Mind your Language!

நான் படித்த கிராமத்து சூழலில் தமிழில் பேசுவது, படிப்பது இயல்பாகவே இருந்தது. பள்ளி மாணவர்களின் அறிவியல் பசிக்கு விருந்தாகக் கோயம்புத்தூரிலிருந்து வரும் "கலைக்கதிர்" இருந்தது. ஆழிப்பேரலைகள் பற்றி வந்திருந்த அறிவியல் கட்டுரைகளைப் படித்த போது எழுந்த வியப்பு இன்றும் அடங்கவில்லை. ஆனால் ஒரு காலத்தில் நானே கலைக்கதிருக்கு எழுதுவேன் என்று அப்போது நினைக்கவில்லை. ஆனால் தமிழில் அறிவியல் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அந்தச் சின்ன நூலகத்தில் உருவாகியிருக்கிறது. பெரும்பாலான தமிழ் மாணவர்களுக்கு உயர் கல்வி வரும் போது ஒரு பெருத்த "கலாச்சார தாக்குதல்" நடக்கிறது. தமிழிலிருந்து ஆங்கில மீடியத்திற்கு மாறுவதுதானது. இது வெறும் மொழி மாற்றம் என்பதோடு நிக்காமல் இவனை/இவளை ஒரு புதிய பாசாங்குத்தனம் நிறைந்த, மேட்டிமைத்தனம் நிறைந்த, போலிகள் நிறைந்த, ஒரு சூடோ ஆங்கில உலகிற்கு இட்டுச் செல்கிறது. இந்தக் கலாச்சார தாக்குதலிலிருந்து இவன் பின் வாழ்வாள் முழுவதும் விடுபடுவதே இல்லை.

கொரியாவில் நிறையத் தமிழர்கள் இருக்கிறார்கள். இவர்கள் தனியாக யாகூ குழுமம் நடத்துமளவிற்கு இருக்கிறார்கள். ஆனால் அது ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகிறது. Happy Maattuppongal என்று ஆங்கிலத்தில் செய்தி அனுப்புவது வேடிக்கையாக இல்லை அதன் பின்னாலுள்ள பாசாங்குத்தானம் ஏன் தமிழர்களுக்குப் புரிவதில்லை? தமிழில் மடலாடற் குழுக்கள் நடத்தமுடியும் என்று அவர்களுக்கு வழிகாட்டினேன். ஆனாலும் தமிழனுக்கு தமிழில் பேசுவதில் பெருத்த கூச்சம் இருப்பது எதனால் என்று புரியவே இல்லை.

வெண்ணை போன்ற நிறமுடைய அழகிய தமிழ் நர்தகிகள் தங்கள் கொஞ்சும் தமிழ் கலந்த ஆங்கிலத்தில் தமிழ் கலையான பரதத்தை விளக்குவது போன்ற மேட்டிமைத்தனம் உலகில் எங்கும் காணமுடியாது. இது ஒண்ணும் ஐ.நா சபையல்ல. இணையத்தமிழ் 2002 மாநாட்டு நிகழ்ச்சி. சான்பிரான்சிஸ்கோ நகரில். தாங்க முடியாமல் எல்லோருக்கும் சொல்லிவிட்டேன் என் ஆதங்கத்தை. இது என்னைய்யா பாசாங்கு? அருணாச்சல கவி தமிழில் ராமநாடகம் எழுதுகிறான். அதைத்தமிழர்களுக்கு ஆங்கிலத்தில் இந்த நர்தகி விளக்குகிறாள். மக்கு போல் நம்ம ஜனங்கள் கேட்டுக்கொண்டு இருக்கின்றன. கொடுமை! கொடுமை!!

சரி, இதிலாவது இந்த மேட்டுக்குடி ஆங்கிலம் கேட்கக்கூடியதாக பிழையில்லாமல் இருக்கிறது. நம்ம ஆட்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும், எழுத வேண்டுமென தமிழ் குழுமங்களில் வேலை மெனக்கெட்டு செய்யும் கொடும் ஆங்கிலம் ( x கொடுந்தமிழ்) இருக்கிறதே! தமிழில் சீத்தலைச் சாத்தனார் போல் ஆங்கிலத்தில் யாராவதொருவர் இருப்பார். அந்த மகானுபாவன் இருந்தால் உடம்பெல்லாம் ரத்தம் வழியும். ஏன் நாம் அழகு தமிழை விட்டு ஆங்கிலத்தைக் கொலை செய்ய வேண்டும். தமிழர்கள் ஆங்கிலம் பேசுவதை ஆவணப்படுத்த வேண்டும். Mind your language (BBC) க்கு நல்ல தீனி கிடைக்குமளவிற்கு கேலிக்கூத்தாய் இருக்கும்!

ஒருமுறைச் சென்னையில் திரு.மாலன், திரு.சுஜாதா, முனைவர்.நா.கோவிந்தசாமி கலந்து கொண்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழில் பேச வேண்டிய அவசியம் பற்றிச் சொன்னேன். சுஜாதா அவருக்கேயுரிய கிண்டலுடன், 'வெளிநாடு போனவுடன் நம்மவருக்கு தமிழின் மீது பக்தி வந்துவிடுகிறது' என்றார். தமிழில் பேசினால் ஒரு இளக்காரம். அவர்கள் எனக்கு ஆங்கிலம் வராது போலும் என்று எண்ணிவிட்டார்கள். வேறு வழியில்லாமல் எனது கருத்து முழுவதையும் நான் நல்ல ஆங்கிலத்தில் சொன்னேன். அப்போது சிலருக்கு உறைத்தது! இதுபோல் பேரா.ஞானம், பேரா.ஆனந்தவல்லி கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கில் (மதுரைப் பல்கலைக்கழகம்) தமிழ்க் கல்வி பற்றிச் சொன்னேன். எல்லோருமே எளிதாகத் தமிழில் பேசுவதை விட தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசுவதையே விரும்புகிறார்கள்.

எனக்கு ஆங்கில மொழி பிடிக்கும். எந்த மொழி கற்றுக் கொண்டாலும் அதைக் கவனமாய் கற்றுக் கொள்ள வேண்டும். பிழையின்றி எழுத, பேசப்பயில வேண்டும். முடிந்தவரை ஆங்கிலத்தை ஆங்கிலேயருடன் பேசி, ஆங்கில இதழ்களை வாசித்து நமது அறிவை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் செய்வதெல்லாம் ' ஏற்கனவே குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற நம்ம ஆள்ட்ட ஆங்கிலம் கற்று, அவனிடமே குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறார்கள்'. இவர்கள் ஆங்கிலம் என்னைக் கொல்கிறது.

மாற்று இல்லாமல் இல்லை. இதற்கான ஒரே மாற்று தாய்மொழியில் பேசி, எழுதுவதுதான். ஆனால் சிக்கல் என்னவென்றால் இவர்களுக்கு தமிழும் வராது. எனவே தப்பும் தவறுமாய் ஆங்கிலத்தில் எழுதுவது தமிழில் எழுதுவதைவிட மேல் என்று எண்ணுகிறார்கள். என்ன செய்வது.

நாம் பயப்படாமல் தமிழில் எழுத வேண்டும். நல்ல தமிழ் இலக்கணம் அறிந்த பல நல்ல இணைய நண்பர்கள் நம் தவறுகளைத் திருத்தத்தயாராக உள்ளார்கள். கற்றல் என்பதில் கூச்சம் கூடாது. 80 வயதில் தமிழ்க் கவிதை கற்றுக் கொள்கிறேன் என்று வந்த சமிஸ்கிருத ஆசிரியர் பற்றி நண்பர் ஹரிகிருஷ்ணன் எழுதியிருந்தார். That's the spirit!

0 பின்னூட்டங்கள்: