வைகைக்கரை காற்றே!......034

பிரபஞ்சம் மிகப்பிரம்மாண்டமாக இருக்கிறது. அதையெல்லாம் கணக்கிட்டு புரிந்து கொள்ள மனிதனால் முடியுமென்று தோன்றவில்லை. அதற்காக புரிந்து கொள்ள இயலாத பிரம்ம ரகசியமென்றும் இல்லை. இந்தப் பிரம்மாண்டத்தைக் கட்டிக்காக்கும் அடிப்படை அலகுகள் சிறியவையே. பிரம்மாண்டத்தின் அத்தனை கூறுகளும் இச்சிறு அலகிலுமுண்டு. அதனால்தான் திருமூலர் அண்டத்தில் காண்பது பிண்டத்திலுண்டு என்றார். கூர்ந்து கவனித்தால் பிரபஞ்சம் தன்னை இருத்திக்கொள்ள சின்னச் சின்ன அளவுகளாக, அலகுகளாகவே அமைத்துக் கொள்கிறது. மிகச்சின்ன அலகான அணு கூட பிரிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. அணுவிற்கு ஒரு அமைப்புண்டு. ஒரு அணு மற்றதிலிருந்து வேறுபடுகிறது தன்னமைப்பால். உயிர் உலகில் தோன்றிய போது தன்னை மற்றதிலிருந்து பிரித்துக்காட்ட. மற்றதிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள சிறு அலகை அமைத்துக் கொள்கிறது. ஒருவகையான வட்டம், enclave. உயிர்ச்சவ்வு ஓருயிர் கிருமிகளை மற்றதிலிருந்து பிரித்துக் கொள்கிறது. பெரிய உயிரினங்களுக்கும் இந்த உயிர்ப்போர்வை அவசியமாகவே இருக்கிறது. தோல் என்பதே அந்தப் போர்வை. மனிதன் போன்ற உடற்சூட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் உயிர்களுக்கு இவ்வுடற்போர்வை மிக அவசியம். அவ்வுடற்போர்வையால் உடற்சூட்டை தக்க வைத்துக்கொள்ள முடியாத போது பஞ்சு, கம்பளிப் போர்வை அவசியமாகிறது!

ஒரு மனிதன் போகிறான் என்றால் பிரபஞ்சத்தின் ஒரு சிறு வட்டம் தற்காத்துக்கொண்டு போகிறது என்று பொருள். தற்காப்பு அவசியம். ஏனெனில் தற்காப்பு ஒரு சுய அடையாளதைத் தக்க வைக்கிறது. மனிதன் கரைந்து போனால் பிரபஞ்சத்தின் கூறாகிறான். அக்கூறுகளுக்கும் அடையாளமுண்டு. மண், பொன், காற்று, மரம், வேதிமம், மூலக்கூறு, அணு, புரோட்டான், எலெக்றான், நியூறான் என்பது வரை. பின் அது வெளியாகிப்போகிறது. வெளி அரூபம். ரூப தசையில் பிரபஞ்சம் நடமாட சிறு, சிறு அலகுகள் அவசியமாகிறது. இது இயற்கையின் கட்டமைப்பு.

நந்துவின் கோகுலத்திலும் இக்கட்டமைப்பு இருந்தது. அக்கிரஹாரத்தில் ஜாதியா? என்றால், உண்டு என்பதே பதில். சாதாரணமாக ஒரு சிவாச்சாரியர் (பட்டர், குருக்கள்) வீட்டில் ஒரு ஸ்மார்த்தன் சாப்பிடமாட்டான். சிவாச்சாரியர்களுக்கென்று தனி மடம், தனி வேதப்பயிற்சி, தனிக்குடிலுண்டு. அது வேறொன்றுடன் சேராது. ராயர் குடும்பம் அய்யங்கார் வீட்டில் சாப்பிடாது. தெலுங்குப் பிராமணர் ஏன் பாலக்காட்டு ஐயரை சாப்பிடக்கூப்பிடணும்? அலகுகள். அலகுகள். அடிப்படை அலகுகள். ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிக்கும் அலகுகள். இந்த அலகுகளுக்கு ஒரு கலாச்சாரப் பெயருண்டு. அதற்கு ஜாதி என்று பெயர். இந்த ஜாதியென்ற அலகு தனக்கென ஒரு தனி அடையாளத்தை தக்க வைத்துக் கொள்கிறது. ஒரு ஜாதிய பேச்சு வழக்கு, உணவு முறைகள் இப்படி. இந்தச் சிறு கலாச்சார அளவிற்குள் விழவில்லையெனில் அவர் வேற்று மனிதராகிவிடுகிறார். இது ஒரு சிறு வசத்திக்கே. ஆனால் தமிழ் வாழ்வு முறையே இதை அடிப்படையாகக் கொண்டு அமைந்து போனது சோகம். இந்த அமைப்பு பாரிய அளவில் பல பெரிய மனிதர்களை பாதித்து இருக்கிறது.

11ம் நூற்றாண்டு. ஸ்ரீபெரும்புதூரில் இராமானுஜர் என்னும் வைணவ சிரேஷ்டர் தனது குருவை வீட்டிற்கு உணவருந்த அழைத்திருக்கிறார். இவ்வளவிற்கும் அவரும் பிராமணர்தான். ஆனால், இராமனுஜரின் மனைவிக்கு தான் ஆசூரி வம்சம் என்று பெருமை. கொல்லையில் நீர் மோண்டு கொண்டிருக்கும் போது குருவின் மனைவி வருகிறாள். அவள் புடவைத்தலைப்பு இவளது குடத்தில் பட்டுவிடுகிறது. அவ்வளவுதான் 'தன் மடி, ஆசாரம்' போய் விட்டது என்று குமுற ஆரம்பித்து விடுகிறாள். இராமானுஜருக்கு தர்ம சங்கடமாகப் போய்விடுகிறது. இது போன்ற வேரொறு நிகழ்விற்குப் பின் அவர் சத்தமில்லாமல் கிரஹசாரம் விட்டு சாமியாராகிவிடுகிறார். ஏறக்குறைய 1000 ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த மடி நந்துவின் பக்கத்து விட்டில் குடியிருக்குமென்று நந்துவிற்குத் தெரியாது!

வேலை ஓய்வு பெற்று வந்திருந்த சாமிநாத சர்மா அக்கிரஹாரத்தின் 'அத்யான பட்டராகிவிட்டார்'. அவரது சகோதரிக்கு இந்த ஆச்சாரமென்றால் பலாப்பழம் போல. இது இந்த அசட்டு நந்துவிற்கு எங்கே தெரியப்போகிறது? பம்பரம் விளையாடிவிட்டு பட்டருக்கு சேதி சொல்ல அதி வேகத்தில் உள்ளே புகுந்த நந்து பாட்டி உலர்த்திக்கு கொண்டிருந்த புடவையில் பட்டு விட்டான்! "சீ! அசடே! இப்பதானே குளிச்சிட்டு வந்தேன். ஏண்டா தடிமாடு! இப்படி விழுப்பிலே வந்து விழுவியோ? இனிமே உள்ள வரப்பவே ஒரு குரல் கொடுத்திட்டு வா!' என்று சிடு, சிடு என்று கத்தி விட்டு பாட்டி மீண்டும் குளியலறைக்குப் போய் விட்டாள்.

அவள் மொட்டைப்பாட்டி. விதவை. இளமையில் விதவையானவள். வாழ்வு அவளிடமிருந்து பல நல்ல விஷயங்களைப் பறித்துவிட்டது. எனவே அவளுக்கு வாழ்வின் மீதான எதிர்ப்பைக்காட்ட இந்த உத்தி பயன்பட்டது. அவள் புடவை மட்டும் யார் மேலும் பட்டுவிடாமல் உசரத்தில் கட்டிய கம்பில் தொங்கும். அவள் ஒரு குச்சி வைத்துதான் புடவையை உலர்த்துவாள். நந்துவிற்கு ஒரே கடுப்பு. அம்மாவிடம் வந்து முறையிட்டான். அவனை அந்த அக்கிரஹாரத்தில் யாரும் தீட்டு என்று இதுவரை சொன்னதில்லை. இது முதல்முறை! "டேய், அவ கிடக்காடா! கவட்டை! நீ ஒண்ணும் அவ ஆத்துக்கு இனிமே போக வேண்டாம்" என்று அம்மா சொல்லிவிட்டாள்.

நந்துவும் அப்படியே இருந்துவிட முடிவு செய்த போதுதான் அத்யானபட்டரின் பிள்ளை ஊட்டியிலிருந்து வேலை மாறி வந்திருந்தார் மூன்று பெண்களுடன். பெரியவள் ஆனந்தம் பார்க்க லட்சணமாக இருப்பாள். அவள் நந்துவைப் பார்த்து சிரித்துவிட்டுப் போகும் போது தன்னையறியாமலே நந்துவின் கால்கள் 'கவட்டை' வீட்டிற்குள் போய்விடும்!

அதுதான் ஊட்டி வரை உறவு!

0 பின்னூட்டங்கள்: