கரையில் தூரத்தில் படகுத்துறை தெரிந்தது, அங்கு போய் மற்றவர்களிடம் சொல்ல அவர்கள் ஓடிவந்தார்கள், அனைவரும் படகோட்டியை தூக்கி வண்டியில் ஏற்றி பக்கத்தில் உள்ள மருத்துவ மனைக்கு விரைந்தார்கள். பிழைத்துக்கொள்வார் என்று நம்பிக்கை வந்தது. நம் நபர் அப்போதுதான் தான் வந்த வேலை நினைவுக்கு வர, தன் பையைத்தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்.

அவர் ஊருக்குள் நடந்து போகும்போது தூரத்தில் கோயிலில் ஒலிபெருக்கியில் வந்த குரல் எங்கோ கேட்டதாக இருந்தது. அட, நம்ம பெரியவர்! ' கடவுளை நம்பினோன் கைவிடப்படான். இதை நான் எத்தனையோ இடங்களில் சொன்னதுக்கும் இன்னிக்கு உங்க கிட்டே சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஏன்னா இன்னிக்கு நான் உங்க முன்னால் நிற்பதே அவன் கருணையால்தான். நான் வந்த படகு இன்று ஆற்றுவெள்ளத்தில் சிக்கியதில் இன்னேரம் மாண்டு போயிருப்பேன். அவன் மேல் உள்ள அசைக்கமுடியாத நம்பிக்கை என்னைக் காத்தது. நான் செய்ததெல்லாம், மனமுருகி அவனை வேண்டியதே. பாக்கியெல்லாம் அவன் விளையாட்டு. நம் கையில் ஒன்றுமில்லை, அவனிடம் பாரத்தைப்போட்டு அவனை எண்ணி உருகி வணங்குங்கள். என்றும் நல்லதே நடக்கும்...'

அதற்குள் கடைவீதி வந்துவிட்டது. கோயிலை விட்டு ரொம்ப தூரம் வந்துவிட்டோமா..பெரியவர் குரல் இப்போது அமுங்கிப்போனது. பஸ்டாண்டு அருகே ஒரு மேடை. அதில் பளீரென்ற வெளிச்சத்துடன் மைக் பிடித்து கணீரென்ற குரலெடுத்துப் பேசுவது..அட, நம்ம இளைஞர். 'கடவுள் மனிதனால் படைக்கப் பட்டவன். மனிதனின் சக்திக்குமீறினது எதுவும் இல்லை. இதை நானும் நிறையக் கூட்டங்களில் பேசியிருக்கிறேன். ஆனால் இன்றுதான் நேரடியாக உணர்ந்தேன். இன்னிக்கு நான் உங்கள் முன் முழுதாய் உயிருடன் நிற்கிறேன் என்றால் அது மனிதனின் மூளை, சமயோசிதம், அறிவு ஆகியவற்றால். நான் வந்த படகு ஆற்றில் தத்தளிக்க, என்னுடன் இருந்தாரே ஒரு சாமியார், அவர் கடவுளைக்கூப்பிட்டார். நானும் சுற்றும்முற்றும் கண்ணில் விளக்கெண்ணையுடன் பார்த்தேன், கடவுள் தென்படுகிறாரா என்று. ம்ஹ¤ம். இருந்தால்தானே வருவதற்கு. ஆனால் என்னுடன் வந்த மனிதர் இப்படியெல்லாம் முட்டாள்தனமாக இருக்காமல் தன் மூளையை பயன்படுத்தி, ஆறாம் அறிவைப் பயன்படுத்தி, எப்படி இங்கிருந்து மீள்வது என்று சிந்தித்து, அதன் மூலம் ஒரு வழியைக் கண்டுபிடித்தார். அவர் மட்டும் இவரைப் போல் உட்கார்ந்திருந்தால், எங்கே இருந்து யார் காப்பாற்றியிருக்க முடியும்? ஆகவே நண்பர்களே, மனிதன், அவன் மூளை, உழைப்பு, சிந்தனை, இதற்கு மீறியது எதுவும் இல்லை...'

பேச்சைக் கேட்டுகொண்டு நின்றதில் தான் போகவேண்டிய பஸ் ஸ்டாண்டைவிட்டு வெளியே வருவதை கண்ட நம் நபர் ஓடிப்போய் பஸ்ஸில் தொத்திக் கொண்டார்.. அப்பாடா..இதை விட்டால் அடுத்தது இன்னும் 2 மணி நேரத்துக்கப்புறம்தான். பஸ் போய்விட்டது. அட அவர் பேரைக்கூடத் தெரிஞ்சுக்காமல் விட்டுவிட்டோமே...

* * * * *


இன்னும் என் பங்கு முடியவில்லை. இன்னிக்கு என்னால் இதுக்குமேல் முடியவில்லை.. நாளைக்கு வருகிறேன்.

அன்புடன்,
-கா

0 பின்னூட்டங்கள்: