வைகைக்கரை காற்றே!......035

உலகை அளந்த பெருமாள் 'அக்கடா'வென்று காலை நீட்டிக்கொண்டு உட்கார்ந்திருப்பது போல கோயிலுக்கு இருமருங்கும் பரவிக்கிடந்தன வீடுகள். சுப்பிரமணிய ஸ்வாமி கோயிலுக்கு அருகில், தென்னந்தோப்புக்கு எதிரே, அச்சாபீஸ் சதாசிவ அய்யர் வீடு. அவர் சதா சிவமாகக் கிடக்கிறாரோ இல்லையோ, சதா 'கொல்லு, கொல்லு' என்று இருமிக்கொண்டே இருப்பார். அது அவரைக் கொன்று கொண்டிருப்பது பார்ப்பவர் எவருக்கும் தெரியும். டிபி! அவருக்கு இரண்டு புதல்வர்கள். இருவரும் சேர்ந்து நந்துவின் பள்ளிக்கருகில் ஒரு அச்சாபீஸ் நடத்திக்கொண்டிருந்தனர். பள்ளி விட்ட நேரங்களிலும், பரிட்சை முடிந்த நேரங்களிலும் நந்துவின் பொழுது போக்கு இந்த அச்சாபீஸ்தான். சதாசிவ அய்யரின் இரு புதல்வர்களும் நந்துவிடம் மிக அன்பாக இருப்பார்கள். இவனுக்கு அச்சாபீஸீல் சர்வ சுதந்திரமுண்டு. அந்த பிரம்மாண்டமான அச்சடிக்கும் இயந்திரம் நந்துவை பரவசப்படுத்தும், சில நேர பயமுறுத்தும். பிரஞ்சுப் புரட்சியின் விளைவாகக் கிடைத்த 'கில்லெடின்' போன்ற ஒரு இயந்திரமும் இருக்கும். அதில் கட்டு பேப்பரைக் கொடுத்தால் வெண்ணெய் வெட்டுவதுபோல் வெட்டிக் கொடுத்துவிடும். பிறகு காகிதத்தில் சின்னச் சின்ன துளை போடும் இயந்திரம். இதை வைத்துக் கொண்டுதான் திருப்புவனம் எவரெஸ்ட் டூரிங் டாக்கிஸ் சினிமாக் கொட்டகையின் டிக்கெட் அச்சடிப்பார்கள். அச்சாபீஸ் முழுவதும் பத்திரிக்கைகள், நோட்டீஸ் என்று பரவிக் கிடக்கும். நந்து எல்லாவற்றையும் எடுத்து படித்துப்பார்ப்பான். அதிகமாக அச்சில் வருவது 'ருது மங்கள ஸ்நான' அழைப்பிதழும், கல்யாணப்பத்திரிக்கையும்தான்.

"அண்ணா! ருது மங்கள ஸ்நானம் என்றால் என்ன?"

"ஏண்டா? அவசியம் தெரிஞ்சுக்கணுமா?"

"அதுதானே எப்பப்பாத்தாலும் அடிச்சிண்டு இருக்கேள்"

"பொண்ணு பெரியவளானா அதுக்கு அடிக்கிற அழைப்பிதழ் இது!"

"ஓ! அதுவா!"

"தெரியுமா? 'அது' என்னண்ணு?"

"இல்லண்ணா, இந்த பாவாடை சட்டையை விட்டுட்டு தாவணி போடறதுதானே?"

"அது வெளி மாற்றம்"

இந்த கலந்துரையாடலின் உள்ளே போய் சில மர்மங்களை அறிந்து கொள்ளலாமெனில் அதற்குள் அச்சடிக்க ஒருவர் வந்து விட்டார். "வாங்க பிள்ளை! சௌக்கியமா?" என்று அண்ணன் நகர்ந்து விட்டார். நந்துவிற்கு இது பற்றி ரொம்ப காலமாகவே ஒரு குறு, குறுப்புண்டு. இவர்கள் வீட்டில் யாருக்கும் ருது மங்களம் நடத்தினது கிடையாது. அம்மாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. ஆனா, முத்து திரண்டு விட்டாள் என்று ஒரு வெள்ளியன்று புட்டு கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார்கள்.

"டீ! ஆனந்தம் (அதுதான் ஊட்டி!) திரண்டு போறதுன்னா என்ன?"

"டேய் நந்து ஆம்பளப்பசங்களுக்கு எதுக்கு பொம்பள சமாச்சாரம்?"

"இல்லடி, என்னென்னு தெரிஞ்சிக்கதான்"

"அவசியம் தெரிஞ்சிக்கணுமா?"

ம்...என்று வெட்கத்துடன் தலையாட்டினான் நந்து. ஆனந்தம் என்ற ஆனந்தலக்ஷ்மி திருப்புவனம் வரும் போது திரண்டிருந்தாள். ஸ்தனங்கள் பார்க்க அழகாக வளர்ந்திருந்தன. நந்துவிற்கு இயல்பாக ஒரு ஈர்ப்பு அவளிடம் இருந்தது.

"சமயம் வரும் போது சொல்லறேன்"

"ஏண்டி, இப்ப சொல்லேன்!"

"டேய் அசடு, இப்பல்லாம் சொல்லமுடியாது. தாத்தா, பாட்டி இல்லாத சமயத்திலே ஆத்துக்கு வா, சொல்லித்தரேன். ஆனா, யாரிட்டேயும் இது பத்தி பேசாதே. நானே கூப்பிடுவேன். சரியா?" என்றாள் ஊட்டி.

நந்துவிற்குள் ஏதோவொரு பரவசம். 'சரி, சரி' என்று பெரிதாக தலையாட்டினான்.

சதாசிவ அய்யரின் வீட்டிற்கு அடுத்து 'கொய்யா மரத்து' வீடு. அங்கே பல குடித்தனங்கள் இருந்தன. அங்குதான் சாவித்திரி டீச்சர் குடியிருந்தார்கள் அவர்கள் தாயுடன். இந்தத்தாயும் ஒரு மொட்டைப்பாட்டி. ஆனால் 'கவட்டை' மாதிரியல்ல. மிகவும் அன்பாகப் பேசுவாள். கன்னம் இரண்டிலும் ஒரு குழி விழுந்த சிரிப்பு. இளமையில் பாட்டி அழகாக இருந்திருப்பாள். ஆனால் இப்போது பல்லெல்லாம் போய் வெறும் பொக்கை வாய்தான் இருந்தது.

நந்து, இராமு மற்றும் சில வாண்டுகள் கொய்யா காய்த்திருக்கிறதாவெனப் பார்க்க அந்த வீட்டிற்குள் போன போது பாட்டி ஏதோ வசனம் சொல்லிக் கொண்டே வெளியே வந்தாள்.

"பறையன் பதினெட்டு, நுளையன் நூத்தியெட்டுன்னு சும்மாவா சொன்னா?" என்பது அந்த வசனம்.

இராமுதான் கேட்டான். 'பாட்டி! இதுக்கு என்ன அர்த்தம்?"

"எதுக்கு?" பாட்டிக்கு பழமொழிகள் இயல்பாக வந்து விழுவதால் என்ன சொல்கிறோம் என்பது சில சமயம் மறந்துவிடும்!

"இப்ப ஏதோ பறையன் பதினெட்டுன்னு சொன்னேளே!"

"ஓ அதுவா. நாம பறையன் ஒரு ஜாதின்னு நினைச்சுண்டு இருக்கோம். அதிலே 18 வகை உண்டாம். நுளையன்ன்னு ஒரு ஜாதி. இல்லை, இல்லை நூத்தியெட்டு ஜாதி!"

"இப்ப எதுக்கு இந்த வசனம்?"

"புதுரிலே சேர்வாருக்கும், சக்கிலியனுக்கும் சண்டையாம். குத்து, வெட்டுன்னு சாவித்திரி சொன்னா. அதுதான் சொன்னேன். ஊருபூரா ஜாதியாத்தானே இருக்கு. சண்டை வராம என்ன செய்யும்?"

"ஏன் பாட்டி, இங்க மட்டும் என்ன வாழுதாம்? நாமும் பிரிஞ்சு போய்தானே கிடக்கோம்" என்று பெரிய மனுஷத்தன்மையுடன் பேசினான் இராமு. இவன் சேதுவின் செட்டு. நந்துவிற்கு நாலைந்து வயது பெரியவன்.

"நமக்கென்ன இப்ப குறைச்சல்?"

"என்ன குறைச்சலா? வடமா ஆத்திலே பொண்ணு இருந்தா பிரஹசரணத்திற்கு கொடுக்க மாட்டா. ராயர் வீட்டுப் பொண்ணை அய்யருக்கு கொடுக்க மாட்டா. அய்யாங்கார் ஆத்துப் பொண்ணு அய்யங்காருக்குத்தானே!"

"என்ன பண்ணறது அப்படித்தானே பெரியவா பண்ணி வச்சிருக்கா?"

"பெரியவா, பெரியவான்னு எத்தனை நாள் பாக்கறது. கலப்புத்திருமணம் பிராமணாளுக்குள்ளே வரணும்"

"போடா! பெரிய மனுஷன் மாதிரி பேசிண்டு....."

"பாட்டி, இப்படி இருக்கிறதாலேதான் சாவித்திரி அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகாம இருக்கு!"

"போங்கடா! வெளியே! பெரிசா பேச வந்துட்டாங்க"

பசங்கள் கடுப்புடன் வெளியே வந்த போது சாவித்திரி டீச்சர் உள்ளே வந்தாள். 35 தாண்டியிருந்தது. முதுமையின் சுவடுகள் அதற்குள் முகத்தில் தெரிந்தன. வாழ்வின் சோகம் போட்டுக்கொண்ட பவுடருக்கும் மேலே அப்பியிருந்தது.

0 பின்னூட்டங்கள்: