The Ground

இன்று பூசான் நகரிலிருந்து வந்து கொண்டிருந்தேன். நீண்டு நெடிய தீவாக நாக சர்பம் போல் வளைந்து, வளைந்து கூடவே எனது கோஜே தீவு வந்து கொண்டிருந்தது. இது இவ்வளவு நீளமென்று இன்றுதான் புரிந்தது. பூசான் போகும்வரை சின்னைச் சின்ன தீவுகளாக பல நூறு. தீவு என்பது கடலால் சூழப்பட்டது. நிலப்பாதை இல்லாதது. நீர் மார்க்கமாக மட்டுமே போகக்கூடியது.

எங்கிருந்து இத்தனை தீவுகள்? இவையெல்லாம் நீரில் பூத்த புஷ்பங்களா? வெளியே, நீர்பரப்பிலிருந்து பார்க்கும் போது எல்லாம் தனித்தனித்தீவாய் தொடர்பற்று....

ஆனால் அறிவியல் புரட்சி நடந்த சென்ற இரண்டு, மூன்று நூற்றாண்டுகளில் கடலாய்வு எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. Sonograph, ecolocation போன்றவை கொண்டு கடலின் ஆழம், அதன் அடி நில அமைவு இவை அனேகமாக உலகக்கடல்கள் அனைத்திற்கும் அறியப்பட்டுவிட்டன. அது என்ன சொல்கிறது? தீவு என்னும் விளக்கம் உண்மையில் சரியில்லை ஏனெனில் நிலப்பரப்பு அனைத்தும் அடியில் தொடர்புடையனவாக உள்ளன. அதாவது நிலத்தில் மலைத்தொடர்களைக் காண்கிறோம் இல்லையா? அதுபோல், கடலிலும் மலைகள் உள்ளன. ஆனால் நீர் சூழ்ந்துள்ளதால் அதன் நுனி மட்டுமே நமக்குத்தெரிகிறது. அதை நாம் தீவு என்கிறோம். உலகின் நீர் வற்றிவிட்டால் நிலவு போலோ அல்லது செவ்வாய் போல் மலைகள் சூழ்ந்த ஒரே நிலப்பரப்பு மட்டுமே இருக்கும்.ஆக, அறிவியல் ஆய்வால் நிலங்களுக்குள் உள்ள ஆதித்தொடர்பு நிருவப்பட்டுவிட்டது. ஆர்டிக், அண்டார்டிக் பனி உருகினால் இன்னும் நிலப்பரப்பு கடலுக்கு அடியில் போகும். இப்படித்தான் சென்ற பனிக்கால உருகலில் பூம்புகார் உள்ளே போய்விட்டது. இப்போதுள்ள தரைக்கு 23 மீட்டர் தூரத்தில் அது நீருக்கடியில் கிடக்கிறது.

பூமி ஒரு நீர்க்கோளம். நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவன் அழகாகச் சொல்கிறான். அது இருக்கட்டும் நம்ம கம்பன் தஞ்சாவூர்காரன். வயல் தவிர கடல் பார்த்திருக்க வாய்பில்லை. இல்லை கடல் பார்த்திருந்தாலும் பல்வேறு தீவுகளுக்குப் போயிருக்க வாய்பில்லை. ஆனால் இந்த உலகம் முழுவதும் நீரால் சூழ்ந்துள்ளது என்று அவனுக்குத் தெரிந்திருக்கிறது. எங்கள் கோஜே தீவெல்லாம் நீரால் சூழ்ந்தது மட்டுமல்ல அது பரதனுக்குச் சொந்தமென்று கைகேயி வாயிலாக நமக்குச் சொல்கிறான்.

"ஆழி சூழ் உலகலாம் பரதனே ஆள!" என்பது அவள் ராமனுக்கு இடும் கட்டளை. கைகேயி அளவுக்கு (ஒரு குடும்பப்பெண்) உலகம் நீரால் சூழ்ந்தது என்னும் அறிவு அவர்களுக்கு இருந்திருக்கிறது. எப்படி இந்த அறிவு சித்தித்தது. உலகம் சுற்றிய வாலிபர்கள் ராமன் காலத்திலேயே உண்டா? கவனிக்க வேண்டும். மேலாகப்பார்க்கும் போது இல்லாத தொடர்பு ஆழமாய் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் புரிதல் அறிவியல் செய்துதான் வரமேண்டுமென்றில்லை.

அது வெறும் தொடர்பின் காரணமாகவே புரிய வரும். குழந்தைக்கு மூச்சா வருகிறது! அம்மாக்காரி சட்டுனு குழந்தையை இடுப்பிலிருந்து இறக்கிவிடுவா? அது ஒரு சொட்டு ஒண்ணுக்கு போனப்புறமல்ல. அதற்கு முந்தி!! அது ஒரு தொடர்பு. ஒரு காலத்தில் அது அவளின் ஒரு பாகமாக இருந்த ஒன்று. பின்னால் செயற்கையாக துண்டிக்கப்படுகிறது. எனவே ஆதித்தொடர்பின் காரணமாக வாய் பேசாமலே அது அம்மாவிற்குப் புரிகிறது. அட, அது என்ன? சம்மந்தமே இல்லாத ஆள் யோசிச்சுட்டு இருக்கிறது சட்டுனு நமக்குச் சில நேரம் புலப்படுவது இல்லையா? அது எப்படி நிகழ்கிறது? நம் எல்லோரையும் ஏதோ ஒன்று சூசகமாக பிணைத்திருக்கிறது. மேலோட்டமாக பார்க்கும் போது தொடர்பு தெரிய மாட்டேன் என்கிறது!

அந்தப் பிணைக்கும் கயிறை. ஆதிக் கொடியை. தொப்புள் கொடியை உணர்வால் புரிந்து கொள்ளமுடியுமா? முயன்று பாருங்களேன் :-)

0 பின்னூட்டங்கள்: