வள்ளுவனோடு ஓர் நடை

"வள்ளுவனோடோ ர் நடை" என்று ஒரு காலத்தில் தமிழ் உலகத்தில் எழுதினேன் (இணைப்பு கொடுக்க அங்கு தேடினால் பழசைத் தேடமாட்டேன் என்கிறது யாகூ. 2002-03 லிருக்கலாம். வள்ளுவன் விலைமாது மாதிரி பொதுச்சொத்து [இங்கு 'தெய்வம்' மாதிரி என்று எழுத வந்தேன். அப்புறம் இந்த நாத்திகர்கள் கோயிலுக்கு வரமாட்டார்கள். தெய்வம் பொதுச் சொத்தா என்ற கேள்வி வரும். ஆனால் பெண் சுகம் என்று வரும் போது நாத்திகமாவது! ஆத்திகமாவது! - எனவே வள்ளுவன் என்னை மன்னிக்கட்டும்]. நான் பாட்டுக்கு என் பாட்டில் எழுதலாமென்றால் அதே தலைப்பு கொடுத்து ஆளாளுக்கு எழுத ஆரம்பிச்சுட்டாங்க :-) அதான் சொன்னனே அவர் பொதுச் சொத்து என்று. நமக்கெதற்கு வம்பு என்று அவரோட நடைபழகிறதை விட்டு விட்டேன். இந்த வலைப்பதிவு வந்த பின் மீண்டும் ஆசை வந்து விட்டது :-)

வள்ளுவன் ஏன்? எல்லோரும் அவரைக் கட்டி மாரடிக்கிறீங்க? அப்படின்னு கேட்டா, பதிலிருக்கு :-) ஏண்டா எல்லாப்பயலுகலும் இந்த இமயமலை மேலே ஏறறீங்க. கஷ்டம்ணு தெரியுமில்லே? பின்ன ஏன் மல்லுக்கட்டறீங்கன்னா, "ஏன்னா, மலை அங்கே இருக்கு, அதனலா மல்லுக்கட்டறோம்" என்பதுதான் பதில். உலக மொழிப்பரப்பில் வள்ளுவம் மேரு போல் நிற்கிறது. பலர் ஏறி இறங்கியிருக்கிறார்கள். பலர் ஏற முடியாமல் பார்த்துக் கொண்டு நிற்கிறார்கள். பலர் ஏறி உருண்டு விழுந்து இறந்திருக்கிறார்கள். பலர் ஏறியபின் இறங்க முடியாமல் நின்றிருக்கிறார்கள். ஆனா, இப்போ ரொம்ப மாடர்ன் ஏஜ். அப்படியெல்லாம் கஷ்டப்பட வேண்டாம். இந்த மலையை அப்படியே ஹெலிக்காப்டர்லே 'பட்டுக்காம' சுத்தி வந்துடலாம்ன்னு நினைக்கிறேன். :-)

பழசெல்லாம் எங்க கிடக்குண்ணு தேடி எடுக்கணும் [இந்த தமிழ் உலகத்தில் எப்படித்தேடுவது? Keyword: walk, valluvan].

சட்டுண்ணு இரண்டு இணைப்பு உடனே கொடுக்க முடியும். ஆரம்பிக்கிறப்போ "கண்ணனாவது கவி" என்ற முறைப்படி வள்ளுவனுக்கும் வைணவத்துக்குமுள்ள சம்மந்தம் பற்றி இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

1) வள்ளுவமும் வைணவமும் (பகுதி ஒன்று)
2) வள்ளுவமும் வைணவமும் (பகுதி இரண்டு)


உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339.


Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Death is like sleep; birth is like awaking from it.


[Rev Dr G U Pope, Rev W H Drew, Rev John Lazarus and Mr F W Ellis; First published by W.H. Allen, & Co, 1886,
Reprinted by The South India Saiva Siddhantha Works Publishing Society, Tinnevelly, Madras, India , 1962, 1982.]


தினம் தூங்குவது ஒரு பெரிய பாடு. ஒரு நிலையிலிருந்து ஒரு நிலைக்கு மாறுவது எப்போதுமே கடினம். தண்டவாளத்தில் ஓடும் வண்டியை நிறுத்த 'பிரேக்' போடணும். நிக்கற வண்டியை ஓட வைக்க கரி அள்ளிப்போடணும் (அது அந்தக்காலங்க! :-) முழிச்சிக்கிட்டு இருக்க ஆளை தூங்கப்பண்ண எத்தனையோ நூதன வழிகளெல்லாம் இருக்கு. "வேலியைத்தாண்டி ஓடும் ஆட்டை எண்" என்பது போன்று :-) ஆனால் என்னை பொறுத்தவரை 12 மணியைத் தாண்டிவிட்டால் புரண்டு, புரண்டு படுத்துக் கொண்டே இருக்க வேண்டும். ஏதோ ஒரு பொழுதில் நம்மையறியாமல் தூங்கியிருப்போம். அந்தப் பொழுதுகள் 'கருக்கல்' பொழுதுகள் (twilight zone)! எப்படி அந்த மாற்றம் நிகழும் என்று சரியாக கணக்கிட்டுச் சொல்லமுடியாது. பகல் முடிந்து இரவாகும் பொழுதில் எந்தப்பொழுது பகல்? எந்தப் பொழுது இரவு? இப்படித்தான் சாவும் என்கிறார் வள்ளுவர். ரொம்ப இதமாக இருக்கிறது இப்படிப் பார்க்க. நமக்குத்தெரிந்த ஒன்றை வைத்துத்தானே தெரியாத ஒன்றைப் புரிந்து கொள்ளமுடியும்!

ஆனால் பிறப்பு என்பதற்கு அவர் தரும் விளக்கம் பல வியாக்கியானங்களுக்கு இட்டுச் செல்லும். உறங்கி விழிப்பது போல்தான் பிறப்பு என்கிறார். ஆனால் ஒன்றைத்தவிர (இதை அடைப்புக்குறிக்குள் போட்டுக் கொள்ள வேண்டும் போல்!). தூங்கி எந்திருச்சா பழசு ஞாபகத்திலே இருக்கு. ஆனா பிறக்கும் போது பழசு (யோய் அப்படி ஒண்ணு இருக்கா? :-) ஞாபகத்து வரதே இல்லை. சிலருக்கு வருதுண்ணு சொல்லிக்கிறாங்க! நாடி ஜோதிடத்திலே நான் முற்பிறவியிலே இலங்கை முல்லைத்தீவில் வாழ்ந்தேன் என்று சொன்னார்கள். எனக்கு இப்போ அது ஞாபகம் இல்லை!

வாழ்வோட பெரிய ரகசியமே இதுதான். வெளியே போன மூச்சுக்காத்து எப்படி மீண்டும் உள்ளே வந்து நாம் வாழ்வதைச் சுட்டுகிறது? தூங்கி எந்திருச்சு எப்படி 'நாம்' நாமாக இருக்கிறோம்? பிறப்பு எங்கிருந்து நடக்கிறது? பிறக்கும் முன் நாம் யார்?

தூங்கி எந்திரிச்சுட்டு ஏதாவது ஞாபகத்து வந்தாச் சொல்லறேன் :-)

0 பின்னூட்டங்கள்: