JACOB THE LIAR

யாகோபு என்ற பொய்யன் என்பது 1974-ல் வெளிவந்து மீண்டும் 1999-ல் ராபின் வில்லியம்ஸ் (Robin Williams)-ஐ வைத்து மறுபடியும் எடுக்கப்பட்ட படம். நேற்று தற்செயலாக பார்க்க நேர்ந்தது. ராபின் வில்லியம்ஸ் கமல் போன்ற ஒரு சகலகலா வல்லவன். நகை, மிகை, ஒத்த என்று எல்லா வேடங்களிலும் நடிப்பார்.

இதன் திரைப்படக்கதை வாசிக்கக் கிடைக்கிறது. எனவே அதைக் கொஞ்சம் வாசித்துவிட்டுத் தொடர்ந்தீர்களானால், அல்லது முன்னமே இப்படம் பார்த்திருந்தால் நான் என்ன சொல்லவருகிறேன் என்பது விளங்கும்.

மனித வாழ்வின் எதிர்பார்ப்பு பற்றி, மனித ஜீவிதத்தின் அடிக்கோடு பற்றி, எது வாழ்வை உந்திச் செல்கிறது என்பதை இப்படம் அழகாக விளக்குகிறது. வாழ்வதற்கு நம்பிக்கை அவசியமாக இருக்கிறது. நாளையென்ற ஒன்று இல்லை என்றால் இன்றைய வாழ்விற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுகிறது. எனவே நம்பிக்கை என்பது நம்மை சக்தியுடன் வாழ வைக்கிறது.

சில, பல நேரங்களில் வாழ்வு இருண்டு விடுகிறது. நம்பிக்கை தீபம் அணைந்து விடுகிறது. நாளை காணாமல் போகிறது. அப்போது வாழ்வு சுருங்கிப் போய் வாடிவிடுகிறது. வதை முகாம்களின் கதைகள் பெரும்பாலும் இதைத் தெளிவாகச் சொல்கின்றன. "பேய்கள் அரசாளும் போது பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்பான் பாரதி. இப்படிப்பட்ட காலங்களில்தான் நமக்கு நம்பிக்கை மிகவும் தேவைப்படுகிறது. அது இல்லையெனில் வாழவே நமக்குப் பிடிப்பதில்லை.

இந்தப்படம் பார்த்து முடித்தவுடன் தோன்றியது, கடவுள் என்பவன் மனிதன் தோற்றம் கொண்டவுடன் கூடவே பிறந்து விட்டான் என்று. இரண்டும் ஒன்றை, ஒன்று சார்ந்தவை என்று தோன்றுகிறது. விஞ்ஞானிகள் மனித நம்பிக்கை என்பது நமது மரபணுக்களில் பதிவாகியுள்ளன என்று சொல்கிறார்கள். இறைவன் என்ற கோட்பாடு மனித குலத்தின் மாபெரும் நம்பிக்கை. இதை பாரதியை விட வேறு யார் இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்?

வையகத்துக் கில்லை மனமே நினக்குநலம்
செய்யக் கருதியிது செப்புவேன் - பொய்யில்லை
எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்


இறை எல்லாம் புரக்கும் என்பதுதான் எவ்வளவு பெரிய சொல். அதில் நிரம்ப உண்மையுள்ளது. அது நம்மைக் காக்குமென்பது நம்பிக்கை. இங்கிருந்துதான் மனிதனது சமய வளர்ச்சி தொடங்குகிறது. இறையை மறுக்கும் சமணம், பௌத்தம் நம்பிக்கை என்பதையே ஆழமாக சிந்திக்கச் சொல்கிறது. சூனிய தரிசனம் என்பது சாதாரண விஷயமில்லை! நமது பலவீனங்களைப் பார்க்க ஒரு தைர்யம் வேண்டும். எனவே இவ்வழிகளில் செல்பவர்க்கு உளத்திடம் நிரம்ப வேண்டும்.

சுத்த சைவமும் ஏறக்குறைய இப்படித்தான். நிர்குண தரிசனம் எளிதல்ல.

ஆனால் இதன் பின் வரும் ஆழ்வார்கள் இதைச் சுத்தமாக வேறொரு திசைக்கு இட்டுச் செல்கின்றனர். பாரதி அந்த வழி. தீமைகள் பெருகும் காலையில் இறைவன் அவதாரமெடுப்பான் என்பதுதான் எவ்வளவு நம்பிக்கை தரும் விஷயம்! இந்தப் படத்தில் இருசியப்படைகள் வரும். வந்து வதை முகாம்களில் உள்ளோரை விடுவிக்கும். அமெரிக்கச் சிப்பாய்கள் மேள தாளத்துடன் வருவார்கள் என்பது நம்பிக்கையின் உச்சம். அந்த நம்பிக்கை அவர்களது வாழ்விற்கு உந்துதலாக உள்ளது.

நாளை உயிர் போவது எல்லோருக்கும் நிச்சயம்தான். பின் ஏன் இன்றே தூக்கு போட்டுக்கொண்டு சாகக்கூடாது? வாழ்வு வளம் பெரும். வாழ்வில் சுவைக்க இன்னும் என்னென்னமோ வருமென்ற நம்பிக்கை. அதுதான் எல்லோரையும் சாக்காட்டிலிருந்து விடுவித்து ஓட்டிக் கொண்டு இருக்கிறது.

கண்ணனைப் பற்றிப் பேசும் பெரியாழ்வார் அவன் தன்னை "தளிர்பிக்கின்றான்" என்கிறான். தளிர்பித்தல் இல்லையெனில் ஜீவ ஓட்டம் இல்லை.

எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்குமெனும்
சொல்லால் அழியும் துயர்


என்பதுதான் எவ்வளவு நம்பிக்கை தரும் வாசகம். வாழ்க.

0 பின்னூட்டங்கள்: